வேலன் என்றொரு வேழம்!: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

வேலன் என்றொரு வேழம்!: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
 

லகின் உன்னதங்கள் பல.
அவற்றுள் 'ஆசிரியமும்' ஒன்று.
கற்பிப்பவன் ஆசிரியன் என்றுரைப்பது இன்றைய வழக்கமாகிவிட்டது.
ஆனால் நம் முன்னை உரையாசிரியர்கள்,
ஆசிரியன் என்ற சொல்லுக்கு,
மாணவனால் கற்கப்படுபவன் எனப் பொருள் உரைத்தனர்
நல்ல மாணவன் ஆசிரியனிடம் கற்பதோடல்லாமல்,
ஆசிரியனையும் கற்கிறான்.
நல்லாசிரியர் ஒருவரிடம் கற்கும் பேறு பெற்ற ஒருவன்,
அவ்வாசிரியரையும் உளத்துள் வாங்கி உயர்கிறான்.
அங்ஙனம் ஆசிரியரை உள் வாங்குவதால்,
அவரது அறிவுச் சாயல்கள் அவனில் பதிகின்றன.
அதனாற்றான் குடும்பங்களில் சந்ததி சொல்லும் மரபைப் போல,
அறிவுலகிலும் சந்ததி சொல்லும் முறைமை தமிழுலகில் உண்டாயிற்று.
அங்ஙனம், என்மேல் தன் சாயல் பதித்தவர் வித்துவான் க.ந. வேலன் அவர்கள்.


 

ஆரம்பத்திலிருந்து என்னை வளர்த்தெடுத்த ஆசிரியர்கள் மூவர்.
ஒருவர் சிவராமலிங்கம் மாஸ்ரர்.
மற்றவர் வித்துவான் ஆறுமுகம்.
அடுத்தவர் வித்துவான் வேலன்.
சிவராமலிங்கம் மாஸ்ரர் எனக்கு உலகியல் கற்றுத்தந்தார்.
வித்துவான் ஆறுமுகம் எனக்கு அருளியல் கற்றுத்தந்தார்.
வித்துவான் வேலன் எனக்கு அறிவியல் கற்றுத்தந்தார்.
இம்மூவரால் ஆக்கப்பட்ட முக்கூட்டு மாத்திரைதான் நான்.
இம்மூவரும் இல்லையென்றால்,
இன்றைய ஜெயராஜ் இருந்திருக்க மாட்டான்.
இன்றைய கம்பன் கழகம் இருந்திருக்காது.

   

'அப்பாடா, அது நடந்திருக்கக் கூடாதா?' என்று,
உங்களில் சிலர் பெருமூச்சு விடுவது தெரிகிறது.
என்ன செய்வது? உங்களின் விதி என்னில் வேலை செய்துவிட்டது.

   

வேலன் மாஸ்ரர் அறிவியல் கற்றுத்தந்தார் என்று சொன்னேனல்லவா!
அதென்ன அறிவியல் என்கிறீர்களா?
இன்றைக்கு விஞ்ஞானம் தான் அறிவியல் என்று,
சில அறிவிலிகள் சொல்லித் திரிகின்றனர்.
அதில் எனக்கு உடன்பாடில்லை!
விஞ்ஞானம் கல்வியின் ஒரு கூறே தவிர அறிவன்றாம்.
எல்லாக் கல்விகளினூடும் நுழைந்து உயர் நிலை காண்பதே அறிவாம்.
வித்துவான் வேலன் என்னைத் தமிழினுள் நுழைவித்து அதன் உயர் நிலைகாட்டினார்.
அவரால் நான் தமிழினூடு அறிவைத் தரிசித்தேன்.
அதனால்த்தான் வேலன் எனக்கு அறிவியல் கற்றுத் தந்தார் என்றேன்.
இப்போது என் வரையறை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

   

கல்வி வேறு, அறிவு வேறு என்பது,
அசைக்கமுடியாத ஆணித்தரமான உண்மை.
கல்வியாளர்கள் எல்லோரையும் அறிவியலாளர்கள் எனக் கணித்தபடியாற்தான்,
நமது ஈழத்தமிழ் சமுதாயம் இன்று இறக்கம் கண்டிருக்கிறது.
வித்துவான் வேலன், வெறும் கல்வியாளர் அல்லர், அவர் அறிவியலாளர்.
வேலன் மாஸ்ரரை மட்டும் என் வாழ்க்கையில் நான் சந்தித்திருக்காவிட்டால்,
மற்றவர்களை மிரட்டும் இன்றைய என் நிமிர்வு என்னிடம் இருந்திருக்காது.
வேலன் மாஸ்ரரின் ஒவ்வொரு செயலிலும்,
அறிவுத் தெளிவும் நிமிர்வும் எப்போதும் நிறைந்திருந்தன.
அது வறட்டு அறிவுத் தெளிவல்ல, கனிந்த அறிவுத் தெளிவு.
அவர் தமிழை நேசித்தார், தமிழரை நேசித்தார்.
அது கடந்து மானுடத்தை நேசித்தார்.
இன்னும் சொல்லப்போனால், உலக உயிர்கள் அனைத்தையும் நேசித்தார்.

   

தான் நேசித்தது மட்டுமல்லாமல்,
அவையனைத்தையும் நேசிக்க எங்களையும் பயிற்றுவித்தார்.
அவராற்தான், கற்ற தமிழைக்கொண்டு,
நான் உலகை நேசிக்கவும்,
உலகு என்னை நேசிக்கவும் முடிந்தது.
உலகு மீதான எனது நேசிப்பும்,
என்மீதான உலகின் நேசிப்பும் நிகழ்ந்தன.

   

இரத்தினவேல் என்கின்ற தன்னுடைய பெயரை,
வேலன் என்று ஆக்கிக் கொண்டவர் அவர்.
இந்தக் கட்டுரையில்,
வேலன் மாஸ்ரரை, வேலன் என்றுதான் நான் குறிப்பிடப்போகிறேன்.
அது மரியாதைக் குறைவான விளிப்பன்று.
சிவனைச் சிவன் என்றும்,
கந்தனைக் கந்தன் என்றும் அழைப்பது போன்ற,
மரியாதை மிகுதியான ஒருமை விளிப்பு.
எல்லோரும் அவரை, வேலன்! வேலன்! என்றே அழைத்தபடியால்,
கட்டுரையில் அவரை அப்பெயர் கொண்டு குறிப்பதுதான் பொருத்தமாய்ப்படுகிறது.

   

தமிழை அன்பின் மொழி என்பார்கள்.
அதனாற்தானோ என்னவோ?
தமிழ் படித்தவர்கள் எல்லோரும்,
மென்மைத் தன்மையை இயல்பாய்க் கொண்டார்கள்.
பெண்மைத் தன்மையைக் கொண்டார்கள் என்றுரைப்பினும் தவறில்லையாம்.
முதுகெலும்பில்லாமல், எல்லோரையும் திருப்தி செய்வதே,
தமிழ் படித்தவர்களின் வேலை என்றிருந்த நிலமையை மாற்றி,
தமிழ் படித்தாலும் முதுகெலும்பு நிமிரும் எனக் காட்டியவர் வித்துவான் வேலன்.

   

அவர் அன்பு கண்டால் பணிவார்.
அதிகாரம் கண்டால் நிமிர்வார்.
அறிவுக்கு அடிபணிவார்.
அறியாமையை அடித்து நொறுக்குவார்.
இவை அவரது இயல்புகள்.
உண்மையை நிர்வாணமாய்த் தரிசிக்கும் துணிவு கொண்டவர்.
அதனால், உலகத்தின் பகையைக் கண்டவர்.
'ஒத்தூதும்' பழக்கம் ஒருக்காலும் இவரிடம் இருந்ததில்லை.
இச்சகம் பேசும் இழிநிலையை,
பிச்சைக்கு மூத்த பெருவாழ்க்கை என,
ஒளவை மொழியால் அடித்துச் சொல்லுவார்.
அவரிடம் இருந்த அந்த அறிவாணவம்,
அவரிடம் இருந்த அந்த அடிபணியாத் தன்மை,
அவரிடம் இருந்த அந்த அன்பூற்று,
அவரிடம் இருந்த அந்த அறிவாண்மை,
இவையனைத்தும்தான் அவர்பால் என்னை ஈர்த்தன.
அன்பால் என்னை அவரோடு சேர்த்தன.

   

மேற்சொன்னவை வேலன் மாஸ்ரரைப் பிடித்த காரணங்கள்.
அவையே, கம்பனைப் பிடித்த காரணங்களுமாம்.
அதனாற்தான், அவர்களை என்னுளம் பதித்தேன்.
அவர்களாய் ஆகத் தினம்தினம் துடித்தேன்.

   

வசதிமிக்க ஒரு பெரியவரின் இரண்டாம் தார மனைவிக்குப் பிறந்த பிள்ளை.
தந்தை இறக்க, மூத்த தமையன்மார் இவரைத் துறக்க,
தாயோடும் தமக்கையோடும் தம்பியோடும் தனித்தும், சலியாது,
ஓயாது உழைத்து உயர்ந்தவர்.
படிப்பு அவரது பசியாய் இருந்தது.
உளத்துள் கற்க வேண்டும் எனும் விருப்பு, கனலாய் எரிய,
வறுமை அதற்கு எதிர்ச்செயல் புரிய,
போராடிப் படித்த புத்திமான் அவர்.
வீட்டுச் சூழ்நிலை வேலைக்குத் துரத்தியது.
மூத்த தாரத்துத் தமையன் பிச்சையாய் வாழ்வுதர,
அதனைத் தூக்கி எறிந்து, துயர் தாங்கி,
கடையில் கணக்கெழுதியும்,
கடற்படையில் பணிசெய்தும் காலங்கடத்தினார்.

   

அறிவுப் பசியோ அடங்கியபாடில்லை.
படி! படி! எனப் புத்தி துரத்தியது.
வேலையை உதறிவிட்டு, விபுலாநந்தரிடம் கடிதம் பெற்று,
அண்ணாமலைக்கு ஓடினார்.
அங்கும் வறுமை.
கையிலிருந்த காசு,
ஒரு மடத்தில் ஒரு நாளைக்கு ஒரு தரம் உண்ண உதவியது.
அறிவுப் பசி வயிற்றுப் பசியை மறைக்க,
வாழ்க்கையைப் போராட்டமாக்கினார்.
இல்லையில்லைப் போராட்டத்தை வாழ்க்கையாக்கினார்.

   

செட்டியார் ஒருவரின் சிபாரிசு கிடைத்தால்,
அண்ணாமலையில் 'அட்மிசன்' கிடைக்கும் என்று யாரோ சொல்ல,
கல்விப் பசியோடு அந்தப் பெரியவரைக் காணச் சென்றார் வேலன்.
அந்தப் பெரியவரின் வீட்டு வாசலிலோ பெரும் வரிசை.
அவ்வரிசையில் எட்டாத்தூரத்தில் இவர்.
ஏதோ நினைத்தவர், கையில் ஒரு துண்டையெடுத்து,
வெண்பா ஒன்றை எழுதி விடுத்தார் தூது.
அக்கவிக்குச் செட்டியார் கொடுத்தார் காது.
தமிழ்ப் பிரியரான அந்தச் செட்டியார் வெண்பா கண்டு வியந்தார்.
தந்த மாணவனை நயந்தார்.
உதவிகள் பல பயன்றார்.
கல்விக்கனி வேலன் கைக்குக் கிட்டியது.

   

பருத்தித்துறையில் ஒருநாள் இரவு,
நானும் குமாரதாசனும் வித்துவான் ஆறுமுகமும்,
வேலன் மாஸ்ரரோடு உடனுறைந்து களிக்கச் சென்றிருந்தோம்.
அது எங்கள் வாடிக்கை.
அன்பையும் அறிவையும் ஆனந்தத்தையும் தேடும்போதெல்லாம்,
வேலன் மாஸ்ரர் வீடு எங்கள் 'வேடந்தாங்கல்' ஆகும்.
அங்கு, மாஸ்ரரும் மனைவியும் தனித்திருந்தார்கள்.
எங்களைக் கண்டால், அன்றலர்ந்த செந்தாமரையாய்,
அவர்கள் முகம் எப்போதும் மலரும்.
அன்றும் அங்ஙனமே மலர்ந்தது.

   

'ரீச்சர்' (அப்படித்தான் அவர் மனைவியை நாம் அழைப்போம்.)
ஓடியோடி விருந்து படைத்தார்.
உண்டு களித்து உட்கார்ந்து உரையாடும் வேளையில்தான்,
மேற்சொன்ன வறுமை வாழ்வின் கதையெல்லாம் சொன்னார் வேலன்.
நான் சொன்னது சுருக்கம்.
அன்று உணர்வுபூர்வமாய் அவர் சொன்ன, விரிந்த கதை கேட்டு,
என்னுள்ளம் விதிர்விதித்தது.
கல்வி நோக்கி இப்படியும் ஒரு போராட்ட வாழ்வா?
தாங்க முடியாமல் தவித்தேன்.
என்னுள்ளம் அவர்மேல் காதலாகிக் கசிந்து உருகியது.
உணர்ச்சி பொங்க, பொறுக்க மாட்டாமல்,
அவர் காலில் விழுந்து கட்டிப்பிடித்துக் கதறி அழுதேன்.
அன்றிருந்த உணர்வு நிலை அப்படி.
அவரும் அதே அலைவரிசையில்தான் இருந்தார்.
நான் காலில் விழுந்து அழ, அதுகண்டு வேலன் விம்மியழத் தொடங்கினார்.
வேலன் அழ, வேலி அழ, வித்துவான் அழச் சூழ்நிலை சோகமாயிற்று.
சுதாகரித்து என் தலை தடவி,
'நீ நல்லா இருப்படா, நீ நல்லா இருப்ப' என்று,
விம்மி வெடித்து வாழ்த்தினார் வேலன்.
அவரை நினைந்து நான் அழுதேன்,
என்னை நினைந்து அவர் அழுதார்.
இன்றைய என் வாழ்வின் ஏற்றங்களுக்கு,
அன்றைய மாஸ்ரரின் வாழ்த்தும் ஓர் அடிப்படை.

   
                                                                                     (வேலனின் வருகை அடுத்தவாரமும் நிகழும்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.