'உலகெலாம்......' பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

 'உலகெலாம்......' பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
மரபோடு பொருந்திய நூலாசிரியர் இட்ட பெயரை, ஆன்றோர் நீக்கிய காரணம் யாது? சிந்தனையுள் வினாப் பிறக்கிறது. மற்றைய புராணங்களெல்லாம்,  சீவர்கள் பாடிய சிவக்கதைகள். தொண்டர்புராணமோ, சிவன் பாடிய சீவர்கதை. ஆதியும் அந்தமும் இல்லா அப்பெரிய ஆண்டவனே, இப்புராணம் செய்தான் என்பதை உணர்த்தவே, பெரியபுராணம் எனப் பெரியோர் இந்நூலுக்குப் பெயரிட்டனர் போலும். ஆன்றோர்தம் வாக்கினால் விளைந்த இவ்வாகமப் பிரமாணமே, இந்நூலைச் செய்தவன் சிவனே என்பதற்காம் மற்றைச் சான்றாம்.

லகெலாம் என,
சிவன் வாக்காகவே எழுந்த பெரியபுராணத்தின் முதற்பாடல்,
நம் சைவசமயத் தத்துவக் கருத்துக்கள் அத்தனையையும்,
உட்கொண்டு உயர்ந்து நிற்கிறது.
அப்பாடல் காட்டும் எல்லையற்ற பொருட்குறிப்புக்கள்,
அப்பாடலின் தெய்வத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
சைவத்தை முழுமையாய் விளங்க,
அந்த ஓரு பாடலே உரைகல்லாம்.
இனி அப்பாடலை,
தெய்வச் சேக்கிழார்தம் சிந்தைக் கருத்தாய்க் கொண்டு,
அப்பாடல் கொண்ட உயர்ந்த கருத்துக்களுள் சிலவற்றை,
ஒவ்வொன்றாய் விளங்க முயல்வோம்.

💠 💠 💠 💠


விநாயக வணக்கம் 

வேதநெறியைப் பின்பற்றும் அனைத்து மதத்தார்க்கும்,
விநாயக வணக்கம் பொதுவானது.
வினைகளை நீக்கும் நாயகனான விநாயகனை வணங்கியே,
இந்துமதத்தார் எக்காரியத்தையும் தொடங்குவர்.
தனை வணக்கம் செய்ய மறந்து,
முப்புரம் எரிசெயப் புகுந்த,
அச்சிவன் உரை ரதம்,
அச்சது பொடிசெய்தான் ஆனைமுகனென,
புராணங்கள் கூறும்.
புலவோரும் பிள்ளையார் சுழியிட்டே,
தம் ஆக்கங்கள் அனைத்தையும் செய்வர்.

💠 💠 💠 💠

தெய்வச் சேக்கிழாரோ விநாயகர் வணக்கத்தை,
தன் காவியத்தின் முதல் பாடலாய் அமைக்காமல்,
பின்னரே அதனை அமைக்கின்றார்.

எடுக்கும் மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.

இப்பாடல் காவியத்தின் மூன்றாம் பாடலாகவே அமைகிறது.
அங்ஙனமாயின்,
விநாயகர் வணக்கத்தைப் பின்தள்ளி,
தெய்வச் சேக்கிழார் மரபைமீறினாரா?
கேள்வி பிறக்க விடை காணப் புகுகின்றோம் நாம்.

💠 💠 💠 💠

நம் சைவசித்தாந்தம் கூறும் முப்பத்தாறு தத்துவங்களில்,
முதல் தத்துவமாய்க் கருதப்படுவது நாததத்துவம்.
அதற்கடுத்த தத்துவமாய்க் கருதப்படுவது விந்து தத்துவம்.
இவ்விரண்டு தத்துவங்களையும் முறையே,
சிவதத்துவம், சக்தி தத்துவம் என்றும் உரைப்பர்.
நாதம், விந்து எனும் இவ்விரு தத்துவங்களின் சேர்க்கையே,
பிரணவம் எனும் ஓங்காரமாய்த் திகழ்கிறது.
இவ் ஓங்காரத்தின் வடிவானவனே கணபதியாம்.

💠 💠 💠 💠

ஓங்காரமே இவ்வுலகினது மூலமாம்.
நாதம், விந்து எனும் இரண்டு தத்துவங்களின் சேர்க்கையே,
ஓங்காரம் என முன் கண்டோம்.
நாதத்தின் குறியீடு '-'
விந்துவின் குறியீடு 'Ο'
மேற்சொன்ன இரண்டு குறியீடுகளின் இணைப்பை,
வரிவடிவாய்க் கொண்டதே உகரம் எனும் அட்சரமாம்.
அதுவே நாதத்தினதும் விந்துவினதும் சேர்க்கையான,
ஓங்காரத்தின் குறியீடுமாம்.
ஓங்காரத்தின் குறியீடான உகரமே பிள்ளையார் சுழி எனப்படுகிறது.
அதனாலேயே பிள்ளையார் சுழியாய் ,
நாம் 'உ' எனும் அட்சரத்தை இடுகின்றோம்.

💠 💠 💠 💠

காவியத்தைப் பாடத்தொடங்கிய நம் தெய்வச்சேக்கிழாரும்,
விநாயக வணக்கத்தை மறந்தாரல்லர்.
தன் காவியம் சிறக்க,
இறையால் தரப்பட்ட உலகெலாம் எனும் தொடரை,
உற்று நோக்குகிறது அவர் மனம்.
அத்தொடரின் முதல் எழுத்தாய் உகரம் நிற்க,
இறை தந்த உலகெலாம்  எனும் அத்தொடரில்,
பிள்ளையார் சுழி இயல்பாய் அமைந்ததைக் கண்டு சிலிர்த்துப் போகிறார் அவர்.
அங்ஙனம் தானாகவே காவியத்தின் தொடக்கத்தில் வந்த,
உகர அட்சரத்தால் விநாயகர் வணக்கம் இயல்பாய் அமைந்து போனதால்,

விநாயகர் வணக்கத்தைத் தனித்து முதலில் தனித்துப் பாடாது அவர் ஒழிந்தனர்.
இவ்வுண்மை உணர,
மரபு மீறாச் சேக்கிழார்தம் மாண்புணர்ந்து மகிழ்கிறோம் நாம்.

💠 💠 💠 💠

மங்கலத் தொடக்கம் 

நம் தமிழ்மரபில் காவியங்கள் செய்யும் புலவர்கள்,
எடுத்த காரியம் இனிது முடிய,
மங்கலச் சொல்லை முதலாய்க்கொண்டு,
வழிபடு தெய்வ வணக்கம் கூறி,
தம் நூல்களை இயற்றுவர்.

வழிபடு தெய்வ வணக்கம் கூறி,
மங்கலமொழி முதல் வகுத்து,
எடுத்துக்கொண்ட இலக்கண, இலக்கியம்,
இடுக்கண் இன்றி இனிது முடியும் என்மனார் புலவர்.

எனும் சூத்திரம்  இவ்வுண்மையை வலியுறுத்தும்.

💠 💠 💠 💠

அம்மரபின்படி நம் தெய்வச் சேக்கிழாரும்,
உலகமெனும் மங்கலச் சொல்லை முதலாய்க்கொண்டு,
கடவுள் வாழ்த்தியற்றி,
தன் காவியத்தைத் தொடக்குகிறார்.
இறையால் இயக்கப்பட்ட சிறப்புடைமையின்,
உலகம் எனும் சொல் மங்கலச் சொற்களுள் தலையாயதாய் ஆகிறது.
அது நோக்கியே நக்கீரப் பெருமான்,
உலகம் உவப்ப என திருமுருகாற்றுப்படையினையும்,
கம்பர் பெருமான்,
உலகம் யாவையும் என இராமகாவியத்தையும் இயற்றினர் என்பர்.
மரபுநோக்கி,
சேக்கிழார்தம் காவியத்திலும்,
உலகம் எனும் மங்கலச் சொல்,
முதற்பாடலின் முன்வந்த உண்மையறிந்து உவக்கிறோம் நாம்.

💠 💠 💠 💠

உலகின் மற்றொரு சிறப்பு

காணப்படும் இவ்வுலகைக் கொண்டே,
அதன் கர்த்தாவாகிய காணப்படாத இறைவனை அறிதல் கூடும்.
இவ்வுலகோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பவன் இறைவன்.
உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பும் இஃதேயாம்.
ஆதலால் உலகை உடலென்றும் இறையை உயிரென்றும் கருதுவர் நம் ஆன்றோர்.
உடலைக் கொண்டே உயிரை இனங்காண முடியுமாம்.
அதுபோலவே,
இவ்வுலகைக் கொண்டே இறையை இனங்காணல் கூடும்.
இவ்வுலகிற்கு இறைவனை உணர்த்த முற்படும் சேக்கிழார்,
உலகை உணர்ந்தே இறையை உணரலாம் எனும்,
பேருண்மையை நமக்கு உணர்த்திட விரும்பியிருப்பார்.
அதனால்த்தான் உலகமெனும் சொல்லை முதல் வைத்து,
உலகெலாம் என இறைவன் அடியெடுத்துக் கொடுத்தனன் போலும்.

💠 💠 💠 💠

பாடலுள் பஞ்சபூதங்கள்

காணப்படும் இவ்வுலகம் முழுவதும்,
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களால் ஆனது.
அப்பூதங்களின் கலப்பே பல வடிவங்களாய்த் தோன்றி,
உலகாய் காட்சி தருகிறது.
இவ்வுண்மையை நமக்கு உணர்த்த,
இப்பாடலில் சேக்கிழார் பஞ்சபூதங்களையும் பதிவு செய்கின்றார்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனும்,
இம்முதற்பாடலில்,
உலகு, நீர், சோதி, ஆடுவான், அம்பலம் எனும் சொற்கள்,
பயிலப்படுகின்றன.
இச்சொற்களை ஊன்றி நோக்கினால்,
உலகு எனும் சொல் நிலத்தையும்,
நீர் எனும் சொல் நீரையும்,
சோதி எனும் சொல் நெருப்பையும்,
ஆடுதல் எனும் சொல் காற்றையும்,
அம்பலம் எனும் சொல் ஆகாயத்தையும் உணர்த்துதலை நாம் அறியலாம்.
உலகம் எனத்தொடங்கிய கடவுள்வாழ்த்துள்,
உலகாய் அமைந்த பஞ்சபூதங்களையும் குறிக்கும் சொற்களை,
தெய்வச் சேக்கிழார் அமைத்த சிறப்புணர்ந்து மகிழ்கிறோம் நாம்.

💠 💠 💠 💠

பாடலுள் தன்மாத்திரைகள்

பஞ்ச பூதங்களுக்கும் காரணமாய் இருப்பவை,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்திரைகளாம்.
இத்தன்மாத்திரைகள்,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில்,
பொருந்தி நிற்கும்போது,
ஐம்புலன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
ஆன்மா,
பஞ்சபூதங்களின் முதலாய தன்மாத்திரைகளையும்,
அவற்றில் தோன்றுவனவாய பஞ்சபூதங்களையும்,
அவற்றின் கூறுகளாகிய மற்றைய தத்துவங்களையும்,
விளங்கி,
அதன் மூலம் மெய்யுணர்ந்து வீடெய்துமாம்.
அதுநோக்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் 
வகைதெரிந்தான் கட்டே உலகு என்றனர்.

💠 💠 💠 💠
                                                                                                      (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.