வேலன் என்றொரு வேழம்!: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-
சிந்தனைக்களம் 20 Oct 2019
(சென்ற வாரம்)
அவர்மேல் காதலாகிக் கசிந்து உருகியது. உணர்ச்சி பொங்க, பொறுக்க மாட்டாமல், அவர் காலில் விழுந்து கட்டிப்பிடித்துக் கதறி அழுதேன். அன்றிருந்த உணர்வு நிலை அப்படி. அவரும் அதே அலைவரிசையில்தான் இருந்தார். நான் காலில் விழுந்து அழ, அதுகண்டு வேலன் விம்மியழத் தொடங்கினார். வேலன் அழ, வேலி அழ, வித்துவான் அழச் சூழ்நிலை சோகமாயிற்று. சுதாகரித்து என் தலை தடவி, 'நீ நல்லா இருப்ப, நீ நல்லா இருப்ப' என்று, விம்மி வெடித்து வாழ்த்தினார். அவரை நினைந்து நான் அழுதேன், என்னை நினைந்து அவர் அழுதார். இன்றைய என் வாழ்வின் ஏற்றங்களுக்கு, அன்றைய மாஸ்ரரின் வாழ்த்தும் ஓர் அடிப்படை.
❤ ❤ ❤ ❤
அச்சோகச் சூழ்நிலையை வித்துவான் ஆறுமுகம் விலக்கினார்.
வேலனை நோக்கி,
'செட்டியாருக்கு எழுதிய சீட்டுக் கவி வெண்பாவை,
மீண்டும் ஒருதரம் சொல்வாய்' என்று மிரட்டும் தொனியில் சொன்னார்.
வேலன் அவ்வெண்பாவை மீண்டும் சொல்ல,
'தம்பீ, இது வெண்பாவாடா?' என்று அழுகை மறந்து, வித்துவான் குறும்பாய்க் கேட்க,
வாய்விட்டுச் சிரித்தார் வேலன்.
'போங்கண்ண! வெண்பாவா முக்கியம்? விசயந்தான் முக்கியம்' என்றார்.
வித்துவான் சிரிப்படக்கி,
'ஏதோ, செட்டியாருக்கு வெண்பா தெரியாததும் நல்லதாய்ப் போய்விட்டது' என்று சொல்ல,
வேலனும் நாமும் விழுந்து, விழுந்து சிரித்தோம்.
சங்கமத்தில் மீண்டும் சந்தோசம் குடிபுகுந்தது.
❤ ❤ ❤ ❤
வேலன் மாஸ்ரரின் வரலாறு சொல்வதற்காய்,
மேற்சொன்ன சம்பவம் சொன்னேன்.
இனி, வேலன் மாஸ்ரரை உங்களுக்கு முழுமையாய் விளங்க வைப்பதற்காய்,
மாஸ்ரரைப் பற்றி மற்றவர்கள் சொன்னவை சில தொடர்கின்றன.
❤ ❤ ❤ ❤
அண்ணாமலையில் படிக்கும்போது,
இளமை துடிக்கும்போது,
வேலன் செய்த விளையாட்டுக்களை,
வித்துவான் ஆறுமுகமும் சிவராமலிங்கம் மாஸ்ரரும்
அடுக்கடுக்காய்ச் சொல்லி ஆனந்திப்பார்கள்.
ஒருமுறை, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில்,
பேரறிஞரான சிதம்பரநாதச் செட்டியார் அவர்கள் உரையாற்றினாராம்.
'பொய் பிறந்தது புலவர் நாவிலே!' இது அன்றைய அவரது பேச்சுத் தலைப்பு.
தமிழ்ப் புலவர்களைத் தாழ்த்தும் வண்ணம்,
அன்று அவர் பேசிய பேச்சு வேலனுக்கு உடன்பாடாகவில்லை.
அடுத்த வார நிகழ்வில், தான் பேசப்போவதாய்க் கேட்டு, சந்தர்ப்பம் பெற்று,
செட்டியார் பேசிய அதே தலைப்பில் பேசியிருக்கிறார்.
மேற் தொடரின் ஏகாரத்திற்கு வினாப்பொருள் கொடுத்து மாற்றம் செய்து,
'பொய் பிறந்தது புலவர் நாவிலே?' என,
புலவர்தம் நாவிலே பொய்யும் பிறக்குமோ? எனக் கேள்வி எழுப்பி,
செட்டியாரது முன்னைய பேச்சைக் கடுமையாய்ச் சாடியிருக்கிறார் வேலன்.
உடன்கற்ற வித்துவான் ஆறுமுகம் நடுங்கிப் போனாராம்.
இறுதி வருடப் பரீட்சையில் இருந்துகொண்டு இப்படிப் பேசினால்,
பரீட்சை முடிவு பாழ்பட்டுப் போய் விடுமே! என்னும் பதற்றம் அவருக்கு.
மாணவர்களின் கல்வித்தரம் பற்றிய கவலையில்லாமல்,
பேராசிரியர்கள் தாம் வெறுப்பவர்களை வீழ்த்தும் பண்பாடு (?),
பல்கலைக்கழகங்களின் இயல்பாய் அங்கும் இருந்திருக்கிறது.
மறுநாள் வேலனை அழைத்துச் சென்று,
பேராசிரியரோடு பேசிச் சமாதானம் செய்தாராம் வித்துவான் ஆறுமுகம்.
இது, வேலனின் துடுக்கின் அடையாளமல்ல, மிடுக்கின் அடையாளம்.
❤ ❤ ❤ ❤
மற்றொரு சம்பவம்.
இது சிவராமலிங்கம் மாஸ்ரரின் தம்பியாரான புலவர் ஈழத்துச் சிவானந்தன் சொன்னது.
அவரும் அப்போது அண்ணாமலையில் படிக்கச் சேர்ந்திருந்தார்.
எங்கள் வேலன் மாஸ்ரர் ஆறடி உயர ஆஜானுபாவர்.
முதுமையிலேயே, அவர் நிமிர்ந்த தோற்றம் எங்களை வியப்புறுத்தும்.
அங்ஙனமாயின் இளமை நிலையைக் கேட்கவும் வேண்டுமா?
முழுகுவதற்காய், உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை எண்ணெய் தேய்த்துக்கொண்டு,
இடுப்பில் ஒரு சிறு துண்டு மட்டும் கட்டி வெய்யிலில் நிற்பாராம் வேலன்.
இது சனியில் நிதம் நடக்கும் தனிக்காட்சி.
இயல்பாகவே, மென்மை கொண்ட மற்றைய தமிழ் மாணவர்கள்,
'நின்ற நிலையிது நெறியிற்றன்று' என நெளிய,
புலவர், மற்றவர்கள் சார்பாய்ப் போய்,
'அண்ணே! மற்றவையள் சங்கடப்படுகினம்,
பெண் பிள்ளைகள் வந்து போற இடம், நீங்கள் உள்ள வாங்கோ!' என்று கூப்பிட்டிருக்கிறார்.
'டேய், சிவானந்தன், என்ட உடம்பு, என்ட எண்ணெய்,
நான் பூசிக்கொண்டு நிண்டால் அவங்களுக்கு என்ன செய்யுது?
ஆர் உன்னை அனுப்பினது' என்று,
வேலன் கையைக் காலை உதற,
தப்பினால் காணுமென்று தான் ஓடிவந்த கதையைப் புலவர் சொல்ல,
நாம் அதுகேட்டு விழுந்து, விழுந்து சிரித்திருக்கிறோம்.
❤ ❤ ❤ ❤
மற்றொரு கதை.
இதுவும் புலவர் சொன்னதுதான்.
அப்போதெல்லாம், சனிக்கிழமைகளில்,
அண்ணாமலை 'ஹொஸ்டல்' சாப்பாட்டில் கோழிக்கறி போடுவார்களாம்.
சுப்பையா என்ற சமையற்காரன்தான் உணவு பரிமாறுவானாம்.
கோழிக்கறி போடும்பொழுது, அவசர அவசரமாக வைப்பதுபோல்,
எல்லாரது இலையிலும், கடகடவென, கறியைக் கொஞ்சம் கொஞ்சமாய் வைத்தபடி,
அவன் நகர, பரிதாபமாய் அக்கறியைப் பார்த்தபடி,
ஒன்றும் செய்யமுடியாமல் மாணவர்கள் உண்பது வழக்கமாம்.
அதிக கறி கேட்டால், உள்ளதும் குறைந்து விடுமோ? எனும் பயத்தில்,
பயில்வான் போலிருந்த சுப்பையாவிற்கு எதிராக,
புரட்சி கிளப்ப எவரும் துணியாத நிலையிற்தான்,
வேலன் மாஸ்ரர் 'ஹொஸ்டலில்' இணைந்திருக்கிறார்.
❤ ❤ ❤ ❤
வழமைபோல, அந்தச் சனிக்கிழமையும்,
சுப்பையா வேகவேகமாய்க் கறி வைத்து வேலனைத் தாண்டி நகர்ந்திருக்கிறான்.
'டேய் சுப்பையா, இங்க வாடா!' என்று,
அவனை மிரட்டிக் கூப்பிட்டிருக்கிறார் வேலன்.
அவர் குரல் கேட்டு மற்றை மாணவர்களெல்லாம் நடுநடுங்கிப் போனார்களாம்.
என்ன நடக்கப்போகிறதோ? என்று அவர்கள் அஞ்ச,
வேலனின் தோற்றத்திலும் கர்ச்சனையிலும் இருந்த கம்பீரம் கண்டு,
பயந்து நடுங்கிய சுப்பையா,
'என்னா சார், என்னா சார்' என்று தயங்கி நின்றிருக்கிறான்.
சுப்பையாவின் நடுக்கம் கண்டு மாணவர்களுக்கு அளவிறந்த உற்சாகம்.
எல்லோரும் வேலனை வினோதமாய்ப் பார்க்க,
அவர், அதுபற்றிய கவலையில்லாமல்,
'டேய், இங்க கிட்டடியில வாடா!' என்று,
மீண்டும் சுப்பையாவை மிரட்டி அழைத்திருக்கிறார்.
பயந்து பயந்து அருகில் வந்த சுப்பையாவிடம்,
தனது இலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த கோழிக்கறியைக் காட்டி,
'என்னடா இது?' என்று வேலன் கேட்க,
அவன், இவர் ஏதோ குதர்க்கம் செய்கிறார் என்பதை விளங்கி,
பயந்து நடுங்கியபடி, 'கோழிக் கறி சார்' என்றிருக்கிறான்.
குரலை மேலும் உயர்த்திய வேலன்,
'டேய், எங்கட ஊரில ஊறுகாய்தான் இந்தளவு வைக்கிறவங்கள்.
வையடா கறியை' என்று மிரட்ட,
அன்றிலிருந்து அடுத்தவர் இலைகளிலிடும் அரைக்கரண்டிக் கறி,
வேலன் இலையில் மட்டும் ஐந்து கரண்டியாய் உயர்ந்திருக்கிறது.
வேண்டியதைக் கேட்பதில் இதுதான் வேலனின் பாணி.
இக்கதையைப் புலவர் சொல்லும் அழகே அழகு!
❤ ❤ ❤ ❤
வேலன் மாஸ்ரரது கல்யாணம் காதற்கல்யாணம்.
உயரத்தைத் தவிர அவர் இயல்புக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான மனைவி.
மாஸ்ரரைக் கடைசிவரை காதலாய் நேசித்தார்.
மாஸ்ரரின் முரட்டுத்தனங்களுக்கெல்லாம் முகஞ்சுழிக்காமல் இடங்கொடுத்தார்.
திருமணமான பிறகு, மனைவியை இலங்கையில் விட்டுவிட்டு மீண்டும் தான் இந்தியா சென்று,
B.O.L பரீட்சையை முடித்து வந்தார் மாஸ்ரர்.
ஒரு பெண் குழந்தை பிறக்க,
அந்தக் குழந்தையைத் தன்னோடு 'ஹொஸ்டலில்' வைத்துக்கொண்டு,
ரீச்சரை இந்தியா அனுப்பி படிக்க வைத்தார்.
பின் இருவருமாக, வளர்ந்த மகளை இந்தியா அனுப்பிப் படிப்பித்தார்கள்.
அதன்பிறகு, பேரப்பிள்ளையை தானே கொண்டுசென்று இந்தியாவில் வைத்துப் படிப்பித்தார்.
மாஸ்ரரின் கல்விப் பைத்தியம் அந்தளவானது.
❤ ❤ ❤ ❤
'யதார்த்தவாதி வெகுசன விரோதி' எனும் பழமொழிக்கிணங்க,
போகுமிடமெல்லாம் வேலன் பகை சம்பாதித்தார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் காலத்தில்,
அதிபராக இருந்தவருக்கு,
வேலனைப் பிடிக்கவே பிடிக்காது.
வேலனது நிமிர்வும் பணியாத் தன்மையும் எரிச்சலூட்ட,
வேண்டுமென்றே வேலனைச் சீண்ட நினைத்திருக்கிறார் அவர்.
ஒரு நாள் ஆசிரியர்களுக்கான பாடம் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்,
வேண்டுமென்றே வேலனைத் தாமதிக்க வைத்து,
மற்றைய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்திருக்கிறார் அவர்.
சினத்தை அடக்கியபடி வேலன் பொறுத்திருக்க,
அந்த நேரம் பார்த்து மற்றொரு ஆசிரியர்,
'சேர், தமிழுக்கு ஒருத்தரையும் போடேலயே?...' என்று இழுத்திருக்கிறார்.
❤ ❤ ❤ ❤
வேலனைக் கிண்டலடிக்க நினைத்த அந்த அதிபர்,
தமிழ்தானே, அது பிரச்சினையில்லை,
'எனிபொடி கான் டீச் டமில்' என்றிருக்கிறார்.
எரிமலை வெடித்திருக்கிறது.
கொதித்தெழுந்த வேலன், 'ஸ்டாப் ரூம்' என்றும் பார்க்காமல்,
அத்தனை ஆசிரியர்களுக்கும் முன்னால்,
கழுத்தைச் சுற்றி அதிபர் போட்டிருந்த,
சால்வையின் இரு முனைகளையும் பற்றிப்பிடித்து,
'எனிபொடி கான் டீச் டமிலோடா?
எங்க 'அ' விலிருந்து 'ன்' வரையும்,
தமிழெழுத்து முழுவதையும் வரிசையாய்ச் சொல்லு பார்ப்பம்' என்று
அதிபரை உலுப்பியபடி கேட்க,
அருகிலிருந்த ஆசிரியர்கள், அதிபரைப் பெரும்பாடுபட்டு மீட்டெடுத்திருக்கிறார்கள்.
❤ ❤ ❤ ❤
நான் யாழ். இந்துவில் ஏ/எல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்திலும்,
அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.
❤ ❤ ❤ ❤
(வேலன் அடுத்தவாரமும் வருவார்)