ஓர் கவிஞரின் பார்வையில் இலங்கைக் கம்பன் விழா!

 
அ.கி.வரதராஜன்
சிங்கப்பூர். 24- ஏப்ரல் -2018
 
அன்புள்ள கம்பவாரிதி ஐயாவின் பாதம்தொட்டு வணங்கி இதனை எழுதுகிறேன். கொழும்பு கம்பன் விழாவில் பங்கேற்கும் பெரும் பேற்றை எனக்கு வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கோடானு கோடி நன்றி ஐயா. 
எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றாலும், குறைந்தபட்சமாக என் எண்ணங்களை வடித்து, பாடலும் உரைநடையுமாக இதனைப் பதிவுசெய்வது என் கடமை என உணர்ந்து இதனை எழுதுகிறேன். குறிப்பிட்டு எழுதுவதற்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. எல்லாவற்றையும் எழுதுவது என்றால்,அது ஒரு நூலாகவே ஆகிவிடும். எனவே சிலவற்றின் மீது குறிப்பாக வெளிச்சம் விழுமாறு எழுதியுள்ளேன்.  
 
விண்டுரைக்கமாட்டா வியப்பளித்த கம்பவிழா, 
கண்டிங்கு மீண்டேன் களிப்போங்கி.  - தண்டனிட்டு
நன்றிமிகப் பொங்குவதால் நானிங்கு சொல்லிடுவேன், 
ஒன்றியுளம் கொண்ட உவப்பு. 
 

 

✸✸✸
 
எங்கிருந்து தொடங்குவது என்ற யோசனைக்கு இடமே இல்லை. தொடக்கத்திலிருந்தே தொடங்கலாம் என்பதே தீர்மானம். ஆம் விழாதொடங்கிய இடம் கோவில்தான். கொழும்பு இராமகிருஷ்ணா தோட்டம் – ரொக்ஸ்ஸி கார்டன் (Roxy Garden) ஆகிய இரண்டு சிறிய சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஐஸ்வர்யலக்ஷ்மி கோவிலிருந்துதான் கம்பன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. நாள் மார்ச் 29 2018. நேரம் சரியாக மாலை ஐந்து மணி.
 
கோலத்தில் ஓங்கும் கொழும்பு நகரத்தின்
ஆலயத்தின் முன்னர்தான் ஆரம்பம். – சீலத்தில்
கோசலத்து மன்னவனைக் கோதில்லாக் கம்பனுடன்
ஆசையுறத் சேர்த்தார் அரங்கு.  
 
சீதை, இலக்குவன் மற்றும் ஆஞ்சநேயன் சமேதனாக ஸ்ரீராமன் பல்லக்கில் சாலையின் ஒரு மருங்கில் வீற்றிருந்தான். சாலையின் மறுவரிசையில் அதேபோலக் கம்பன் மற்றொரு பல்லக்கில் வீற்றிருந்தான். தோளுக்கு இனிய இருவரையும் தோளுக்கினியானில் வைத்துத் தூக்கிக்கொண்டு தொண்டர் குழாம் தயாரானது.  பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலயத்திலிருந்து, காகுத்தனுடன் கம்பன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டான். 
 
ஊர்வலமாய் அங்குற்றான் ஓங்கு புகழ்காகுத்தன், 
பார்போற்றும் கம்பனுடன் பல்லக்கில். – சீர்தன்னில், 
கண்டுவந்த இன்பத்தைக் காசினியோர்காதுறையக் 
கொண்டுவந்த பாவிதுவே கொள்.
 
 
ஊர்வலத்தில் முன்னால் பள்ளிச்சிறுமிகளின் வரிசை செல்ல, மிகுந்த மகிழ்ச்சியுடன் எல்லோரும் ஊர்வலமாகக் காவியநாயகனையும், காவியப்படைப்பாளியையும் அழைத்துச்சென்று விழா அரங்கத்தை அடைந்தோம். மேளதாளம் முழங்ககம்பனையும் காகுத்தனையும் மேடையின் இருபக்கங்களிலும் உயர்ந்தபீடம் சமைத்து, அமரவைத்த காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும் என்று காம்போதியில் பாடவேண்டும். இந்த விதத்தில் களைகட்டத்தொடங்கியது கம்பன் விழா. 
 
சொல்லொக்கும் வேகச் சுடுசரம் எய்தவனைப்
பல்லக்கில் ஏற்றிவந்தார் பண்போங்கி. – சொல்லுக்கு
வேந்தனும் வந்தணைந்தான், வேறொரு சப்பரத்தில்   
ஏந்தெழிலுக்கில்லை இணை. 
 
✸✸✸
 
செவிக்கு உணவு ஒவ்வொருநாளும் அளித்த செவ்விக்கு எந்தவிதத்திலும் குறைவின்றி வயிற்றுக்கும் தந்தீர்கள். அதுவும் பரிமாற என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேசையின் அருகில் நீங்களே நின்றுகொண்டு விருந்தினரை உபசரித்த பண்புக்கு என்ன நன்றி சொல்ல இயலும்?. 
 
எண்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கலியாணங்கள் நான்கு நாட்கள் நடைபெறும் என்று என்முன்னோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அந்தக்கலியாண நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதற்கு உதாரணமாக விளங்கியது நாங்கள் சென்று கண்டுகளித்து வந்த அகில இலங்கைக் கம்பன் விழா. நான்கு நாட்களும் அப்படி ஒரு சம்பந்தி உபசாரம், விருந்து. 
 
ஒவ்வொரு முறையும் விருந்தில் இட்ட உணவின் வகைதான் எத்தனை!  – மதிய உணவானாலும் சரி இரவு உணவானாலும் சரி, என்னவொரு கலவை உணவுவகைகளில்!. பிரியாணி, சப்பாத்தி, குருமா, தயிர்சாதம், சாம்பார், கட்லெட், பலவகைக்கறிகள், கூட்டு , தேங்காய்ப்பொடி, கறிவேப்பிலைத் துவையல், ஊறுகாய், காளான் கறி, லட்டு என்று ஒப்பில்லாத சுவையில்,  அனைத்தும் வழங்கிய நல்லன்பை எவ்வாறு போற்றுவது. 
 
சாப்பிடத் தொடங்கும் முன்னர் தட்டுக்களை ஈரம்போகத் துடைத்துத்தர ஆட்கள், சாப்பிட்ட பின்னர் தட்டுக்களை நம்கையிலிருந்து வாங்கிச்செல்ல ஆட்கள் என்று ஒவ்வொன்றையும் கவனமாகத் திட்டமிட்டுச் செயலாற்றிய நேர்த்தி அனைவரையும் மாபெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. 
காலை நிகழ்வுகளில் இடையில் கொறிக்க காராபூந்தி, மிக்சர், ஓமப்பொடி என்று அனைவரின் இருக்கைக்கும் வந்து கொடுத்துவிட்டுப்போன கரிசனம், அதைத்தொடர்ந்து தந்த மோர் என்று உபசரிப்பின் உச்சத்துக்கே எங்களை இட்டுச்சென்றதை நன்றியுடன் நினைவில் கொள்கிறோம். 
 
உண்டியின் நற்சுவை ஒப்பின்றி என்நாவை
அண்டியே நிற்கும் அழியாமல். –எண்டிசையும், 
கம்பன் விழா பற்றிக்காலமெலாம் பேசிடுவேன்; 
உம்பரெனக் கண்டேன் உவப்பு. 
 
✸✸✸
 
முதல் நாள் விழாவின் இறுதியில் நடைபெற்ற நாட்டிய நிகழ்வு பல நாட்களுக்கும் பார்வையாளரைப் பரவசப்படுத்திக்கொண்டே இருக்கும்.  எல்லா அம்சங்களிலும் இதுமிகத்தரமுள்ள நிகழ்வாக அமைந்தது. ஒப்பனை, ஆடைஅலங்காரம், பங்குபெற்ற குழந்தைகளின்/ பெண்மணிகளின் நடன அசைவுகள், ஆட்டம், ஓட்டம், துள்ளல், இவற்றில் காணப்பட்ட வேகம், இசை, பக்கவாத்தியம், வாய்ப்பாட்டின் மிக உயர்ந்ததரம், என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். கைகேயி பாத்திரம் ஏற்றவர் மிகமிகச் சிறப்பாகச் செய்தார். அவரது முகபாவனைகள், அதை அவர் மாற்றிக்கொண்ட துரிதம், காட்டிய கலை நுணுக்கம் அம்மம்மா! அது சொல்லில் அடங்காது.  சொல்லவும் கூடுவதில்லை, அதைச்சொல்லும் திறமை வரதனுக்கில்லை. 
 
அனைத்துப் பாத்திரங்ளை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள் பொருந்தும் என்றாலும், கூனி, இராமன் ஆகிய பாத்திரங்கள் அப்படியே கண்முன் நிற்கின்றன. பட்டாபிஷேகக்காட்சி படைக்கப்பட்ட அழகே அழகு. எல்லோருக்கும் கண்ணேறு கழிக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். இல்லாவிட்டால் தயவுசெய்து இதனைச்செய்ய ஏற்பாடுபண்ணுங்கள் ஐயா. 
 
காட்டினார்தம் திறமை காவியத்தின் பல்நிகழ்வை
நாட்டியம் என்றளித்த நங்கைமார்-பாட்டிற்கு
வண்ணமிக ஊட்டி வழங்கினார் பாடகர்கள்,
பண்ணதில் தித்திக்கும் பாகு. 
 
✸✸✸
 
வீடணன் - கும்பகர்ணன்; பரதன் -கைகேயி; இந்திரஜித் – இலக்குவன்; தாரை- இராமன் ஆகிய பாத்திரங்கள் வேடம் அணிந்து மேடையில் தங்கள் பக்கத்து நியாயங்களை எடுத்துவைத்து வாதிட்டது புதுமையான ஒரு அனுபவமாக அமைந்தது. மேடையின் அனைந்துஏற்பாடுகளிலும் ஒரு தேனீ போல சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த வாசுதேவா, தாரையாக வேடம் தாங்கி அடக்கவொடுக்கமாக அமர்ந்திருந்த காட்சி மனதில் பசுமையாக உறைந்து போயுள்ளது. அவர் எம்மை எல்லாம் குதூகலிக்கவைத்து, மிகத்திறமையாக வாதாடினார்.  
 
ஞாலம்பயனுறவே நன்னெறிகள் கண்டாய்ந்து,  
கோலஉரையாடலெனக் கூறினார்- சீலமதில்
ஓங்கிடவே தந்தார், உவகைக் கடலிலவை
பாங்கிலுறை கின்ற படி. 
 
✸✸✸
 
 
கர்நாடக சங்கீதத்திற்கு இலங்கை மேடையில் அளிக்கப்படும் முக்கியத்துவம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. பல மேடைகளில் இறை வணக்கம் அல்லது (அதில் நம்பிக்கை இல்லாதவர்களின் நிகழ்ச்சியில் வழங்கப்படும்) தமிழ்த்தாய் வாழ்த்து, சிங்கையில் இப்போதெல்லாம் பல இடங்களில் ஒலிவட்டு/ கைத்தொலைபேசி ஆகியவற்றின் வழியேதான் ஒலிக்கின்றன. உங்கள் விழாவில் இளைஞர்களும் பெரியவர்களும் நேரடியாக மேடையில் தோன்றி ஒலிவாங்கி முன்னர் நின்று தொடர்ந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் இறைவணக்கம் பாடி, எங்களை அசத்திவிட்டார்கள். அதையும் ஒரிரு நிமிடங்களில் அவசர அவசரமாக முடித்துக்கொள்ளாமல், மிகநிதானமாக பலபாடல்களைப் பாடவைத்து இந்த நிகழ்வுக்குஉரிய சிறப்பினைத் தந்தீர்கள். எல்லா நாட்களிலும் பாடப்பட்ட பாடல்கள் ஒரே தொகுப்பாகவே இருந்தாலும், ஓவ்வொரு நாளிலும் வெவ்வேறு இராகத்தில் அவற்றைக் கேட்டது மிக இனியாக, மனத்திற்கு மிகரம்யமானதாக இருந்தது. இவர்கள் சங்கீதத்தில் மேலும் மேலும் சிறப்பும் புகழும் சித்தியும் பெற இராமபிரானின் அருளை வேண்டுகிறேன். இதுகுறித்து ஐயா நல்லிகுப்புசாமி அவர்கள் மிகச்சரியாகவே வாழ்த்திப் பதிவுசெய்தார். 
 
பண்ணதில் தேனொழுகப் பாடினார் பல்லோரும்
எண்ணமதில் நிற்கும் இறை வாழ்த்து. - விண்ணதனை
எட்டிடும் வண்ணம் இசையில் புகழுச்சம்
அட்டியறக் காண்பார் அறி. 
 
✸✸✸
 
கம்பன் விழாவில், கர்நாடக இசைக்கலைஞர் ஒருவருக்கு கௌரவம் அளிக்கப்படும் புதுமையை நான் இலங்கையில்தான் கண்டேன். கலைகளையும் கலைஞர்களையும் உங்கள்நாடு பெருமைப்படுத்தும் சேவைக்குத் தலைவணங்குகிறேன். 
 
”பிரம்மாண்டம்”- இந்த ஒரே வார்த்தைதான் இந்தக் குறிப்பிட்ட நிகழ்வின் உயிரோட்டம். கத்ரி கோபால்நாத் அவர்களுக்கு என்று அமைக்கப்பட்ட ஆசனம், (மற்றைய நாட்களிலிருந்து இது வேறுபட்ட தன்மை), அவரை மேடைக்கு அழைத்துவந்த கோலாகலம், அவரை உபசரித்து கௌரவித்த பாணி- அட என்னத்தை சொல்வேன் ஐயா. ஒவ்வொன்றும் என்னை மெய்மறக்க வைத்தது.  
 
இத்தரணி தந்திடா ஏற்றத்தை மேடைதனில், 
கத்ரி கோபாலுக்குக் காட்டினார்.- வித்தைக்கு
நல்ல புகழாரம் நயந்தவர் சூட்டினார்
எல்லையிலா நேர்த்தி இசைந்து. 
 
✸✸✸
 
”நிகழ்காலம் கம்பனிடம் கடனாகக் கேட்பது” - என்று ஒரு தலைப்பு தந்து, அதில் ஆறு பேரை (1) சீதையைப் போல ஒரு பெண் (2) விஸ்வாமித்திரன் போல ஒரு குரு (3) இலக்குவன் போல ஒரு தொண்டன் (4) அனுமன் போல ஒரு அமைச்சன் (5) இராமன் போல ஒரு அரசன் (6) கோசலம் போல ஒரு நாடு என்பனவற்றைக் கடனாகக் கேட்கவைத்த நேர்த்தி அற்புதம். இங்கே சிங்கையில் ஒருமுறை சிவசங்கர் கம்பன் விழா ஒன்றில் கவிபாடக் கேட்டுள்ளேன். அவர் கொண்டுள்ள பன்முக ஆளுமை ஒப்பில்லாத ஒன்று. அதேபோல நூல் மூலமாகமட்டும் அறிந்து வைத்திருந்த ஸ்ரீபிரசாந்தன் காட்டிய ஆளுமையையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 
 
அம்பலம்ஏறி அறுவர் கவியாத்துக்
கம்பனிடம் கேட்டார் கடன் பலவும்.– நம்பரும்
வித்தைபல காட்டி வியந்த சபையோருக்கு,  
முத்தனைய பா வைத்தார் முன்.  
 
✸✸✸
 
இந்தக் கம்பன் விழாவின் ஆகச் சிறந்த பங்களிப்பாக நான் கருதுவது, சென்னை மருத்தவர்கள் முகமட் ரேலா, மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் ஆகிய இருவரின் பங்களிப்பே. மருத்துவத்துறையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத்தக்க சாதனை புரிந்த மருத்துவர் ரேலா குறித்து, அவையில் வாசிக்கப்பட்ட செய்திகள் மூலம் அவர்மீது பெருமதிப்பை அவையோர் கொண்டனர். தம் துறையில் மாபெரும் வெற்றிபெற்ற அன்னார், கம்பனிலும் முழு ஈடுபாடு கொண்டு, இதற்கும் நேரம் ஒதுக்கி, இலங்கைவந்து உரைநிகழ்த்தியதை எண்ணும்பொழுதெல்லாம் அவர்தம் செவ்வியை ஓர்ந்து உள்ளம் விம்முகிறது விவாவாத அரங்கில் பாரதிகிருஷ்ணகுமார் நடுவராகப் பணிசெய்ய, மருத்துவர் ரேலா கும்பகருணன் பற்றி மிகத்திறம்பட வாதிட்டார்.  
 
மருத்துவம் செய்கின்றோர் மாண்பினில் ஓங்கி,
திருத்தமாய்ப் பேசினார் தேர்ந்து.- கருத்தெல்லாம், 
வெள்ளமெனப் பாய்ந்துவர வீற்றிருந்த எல்லோரும்
கள்ளமற உற்றார் களிப்பு.
 
✸✸✸
 
கம்பன் விழா 2018 இன் சிறந்த உரையில் ஒன்றாக அமைந்தது மருத்துவர் பிரியாவின் பேச்சு என்பது என் பணிவான கருத்து. 30 – 40 ஆண்டுகளாகக் கம்பன் விழா மேடைதோறும் முழக்கிக் கொண்டிருப்பவர்கள் அற்புதமான உரை ஆற்றுவது பெரிய விடயமே அன்று. அதிலும் தமிழ் ஆசிரியராகத் தொழில் செய்பவர்கள் அவ்வாறு செய்வது வியப்பைத் தருவது அன்று. ஆனால் மருத்துவம் பயின்று, அதில் கொடிகட்டிப்பறக்கும் மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் கம்பன் பாடல்களை காட்டாற்று வெள்ளம் கரையுடைத்துப் பாய்வது போல மடமடவென்று, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்சங்கிலி போலப் பொழிந்தது, அவர் கைக்கொண்ட சிரத்தையையும் ஆர்வத்தையும் கம்பன் மீது அவர் கொண்ட காதலையும் மிகநன்றாக வெளிப்படுத்தியது. அவருடைய மிகத் தெளிவான உச்சரிப்பு, பாடலை மிக நன்றாக உள்வாங்கிக்கொண்டு அவற்றை சொன்ன செம்மை, வரிகளில் வார்த்தைகளுக்குக் கொடுத்த தகுந்த ஏற்ற இறக்கம், இவற்றைப் போற்ற சொற்களே இல்லை. வருங்காலத்தில் மிகச்சிறந்து விளங்கப்போகும் தரம்மிகுந்த ஒரு பேச்சாளரை நீங்கள் இனம் கண்டு, மேடைஏற்றி உற்சாகப்படுத்திய நேர்த்தி மிக அற்புதம் ஐயா. 
 
தங்கைபிரியா தமிழமுதச் சொற்பொழிவைத்
தங்கமெனத் தந்தாள் தரமோங்கி. – எங்கணும்
ஏற்றமிவள் கண்டிடுவாள் என்றுறைந்த சான்றோர்கள்
போற்றினார் உண்மை புகன்று.  
 
✸✸✸
 
இந்தக் கம்பன் விழா தந்த மற்றொரு மறக்க முடியாத அனுபவம் உங்கள் தொண்டர் குழாத்தின் பணி. அடேயப்பா! என்னவொரு திட்டமிடல்? என்னவொரு ஒருங்கிணைப்பு?. என்னவொரு ஒத்துழைப்பு?. இதுபற்றி சொல்லிச் சொல்லிமாளவில்லை என்னுடன் வந்தவர்களுக்கு. 
 
ஒவ்வொரு முறையும் உணவுக்குத் தந்த அழைப்பிதழில், சற்று முன்னர்தான் நடந்த நிகழ்ச்சியைக்குறித்து மிகப்பொருத்தமான விருத்தம் திருத்தமாக வழங்கியதைக் கட்டாயம் சுட்ட வேண்டும். மிகச்சிறந்த விருந்தோம்பல் இது. சொல்லப்போனால் விருந்தோம்பலின் உச்சம் இது. வழங்கிய அட்டை ஒவ்வொன்றுக்கும் பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் மலைப்பையே தருகிறது. உங்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, “அவர் தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே” என்று பணி செய்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்லவேண்டும். அதையும் எத்தனை முறை சொன்னாலும் போதாது. இதில் மிககுறிப்பாக என்னைக் கவர்ந்த விடயம் இவர்களின் வயது. அத்தனை பேரும் இளைஞர்கள்.  இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது, வருங்காலத்தில் கொழும்பு கம்பன் கழகம் இவர்கள் கையில்தானே என்ற சிந்தனையில் மனம் உற்சாகத்தில் கும்மாளம் போடுகிறது. 
 
”தொண்டர்படையிதுபோல் தொல்லுலகில் வேறொன்று
கண்டதிலை” உண்மை கழறிடுவேன். – தண்டமிழ்
வெண்பா வடித்து விளம்புவேன் செம்மையினைப்
”பண்பால் அவருயர்ந்தார் பார்”. 
 
✸✸✸
 
அகில இலங்கைக் கம்பன் கழகம் கொழும்புவில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை நடாத்திய கம்பன் விழாவின் உச்சமாக நான் கருதுவது மேடையின் பிரம்மாண்டமும், அலங்காரமும்தான். மேடையின் அகலம், விஸ்தீரணம், உயரம், மிகஉயரத்தில், மூன்று நான்குபடிகள் ஏறினால்தான் அமரமுடியும் என்ற நிலையில் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த சிம்மாசனம்.  அதன் பின்புலமாக அமைந்த கலைமகள் ஓவியம், மேடையின் முன்னால் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த பொன்னிறக் கும்பங்கள், இந்தக் கும்பங்களின் கீழே, மேடையின் இடது முதல் வலது கோடி வரை தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருந்த கம்பன் படம், மேடையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம், மேடையில் விருது பெறுவோரை நிற்கவைத்து அவருக்கு இருபுறமும் மாவிலை தேங்காய் வைத்த கும்பங்களுடன் இருவரை (துவார பாலகர்கள் போல) நிற்கவைத்து, விருதாளர்களைப்பற்றிய சிறப்புகளை வாசித்த அன்புநிறைந்த நற்பண்பு, - என ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போனால், பட்டியல் அனுமார் வால் போல நீண்டுவிடும். ,  
 
மேடையலங்காரத்தை மெச்சிச் சொரிந்திடக்
கூடைகளாய்ப்பூவேண்டும் கோடியென. – பாடலிலே
அச்செம்மைகூற அடுத்தொரு கம்பனே
நிச்சயமாய் வேண்டும் நிலத்து. 
 
✸✸✸
 
என்னை கவர்ந்த விடயமாக நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொரு அம்சம் ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கவுரை, தலைமையுரை வழங்க நீங்கள் ஏற்பாடுசெய்த தலைவர்களைப்பற்றி. அனைத்துத் தலைவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, எல்லோருக்கும் மரியாதை கொடுத்து மதிக்கும் நேசம், அவர்களுக்கு,  தத்தம் கருத்துகளைச் சொல்ல வழங்கிய வாய்ப்பு, மலேசிய அமைச்சர் சரவணன் அவர்களுக்கு விழாவின் நான்கு நாட்களிலும் முக்கிய பங்கு வழங்கிய பண்பு இவற்றைக் கட்டாயம் மெச்சிக் குறிப்பிடவேண்டும்.  
 
அரவணைத்துச்சென்றார் அனைவரையும் அன்புப்
பரவையெனஓங்குகிற பண்பால். – சரவணனார்
சிந்தைநிறை வண்ணமொடு செப்பிஎமக்களித்தார்,  
மொந்தைநிறைக் கம்பன்சீர் மொண்டு. 
 
✸✸✸
 
கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களைப்பற்றிய பல மேன்மைகளைப் பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். காலம் தவறாமல் கம்பன் விழா தொடங்கப்படுவதில் அவர்காட்டிய அதீத அக்கறை குறித்து பலரும் மெச்சிப் புகழ்ந்திருக்கிறார்கள். அவர் தொடங்கிய அந்த அமைப்பின் சிறப்புக்குச் சற்றும் குறையாமல் பல சிறப்புகளைக் கொண்டுள்ள அகில இலங்கைக்கம்பன் கழகத்தின் காலக்கணக்கைக் கட்டாயம் பதிவு செய்து போற்ற வேண்டும். காலை 9-30 மணி, மாலை 5-30 மணி என்று குறித்த நேரத்தில் தொடங்குவதில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல், ஒரு விநாடிகூடக் காலம் தாழ்த்தாமல், காலத்தைப் பொன் போன்று போற்றிய தன்மையினைக் கட்டாயம் மெச்சிப்புகழ வேண்டும். 
 
காலத்தின்மேன்மை கருதி நிகழ்ச்சிகளைக்
கோலத்தில்தந்தார் குறித்தபடி. –சீலத்தில்
ஓங்கியசெம்மை உரைத்திட எம்தோட்கள்
வீங்கியே முட்டிடும் விண். 
 
✸✸✸
 
தமிழ்நாட்டில் காரைக்குடி, சென்னை, புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெற்ற கம்பன் விழாக்களில் அண்மைக்காலமாகத்தான் நான் கலந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது. எல்லாமேடைகளிலும் விழா ஏற்பாட்டாளர்கள், கம்பனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அவனுடைய உருவப்படத்ததைப் பெரிய அளவில் அலங்கரித்து மேடையில் வைத்திருப்பார்கள். ஆனால் அகில இலங்கைக் கொழும்பு கம்பன் கழக விழா மேடையில் கம்பன் மட்டும் இல்லாமல் காகுத்தனும் வீற்றிருந்தது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.  தமிழகத்தில், கம்பன் பாடிய கவிதைகளைக் கொண்டாடும் பலர் அவன்பாடிய காப்பியத்தின் நாயகனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதைக் கண்ட கண்களுக்கு மேடையில் இராமனும் இடம்பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.   
மேடையில்காகுத்தன் மேன்மையுற வீற்றிருக்கக்
கூடஇவனுறைந்தான் கோவென்று– நாடுபுகழ்
கம்பனின்பாத்திறமை காட்டிய பேச்சாளர்
அம்புவிக் கீந்தாரமுது.
 
✸✸✸
 
”வில் ஒக்கும் சொல்” என்னும் தலைப்பில், திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆற்றிய உரை, விவாத அரங்கில் ‘இடித்தற் பொருட்டால் ஏற்றம் பெறுபவர்” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்ட மாரீசன், அங்கதன், வீடணன், சடாயு, கும்பகர்ணன், இந்திரசித்தன், சீதை எழுவரில் சிறந்தவர் சடாயுவே என்று விவாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய முறை, கம்பனின் உவமைப்பிரமாணம் பற்றிச் சிந்திய முத்துக்கள், என பலவழிகளிலும் பிரகாசித்த பாரதி கிருஷ்ணகுமார் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். ” (உடல் புகுந்து தடவியதோ)  ”ஒருவன் வாளி” என்று இது காறும் கேட்டறிந்ததை  ”ஒருவன் வாளி” என்றுதான் மண்டோதரி வெள்ளருக்கம் சடைமுடியோன் வெற்பெடுத்த திருமேனி என்றபாடலில் சுட்டியிருக்கவேண்டும் என்று ஆணித்தரமாக வாதிட்ட அழகு என்றென்றும் சிந்தையில் பரிமளிக்கும். 
 
படத்தைஇயக்குபவர் பண்புடனேகொண்டார், 
தடத்தினைநீங்கிடாத் தன்மை. - குடத்தினில்
இட்டவிளக்காக இல்லாமல் விண்ணையும்
தொட்டுக் கிளப்பினார் தூள். 
 
அகில இலங்கைக் கம்பன் விழாவின் நெத்தியடி நிகழ்வு என்பதாக நான் கருதுவது, கம்பவாரிதி ஐயாவை இனிமேல் கம்பன்அடிகள் என அழைக்கலாம் என்ற ஆலோசனை வைக்கப்பட்ட பொழுது, அதுபெற்ற ஏகோபித்த முழுமையான ஆதரவே ஆகும். 
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்