ஆண்டவனின் அம்மை: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
அருட்கலசம் 18 Oct 2019
(சென்றவாரம்)
விதி விளையாடிய ஒரு நாள். பரமதத்தனைப் பார்க்க வந்த பண்பாளர் சிலர், மாங்கனிகள் இரண்டை மகிழ்வாய் அவனுக்குக் கொடுத்தனர். கனிகளை வாங்கி, அவர்தம் காரியம் நிறைவேற்றிக் கொடுத்தபின்பு, மனைக்கு, அந்த மாங்கனிகளை மகிழ்வோடு அனுப்பினான் பரமதத்தன்.
⬥ ⬥ ⬥
உளம் மகிழ விருந்தினர் தந்த மாங்கனிகளைப் பெற்று,
இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான் பரமதத்தன்.
பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓர் இரண்டு வந்தணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறையளித்தே
'ஈங்கிவற்றை இல்லத்துக் கொடுக்க' என இயம்பினான்.
பாடலில் பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தன் என்றதால்,
பரமதத்தன் வைசிகனாய் வர்ணநெறிக்கண்ணும்,
இல்வாழ்வானாய் ஆச்சிரமநெறிக்கண்ணும்,
சிறந்து நின்றதை உணர்ந்து கொள்கிறோம் நாம்.
⬥ ⬥ ⬥
தரப்பட்ட மாங்கனிகளோ இரண்டு.
பாடலில் தெய்வச்சேக்கிழார்,
மாங்கனிகள் ஓர் இரண்டு என உரைக்கிறார்.
உலக நடையில் ஒன்றிரண்டு என உரைப்பது,
எண்ணிக்கையை வரையறை செய்யாத உரைப்பாம்.
ஆனால் இப்பாடலில் தெய்வச்சேக்கிழார் அங்ஙனம் உரைத்தார் அலர்.
அவர் ஓரிரண்டு என உரைத்ததன் பொருள் வேறு.
ஓர் என்ற சொல்லிற்கு ஒப்பற்ற என்பதுவும் பொருளாம்.
பரமதத்தன் இரண்டாம் கனியையும் வேண்டுமளவிற்கு,
சுவையில் அப்பழங்கள் உயர்ந்திருந்தமையையும்,
அன்னைக்கு சிவனருளைப் பெற்றுத்தந்த அவற்றின் அருட்திறத்தையும்,
நமக்கு உணர்த்தவே மாங்கனிகள் இரண்டு என்றுரைக்காமல்,
மாங்கனிகள் ஓர் இரண்டு என உரைத்து,
அவற்றின் ஒப்பற்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறார் சேக்கிழார் பெருமான்.
⬥ ⬥ ⬥
கிடைத்த அரிய கனிகள் இரண்டையும்,
தனித்துத் தானே உண்ணாமல்,
அக்கனிகளை இல்லத்திற்கு அனுப்பி வைத்த,
பரமதத்தனின் செயலிலிருந்து,
அவன் மனைவிமேல் கொண்ட அன்பையும்,
அவனது இல்லற மாண்பையும் நாம் தெரிந்து கொள்கிறோம்.
⬥ ⬥ ⬥
கணவன் அனுப்பிய கனிகளை,
அன்போடு அன்னை வாங்கி வைத்தனள்.
அப்போது சிவனாரின் முதிய திருத்தொண்டர் ஒருவர்,
பசி வருத்த அன்னையின் அகத்துட் புகுந்தார்.
கணவன் தான் வரவிடுத்த கனி இரண்டும் கைக்கொண்டு
மணம் மலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததற் பின்
பண அரவம் புனைந்தருளும் பரமனார் திருத்தொண்டர்
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுட் புகுந்தார்.
இப்பாடலிலும் திருத்தொண்டர் ஒருவர் வந்தார் என்கிறார் சேக்கிழார்.
இங்கும் ஒருவர் என்னும் சொல் எண்ணிக்கையைக் குறிப்பதன்றாம்.
அச் சொல்லிற்கு ஒப்பற்றவர் என்பதுவே இங்கும் பொருளாம்.
இவ்விடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உண்டு.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் பல இடங்களில்,
அடியரைச் சோதிக்க ஆண்டவனே வேடமிட்டு வந்ததான வரலாறுகள்,
விரவிக்கிடக்கின்றன.
காரைக்காலம்மை புராணத்திலும் வந்த சிவனடியாரை,
இவர் சிவனே! என்று சேக்கிழார் உரைத்திருக்க முடியும்.
அதற்கான வாய்ப்பிருந்தும் சேக்கிழார் அங்ஙனம் உரைத்தார் அலர்.
வந்தவர் சிவனார் அல்லராம் சிவனடியாரே! என,
தெளிவுற உரைக்கிறார் நம்தெய்வச்சேக்கிழார்.
பண அரவம் புனைந்தருளும் பரமனார் திருத்தொண்டர்
⬥ ⬥ ⬥
வந்த சிவனடியாரை, நம் தெய்வச்சேக்கிழார்,
சிவனென்று உரையாததன் காரணம் என்ன?
சிந்திக்க, இனிய விடை கிடைக்கிறது எமக்கு.
காரைக்காலம்மையின் புராண முடிவில்,
புனிதவதியை தன் அன்னையாய் ஏற்கிறான் நம் சிவனார்.
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண்.
அதனை முன்னரே நினைக்கிறார் சேக்கிழார்.
அன்னையைப் பிள்ளை சோதித்தல் முறையன்றன்றோ!
அதனாற்றான் வந்தது சிவனன்று, சிவனடியாரே! என உரைத்து,
நம் பண்பாட்டின் பெருமையையும் நிலைகொள்ள வைக்கிறார் சேக்கிழார் பெருமான்.
⬥ ⬥ ⬥
உணவின் மிகுவேட்கையினால் உட்புகுந்த அவ்வடியார்க்கு,
உடன் உணவிட நினைக்கிறாள் நம்அன்னை.
அழி பசியோடு வந்த அம் முதிய அடியவரின் நிலை,
நம் அன்னையின் அகத்தை வருத்தியது.
இல்லிலோ சாதம் வடித்துக் கறியமுது ஆக்காத நிலை.
கறியமுதம் உதவாதே திரு அமுது கைகூட
என் செயலாம்?
அன்னையின் இதயத் தூண்டலால் அறிவு பதிலுரைத்தது.
கணவன் அனுப்பிய கனி இரண்டுளதே.
அதில் ஒன்றோடு அன்னம் பிசைந்து அடியவர்க்கீந்தாள்,
அவர்தம் இன்னல் நீங்கும் என நினைந்தாள் நம் தாய்.
⬥ ⬥ ⬥
அவள்தன் உள்ளம் மகிழ்ந்தது.
அடியார்க்குக் கால் கழுவ நீர் கொடுத்தார்.
பின்னர் வருவிருந்து ஓம்புவதற்காய் வாழை இலை விரித்தார்.
சமைத்திருந்த சாதம் தனைக் கையில் எடுத்தார்.
வைக்க! எனக் கணவர் அனுப்பிய அரிய கனிகளில் ஒன்றை,
சாதத்திற் பிசைந்து சரி செய்து,
அடியார் தமை அமுது செய்வித்தார் அன்னை.
வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த்தொண்டர் நிலை கண்டு
'நாதன்தன் அடியாரைப் பசிதீர்ப்பேன்' என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன்னளித்துப் பரிகலம் வைத்(து)
ஏதந் தீர் நல்விருந்தாய் இன் அடிசில் ஊட்டுவார்.
இல்லாளன் 'வைக்க' எனத் தம்பக்கல் முன்னிருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்தணைந்து படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.
⬥ ⬥ ⬥
இவ்விரண்டாம் பாடலில்,
சேக்கிழார் மரபை மீறி ஓர் புதுமை செய்கிறார்.
இல்லத்திற்கு உரியவள் பெண் என்பதால்,
அவளுக்கு இல்லாள் எனப் பெயர் வந்தது.
இல்லாள் எனும் பெண்பால் சொல்லிற்கு,
நம் தமிழ்மொழி ஆண்பால் சொல்லினை அமைக்கவில்லை.
இல்லான் என உரைத்திடிலோ,
ஏதும் இல்லாதவன் எனப் பொருள் வந்துவிடும்.
இப்புராணத்தில் நம் அம்மை,
இல்லறவீட்டினைத் துறந்து,
நல்லறவீடாகிய நாயகன் தாள் அடைகின்றாள்.
ஆதலால் அவள் இவ்வீட்டிற்குரியள் அல்லளாம்.
பரமதத்தனோ இவ்வுலகைப்பற்றி நிற்கப் போகிறவன்.
ஆதலால் அவனே இவ்வீட்டிற்குரியவனாம்.
இதனை நமக்கு உணர்த்தவே தெய்வச்சேக்கிழார்.
இல்லாள் எனும் சொல்லுக்கு ஒப்பான எதிர்ப்பாற்சொல் தேடி,
இதுவரை தமிழில் இல்லாத இல்லாளன் எனும் புதுச்சொல்லை,
பாடலிலிட்டுப் பரவசப்படுத்துகிறார்.
⬥ ⬥ ⬥
மூப்பின் தளர்வாலும், முடுகிய பசியாலும் அயர்ந்திருந்த திருத்தொண்டர்,
அன்னையிட்ட மாங்கனி அமுதினால் அயர்வு நீங்க மகிழ்ந்து போயினர்.
மூப்புறும் அத்தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப்பசியின் நிலையாலும் அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோ(டு) இனிதருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்.
⬥ ⬥ ⬥
அடியார் சென்றபின்.
பகல்பொழுதில் பரமதத்தன் இல்லம் சேர்ந்தான்.
(அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)