nerkanal-20

nerkanal-20
மற்றவை 26 Nov 2026

சென்ற வாரம்….

அந்த நாடகம் முடிவடைந்தபோது, அந்த நாடகத்தோடு தொடர்புடையவர்களைப் பாராட்டவென புலிகள் ஒரு விழாவினை எடுத்தார்கள். அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அந்த விழாவில் பேச என்னையும் அழைத்தார்கள். அதனால் ஆச்சரியப்பட்ட பலரும் அன்று நான் என்ன பேசப்போகிறேன்? அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்? என்பதை அறிவதற்காக, பெருமளவில் அந்த நிகழ்ச்சியில் கூடினார்கள். 

 

இந்த வாரம்….

 

#நிருபர் :

உங்களது கம்பன் கழகத்திற்கு எதிராக, தங்களது வானொலியில் புலிகள் நடத்திய நாடகம் நிறைவடைந்த போது, அதற்காக அவர்கள் எடுத்த விழாவில், உங்களைப் பேச அழைத்ததாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது! உங்களுக்கு எதிரான விழாவில் உங்களையே பேச அழைத்தார்களா? அது எப்படி? 

#பதில் :

நாங்களும் ஆச்சரியப்பட்டுத்தான் போனோம். அவர்கள் ஏன் என்னை அழைக்கிறார்கள் என்று எங்களுக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் அந்த விழாவில் கலந்து கொள்வதென, நான் முடிவு செய்தேன். அந்த விழா திரு பொன். சுந்தரலிங்கம் அவர்கள் அமைத்திருந்த இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

 

#நிருபர் :

நீங்கள் சொல்வது போல, புலிகள் இராமாயணத்தைத் தூற்றியது உங்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கவில்லையா? புலிகள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்த பிறகும், நீங்கள் கம்பன் விழாக்களை நடாத்த எப்படித் துணிந்தீர்கள்?

#பதில் :

நாங்கள் இந்தப் பிரச்சினையைச் சமூகக் கருத்தியல் பிரச்சினையாகவே பார்த்தோம். புலிகளும் விடுதலைப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாக இப்பிரச்சினையைக் கருதவில்லை என்றே தோன்றியது. இலக்கிய ரசனைப் பக்கமாக மக்களின் கருத்து திரும்பிவிடக்கூடாதென்பதற்காகவே கம்பராமாயண எதிர்ப்பை அவர்கள் கையில் எடுத்தார்கள். அதனால்த்தான் இந்தப் பிரச்சினை பற்றி நாங்கள் அதிகம் கவலை கொள்ளவில்லை.

 

#நிருபர் :

அவர்கள் நடத்திய அந்த நாடகங்களை நீங்களும் கேட்பீர்களா?

#பதில் :

உண்மையில் அவர்கள் நடத்திய “இராவணேஸ்வரன்” என்ற அந்த நாடகத்தை வானொலியில் நாங்களும் கேட்டு வந்தோம். அவர்கள் இராவணனை உயர்ந்த உத்தமன் போலவும், இராமனை மிகக் கீழ்த்தரமானவன் போலவும் தமது நாடகத்தில் காட்டினார்கள். இராமாயணத்தில் ஊறிப் போய் இருந்த எங்களுக்கு அந்த நாடகம் அதிர்ச்சிக்குப் பதிலாக அருவருப்பைத் தான் தந்தது.

தாழ்ந்த ஒருவனை உயர்த்த முயல்வதும், உயர்ந்த ஒருவனைத் தாழ்த்த முயல்வதும் கேவலமான விடயங்கள். கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகளாகத் தமிழர்களால் போற்றப்பட்டு வந்த ஒரு காவியத்தை, இந்துமதத்தவர்கள் இதிகாசமாக ஏற்றுக் கொண்ட ஒரு காவியத்தை, தமது சொந்த நோக்கத்திற்காக இழிவு செய்த செயலை எம்மால் ரசிக்க முடியவில்லை.

 

#நிருபர் :

அக்காலத்தில் மிக வலிமை பெற்றிருந்த புலிகளின் எதிர்ப்பால், நம் மண்ணில் கம்பகாவியம் வீழ்ச்சியுறும் என்று நீங்கள் கருதவில்லையா?

#பதில் :

ஒருக்காலும் இல்லை! காலம்தான் ஒரு பொருளை உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ தீர்மானிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. காலம் அங்கீகரிக்காத ஒன்றை இவ்வுலகில் எவராலும் நிலை நிறுத்த முடியாது. அதுபோலவே காலம் நிராகரித்த ஒன்றை இவ்வுலகில் எவராலும் நிலைநிறுத்தவும் முடியாது என்பது தான் வரலாறு உரைக்கும் உண்மை.

இவ் உண்மை தெரிந்ததால், புலிகள் வீணான ஒரு முயற்சியில் பயனின்றி ஈடுபடுகிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அவர்களால் கம்ப காவியத்திற்கு எதுவித தீங்கினையும் செய்ய முடியாது என்று எனக்குள் இருந்த உறுதியான நம்பிக்கையால் புலிகளினுடைய கம்பகாவிய எதிப்பு முயற்சி என்னைப் பெரியளவு பாதிக்கவில்லை.

இராமாயணம் பற்றிய விமர்சனங்கள் முன்பும் பலவிதமாய் வந்திருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் எழுச்சிபெறத் தொடங்கிய காலத்தில்,  கம்பனை அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்தார்கள்.

கம்பரை எதிர்த்து அறிஞர் அண்ணா எழுதிய “கம்பரசம்” என்ற நூல், அக்காலத்தில் இளைஞர்களால் பரவலாகப் படிக்கப்பட்டது. திராவிடக் கழகக்காரர்கள் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்றுகூடப்  போராட்டங்களை நடத்தினார்கள். திராவிடக் கழகங்கள் கம்பகாவியத்தை எரிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த அதேவேளையில்த்தான், எங்கள் கம்பன்கழகங்களின் பிதாமகர் “கம்பனடிப்பொடி” சா.கணேசன் அவர்கள், காரைக்குடியில் முதல் கம்பன்கழகத்தை அமைத்து, கம்பனுக்குப் பெரிய அளவில் விழா எடுக்கத் தொடங்கினார்.

அரை நூற்றாண்டு காலத்தில், திராவிடக் கழகங்கள் விரிந்து வளர்ந்தது போலவே, கம்பன் கழகங்களும் தொடர்ந்து வளர்ந்தன. போற்றியவர்களும் வளர்ந்தார்கள். தூற்றியவர்களும் வளர்ந்தார்கள். தமிழ்நாடு முழுவதிலும் பல ஊர்களில் புதிது புதிதாய்க் கம்பன்கழகங்கள் அமைக்கப்பட்டன.

“கம்பன்கழகம் அமைக்கப்பட்ட ஊர்களுக்கு மட்டுமே நான் பேச வருவேன்” என, கம்பனடிப்பொடி நிபந்தனை விதித்ததால், அவரது அன்பர்கள் அவரைத் தமது ஊர்களுக்கு வரவழைப்பதற்காகவே தத்தம் ஊர்களில் கம்பன் கழகங்களை அமைக்கத் தொடங்கினார்களாம்.

எனக்குத் தெரிய 1980 களில் தமிழ்நாட்டில் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்ட கம்பன் கழகங்கள் இயங்கி வந்தன. அக்காலத்தில் மலேசியாவில் ஒரு கம்பன்கழகமும் பின்னர் இலங்கையில் நாங்கள் அமைத்த கம்பன்கழகமும் மட்டுமே வெளிநாடுகளில் இயங்கி வந்த கழகங்களாய் இருந்தன.

 

#நிருபர் :

தமிழ்நாட்டில் கம்பனுக்கான எதிர்ப்பு இன்றும் இருக்கிறதா?

#பதில் :

“சென்று தேய்ந்து இறுதல்” என்று ஒரு தொடர் தமிழுலகில் பயன்படுத்தப்படுவதுண்டு. ஒரு விடயம் வேகமாக உருவாகி, நாளடைவில் மெல்ல மெல்லத் தேய்ந்து இறுதியில் அற்றுப்போவது என்பதே இத் தொடரின் பொருள். அப்படித்தான் தமிழ்நாட்டில் தொடங்கிய கம்பகாவிய எதிர்ப்பின் நிலையும் ஆயிற்று.

கம்பனைத்தூற்றி, கம்பரசம் எழுதிய அறிஞர் அண்ணா அவர்களே பின்னாளில், “கம்பராமாயணத்தையும், திருவாசகத்தையும் படிக்காதவர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்” என்று  எழுதியிருக்கிறார்.

அது போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் முதலமைச்சராய் இருந்த காலத்தில், கம்பனடிப்பொடி அவர்களின் அழைப்பை ஏற்றுக் காரைக்குடிக் கம்பன் விழாவில் தலைமையேற்று உரையாற்றியிருக்கிறார்.  

பின் வந்த கலைஞரின் மகனான ஸ்டாலின் அவர்கள் கூட, முதலமைச்சராய் இருந்த போது, சென்னைக் கம்பன் விழாவில் வந்து கலந்து கொண்டு கம்பனைப் பாராட்டிச் சென்றிருக்கிறார். கலைஞர் காலத்தோடு திராவிட கழகங்களால் தொடங்கப்பட்ட கம்பராமாயண எதிர்ப்பு பிசுபிசுத்துப் போய்விட்டது என்பது தான் உண்மை.

 

# நிருபர் :

நம் நாட்டில் புலிகளால் தொடக்கப்பட்ட கம்பராமாயண எதிர்ப்பு என்னாயிற்று?

#பதில் :

கம்பராமாயண எதிர்ப்பை புலிகள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லமுடியாது. அவர்களுக்கு முன்னரே, கம்பனை ஒரு வைஷ்ணவனாய் இனங்கண்டு, சில தீவிர சைவர்கள் கம்பனையும், கம்பகாவியத்தையும் எதிர்க்கத் தலைப்பட்டார்கள். ஆனால் வலிமையற்றவர்களான அவர்களது எதிர்ப்பு கம்பனையோ, கம்பகாவியத்தையோ எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

தமிழ் நாட்டில் கம்பனை எதிர்த்தவர்கள் பின்னர் அவனை அணைத்துக் கொண்டார்கள். புலிகளோ கம்பனை ஆரம்பத்தில் ரசித்து அணைத்திருந்துவிட்டு, பின்னர் எதிர்க்க ஆரம்பித்தார்கள். எது எப்படியோ, நம் நாட்டிலும் புலிகளால் தொடக்கி வைக்கப்பட்ட கம்பகாவிய எதிர்ப்பு, புலிகளின் மறைவோடு மறைந்து போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் வலிமைமிகுந்த திராவிடக் கழகங்களால் கம்பனையும், கம்பகாவியத்தையும் எப்படி ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்றோ, அதேபோல இங்கும் மிக வலிமையோடு இருந்த புலிகளும் கம்பகாவிய எதிர்ப்பில் தோற்றுத்தான் போயினர்.

“இராவணேஸ்வரன்” என்கின்ற அந்த நாடகம் பற்றி இன்று பேசுவார் எவரும் இல்லை. ஆனால் கம்பகாவியம் இன்றும் பெருமையோடு பேசப்படுகிறது. புலிகளின் அந்த நாடகத்தை எழுதிய திரு.கணேசமூர்த்தி அவர்கள் பின்னாளில் சுட்டுக் கொல்லப்பட்டார். பேச்சு, எழுத்து, கவிதை, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அவரது மறைவு ஈழத்தமிழுலகிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகவே அமைந்து போயிற்று.

இன்று மறுபடியும் ஒரு சிலர் இராவணனைத் தமது மூதாதையராய்ச் சொல்லி வருகின்றனர். சொற்பத் தொகையினராய் இங்கிருக்கும் அவர்களில் பலர், எங்களை எதிர்ப்பதற்காகவே அங்ஙனம் சொல்லி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சரி, இங்கும் சரி கம்பனை எதிர்த்தவர்கள் காலவோட்டத்தில் இருந்த இடம் தெரியாது போய்விட்டனர். ஆனால் கம்பகாவியம் காலவோட்டத்தில் கரையாது வீறோடு இன்றும் நடை போட்டபடி இருக்கிறது.  

 

#நிருபர் :

சொல்லவந்த முக்கியமான விடயத்தை இனிச் சொல்லுங்கள். புலிகள் நடத்திய அந்த விழாவில் என்ன தான் நடந்தது? அதை அறிய நாங்கள் ஆவலாய் இருக்கிறோம்.

தொடரும் …

 

 

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.