அன்பின் இளஞ்செழியன் அவர்கட்கு... | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.

அன்பின் இளஞ்செழியன் அவர்கட்கு... | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.
 

மாண்புமிகு மா.இளஞ்செழியன் அவர்கட்கு,
நீதியரசர்,
மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம்.

அன்பின் சகோதரர்க்கு,
வணக்கம்.
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
தங்கள் மீதான கொலை முயற்சி பற்றிய செய்தி அறிந்து அதிர்ந்தேன்.
‘தர்மம் தலைகாக்கும்’ என்பது உண்மையாயிற்று.
அன்று தொட்டு இன்று வரை,
தங்களது ஆளுமைச் செயற்பாடுகளைக் கண்டு மகிழ்ந்து வருபவன் நான்.
எம் இனத்தில் ஆளுமையாளர்களின் எண்ணிக்கை பூச்சியத்தை அண்மித்துவிட்ட நிலையில்,
தனி ஒருவராய் நின்று நம் சமூகத்தை நெறிப்படுத்தி,
தாங்கள் செய்துவரும் முயற்சிகள் அபூர்வமானவை.
மிக இளவயதில் எவர்க்கும் அஞ்சாமல் தாங்கள் இயற்றி வரும் துணிந்த முயற்சிகள்,
நம் இனத்து இளையோர்க்கான முன்னுதாரணமாய்த் திகழ்பவை.
தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோராலும் செய்யமுடியாத,
தங்களது துணிவுச் செயல்கள்,
இன்னும் இந்த இனத்தின் அற, ஆளுமை வேர்கள்,
அறுந்து போய்விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.
நீங்கள் எம் இனத்திற்குக் கிடைத்த பெரும் சொத்தென்றே கருதுகிறேன்.
பத்தாண்டுகளின் முன்பே உங்கள் திறனை இனங்கண்டு கௌரவித்ததில்,
கம்பன் கழகம் பெருமை கொள்கிறது.
உங்கள் மீதான கொலை முயற்சி,
எம் இனத்தின் இறங்குகாலம் மீண்டும் உண்டாகிறதோ? என்னும் அச்சத்தை உண்டாக்குகிறது.
உங்களைக் காத்ததன் மூலம் அவ் அச்சத்தை ஆண்டவன் ஓரளவு நீக்கியிருக்கிறான்
இறந்து போன உங்கள் பாதுகாவலரின் மரணத்தின் போது,
நீங்கள் காட்டிய உணர்ச்சி மிகுந்த பிரதிபலிப்பு நெஞ்சை உருக்கியது.
இன ஒற்றுமைக்கான முன்னோடிச் செயல் அது.
எங்கள் தலைவர்கள் உங்களிடம் பாடம் படிக்கவேண்டும்.
உங்கள் நலத்திற்காகத் தினமும் பிரார்த்திக்கிறேன்.
இச் சலசலப்புகளுக்கு அஞ்சாமல்,
உங்கள் அறப்பயணம் தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அறத்தை நிலைநிறுத்தி வரும் உங்களுக்கு,
ஆண்டவனின் அருளும், ஆன்றோரின் ஆசியும் என்றும் துணை நிற்கும்.
உங்கள் துயரத்தில் கம்பன்கழகத்தாரும் பங்கேற்கின்றனர்.
நன்றி.
வணக்கம்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”
அன்பன்
இ. ஜெயராஜ்
கம்பன் கழகம்
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.