Nerkanal 16
சென்ற வாரம் …..
#நிருபர் :
இச் சம்பவத்தைத்தான் போர்க்காலப் பதிவுகளில் ஒன்றாக நீங்கள் சொல்ல நினைத்தீர்களா?
#பதில் :
இல்லை. அப் போர்க்காலத்தில், இவ் ஆலயத்தில் இதைவிட மோமசமான ஓர் அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது. இப்போது நான் சொன்னவை எல்லாம் அச் சம்பவத்தின் முழுப் பாதிப்பையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவைதான். இனி அச்சம்பவம் பற்றிச் சொல்கிறேன்.
இந்த வாரம் …..
பல சோதனைகள் வந்தபோதும், தனி ஒரு பெண்ணாய் நின்று, எந்தச் சோர்வுமின்றி தான் தொடங்கிய அறப்பணிகள் அனைத்தையும் அம்மையார் விடாது செய்து வந்தார். அவரது மன உறுதி கண்டு, யாழ்ப்பாண மக்கள் அனைவரும் அம்மையாரைப் போற்றி வந்தனர்.
ஆண்டு சரியாக ஞாபகத்தில் இல்லை. அப்போது போர் கடுமையாகியிருந்தது. பலாலியிலிருந்து நடத்தப்பட்டுவந்த ஷெல் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் சோர்வுறாது துணிவோடு, துர்க்கை அம்மன் ஆலயத்தினுடைய மஹோற்சவத்தை, நடாத்த முடிவு செய்தார் அம்மையார்.
#நிருபர் :
திருவிழா நடத்த முடிவு செய்த அம்மையாரின் துணிவு ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் அச்சமின்றி அத் திருவிழாவில் கலந்து கொண்டார்களா?
#பதில் :
அம்மையார்மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், ஆலயச் சூழலுக்குள் இலங்கை இராணுவத்தினர் ஷெல் அடிக்கமாட்டார்கள் என்ற நினைப்பாலும், உள்ளுக்குள் பயம் இருந்தாலும் மக்கள் உற்சவத்தில் கலந்து கொள்ளவே செய்தனர்.
#நிருபர் :
நீங்கள் சொல்லி வருவதைப் பார்த்தால் அந்த மஹோற்சவத்தில், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும் போல் தெரிகிறதே.
#பதில் :
ஆம் அதுபற்றித்தான் சொல்ல வருகிறேன். அந்தத் திருவிழாவின் போது, ஒருநாள் மஹோற்சவம் நடந்து கொண்டிருக்கையில் இரண்டு ஷெல்கள் கோயில் வட்டாரத்திற்குள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஆலய நிர்வாகத்தின் முக்கியஸ்தர் ஒருவரும், சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் வளர்த்து வந்த அநாதைப் பிள்ளைகள் இருவரும் இறந்து போனார்கள். ஆலயக் குருக்களுக்குக் காயம் ஏற்பட்டது. மக்கள் எல்லாம் சிதறி ஓடினார்கள்.
#நிருபர் :
இதென்ன கொடுமை. திருவிழா நடக்கும் நேரத்தில் கோயிலுக்குள் ஷெல் அடித்தார்களா?
#பதில் :
அதை ஏன் கேட்கிறீர்கள்? இந்தக் கோயிலுக்குள் மட்டுமென்றில்லை. கிறிஸ்தவக் கோயிலுக்குள்ளும் குண்டு விழுந்து வெடித்து மக்கள் பலர் மடிந்து போனது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே. துர்க்கை அம்மன் கோயிலில் நடந்த அத் துன்பச்செய்தியை அறிந்து, யாழ்ப்பாணமே அதிர்ச்சியுற்றது.
அம்மாவுக்கு என்னாயிற்றோ? என்று அனைவரும் பயந்து போயினர். இச் சம்பவம் நடந்ததை அறிந்து, நானும் கழக இளைஞர்களும் அம்மாவைச் சென்று பார்த்தோம். தெல்லிப்பழை ஊரே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. கோயில் சூழலில் வழக்கமான கலகலப்பு இல்லை.
எங்களுக்கும் மனத்தினுள் பயம் தான். ஆனாலும், தனது முதுமையையும் பொருட்படுத்தாது உலகுக்காகத் தொண்டாற்றி வந்த அந்தத் தாயாருக்கு, இழப்பேற்பட்டிருந்த அந்த நிலையில், அவரோடு உடன் நிற்பது எமது கடமையாகும் என நினைந்தே நாங்கள் அங்கு சென்றோம்.
#நிருபர் :
நீங்கள் போன பொழுது அம்மையார் எப்படி இருந்தார்?
#பதில் :
நாம் அங்கு சென்றபொழுது, தான் தங்கியிருந்த மண்டபத் திண்ணையில் கன்னத்தில் கைவைத்தபடி சோகத்தோடு அம்மையார் உட்கார்ந்திருந்தார். அத்தகைய நிலையில் அம்மையாரை நான் என்றுமே கண்டதில்லை. அவரது முகமெல்லாம் இருண்டு போயிருந்தது. கவலை தோய்ந்த முகத்தோடு அவர் உட்கார்ந்திருந்த நிலைகண்டு நான் கலங்கிப் போனேன்.
மற்றவர்களாய் இருந்தால், ஷெல் விழுந்த கையோடு தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார்கள். அம்மையாரோ, தன் உயிர் பற்றிய அச்சம் ஏதும் இல்லாமல், வருவது வரட்டும் என்று நினைந்து அங்கேயே அசையாது இருந்தார். அவர் வளர்த்த இரண்டு குழந்தைகளின் மரணம்தான் அவரது முகத்தில் இருந்த கவலைக்குக் காரணமாய் இருந்தது.
#நிருபர் :
நீங்கள் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அம்மையார் தனது இல்லப் பிள்ளைகளில் அன்பு வைத்திருந்தாரா?
#பதில் :
அதில் என்ன சந்தேகம்? தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், கதியிழந்த பிள்ளைகள் பலரைத் தனது பிள்ளைகளாய் ஏற்று, அம்மையார் வளர்த்துவந்தது பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன். இன்று, பலவிடங்களில் பலர் இத்தகைய இல்லங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த இல்லங்களுக்கும் அம்மையார் நடத்திய இல்லங்களுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு.
அம்மையார், அப் பிள்ளைகளை அநாதைகளாய் நினைத்து வளர்க்கவில்லை. தன் சொந்தப் பிள்ளைகளாய் நினைந்தே வளர்த்து வந்தார். சென்ற வாரத்தில், நான் கிளிநொச்சி சென்றிருந்த பொழுது, அம்மையாரால் வளர்க்கப்பட்ட ஒரு சகோதரி, என்னோடு அம்மையார் பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தான் ஒல்லியாக இருந்ததாலும், தனக்கு அடிக்கடி சுகயீனம் வருவதாலும், அம்மையார் தன்மீது தனித்த அக்கறை காட்டினார் என்றும், தன்னை மற்றைய பிள்ளைகளோடு சாப்பிட அனுப்பாமல், தான் உண்கிறபொழுது தனக்கு அருகில் இருத்தித் தன்னைச் சாப்பிட வைப்பார் என்றும், தனது உடல்நிலை தேறவேண்டும் என்பதற்காக, மற்றவர்களுக்கு இல்லாத சில சத்தான உணவுகளைத் தனியே செய்வித்துத் தன்னைச் சாப்பிட வைப்பார் என்றும் சொல்லி, அந்தச் சகோதரி கண் கலங்கினார்.
அம்மையார் தான் வளர்த்த பிள்ளைகள்மீது எவ்வளவு அன்பு காட்டினாரோ, அதே அளவு அவர்கள் ஒழுக்கத்திலும், பண்புகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதிலும், அதிக அக்கறை காட்டினார். அந்த விடயத்தில் ஒரு தாய்க்குரிய கடுமையோடு அவர் நடந்து கொள்வார்.
அப்படி அவர் வளர்த்த பிள்ளைகளில் இருவர் ஷெல் தாக்குதலில் இறந்தபோது, ஒன்றுக்கும் அசைந்து கொடுக்காத அந்த அம்மையார், மிகத் தளர்ந்து போனார். ஆனாலும் தனது தளர்வை வெளிக்காட்டாது அசையாது நின்று, அடுத்தடுத்த காரியங்களைச் செயற்படுத்தத் தொடங்கினார்.
அடுத்த நாளோ, அதற்கடுத்த நாளோ என்று சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆலயத்தின் தேர்த்திருவிழா நடைபெறவேண்டும். இத்தனை துன்பங்களுக்கிடையிலும் அம்மையார் துணிவோடு தேர்த்திருவிழாவுக்கான ஒழுங்குகள் அனைத்தையும் செய்தார்.
ஊர் மக்களுக்கு மனதிற்குள் பெரிய அச்சம்தான். தேர்த்திருவிழாவின் போதும் ஷெல் வந்து வீழ்ந்தால் என்னாகும் எனப் பலரும் பயந்தனர். இத்தகைய நேரத்தில் இப்படி தேர்த்திருவிழாவைச் செய்யத்தான் வேண்டுமா? என சிலர் விமர்சிக்கவும் தலைப்பட்டனர்.
ஆனால் அம்மையார் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தேர்த்திருவிழாவுக்கான ஒழுங்குகளைத் துணிவோடு செய்யத் தொடங்கினார்.
நாங்களும் மனதளவில் பயந்தாலும் அந்த நேரத்தில் அம்மையாரோடு நாம் துணை நிற்கவேண்டும் என நினைந்து, அத் தேர்த்திருவிழாவுக்குச் சென்றோம். நல்லவேளை நாம் பயந்தபடி ஒன்றும் நடக்கவில்லை. தேர்த்திருவிழா நல்லபடி நடந்து முடிந்தது.
#நிருபர் :
அம்மையாருக்கு நடந்த அந்தக் கொடுமைக்கு எதிராக, யாழ். மக்கள் குரல் கொடுக்க முன் வரவில்லையா?
#பதில் :
அதுபற்றித்தான் தொடர்ந்து சொல்ல இருக்கிறேன். இச் சம்பவம் நடந்த அடுத்தடுத்த நாட்களில், அம்மையாருக்கு நடந்த இந்தக் கொடுமைக்கு எதிராக, நமது உணர்வுகளை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என நினைந்து, நல்லை ஆதீனத்தில் அன்பர்களால் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அந்தக் கூட்ட ஒழுங்கில், எங்கள் கழகமே முன் நின்று செயலாற்றியது.
அக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களோடு நாங்கள் என்ன செய்வதென்று ஆலோசித்தோம். வந்தவர்கள் எல்லோரும் நடந்த சம்பவத்தால் மனம் வருந்தி உணர்ச்சிவசப்பட்டவர்களாய் இருந்தார்கள். நானும்கூட அந்த மனநிலையில்த்தான் இருந்தேன். அந்தக் கூட்டத்தில், நான் பேசுகிறபொழுது உணர்ச்சி வேகத்தில் ஓர் ஆலோசனையை முன் வைத்தேன்.
“ஐ.நா.சபை போன்ற அமைப்புகளுக்கும், உலக ஊடகங்களுக்கும் அறிவித்துவிட்டு, நாம் எல்லோரும் குறித்த ஒருநாளில் பெரும் கூட்டமாக எதற்கும் கவலைப்படாமல் பலாலி முகாமை நோக்கி ஊர்வலமாய்ச் செல்வோம். அந்த ஊர்வலத்தின் முதல் வரிசையில் நான் செல்லத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தேன்.
கூட்டத்திற்கு வந்தவர்கள் பயத்தால் என் கருத்தை ஏற்க மறுத்தார்கள். பின்னர் எமது கவலையை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க ஓர் மௌன ஊர்வலத்தை நல்லூர் வாசலிலிருந்து தொடங்கி கச்சேரி வரை நடாத்தி, எமது கண்டனத்தை ஓர் மகஜர் மூலம் அரச அதிபரூடாக அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தோம்.
நாம் நடத்திய அந்தக் கூட்டத்திற்கு, புலிகளுக்கு நெருக்கமானவர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். அவர்கள் நாம் நடத்த நினைத்த, அரசுக்கு எதிரான அந்த ஊர்வலத்தை, தமக்குச் சார்பாகப் பயன்படுத்த முயன்றார்கள். நாம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் புலி ஆதரவாளர்கள், புலிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினால், அதனால் சங்கடம் ஏற்படும் என நினைந்தே, நாம் ஊர்வலத்தைக்கூட மௌன ஊர்வலமாக நடத்த முடிவு செய்தோம்.
அந்த ஊர்வலத்தை எமது கழக உறுப்பினரே முன் நின்று மிக ஒழுங்காக நடத்தினார்கள். எங்கள் கழக இளைஞர்கள் கல்லூரிகளுக்கும், நமது இந்து ஆலயங்களுக்கும், இந்து அமைப்புக்களுக்கும், கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கும் நேரடியாகச் சென்று ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். நாம் எதிர்பார்க்காத அளவு ஊர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நல்லை ஆதீன குருமுதல்வர், ஆத்மஜோதி முத்தையா, எங்கள் சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் ஆகியரோடு கிறிஸ்தவமதத் தலைவர்களும், பாதிரிமார்களும், அருட்சகோதரிகளும் கூட அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலம் தொடங்கியதும் புலிச் சார்பாளர்கள் சிலர், ஓர் ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டுவந்து கோஷங்கள் எழுப்பத் தயாரானார்கள். அதைக்கண்ட நாங்கள், உடனடியாக எங்கள் கழக இளைஞர்களைக் கொண்டு, “இது மௌன ஊர்வலம், இங்கு கோஷங்கள் போடக்கூடாது” எனச்சொல்லி அவர்களைத் தடுக்கச் செய்தோம். புலிகளுக்கு கம்பன்கழகத்தின் மீது சற்று வெறுப்பு ஏற்படுத்திய சம்பவங்களில் இதுவும் ஒன்றாயிற்று. ஊர்வலத்தின் நிறைவில் அரச அதிபரிடம், நாம் எழுதிக் கொண்டு சென்ற பிரேரணையைக் கையளித்தோம்.
#நிருபர் :
அதன் பின்னும் அம்மையார் ஆலயத்தில் தங்கி இல்லத்தை நடத்தினாரா? அல்லது பிள்ளைகளை அவர்களின் உறவினர்களின் இடங்களுக்கு அனுப்பிவிட்டாரா?
#பதில் :
வேறு யாருமாக இருந்தால் நீங்கள் சொல்கிறபடிதான் செய்திருப்பார்கள். அம்மையார் அப்படிச் செய்யவில்லை. அப் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாகவே நினைத்து வளர்த்த காரணத்தால், தான் உயிரோடு இருக்கும்வரை அப் பிள்ளைகளை அவர் கைவிடாமல் காத்து வந்தார்.
நாளாக நாளாக, இராணுவத் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது வேறு வழியின்றி, அம்மையார் தான் வளர்த்த பிள்ளைகளோடு இராமநாதன் கல்லூரியில் சிலகாலம் தங்கியிருந்தார்.
பின்னர், இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தினுள் நுழைந்தபோது, யாழ்ப்பாணத்தைவிட்டு மக்கள் அனைவரும் வெளியேறிய காலத்திலும்கூட, அம்மையார் தான் வளர்த்த குழந்தைகளைக் கைவிடாமல், உசன் முருகன் கோயிலடியில் அக் குழந்தைகளைக் கொண்டு சென்று பாதுகாத்த விதத்தை யாழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். நமது இந்து மதத்தின் காவலராய் விளங்கிய அந்த அன்னை இன்று நம்மோடு இல்லை.
தொடரும்….