ஆண்டவனின் அம்மை: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அருட்கலசம் 18 Oct 2019
(சென்றவாரம்)
மண ஓலை செலவிட்டு மண முரசு முழக்கி, இனம் கூடி வாழ்த்த, மெல்லடியும், மென்னகையும் கொண்ட மயில் போன்ற புனிதவதிக்கு, மலர் மாலை சூட்டிய காளையாம் பரமதத்தனை மணம் செய்வித்து, நிதிபதியும், தனதத்தனும் நிமிர்ந்து மகிழ்வுற்றனர். அத் திருமணச் செய்தியைக் கதைக்குறிப்பேற்றி, கனிய உரைக்கின்றார் சேக்கிழார். அவ் அருமை காண்பாம்.
⬥ ⬥ ⬥
உலகையாளும் நம் சிவனார்தம் அம்மைக்குத் திருமணம்.
அரிய நலங்கள் மிக்க நம் அன்னை புனிதவதியை,
நிதிபதியின் புதல்வன் பரமதத்தன் கரம் பற்றுகிறான்.
தெய்வச் சேக்கிழார் அத் திருமணச் செய்தியை,
உயர் கருத்தேற்றி உரைத்த கவிதை இது.
அளிமிடைத்தார்த் தனதத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதருநூல் விதிவழியே செயல் முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார், காளைக்குக்
களிமகிழ் சுற்றம் போற்ற கல்யாணஞ் செய்தார்கள்.
மேற்பாடலில் தளிர் அடியும் மென்னகையும் கொண்ட அன்னையை,
மயிலாய் உவமிக்கும் சேக்கிழார்,
தாதவிழ் மாலையைச் சூட்டிய பரமதத்தனை,
காளையாய் உவமிக்கிறார்.
அன்னை மென்மயில், ஐயனோ வன்காளை,
உவமையே அவர்தம் பொருத்தப்பாட்டின்மையை உணர்த்துகிறது..
காளை ராசியோடு கன்னி ராசி பொருத்தமுறுமா?
வண்ண மயிலெங்கே? வலிய எருதெங்கே?
அழகின் அடையாளம் மயில், அதிர்வின் அடையாளம் எருது,
இல்லறத்தில் சிறக்க முடியாத இயல்புடைய அன்னைக்கு,
பறக்க முடியாப் பறவையான மயில் உவமையாகிறது.
⬥ ⬥ ⬥
சிறகை உதிர்ப்பது மயில். உடலை உதிர்த்தவள் நம் அன்னை.
தளிர் நடையும், மென்னகையும், அன்னையின் உடன் வந்த இயற்கை அழகுகள்.
தாதவிழ் மலர் மாலை பரமதத்தனிடம் இடை வந்து சேர்ந்த செயற்கை அழகு.
இயற்கை அழகு செயற்கை அழகோடு சேர்கிறது.
அதனால் அவ் இயற்கை அழகே முதன்மை பெறுகிறது.
⬥ ⬥ ⬥
ஆண்மைக்கு முதன்மை கொடுத்து,
பெண்மையை உடன் உரைப்பதே நம் தமிழ் மரபு.
வாழ்க்கைத்துணை என்பதன்றோ வழமை?
இங்கோ! திருமணத் தொடர்பில், அன்னையின் பெயரை முன் சொல்லி,
அதன் பின் பரமதத்தனைச் சுட்டுகிறார் சேக்கிழார்.
தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ் சுற்றம் போற்ற கல்யாணஞ் செய்தார்கள்.
இத் திருமணத்தில், அன்னையே முதன்மையுறுவதாய்,
சேக்கிழார் அறிவிக்க விரும்பினார் போலும்.
⬥ ⬥ ⬥
திருமணம் இனிதே நிறைவுற,
பெற்ற ஒரே மகளைப் பிரியமனமின்றி,
தனது அருகிருத்த உளம் விரும்பினான் தனதத்தன்.
அவன் கருத்துக்கு நிதிபதியும் உடன்பட,
தம்பதியர்க்கு,
மருங்கினிலே அணி மாடம் அமைத்துக் கொடுத்தான் அவன்.
தம்பதியர் காரைக்காலிலேயே தங்கினர்.
பரமதத்தன் அவ்வூரில் செல்வம் பெருக்கிச் சிறந்தான்.
மங்கல மா மணவினைகள் முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள் குடிக்கு அரும்புதல்வி ஆதலினால் தனதத்தன்
பொங்கொலி நீர் நாகையினிற் போகாமே கணவனுடன்
அங்கண் அமர்ந்தினிதிருக்க அணிமாடம் மருங்கமைத்தான்.
மகட்கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில் பெருங் காதலினால் தங்குமனை வளம் பெருக்கி
மிகப்புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்.
⬥ ⬥ ⬥
இறைவன் திருவடிகளில் என்றும் மனம் பதித்து,
மனையறத்தின் மாண்பு வழாது நெறிநின்றார் நம் அன்னை,
ஆங்கவன் தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில் வரும் மனைஅறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.
புனிதவதியார்,
இறைவன் திருவடியிலும் அன்பு செலுத்தினார்.
கணவன் மேலும் காதலாகினார்.
இவ் உண்மையை நமக்கு உணர்த்த,
பொருவிடையார் திருவடிக்கீழ் எனும் தொடர்க்கும்,
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.
எனும் அடிக்கும் இடையில்,
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருக எனும் அடியை இட்டு,
அவ் அடியை முன்னும் பின்னும் கூட்டி பொருள் கொள்ளுமாறு,
தெய்வச்சேக்கிழார் அமைத்தனர்.
அவர்தம் தெய்வத்தமிழ் உணர்த்த,
அன்னையின் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருகி,
கடவுளுக்கும், கணவருக்குமானதை நாம் தெரிந்து கொள்கிறோம்.
⬥ ⬥ ⬥
காவியம் கற்கும் சிலர்,
அம்மையை உயர்த்துவதாய் நினைந்து,
பரமதத்தனை மிகவும் தாழ்த்தி உரைப்பர்.
அவனை, சேக்கிழார் காளை என்றுரைத்ததால்,
அவன் திமிர் நிறைந்தவன் என்றும்,
மனைவியை நினையாது மற்றை மாம்பழத்தையும் தனக்கே கேட்டதால்,
அவன் அன்னை மேல் அன்பற்றிருந்தான் என்றும்,
அன்னையை அடிமைப்படுத்தி அதிகாரம் செலுத்தினான் என்றும்,
அவனை சுயநலவாதியாய் உரைக்க அவர் முயல்வர்.
⬥ ⬥ ⬥
அது மட்டுமன்றி இறைநாட்டம் கொண்ட புனிதவதியார்,
இல்லறத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கமாட்டார்.
அக்குறையே அவர் கணவனைப் பிரியக் காரணமாயிற்று.
என்றெல்லாம் தம் சிறுமதிக்கேற்ப பொருளுரைத்து,
அம்மையின் வரலாற்றை அவர் அசிங்கப்படுத்துவும் செய்வர்.
⬥ ⬥ ⬥
அஃது தவறாம்!
அம்மையினதும், கணவரதும் இல்லறம் அன்பால்ச் சிறந்ததை,
மேல் பாடலால் நாம் அறிகிறோம்
அடுத்த பாடலும் அதனையே அனுவயப்படுத்துகிறது.
⬥ ⬥ ⬥
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான
தம்பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வு மிக ஒழுகுநாள்.
சிவனடியார் தம்மிடத்து வந்தால்,
செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும்
அள்ளிக் கொடுத்தார் அன்னை என்கையில்,
புனிதவதியாரின் பக்தியை மட்டுமன்றி,
இல்லத்தில், அவர் பெற்றிருந்த,
சுதந்திரத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
தகுதியின் வேண்டுவ கொடுத்தும் எனும் தொடரில்,
தகுதி என சேக்கிழார் உரைப்பது,
சிவனடியார்தம் தகுதியை அன்றாம்!
வருகிறவர் யாவர்க்கும்,
தன் தகுதிக்கேற்ப அன்னை உபகரித்தாள் என்பதுவே,
அத் தொடருக்குப் பொருந்தும் பொருளாம்.
இரப்பார் என் பெறினும் கொள்வர்.
கொடுப்பார் தாம் அறிவார் தம் கொடையின் சீர் எனும்,
தமிழ் மூதாட்டி ஒளவையின் கருத்தும் இங்கு நினையத்தக்கது.
⬥ ⬥ ⬥
விதி விளையாடிய ஒரு நாள்.
பரமதத்தனைப் பார்க்க வந்த பண்பாளர் சிலர்,
மாங்கனிகள் இரண்டை மகிழ்வாய் அவனுக்குக் கொடுத்தனர்.
கனிகளை வாங்கி, அவர்தம் காரியம் நிறைவேற்றிக் கொடுத்தபின்பு,
மனைக்கு, அந்த மாங்கனிகளை மகிழ்வோடு அனுப்பினான் பரமதத்தன்.
⬥ ⬥ ⬥
(அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)