nerkanal 18
சென்ற வாரம் …..
அது ஒருபுறம் கிடக்க, கிட்டுவின் மரணம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எங்களது கவிஞர் புதுவை அப்போது இயக்கத்தில் இணைந்திருந்தார். கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கலை இலக்கியவாதிகள் சார்பாக, யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், அவர் ஓர் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்.
அந்த நிகழ்விலும் அவர்களுடனான ஒரு முரண்பாடு நிகழ்ந்தது.
இந்த வாரம் …..
கிட்டுவுக்கான அந்த நினைவஞ்சலி ஒரு மாலை நேரத்தில் நடப்பதாய் இருந்தது. “கொப்பேகடுவ” படையோடு உள் நுழையப்போகிறார் என்ற செய்தியால், யாழ் மக்கள் பயந்திருந்த சூழ்நிலையில்த்தான் அக் கூட்டம் நடைபெற்றது.
கிட்டுவின் ஆளுமை பற்றி எனக்கும் மதிப்பு இருந்தது. அதனால் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நானும் சென்றிருந்தேன். அப்போதே எங்களுக்கும் புலிகளுக்குமான உறவு சற்றுக் குறைய ஆரம்பித்திருந்தது.
அன்றைய அந்தக் கூட்டத்திற்குப் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. நான் பார்வையாளனாகத்தான் அங்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது கவிஞர் புதுவை ஓடிவந்து எனது கைகளைப் பிடித்து, “ஜெயா! கூட்டத்திற்குத் தலைமை தாங்க சண்முகதாஸ் வர்றதா சொல்லியிருந்தார். இதுவரை அவரைக் காணேல்ல என்றபடியால் நீங்கதான் இப்ப கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இராணுவம் உள் நுழையப் போவதான செய்தியால் அறிஞர்கள் பயந்திருந்தனர். அதனால் அந் நேரத்தில் புலிகளுடன் தொடர்பைப் பேண அவர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகத்தான் சண்முகதாஸ் அந்நிகழ்ச்சிக்கு வருவதாய்ச் சொல்லிவிட்டு, பின் வராமல் தவிர்த்தார் என்று நினைக்கிறேன்.
அப்போது யாழில் பிரபலமாக இருந்த ஏழாலை அம்மன் கோயிலுக்குப் போய், அங்கிருந்து, தான் வர ‘லேற்றாகும்’ என அறிவித்துவிட்டு அவர் தப்பிக் கொண்டார்.
புதுவையின் கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை. அதனால் அவரது கோரிக்கையை ஏற்று அன்றைய கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். புலிகளோடு தொடர்புடைய கலை, இலக்கியக்காரர்கள் சிலர் அன்றைய கூட்டத்தில் பேசினார்கள். “சொக்கன்”, பொன். சுந்தரலிங்கம் போன்றோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாய் ஞாபகம்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது இடைநடுவில் திடீரென புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மண்டபத்திற்குள் நுழைந்தார். அவர் வந்ததும் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. விழாவை ஒழுங்கு செய்தவர்கள் அவரை மேடைக்குப் பேச அழைத்தார்கள். அவரும் சம்மதித்து மேடை ஏறி வந்தார்.
அவர் மேடைக்கு வந்தபோது, “சொக்கன்” போன்ற மூத்த அறிஞர்களும் எழுந்து நின்றார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியதால், நான் ஏன் எழும்பவேண்டும் என நினைந்து, எழுந்து நிற்காமல் இருந்தபடி அவரைப் புன்னகையால் வரவேற்றேன்.
பொதுவாக எனக்கு அன்ரன் பாலசிங்கத்தை அதிகம் பிடிப்பதில்லை. அவருடைய தோற்றமே ஏதோ ஓர் மந்திரவாதியின் தோற்றம் போல எனக்குப் படுவதுண்டு. அதனால் அவர் பற்றி எனக்கு எப்போதும் ஒரு எதிர்ப்புணர்ச்சியே இருந்து வந்தது. அவர் பற்றி என் மனதில் அதிகம் மதிப்பும் இருக்கவில்லை. நான் எழுந்து நிற்காததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அக் காலத்தில் அவரை, புலிகளின் அரசியல் ஆலோசகர் என்றும், ராஜதந்திரி என்றும் பலபேர் மேடையில் புகழ்வதுண்டு. அன்றும் அங்கு பேசியவர்களில் பலர்கூட, அவரை அப்படித்தான் புகழ்ந்து தள்ளினார்கள். பின்னர் அவரை மேடைக்குப் பேச அழைத்தபோது, நானோ “அடுத்ததாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பேசுவார்” என்று வெறுமனே விழித்துத்தான் அவரைப் பேச அழைத்தேன்.
அன்று நடந்த இச் சம்பவங்களால் அவருக்கு என்மேல் வெறுப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதுவும் புலிகளுடனான முரண்பாட்டுக்கு வித்திட்ட ஒரு நிகழ்ச்சியாயிற்று.
#நிருபர் :
கிட்டு அவர்களது காலத்தில் அவரோடு உங்களுக்கு முரண்பாடு ஏதும் ஏற்படவில்லையா?
#பதில் :
அவரோடு நாங்கள் அதிகம் நெருங்கவும் இல்லை. விலகிப்போகவும் இல்லை. அவர் துணிவாகப் பல காரியங்களைச் செய்தார். ஆனால் அவரது சில செயல்களைக் கண்டும் நான் மனம் வருந்தியிருக்கிறேன்.
அவர் காலத்தில், ஒரு இராணுவத் தாக்குதலில் இறந்து போன சில சிங்களப் போர் வீரர்களின் உடல்களை நல்லூர் பின்வீதியில் கொட்டகை போட்டுக் காட்சிக்கு வைத்தார்கள். இறந்தவர்களின் உடல்களைக் காட்சிக்கு வைத்ததும், அக் காட்சியை, கோயில் வீதியில் நடத்தியதும் எனக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள்தான் அப்படிச் செய்தார்கள் என்றால், அதுநாள் வரை முருகனின் வீதி என்று புனிதம் பேணிய மக்களும் அச்சடலங்களை ‘கியூ’வில் நின்று பார்க்கத் தலைப்பட்டார்கள். நாற்றம் வீசத் தொடங்கிய அச் சடலங்களைப் பார்க்க, சேலைத் தலைப்பால் மூக்கை மூடியபடி, பெண்கள்கூட அந்தக் ‘கியூ’ வில் நின்ற விதத்தையும் என்னால் சகிக்க முடியவில்லை.
பிற்காலத்தில் புலிகள், மக்கள் உணர்வை அதிகம் மதிக்காமல் போனதற்கு ஒரு விதத்தில் மக்களும் காரணர்களாய் இருந்தனர். புலிகள் எதைச் செய்தாலும் மக்கள் அதனை ஆதரித்துக் காட்டியதால்த்தான், தாம் செய்கிற எல்லாவற்றையும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தில் போகப்போக, அவர்கள் சில தவறுகளைச் செய்யத் தொடங்கினார்கள் என்பது என் கருத்து.
இத்தகைய சம்பவங்கள் சிலவற்றால்த்தான் நாங்கள் கிட்டுவோடு அதிகம் நெருங்கவில்லை. ஆனால் அவருக்கு எங்கள்மீது ஒரு மதிப்பு இருந்தது என்று நினைக்கிறேன். அதனால்த்தான் மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானம் அவர்கள், எங்களுக்காகச் சேர்த்த பணத்தை, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் பறித்துச் சென்றபோது, கிட்டு, கம்பன்கழகத்தைப் புலிகள் இயக்கத்தின் இலக்கியப் பிரிவாக அறிவிக்கச் சொன்னார் என்று நினைக்கிறேன். அச்சம்பவம் பற்றி முன்னரே நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
#நிருபர் :
புலிகளுடனான வேறு முரண்பாடுகளும் நிகழ்ந்ததா?
#பதில் :
அவர்களுடன் முரண்படத்தக்க மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது. யாழில் கல்விப் பொறுப்பு முழுவதினையும், தமது கட்டுப்பாட்டுக்குள் புலிகள் இயக்கம் கொண்டு வந்திருந்தது. கல்விப் பொறுப்பாளராய், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பேபிசுப்ரமணியம் அவர்கள் இருந்தார். கல்வித்துறையின் உயர்மட்ட அதிகாரிகளில் இருந்து கீழ் மட்டத் தொழிலாளிகள் வரை புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.
பல்கலைக்கழகத்தார், சில பெரும் கல்லூரி அதிபர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் புலிகளுக்கு அஞ்சியும், அவர்களின் ஆதரவு வேண்டியும் அவர்கள் காலால் இட்ட கட்டளைகளைத் தலையால் ஏற்றுச் செய்து வந்தனர்.
“சொக்கன்” போன்ற மூத்த மரபறிஞர்கள் சிலரும் இவ் வரிசையிற் சேர்ந்திருந்;தனர். எனக்குத் தெரிந்தவரை, இயக்கத்திற்கோ, இனத்திற்கோ துரோகம் செய்ய நினையாது இருந்துகொண்டு, அதேநேரத்தில் புலிகளுக்கு முழுமையாய் ஆட்படவும் செய்யாது, அக்காலத்தில் சுயத்தோடு இயங்கிய இலக்கிய அமைப்பாக எமது கழகம் ஒன்றே செயற்பட்டது. எம்மைப் போலவே எழுத்தாளர்களில் செங்கையாழியானும், ஆலய அறங்காவலர்களில் நல்லூர் எஜமானும் சுயத்துடன் இயங்கி வந்தனர்.
எழுத்தாளர் செங்கை ஆழியான் எங்கள் கம்பன்மேடைகளிலேயே கூட, புலிகளின் சில செயற்பாட்டைத் துணிவாக விமர்சித்தார். அதேபோல நல்லூர் எஜமானும் புலிகளுடன் எந்தவிதத்திலும் முரண்படாமலும், தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமலும் செயற்பட்டு வந்தார்.
ஆலய உண்டியல் பணத்தின் ஒரு பகுதியை இயக்கத்திற்குத் தரவேண்டும் என, புலிகள் கேட்டதற்கு, “அது முருகனுடைய பணிக்காகப் பக்தர்கள் தருகிற பணம், அதனை எடுத்து வேறுவிடயங்களுக்குத் தரும் உரிமை எனக்கு இல்லை. வேண்டுமானால் நீங்களே வந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எஜமான், கூறிவிட்டாராம்.
பின்னர் ஒருமுறை, அர்ச்சனைப் பணத்தை ஒரு ரூபாயிலிருந்து அதிகரித்து மேலதிகமாக வரும் பணத்தையேனும் தமக்குத் தரும்படி புலிகள் கேட்க, அதனையும் ஏற்க மறுத்த எஜமான், “மிகக் கீழ் மட்டத்தில் உள்ளோரும் அர்ச்சனை செய்யவேண்டும் என்பதற்காகவே, அர்ச்சனைக் கட்டணத்தை ஒரு ரூபாயாகவே மாற்றாமல் வைத்திருக்கிறோம். அதனையும் நான் மாற்றமாட்டேன். நீங்கள் வேண்டுமானால் நேரடியாக வந்து மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறி மறுத்துவிட்டாராம். இச் செய்திகள் அக்காலத்தில் பரலாகப் பேசப்பட்டன.
நாம் சுயத்தோடு இயங்க நினைத்ததைப் புலிகள் அதிகம் ரசிக்கவில்லை. இந் நிலையில்த்தான் ஒரு நேரமாக நடந்துவந்த யாழ்ப்பாணப் பாடசாலைகளில், இரண்டு நேர வகுப்புக்கள் நடத்தப்படவேண்டும் என ஒருமுடிவு இயக்கத்தினரால் எடுக்கப்பட்டது. அந்த விடயத்திலும் புலிகளோடு நாம் முரண்படவேண்டி வந்தது.
(தொடரும்)