பின்னைப் புதுமை -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

 
 
மதச்சண்டை💧
கடவுள்களைக் 
காக்கப் புறப்படும்
மனிதர்களின்
மடமைச் 
செயற்பாடு.
 
 
கற்பு💧
தாவும் மனம் 
தளர்ந்த அறிவு 
கொதிக்கும் உடல் 
குமுறும் உணர்வு 
எல்லைகள் தாண்ட ஏங்கும் நெஞ்சம் 
தடுக்கும் மனமதில்.
 
பிராந்திய வல்லரசு💧 
எந்நேரமும்   
தான் இரையாகலாம் என்பது அறியாமல்
முதலையின் திறந்த வாய்க்குள் இருந்து
இரைதேடும் சிட்டுக்குருவி.
 
பெண்கள் கல்லூரி💧
வெள்ளைப்பூக்களாய் 
விரிந்து கிடக்கும்
வேலியிட்ட பூங்கா 
வண்டுகள் வலம்வரும் 
பூச்செண்டு.
 
விஞ்ஞானம்💧
இன்றைய மெய் 
நாளைய பொய்
 
காமம்💧
சூக்குமச் சுடர்.
பால் கடந்த பரிதவிப்பு.
அறிவை மறைக்கும் திரை.
உள்ளிருந்து வதைக்கும் எதிரி.
பிரிவில் பிறக்கும் நெருப்பு 
கூட, பிறக்கும் குளிர்.
நினைவிலும் சுகம்தரும் நிழல்.
உணர்வை உயிராக்கும் மந்திரம்.
கடல் போல் தெரியும் கண நேரக்கஷ்டம்.
 
பரீட்சை💧
மனனத்தரம் காணும் உரைகள்.
மடையர்கள் வகுக்கும் 
அறிவின் எல்லை.
விரியமுடியாவண்ணம்
அறிவை எல்லைப்படுத்தும் அச்சு.
 
தேசபக்தன்💧
காணி விற்கவும்
கற்புள்ள மனைவி தேடவும்
பரிசுகளால் உறவை வாங்கவும்
பவுசுகளால் பெருமை சேர்க்கவும்
கடல் கடந்து ஓடி வருபவன். 
 
தர்மகர்த்தா💧
கோயிலில் கூட்டம்
கூடக் கூட
மகிழும் மனிதர்
குவியும் தட்சணையால் மட்டும்.
 
பேராசிரியர்💧
மாணவன் மேல்
ஆத்திரம் அவருக்கு.
விடைத்தாளை விசிறி எறிந்தார்.
தெரியாதவற்றை எப்படி எழுதலாம்?
தனக்கு!
 
அரங்கேற்றம்💧
பட்டு 
பகட்டு
பாராட்டு
 
அரசியல்வாதி💧
நாட்டைப் பாதுகாப்பவன்.
நல் வழி செல்ல விடாது.
 
கதாநாயகி💧
இல்லாத கற்பை 
இழந்ததற்காய் 
ஏங்கி அழும் 
அரைநிர்வாணி.
 
தாய்💧 
உயிர் கொடுத்து
பின்னும் பிள்ளைக்காய்
உயிர் கொடுப்பவள்.
 
நாய்💧
காசுக்காக
கட்சி மாறாத 
கலியுகத்தின் 
கடைசி விசுவாசி.
 
பக்தன்💧
இறைவனை
கையால் கும்பிட்டு
வாயால் போற்றி
மனதால் தனக்கான 
வரங்கள் வேண்டுபவன்.
 
நன்றி💧
இன்றைய உலகில்
விலங்கின் பண்பு.
 
பணம்💧
உயிர்களை அசைக்கும்
உயிர் இல்லாப் பொருள்.
 
ஒற்றுமை💧                        
கேட்டவனும் சுடுகிறான்.
மறுத்தவனும் சுடுகிறான்.
இருவர் கையிலும் துப்பாக்கி.
 
பேச்சுவார்த்தை💧
காலம் கடத்தவென
அரசியல் தலைவர்களால்
செய்யப்படும்
மனத்தொடர்பற்ற 
வாயின் செயற்பாடு.
💧💧💧
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்