ஆடி அமாவாசை- சூரியகிரகணம்

ஆடி அமாவாசை- சூரியகிரகணம்

 

இவ்வாண்டு ஆடி அமாவாசை விரதம் அனுட்டிப்பது பற்றியும், பிதிர்க்காரியங்கள் செய்வது பற்றியும் சர்ச்சை தோன்றியுள்ளது. இவ்வாண்டுக்குரிய வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணித பஞ்சாங்கமும் ஆடி அமாவாசை சிரார்த்ததிதியை ஆடிமாதம் 27ஆம் திகதி அன்றே (12.08.2026 புதன்கிழமை) நிர்ணயம் செய்துள்ளன.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று புதன்கிழமை அமாவாசை திதி பின்னிரவு 12.17 மணியுடனும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அமாவாசை திதி இரவு 11.06 மணியுடனும் முடிவடைகிறது. அதுபோலவே, இவ்விரு பஞ்சாங்கங்களும் ஆடி அமாவாசை விரதத்தை ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி அன்றே குறித்துள்ளன.

இவ்விரண்டு பஞ்சாங்கங்களும் இத்திகதியில் பூரண சூரியகிரகணம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன. இதனை வைத்து, விடயம் அறியாத ஒருசிலர் ஆடி அமாவாசை தினத்தன்று சூரியகிரகணம் இருப்பதால் அன்றைய தினத்தில் ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்கக் கூடாதென்றும், பிதிர்க்காரியங்களைச் செய்யக்கூடாதென்றும் கூறி, அடியார்களைக் குழப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் மறுநாளே (13.08.2026) ஆடி அமாவாசை விரதத்தையும் பிதிர்க்காரியங்களையும் அனுஷ்டிக்க வேண்டுமெனவும் சொல்லி வருகின்றனர்.

இதனால் ஆடி அமாவாசை விரதத்தினையும், பிதிர்க்காரியங்களையும் ஆகஸ்ட் பன்னிரண்டாம் திகதி புதன்கிழமை செய்வதா? பதின்மூன்றாம் திகதி வியாழக்கிழமை செய்வதா? என அடியார்கள் மத்தியில் குழப்பம் உண்டாகியுள்ளது.

இது பற்றிய உண்மைத்தெளிவை நம் சைவ உலகம் பெறவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை வரைகிறேன்.

முதலில், இவ்விரதத்தின் பெயரே ஆடி அமாவாசை விரதம் என்று இருக்க, அமாவாசை திதி  இல்லாத அடுத்த நாளில்த்தான் அவ் விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் எனச் சொல்வதன் அபத்தத்தை அடியார்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

பிதிர்க்காரியங்களைச் செய்யக்கூடிய புண்ணியகாலங்களில் அமாவாசையும் ஒன்றாகும். இவ் அமாவாசை பற்றிய செய்தியை சிவபுராணங்களில் ஒன்றாகிய “மச்சபுராணம்” கூறுகிறது. “அமாவாசை சிரார்த்த திதியில் செய்யப்படும் தர்ப்பணமே பிதிர்களை மகிழ்விக்கும் தர்ப்பணமாம். மற்றைய திதிகளில் சிரார்த்தம் செய்யப்படும்போது அச்சிரார்த்தம் பிதிர்களை மகிழ்விக்காதென்று அறிந்து கொள்ளல் வேண்டும்” என்று இந்நூல் கூறுகிறது.

இரண்டு பஞ்சாங்கங்களின்படியும் ஆகஸ்ட் பதின்மூன்றாம் திகதி அன்று அமாவாசை திதி இல்லை ஆதலால், அன்றைய தினத்தில் அனுஷ்டிக்கப்படும் ஆடி அமாவாசை விரததத்தாலும் பிதிர்க்காரியங்களாலும் எவ்வித பயனும் விளையாது என்பது திண்ணம்.

 

கிரகரண நாளில் பிதுர்த் தர்ப்பணம் செய்யலாமா?

இம்முறை இக்கேள்வியே பலராலும் எழுப்பப்படுகிறது. ஆடி அமாவாசைத் தினத்தில் சூரியகிரகணம் நிகழ்வது உண்மை. பிதுர்க்காரியங்களுக்குக் கிரகணகாலம் மிக உகந்ததொன்றாகவே கருதப்படுகிறது.

பஞ்சாங்கங்கள் கிரகணகாலத்தைக் கிரகணபுண்ணியகாலமென்றே குறிப்பிடுகின்றன. எனவே புண்ணிய காலத்தில் பிதிர்க்காரியம் செய்யக்கூடாதென்பது எப்படிப் பொருத்தமாகும் என்று நாம் சிந்திக்கவேண்டும்.

“சிரார்த்தத்தினை, புண்ணிய சேத்திரங்களில் செய்யின் மிக்க பலன் நிகழும். அமாவாசை, சங்கிராந்தி, மஹாலயபட்சம், வியதிபாதயோகம், யுகாதி, மாசப்பிரவேசம், கிரகணபுண்ணியகாலம் இவைகளில் செய்யின் பிதுரர் களிப்படைவர்” என்று அபிதான சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேலே சுட்டிக்காட்டிய மேற்கோளால், கிரகண காலம் பிதுர்க்குத் தர்ப்பணம் செய்யத்தக்க புண்ணிய காலமாய்க் கருதப்படும் உண்மை உறுதி செய்யப்படுகிறது. ஆதலால், கிரகணம் பொருந்தும் ஆடி அமாவாசை தினத்தன்று பிதுர்த்தர்ப்பணம் செய்வதில் எந்தத் தவறுமில்லை என்பதை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.

ஆகமச் சான்று

எமது சமயக் கிரியைகளை வரையறை செய்யும் முழு அதிகாரம் நமது சைவ, ஆகம நூல்களுக்கே உரியது. எனவே, இந்தப்பிரச்சினை பற்றி ஆகமங்கள் கூறும் கருத்தினையும் நாம் அறிவது அவசியமாகிறது.

“உத்தரகாமிக” ஆகமத்தில் 28 ஆவது படலமான “பித்ரு யக்ஞ விதி” எனும் பகுதியில் இப்பிரச்சினை பற்றித் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படலத்தின்  22 ஆவது சூத்திரத்தில் “சதுர்த்தசி, சப்தமி, நவமி, திரயோதசி, அமாவாசை, மகாநட்சத்திரம் ஆகிய பட்சங்களை பிதுர்ப் பட்சமாகக் கற்பிக்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதே படலத்தின் 26 ஆம் சூத்திரத்தில் “கிரகண காலமாக இருப்பின் இராத்திரியிலும் சிரார்த்தம் செய்யலாம்” என்றும், 34, 35 ஆம் சூத்திரங்களில், “நவமித்திதி, புரட்டாதி மாத அமாவாசைத்திதி, புரட்டாதி மாத கிருஷ்ணபட்ச திரயோதசித்திதி, மாசிமாத அமாவாசை, பௌர்ணமிதிதிகள், மற்றும் மூன்று அஷ்டகா திதிகள், அயனகாலம், சூரிய, சந்திர கிரகணகாலங்கள் ஆகியவற்றில் ‘திலோத்தகம்’ (எள்நீர் இறைத்தல்) கொடுக்கவும்” என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, “மேற்கூறிய காலங்களில் செய்யப்படும் சிரார்த்தம், ஆயிரம் அமாவாசை சிரார்த்த பலனைச் சந்தேகமின்றித் தரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதலால் கிரகண காலம், பிதிர்க்காரியங்கள் செய்வதற்குரிய புண்ணிய காலமே என்பதனை நாம் உறுதிபட அறிந்து கொள்கிறோம்.

மேற்சொன்ன சான்றுகளைக் கொண்டு அமாவாசைத் திதியிலேயே பிதுர்க்காரியங்கள் செய்யப்படவேண்டும் என்பதையும், கிரகண காலம் பிதுர்க்காரியங்களுக்கு புண்ணியகாலமாகவே கருதப்படுகிறது என்பதையும்  அக்காலத்தில் செய்யப்படும் பிதுர்க்காரியங்கள் பெரும் பயனைத் தரும் என்பதையும் நாம் தெளிவாய்த் தெரிந்து கொள்கிறோம். 

ஆதலால் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி அன்றே ஆடி அமாவாசை விரதத்தையும் பிதிரக்காரியங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். மேற்சொன்னவற்றை நமது சமயத்தின் ஆதாரநூல்களின் அடிப்படையின்படியே சொல்லியிருக்கிறேன்.

 

               

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.