வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 3 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 03 Feb 2017
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
உங்களை மூன்றாவது அத்தியாயத்திலும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.ஆனால் உங்களுக்குச் சந்தோஷம் இல்லையென்பது உங்கள் முகத்திலேயே தெரிகிறது.
ஆனாலும் வெள்ளிக்கிழமையானதும் கட்டுரையைத்தேடி உகரத்தில் நுழைந்தமைக்கு நன்றி.
சித்தன்போக்கு சிவன்போக்கு என நான் எழுதுவது,
சிலவேளை படாதஇடத்தில் பட்டு உங்களை வலிக்கச்செய்துவிடுகிறது போல.
நான் என்னசெய்ய? சத்தியமாய் உங்களை நோகச்செய்வது எனது நோக்கமல்ல.
நீங்கள் ஒரு உயர்ந்த பிராமணரா?-அப்படியானால்,
சென்ற அத்தியாயத்தால் சற்று உறக்கம் தொலைத்திருப்பீர்கள்.
உங்களால் முடிந்தஅளவு அவதூறு சொல்லி,
எனக்கு முள்முடி சூட்டி சிலுவையில் அறைய விரும்பியிருப்பீர்கள்.
கிறிஸ்துவை இழுத்துவிட்டேனோ!
சரி விடுங்கள்! நீற்றறையில் இட நினைத்திருப்பீர்கள்.
என்மேல் அமிலம் எறியும் உங்கள் அன்புக்கடிதங்களை,
இணையத்தில் பார்த்து ரசித்தேன்.
என்னைத்திட்டிய பின்பு உங்களுக்குச் சற்றுக் கோபம் தணிந்திருக்கும்.
பிறகென்ன? இனிக்கொஞ்சம் சிரிக்கலாம்தானே?
சிரித்ததற்கு நன்றி.
இனி கட்டுரையுள் நுழையுங்கள்.
♦ ♦ ♦
சென்றவாரக் கட்டுரையில் அந்தணர்களின் தவறுகளை எடுத்துரைத்துவிட்டு,
அடுத்த வாரத்தில் உங்களுக்கு ஒரு அதிர்ச்சிதரும் செய்தி இருக்கிறது என்று,
சொல்லி முடித்திருந்தேன் அல்லவா?
அதுபற்றி முதலில் சொல்லுகிறேன்.
வர்ணாச்சிரம தர்மம் சிதைந்ததற்குக் காரணமானவர்கள் அந்தணர்கள்தான் என்ற,
சென்ற வாரக் கட்டுரையின் பின்பகுதிச்செய்திகள் அனைத்தும்,
எனது கருத்துக்கள் என்று எண்ணி பலரும் என்னைத் திட்டியிருந்தார்கள்.
ஆனால் அந்தக் கருத்துக்கள் என்னுடையவையல்ல.
அவை முற்றுமுழுதாய் பிராமணர்களின் மடம் என்று சொல்லப்படுகின்ற,
காஞ்சி மடத்தின் முன்னாள் மகா பெரியவரின் கருத்துக்கள்.
தனது தெய்வத்தின் குரல் நூலில் அக்கருத்துக்களை அவர் பதிவு செய்திருக்கிறார்.
குமாரசாமி சுப்ரமணியம் என்ற ஒரே ஒரு வாசகர் மட்டும் தான் அதனைக் கண்டுபிடித்திருந்தார்.
அவரின் வாசிப்புத் திறனுக்கு என் வாழ்த்துக்கள்.
பெரியவரின் கருத்தை என் நடைக்கு மாற்றியதுதான் சென்றவாரம் நான் செய்த வேலை.
என்ன? என்னைத் திட்டிய பிராமணர்கள் எல்லாம்,
இப்போது கன்னத்தில் போட்டுக்கொள்கிறீர்கள் போல.
இதுதான் உங்கள் பிரச்சினை.
உங்களுக்கு உண்மை முக்கியமல்ல.
அதை ஒரு பிராமணர் சொல்லவேண்டும் என்பதுதான் முக்கியம்.
இந்த மனநிலையால்த்தான்,
நீங்கள் மற்றைய சமுதாயங்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டீர்கள்.
♦ ♦ ♦
முதல் அத்தியாயத்தில்,
வர்ணாச்சிரம தர்மத்தைக் கடைப்பிடித்தோரிலும் குற்றம் இருந்தது.
அதனை எதிர்த்தோரிலும் குற்றம் இருந்தது என்று சொல்லி,
‘அப்படியானால் அவ்விருதிறத்தாரும் குற்றவாளிகள் தானே’ என்று நீங்கள் கேள்வி கேட்க,
அப்படி இருவரையும் சமப்படுத்திவிட முடியாது,
அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லியிருந்தேனல்லவா?
அந்த வித்தியாசம் இதுதான்.
வர்ணாச்சிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதாய்ச் சொல்லி,
அந்தணர்கள் செய்த தவறுகளையும் பொய்மைகளையும் மறைக்காமல்,
அந்தணர்களின் உயர்பீடத் தலைவர் ஒருவரே,
பகிரங்கமாய் அவற்றைக் கண்டித்திருக்கிறார்.
அதுபோல,
புரட்சி என்றும் புதுமை என்றும் தத்துவங்கள் பேசி,
கட்சிகள் அமைத்து ஆட்சிகளைக் கைப்பற்றி நின்ற,
புரட்சியாளர்களில் எவரேனும் தம் இனத்தின் குற்றங்கள் இவையிவையென,
துணிந்து சொல்லியிருக்கிறார்களா?
இதுதான் எனது கேள்வி.
♦ ♦ ♦
♦ அந்தணர்கள் தம்மைத்தாம் வளர்க்கின்றனரேயன்றி சமூகத்தை வளர்க்கவில்லை.
♦ ஜாதி பேதங்களை உருவாக்கி சமூகத்தை அவர்கள் பிரிக்கிறார்கள்.
♦ ஒழுக்கத்தை போதித்த அவர்களிடம் ஒழுக்கம் இல்லை.
♦ மற்ற இனத்தாரை அவர்கள் வளரவிடாமல் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்.
♦ தாய்மொழியிலும் தமிழினத்திலும் அவர்களுக்குப் பற்றில்லை.
இவையெல்லாம் புரட்சி, போராட்டம் என்று தொடங்கியவர்களால்,
அந்தணர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.
அவர்களது குற்றச்சாட்டுக்களில் சில உண்மைகள் இல்லாமலும் இல்லை.
ஆனால் எனது கேள்வி,
பிராமணர்கள் மேல் இத்தனை குற்றச்சாட்டுக்களையும் தெளிவாக முன்வைத்து,
ஆட்சி அதிகாரங்களைப் பிடித்த புரட்சியாளர்கள்,
தாம் இனத்தலைமை ஏற்றபிறகு,
சமுதாயத்தில் இக்குற்றங்களை ஒழித்தார்களா? என்பதுதான்.
♦ ♦ ♦
வர்ணாச்சிரம தர்மம் என்று தொடங்கியதுமே,
ஆரியம், திராவிடம் என்றெல்லாம் சொல்லிக் கொதிக்கத் தொடங்குகிற,
உணர்ச்சியாளர்களைப் பார்த்து ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
உங்கள் நெஞ்சில் கைவைத்துப் பாரபட்சமின்றி,
எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
என்ன கேள்வி என்கிறீர்களா? சொல்கிறேன்.
♦ ♦ ♦
ஒவ்வொன்றாய் வருவோம்.
♦ அந்தணர்கள் தம்மைத்தாம் வளர்க்கின்றனரேயன்றி தாம் வாழும் சமூகத்தை வளர்க்கவில்லை என்று முன்பு பிராமணர்களைக் குற்றம் சாட்டியவர்கள் தாம் வென்று ஆட்சிகள் அமைத்தபின்பு சமுதாயத்தை வளர்த்தார்களா? தம்மை வளர்த்தார்களா? ஒப்பீட்டில் அந்தணர்கள் தம்மையும் தம் குடும்பத்தாரையும் தம் இனத்தையும் வளர்த்தது அதிகமா? இப்புதிய புரட்சியாளர்கள் இவற்றைச் செய்தது அதிகமா? இது முதல்கேள்வி.
♦ ஜாதி பேதங்களை உருவாக்கி சமூகத்தை அந்தணர்கள் பிரித்தார்கள் என்று சொன்ன புரட்சிக்காரர்கள், தாம் ஆட்சிக்கு வந்ததும் ஜாதி பேதங்களை ஒழித்தார்களா? வளர்த்தார்களா? தமது வெற்றிக்காகவும் தமது கட்சியின் வெற்றிக்காகவும் ஜாதிகளைச்; சொல்லி மக்களை அதிகம் பிரித்தது யார்? கட்சிகளெல்லாம் ஜாதிகளின்பேரால் அமைக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தமிழினமும் முன்பைவிட அதிகம் பிரிவுபட்டிருப்பது உண்மையா? இல்லையா? இந்த ஜாதிக்கட்சிகள் ஒன்றையொன்று உயர்வு தாழ்வு கூறி பிரிந்து நிற்கின்றனவா? இல்லையா? கலப்புத் திருமணங்களின் மூலம் நிகழக் கூடிய ஜாதிபேத ஒழிப்பை இக்கட்சிகளுள் எக்கட்சியாவது வரவேற்கிறதா? இவையனைத்தையும் எனது இரண்டாவது கேள்வியாய் வைத்துக் கொள்ளுங்கள்.
♦ ஒழுக்கத்தைப் போதித்த அந்தணர்கள் தாம்; ஒழுக்கம் பேணவில்லை என்று முன்பு குற்றம் சாட்டியவர்கள் இன்று சமூகத்தலைமை ஏற்றதும் ஒழுக்கம் பேணுகிறார்களா? தனித்தனியாகப் பிரித்துக் கூறினால் மற்றவர்கள் மனம் நோகலாம் என்பதற்காக அனைத்துப் பண்புகளையும் ஒழுக்கம் என்ற ஒரு வார்த்தையால் சுட்டியிருக்கிறேன். இன்றைய நிலையில் ஒழுக்கமீறல் இல்லாத கட்சி உண்டா என்பதல்ல என் கேள்வி. ஒழுக்கமீறலை அங்கீகரிக்காத ஒரு கட்சி உண்டா என்பதுதான் என் கேள்வி. இம் மூன்றாவது கேள்விக்கும் பதிலை எதிர்பார்க்கிறேன்.
♦ மற்ற இனத்தாரை அந்தணர்கள் வளரவிடாமல் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு. இன்று இக்குற்றச்சாட்டு தலைமையேற்கும் அனைவருக்கும் பொருத்தமாய்ப்படுகிறதா? இல்லையா?
♦ தாய்மொழியிலும் தமிழினத்திலும் அந்தணர்களுக்குப் பற்றில்லை என்று அன்று சொன்னார்கள். இன்றைய நிலை என்ன? அன்று அந்தணர்கள் வடமொழியில்த்தான் பற்று வைத்திருக்கிறார்கள் தமிழ்மீது அவர்களுக்கு பற்றில்லை என்று வாதிட்டனர். அங்ஙனம் வாதிட்டவர்கள் இன்று அந்நிலையை மாற்றிவிட்டார்களா? இன்றைய புரட்சித் தலைவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் அவர்களைவிட பலநூறு மடங்குகள் தாய்மொழியைவிட ஆங்கில மொழியில்த்தான் பற்று வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையா? இல்லையா? வடமொழியாவது சமயம், தத்துவம், இலக்கியம், கலாசாரம் என பலவகையாலும் தமிழ்மொழிக்கு இனமான மொழி. ஆங்கிலமோ நம் மொழிக்கு முற்றுமுழுதான அந்நியமொழி. அம்மொழியின் கலப்பின்றி பேசவிரும்பாதது, நடை, உடை, பாவனை, கலாசாரம் என அத்தனை விடயங்களிலும் அம் மொழிப்பண்புகளை உட்கொணர்வது என்று பிராமணர்களைவிட அந்நியமொழிக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையா? மொழியைத்தான் விடுங்கள், இனத்திலாவது இவர்களுக்கு உண்மைப்பற்று இருந்ததா? அதிகமேன்? சிலகாலத்தின் முன்னர் கண்ணுக்கு முன்னால் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் துடிதுடித்துச் சாக அதனைத் தடுக்கும் வாய்ப்பிருந்தும் அதனைச் செய்யாது தம் சுயநலத்திற்காய் அக் கொடுமையை பார்த்திருந்தார்களே! இவர்களது இனப்பற்றை என்ன சொல்ல? இக் கேள்விகள் எல்லாம் ஒன்றாகி எனது நான்காவது கேள்வியாகின்றன.
♦ ♦ ♦
ஒரு காலத்தில் பிராமணர்களைக் குற்றம் சாட்டினர்.
பின்னர் இனத்தையும் மொழியையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர்.
ஆட்சிக்கு வந்தபின்பு,
அந்தணர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா?
பிரிந்து கிடந்த நம் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா?
நம் இனம் மீதும் மொழிமீதும் பற்றை வளர்த்திருக்கிறார்களா?
ஒழுக்க நிலையில் நம் சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்களா?
மற்றைய இனத்தார் நம்மை மதிக்கும்படி நம் சமூகத்தை வளர்ந்திருக்கிறார்களா?
ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை,
பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் என்பவற்றை,
முன்பை விடக் குறைத்துவிட்டார்களா?
இவற்றில் ஏதாவது ஒரு கேள்விக்கு,
‘ஆம்’ என்ற பதிலைச் சொல்லிவிட்டீர்களேயானால்,
நாம் வர்ணாச்சிரம தர்மத்தையும் அதனைப் பின்பற்றியவர்களையம் தூக்கி எறிந்து விடலாம்.
அத்தனை அந்தணர்களையும் கழுவேற்றிவிடலாம்.
வர்ணாச்சிரம தர்மத்தாலும் அந்தணர்களாலும்தான் தவறுகள் நிகழ்ந்தனவென்றால்,
இன்று அத்தவறுகள் ஒழிந்திருக்கவேண்டும்.
ஆனால் அவை ஒழிந்ததாய்த் தெரியவில்லை.
சமூகத்திற்குள் பேதங்களை உருவாக்கிய வர்ணாச்சிரம தர்மத்தை,
நம் இனத்தைவிட்டு அகற்றவேண்டுமானால்,
அப்பேதங்களை கிளைகள் விட்டு வளரச் செய்துகொண்டிருக்கும்,
இன்றைய தலைவர்களை என்ன செய்வது?
♦ ♦ ♦
இப்போது தெரிகிறதா?
நமது வீழ்ச்சிக்கும் நம் இனத்தின் வீழ்ச்சிக்கும் மற்றவர்கள் காரணரல்லர்.
நாமேதான் காரணர்களாய் இருந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இனமொன்று சிறுபான்மை இனத்தை ஆள்வதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையை ஆண்டிருக்கிறார்கள்.
அது எப்படிச் சாத்தியமாயிற்று?
நம் பலவீனம் தான் அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறது.
இன்றும் நம் பலத்தை வளர்க்காமல் மற்றவர்கள் பலவீனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஏதிலார் குற்றத்தை அகழ்ந்து அகழ்ந்து காணுகிற நாங்கள்,
நம் குற்றம் காணத் தயங்கி நிற்கிறோம்.
அதனால்த்தான் சொல்கிறேன்.
எடுத்ததற்கெல்லாம் வர்ணாச்சிரம தர்மத்தையும்,
அதைக் கடைப்பிடித்தவரையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு,
உண்மைப் பிழை எங்கே ஒளிந்திருக்கிறது என்று ஆராயத் தலைப்படுங்கள்.
அதனைப் பாரபட்சமின்றி உள் நுழைந்து ஆராய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.
♦ ♦ ♦
வர்ணாச்சிரம தர்மத்தை வதை செய்யத்துணிந்து,
இன்று அதர்மத்தின் வாய்க்குள் அமர்ந்து,
தம் வளம் காக்கும் தலைவர்களாகிய பெரிய மனிதர்களின் கதை ஒருபக்கம் இருக்கட்டும்.
நமது அறிவுலகத்திலும் இவர்களைப் போல ஒருசிலர் இருக்கவே செய்தனர்.
அரசியல் தேவைக்கு வர்ணாச்சிரம தர்மத்தைக் குற்றஞ்சாட்டியவர்கள் போல,
தம் அறிவுத்தேவைக்கும் சிலர் அங்ஙனமே செயற்படத் துணிந்தனர்.
அறிஞராய்த் தம்மை அறிவித்து,
அறிவுலகின் சிகரப் பதவிகளைக் கைப்பற்றிய,
பொய்மையாளர்களின் புரட்டுக்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
♦ ♦ ♦
இவர்களும் தமது தனி உயர்வுக்காய்,
மேற்சொன்ன தலைவர்களின் கொள்கையைப் பின்பற்றுவதாய்க்காட்டி,
தமது ‘ஆழ்ந்த அறிவினால்’ ஆராய்ச்சிகள் பல செய்யத் தலைப்பட்டனர்.
முடிவில் நம் இனத்தின் அனைத்து வீழ்ச்சிக்கும்,
நம் மூதாதையர் வகுத்த வர்ணாச்சிரம தர்மமே காரணமென்றுரைத்து,
புதியதோர் உலகம் செய்வோம் எனப் புறப்பட்டார்கள்.
‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்,
மெய்போலும்மே மெய்போலும்மே’ என்றாற் போல,
இவர்தம் வாக்குவசீகரத்தை நம்பி,
நம் அரைநூற்றாண்டு தலைமுறையே,
நம் அடிப்படைத் தமிழ்ப்பண்புகளை நிராகரித்து அசைந்து போயிற்று.
முற்போக்கறிஞர்கள் எனத் தம்மைச்சொல்லிப்புறப்பட்ட,
இவ் அறிஞர்களின் நடவடிக்கைகளில் ஆயிரம் முரண்பாடுகள்.
அந்தணர்களே நம் இனத்தின் எதிரிகள் என்று அடித்துச் சொன்ன இவர்கள்,
பாரதியும் ஒரு பிராமணனே என்பதை மறந்து,
சமூகப்புரட்சிகளின் மூலகர்த்தாவாய் அவனையே இனங்காட்டுவர்.
அவனையே தங்களின் வழிகாட்டியென மேடைகளில் வாய்கிழிய முழங்குவர்.
அங்ஙனம் மேடையில் முழங்குவோர்,
பின்னர் தாம் ஆன்மீகத்தை நிராகரிப்பதாயும் உரைத்து நிற்பர்.
ரஷ்யப்புரட்சியையே,
மாகாளி கண்வைத்ததால் நிகழ்ந்த மாண்பெனப்பேசியவன் பாரதி,
யாதுமாகி நிற்பவள் காளியே என அறைகூவியவன் பாரதி.
தெய்வம் உண்மைஎன்று தானறிதல் வேண்டுமென,
குழந்தைகளுக்கும் உபதேசித்தவன் பாரதி.
அவனை ஏற்கிறார்களாம்.
ஆண்டவனை ஏற்கவில்லையாம்.
இது என்ன புதுமை?
♦ ♦ ♦
ஆனையளவான புளுகு இது.
ஐம்பது ஆண்டுகளின் முன் ரஷ்யகொடிக்கம்பத்தின் உறுதிகண்டும்,
அவர்தம் தொடர்பினால் பலம் பெற்ற அரசியல் தலைவர்களின் வளர்ச்சி கண்டும்,
அவற்றைப் பயன்படுத்தி வளர நினைத்தவர்கள்,
ஆரம்பத்தில் கடவுள் இல்லை என்பதே தம் கொள்கை என்றார்கள்.
பின் அக்கம்பம் தளரத்தளர அவர்தம்கருத்தும் தளர்ந்தது.
தாம் தனித்துவிடுவோம் எனும் அச்சத்தில் பின்னாளில்,
‘ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்’ என்று உரைக்கத் தலைப்பட்ட அவர்கள்,
தாம் பற்றிய கொடிக்கம்பம் ரஷ்யாவில் வீழ,
தம் கடவுட்கொள்கைக்கு இன்று கரையின்றி உரைகண்டு வருகின்றனர்.
இவர்தம் பொதுவுடைமை வாதம்,
ரஷ்யநாட்டின் தனியுடைமைப் பலத்திலேயே தங்கி இருந்திருக்கிறது.
என்னே கொடுமை!
♦ ♦ ♦
அதே போலத்தான்.
வள்ளுவமே வழியென்று உரைக்கும் இவர்களுள் வேறுசிலர்,
கடவுளையும் விதியையும் மறுத்து நிற்கின்றனர்.
கற்றதனால் ஆயபயன் வாலறிவன் நற்றாள்தொழலே என்றவன் வள்ளுவன்.
அவனையேற்று ஆண்டவனை ஏற்காத விந்தை புரியவில்லை.
எப்படி இது? என எவரும் கேட்க இல்லாததால்,
செப்படி வித்தை செய்கிறார்கள் இச்சிறுமதியர்.
ஒப்பில்லாப் புலவர்களின் உயிர்க்கருத்தை மறுத்து,
அவர் அடிபற்றி நடப்பதாய் உரைக்கும்,
அதிசயம் நம் அறிவுலகத்தில்த்தான் நடக்கமுடியும்.
இவர் தமக்குப் பதவிகள் கைவந்ததால்த்தான் இங்கு பொய்வந்தது.
♦ ♦ ♦
மக்கள் தரும் கௌரவத்தை வைத்து,
மக்களையே ஏமாற்றும் மாண்பு (?)
பிழை திருத்தும் பதவிகளுக்கே,
பிழையானவர்கள் வந்துவிட்ட அவலம்,
விதிப்பலனால் நம் அறிவுலகத்துள்ளும் நிகழ்ந்து விட்டது.
அரசியல் உலகத்தாரும், அறிவுலகத்தாரும் இங்ஙனமாய் ஒன்றிணைந்து,
நம் மூதாதையர் கருத்தை மூடக்கருத்தாக்கி,
விதைத்த பொய் விதைகளின் விளைவுகளைத்தான் இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.
வருணாச்சிரம தர்மத்தின் உண்மை ஆராயும் அதேவேளை,
இவர்தம் பொய்மையையும் இக்கட்டுரை இடையிடை ஆராயும்.
இது உறுதி.
♦ ♦ ♦
நேற்று ஒரு நண்பன் கேட்டான்.
‘உகரத்தில் வருணாச்சிரம தர்மம் எனும் தலைப்பில்,
சர்ச்சைக்குரிய கட்டுரையொன்றைத் தொடங்கியிருக்கிறாயாமே.
முன்னுரையில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டியிருக்கிறாயாம்.
வருணாச்சிரம தர்மம் என்றாலே என்னவென்று தெரியவில்லை.
அதில் மற்றவர்கள் என்ன பிழை சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
அவை தெரிந்தால்தானே இக்கட்டுரை விளங்கும்.
வருணாச்சிரம தர்மம் புரிகிற அளவிலா,
இன்றைய இளைஞர்களின் வாசிப்புநிலை இருக்கிறது?
இன்ரநெற் என்றும் ஈமெயில் என்றும் அவர்கள் எண்ணங்கள் இன்று வேறெங்கெங்கோ,
நிலைமை இப்படி இருக்கையில்,
நீ ஏதோ வருணாச்சிரமம் பற்றி எழுதத்தொடங்குகிறாயாம்?
உனக்கும் பொழுதுபோக இல்லைப்போல?’- என்றான்.
வாசிக்கப்படாத விடய ‘லிஸ்டில்’,
என் கட்டுரையையும் அவன் இரக்கமின்றிச் சேர்க்க,
அதிர்ந்தேன்.
♦ ♦ ♦
என்னால் அவனை மறுக்கவும் முடியவில்லை.
இப்போ நீ எனக்கென்ன சொல்ல வருகிறாய்? -என சலித்துக் கேட்டேன்.
‘முதலில் உனது வியாக்கியானங்களை விட்டுவிட்டு,
வருணாச்சிரம தர்மம் என்றால் என்ன? என்று விளங்கும்படி சொல்லு.
பிறகு வருணாச்சிரமதர்மத்தில,
மற்றவர்களுக்கு என்ன சிக்கல் என்று சொல்லு,
பிறகு, உனது கருத்தை விரிவா விளங்கப்படுத்து.
அப்போதான் நீ எழுதுவது எல்லோருக்கும் பயன்படும்.’
என்று சொல்லிப்போனான்.
♦ ♦ ♦
அவன் கருத்தும் சரியெனவேபட்டது.
கட்டுரைத் தொடரை ஆரம்பித்து மூன்று அத்தியாயம் முடியும் நிலையிலும்,
வர்ணாச்சிரம தர்மம் பற்றி ஏதும் சொல்லாமல்,
வேறு ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பதாய்,
ஏற்கனவே சிலர் கொதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிழைகளை இனங்கண்டு நீக்கி பின் சரிகளைப் பதிவுசெய்வதுதான் நம் மரபு முறை.
இயமத்தின் பின்தான் நியமம்.
அதனால்த்தான்; இம் முதல்மூன்று அத்தியாயங்களிலும்,
வர்ணாச்சிரம தர்மம் பற்றிய இருதிறத்தார் கருத்துக்களையும் முன்வைத்தேன்.
இப்போது ஓரளவு உண்மை நிலை உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இனி அச்சமின்றி நான் வர்ணாச்சிரம தர்மத்தை ஆராயத் தலைப்படலாம்.
முதலில் வர்ணாச்சிரம தர்மம் என்றால் என்ன என்று சொல்லுகிறேன்.
என்ன? கொட்டாவி விடுகிறீர்கள்.
சரி சரி உங்களுக்கும் கொஞ்சம் ‘ரெஸ்ட்’ வேணும்தான்.
ஒருவாரம் கொஞ்சம் ஓய்வெடுங்கள்
அடுத்தவாரம் முறைப்படி வர்ணாச்சிரம் தர்மத்தைக் காண்போம்.
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-