எறிகணை 40
கேள்வி :
சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில், உங்களை வாழையிலையில் நிற்கவைத்துப் பாதபூஜை செய்ததைப் பார்த்த சிலர், வாழையிலையின் புனிதத்தை நீங்கள் கெடுத்துவிட்டதாகக் கூறி, கடுமையாகக் கோபித்தார்கள். சென்றவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழக ஆதீனமுதல்வர்களுக்கு அதேபோல் பாதபூஜை நடந்திருக்கிறது. அதுபற்றி யாரும் ஒன்றும் பேசக்காணோமே. ஏன்?
பதில் :
“மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற கதைதான் இது. அந்த விமர்சனங்கள் வாழையிலையை உயர்த்த நினைத்துச் செய்யப்பட்டவை அல்ல. என்னைத் தாழ்த்த நினைத்துச் செய்யப்பட்டவை.
இந்தச் சம்பவத்தின் மூலம் சில நாட்களுக்குள்ளேயே இயற்கை அவர்களது முகத்தில் கரியைப் பூசிவிட்டது. அதை நினைந்து அவர்களே இப்போது தமக்குள் நாணிக்கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் வேறு கேள்வி கேட்டு, அவர்களின் வயிற்றெரிச்சலை ஏன் கிளப்பப் பார்க்கிறீர்கள்? கம்பனைப் போல நானும், ‘பித்தர் சொன்னவும் பேணப் பெறுபவோ’ என்று விட்டுவிட்டேன்.
கேள்வி :
தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகப் போக்குப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
சமூக வலைத்தளங்களில் நல்லதாகவும், கெட்டதாகவும் விமர்சனங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களெல்லாம் பெரும்பாலும் சார்புபட்டவையாகவே இருப்பதால், இவ்விருவகை விமர்சனங்களையும் முழுமையாய் நம்ப முடியவில்லை.
அது தவிரவும், நிர்வாக அனுபவமே இல்லாத, புதியவர்கள் செய்யத் தொடங்கியிருக்கும் நிர்வாகம் பற்றி, இந்தச் சொற்ப நாட்களில் முழுமையாய் விமர்சிப்பது முறையாகாது என்றே நினைக்கிறேன்.
நல்ல விடயங்கள் பல நடைபெறுவதாயும் கேள்விப்படுகிறேன். பிழை செய்பவர்கள், தமது கட்சியினராய் இருந்தாலும் அப்பிழைகள் தெரியவந்ததும், கட்சிப்போர்வையால் அப் பிழைகளை மறைக்க நினைக்காமல், வெளிப்படையாய் அவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் வருவது மிக நல்ல விடயங்கள். அப்படிச் செயற்பட்டதால்த்தான் முன்பு ஜெயலலிதாவுக்குக் கட்சியினர் கட்டுப்பட்டு நின்றனர். அந்த வழியை விஜய் பின்பற்றுவது மகிழ்ச்சி தருகிறது.
“எவர் என்றும் பார்க்காமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள்! எங்கள் கட்சியினரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.” என்று காவல்த்துறைக்கு விஜய் போட்டிருக்கும் கட்டளையும், காவல்நிலையங்களில் “சி.சி.டீ.வி” பூட்டப்பட இருக்கும் முடிவும் மிகப்பெரிய விடயங்கள்.
சமுதாயத்தின் பிழைகளைத் திருத்தி நெறி செய்யவேண்டுமானால், முதலில் நீதித்துறையையும், காவல்த்துறையையும் நேர்மையாக இயங்கச் செய்யவேண்டும். அவ்விரண்டு துறைகளுந்தான் சமுதாயத்தை நெறிசெய்வதில் முதன்மை வகிக்கும் துறைகள்.
கடந்த காலங்களில் ஆட்சியாளர்களே இவ்விரு துறையினரது ஊழலுக்கும் வழி சமைத்திருந்தார்கள். அந்நிலையை மாற்றி அந்தத் துறைகளைத் தூய்மை செய்யத் தொடங்கியிருக்கும் விஜய்யின் செயலைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
கேள்வி :
படித்தவர்கள்கூட ஜோதிடத்தை நம்பிக் காரியங்கள் செய்யப் பார்க்கிறார்களே. இந்த அறியாமையை என்னென்று சொல்வது?
பதில் :
அவர்களது அறியாமையைச் சுட்டிக்காட்ட நினைந்து, உங்களது அறியாமையை வெளிப்படுத்தி நிற்கிறீர்கள். ஜோதிடக்கலை பற்றிய உங்களது கருத்து மிகத்தவறானது.
நமது இந்துமதத்தினர் வானியல்சாஸ்திரம் பற்றியும், காலவிஷேடங்கள் பற்றியும் அன்றே ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களது வானியல் சம்பந்தமான ஆராய்ச்சிகள், இன்றைய நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களுடைய முடிவுகளுக்குச் சவால் விட்டு நிற்கின்றன.
உதாரணத்திற்கு, சூரியக் குடும்பக் கிரகங்களை ஒன்பதாக நம்மவர்கள் அன்றே வகுத்தார்கள். பின்னாளில் நவீன வானியலாளர்கள் இன்னும் இரண்டு கிரகங்களை அதனோடு சேர்த்துக் கொண்டார்கள். அவர்களால் சேர்க்கப்பட்ட “நெப்ரியூன்”, “புளூட்டோ” எனும் அந்த இரண்டு கிரகங்களையும், அங்ஙனம் சேர்த்துக் கொண்டது தவறென்று சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களே ஒத்துக் கொண்டார்கள்.
இன்றைய நவீன கருவிகள் ஏதும் இல்லாதிருந்த காலத்தில், தமது யோகக்காட்சியால் மட்டும் கிரகங்களைப் பற்றி ஆராய்ந்து நம்மவர்கள் கண்டுபிடித்த விடயங்கள் ஆச்சரியம் தருகின்றன. விரிவஞ்சி அவற்றை இங்கு சொல்லாமல் விடுகிறேன்.
நாம் காலம், இடம் என்கின்ற இரண்டு ஊடகங்களில்த்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இடம் தூல வடிவாய் இருப்பதால் அதில் இயங்குவது நமக்கு நன்றாகத் தெரிகிறது. காலம் சூக்குமமாக இருப்பதால், அதில் இயங்குவதை நாம் ஊகித்துத்தான் அறியவேண்டியிருக்கிறது. அந்த ஆற்றல் எல்லோருக்கும் இருப்பதில்லை.
ஒரு நல்ல வீதியில் நாம் சுகமாகப் பயணம் செய்யலாம். குன்றும் குழியுமாக இருக்கும் வீதியில் பயணம் செய்வது சிரமமாக இருக்கும். இங்ஙனமாய், இடத்தின் கூறுகளுக்கேற்ப நிகழும் நன்மை, தீமைகள் போலவே, காலத்தின் சில கூறுகளும் நமக்கு நன்மையையும், தீமையையும் விளைவித்து விடுகின்றன.
இடத்தில் இருக்கும் குறைகளை முன்னரே தெரிந்து கொண்டால், நாம் பாதையை மாற்றிப் பயணத்தைச் சுகப்படுத்தலாம். அதுபோலவே காலத்தில் இருக்கும் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்ப நம் இயக்கத்தை மாற்றி நம் காரியங்களில் வெற்றி கொள்ளலாம்.
இந்த காலவிஷேடங்கள் பற்றி, வகுத்துச் சொல்கிற சாஸ்திரம் தான் ஜோதிடம். கிரகங்களின் இயக்கங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் காலத்தின் நன்மை தீமைகளை, நம் பெரியவர்கள் அன்றே நுட்பமாக ஆராய்ந்து சொல்லிவிட்டார்கள். அங்ஙனம் அவர்களால் சொல்லப்பட்டதைத்தான் “ஜோதிடக்கலை” என்று நாம் சொல்கிறோம்.
நமது வேதங்களைப் படிப்பதற்கு முன் ஆறு அங்கங்கள் பற்றிய அறிவினை நாம் பெற்றிருக்கவேண்டும் என்று நம் பெரியவர்கள் அன்றே வகுத்திருந்தார்கள். “சீக்ஷா” (உச்சரிப்பு), “வியாகரணம்” (இலக்கணம்), “சந்தஸ்” (செய்யுள் இலக்கணம்), “நிருக்தம்” (சொல் இலக்கணம்), “ஜோதிடம்” (வானசாஸ்திரம்), “கல்பம்” (செயல்முறை) என்பவையே அவ் ஆறு அங்கங்களாகும்.
ஜோதிடத்தை நன்கு கற்ற ஒருவரிடம், நமக்குரிய காலவிஷேடத்தின் நன்மை, தீமைகளை அறிந்து கொண்டு, நமது செயல்களைத் தொடங்குவோமானால், அக்காரியங்களை இடையூறின்றிச் சுகமாக முடிக்கலாம் என்பது திண்ணம்.
ஆகவே, படித்தவர்கள் ஜோதிடம் பார்த்துத் தம் காரியங்களைச் செய்வதென்பது அவர்களின் சரியான முடிவேயாம். பூரண அறிவின்மையால் சில ஜோதிடர்கள் சொல்லும் விடயங்கள் பிழைக்கலாம். ஆனால் ஜோதிடம் பிழைக்க வாய்ப்பேயில்லை.
கேள்வி :
தொடங்கிய நாள்முதல் என்.பி.பி. அரசாங்கத்திற்கு அடுத்தடுத்துச் சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றனவே தொடர்ந்து தாக்குப்பிடிப்பார்களா?
பதில்:
சோதனைகள் வேதனைகளாய் முடிவதும் உண்டு. சிலவேளை சாதனைகளாய் நிமிர்வதும் உண்டு. அரசியல் பிழையாதிருக்கும் வரை எந்த நிர்வாகத்தையும் அறம் காவல் செய்யும் என்பது நமது தமிழ்ப்புலவர்களது முடிவு. அரசியல் பிழைத்தால்த்தான் அறம் கூற்றாகும் என்கிறார் சமணத்துறவியான இளங்கோவடிகள்.
இதுவரையான என்.பி.பி. யின் செயற்பாடுகள் பெரிய அளவில் அறப்பாதையிலிருந்து வழுவியதாய்த் தெரியவில்லை. நீதி அனைவருக்கும் ஒன்றாய் இருக்கவேண்டும். நெருக்கடிகள் காரணமாக சிலவேளைகளில் சிலருக்காக நீதித்தராசைத் தவறாகப் பிடிக்கப்பார்க்கிறார்கள். அந்த பிழை தொடர்ந்தும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் அறமும் நிலைக்கும் அரசும் நிலைக்கும்.
கேள்வி :
அண்மையில் நீங்கள் அறிந்த ஓர் அதிசயச் செய்தி பற்றி சொல்லுங்களேன்.
பதில்:
“யூடியூப்பில்” ஆச்சரியப்படத்தக்க ஒரு செய்தியினைப் படித்தேன். இந்த உலகத்தில் நமக்குத் தெரியாத எத்தனை அதிசயங்கள் மறைந்து கிடக்கின்றன என்று வியந்தேன்.
நான் படித்த அந்தச் செய்தி பற்றிச் சொல்கிறேன். துருக்கி நாட்டில் 1962ம் ஆண்டளவில், குன்றுகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒரு மனிதர், வீடு கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டிய போது, அங்கே ஒரு குகை இருப்பதைக் கண்டிருக்கிறார்.
பயந்து போன அந்த மனிதர், அரசாங்கத்திற்கு அது பற்றி அறிவித்திருக்கிறார். அந்த நாட்டு அரசாங்கம் அதற்குள்ளே சிவலிங்கம் இருக்கிறதா? புத்தர்சிலை இருக்கிறதா? என்று கோளாறு பண்ணாமல், உடனடியாக ஆய்வாளர்களை அனுப்பி அவ்விடத்தைப்பற்றி ஆராயச் சொல்லியிருக்கிறது.
அந்த ஆராய்ச்சியின்போது தான் அவ்வதிசயம் வெளிப்பட்டிருக்கிறது. அந்தக் குகைக்குள் நுழைந்து பார்த்த ஆய்வாளர்கள் அதிசயித்துப் போய் இருக்கிறார்கள். உள்ளே ஆழமாகப் போகப்போக நீண்டு கொண்டே போன அந்த சுரங்கத்தின் உள்ளே, கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர் வாழக்கூடிய 18 அடுக்குகளைக் கொண்ட ஒரு பெரிய நகரமே நிர்மாணிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் இருக்கிறார்கள்.
சுரண்டினால் வரத்தக்க சுண்ணாம்புக்கற்களைக் குடைந்து, அந்தப் பல மாடிகளைக் கொண்ட நகரம் அமைக்கப்பட்டிருந்ததாம். அத்தனை மாடிகளையும் தாங்கக்கூடிய வகையில், அந்தச் சுண்ணாம்புக்கற்களிலேயே தூண்களை அமைத்திருந்திருக்கிறார்கள்.
இந் நகரத்தின் பெயர் “டெரின்குயு” (Derinkuyu) என்பதாகும். பூமிக்கு அடியில் சுமார் 85 மீற்றர் (280 அடி) ஆழம்வரை இந் நகரம் செல்கிறதாம். ஆய்வாளர்கள் இந் நகரம் கி.மு. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இந் நகரத்தினுள், வீடுகள், பள்ளிகள், தேவாலயங்கள், சமையற்கூடங்கள், வைன் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கால்நடைத் தொழுவங்கள் ஆகியவை அமைந்திருந்ததாம்.
எதிரிகள் உள்ளே நுழைய முடியாதபடி, பெரிய உருளைவடிவக் கற்களைக் கொண்டு உட்புறமாக மட்டுமே பூட்டக்கூடிய கதவுகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தனவாம்.
ஆயிரக்கணக்கான காற்றோட்டக் குழாய்கள் மற்றும் பூமிக்கு அடியிலிருந்து நீரை எடுக்கும் கிணறுகள் என்பனவும் அங்கு இருந்தனவாம்.
அந் நகரத்தைக் கண்டு அதிசயித்த ஆய்வாளர்கள், அந்த நகரம் பற்றி ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கும் செய்திகள், நமக்கு மேலும் ஆச்சரியத்தைத் தருகின்றன.
நிலத்தின் கீழ் பல ஆயிரம் பேர்கள் வாழத்தக்க அந் நகரத்தை அக் காலத்தில் அமைத்த காரணம் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள், அதிசயிக்கத்தக்க சில செய்திகளைச் சொல்கிறார்கள்.
அக்காலத்தில் பூமியின் பல பகுதிகளை ‘ஏலியன்ஸ்’ என்று சொல்லப்படுகிற வெளிக்கிரகவாசிகள் கைப்பற்றி வைத்திருந்திருக்கலாம் என்றும், வேறுவேறு கிரகங்களைச் சேர்ந்த அந்த ‘ஏலியன்களுக்கு’ இடையில், ஆகாயத்தில் சண்டைகள் நடந்திருக்கலாம் என்றும், அந்தச் சண்டையின் சிதறல்கள் மக்களைப் பாதிக்காமல் இருக்க, பாதுகாப்புக்கருதி இத்தகைய நிலக்கீழ் நகரங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய நிலக்கீழ் நகரங்களை “ஏலியன்களே” அமைத்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். தற்போது பூமியின் வேறு சிலபகுதிகளில் இத்தகைய நிலக்கீழ் நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவாம். துருக்கியில் அமைந்துள்ள மேற்படி நிலக்கீழ் நகரத்தை இப்போது “டூரிஸ்டுகள்” சென்று பார்க்க அனுமதித்திருக்கிறார்கள்.
இத்தகையை செய்திகளை எங்களைப் போன்றோர் சொல்லியிருந்தால் சிலர் “பிரசங்கியார் நல்லாக் கதை விடுகிறார்” என்று கிண்டல் செய்திருப்பார்கள். ஆனால் அச் செய்தியைச் சொல்லியிருப்பவர்கள் விஞ்ஞான பூர்வமான ஆய்வாளர்கள். இப்போது இக் கிண்டல்காரர்கள் என்ன செய்யப் போகிறார்களாம்?