எறிகணை 43

எறிகணை 43
எறிகணை 08 Aug 2026

#கேள்வி :

உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய சினிமா நடிகைகள் யார், யார் என்றும், உங்களை அவர்கள் கவர்ந்ததற்கான காரணம் என்ன என்றும் சொல்ல முடியுமா?

#பதில் :

என்னை வம்பில் மாட்டுவதற்கென்றே நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. இதற்கு நான் பதில் சொன்னதும், என்னைத் தாழ்த்தி விமர்சிக்க ஏதேனும் காரணம் கிடையாதா என, காத்திருக்கும் சிலபேர்வழிகள், “ஆஹா பார்த்தீர்களா!  கள்ளச் சாமியார் சினிமா நடிகைகளை ரசிக்கும் விதத்தை?”  என்று கூக்குரல் இடத் தொடங்கப் போகிறார்கள்.

அவர்களைப்பற்றிக் கவலைப்பட்டால் நான் எதையுமே எழுத முடியாமற் போய்விடும். வீணர்களின் கருத்துப்பற்றி நான் என்றைக்குமே கவலைப்பட்டதில்லை. அதனால் நீங்கள் கேட்டிருக்கும் இக் கேள்விக்கான விடையை மனந்திறந்து சொல்ல முயல்கிறேன்.

அதற்கு முன் ஒன்று! அதென்ன? பழைய நடிகைகள் என்று கேட்கிறீர்கள். பழைய நடிகைகளைப்பற்றி மட்டுமல்ல, தேவைப்பட்டால் இடைக்கால நடிகைகள், புதிய நடிகைகள் என்று எவரைப்பற்றி வேண்டுமானாலும் என்னால் விபரமாய்ச் சொல்ல முடியுமாக்கும். இப்போது நீங்கள் பழைய நடிகைகள் பற்றிக் கேட்டிருப்பதால் அவர்களைப்பற்றி மட்டும் முதலில் சொல்கிறேன்.

அறிவு தெரிந்து நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலத்தில், மூன்று நடிகைகள்   என்னை மிகவும் ஈர்த்தார்கள். நடிகைகள்  பி. பானுமதி, பத்மினி, எஸ். வரலட்சுமி என்பவர்கள்தான் அவர்கள். இம்மூவரும் தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர்கள்.

நடிகை பானுமதியின் நடிப்பில் பெண்மையைக்கடந்த ஓர் ‘ஆண்மூச்சு’ எப்போதும் தெரியும். பேச்சு, பார்வை என அவரது அசைவுகள் எல்லாவற்றிலும் ஒரு ‘கொமாண்டிங்’ இருக்கும். காதல் காட்சிகளிலும் அன்பைக்கடந்து ஆளுமை காட்டி, கதாநாயகர்களைத் தத்தளிக்க விடுவார் அவர். இமைகளை உயர்த்தி உயர்த்தி அவர் பேசும்விதம் புதுமையானது. அழகை மட்டும் தனது “முதலாகக்” கருதாத ஓர் அபூர்வ நடிகை இவர்.

 எழுத்து, பாட்டு, இயக்கம் எனப் பலவற்றிலும் திறமை காட்டும் பல்துறை விற்பன்னர். மூக்கோசையாய் (nose voice) வரும் இவரது பேச்சும், பாட்டும் தனித்துவமானவை. ஒரு பேட்டியில் தனது குரலை, “பெக்கூலியர் வொய்ஸ்” (peculiar voice) என அவரே சொல்லியிருக்கிறார்.

அன்றைய நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் கதாநாயகியாக நடிக்கும்போதும், பின்னாளில்  நடிகர் பிரஷாந்திற்குப் பாட்டியாக  நடிக்கும்போதும்  தனது தனித்துவ நடிப்பால் அவர்களுக்கு “டவ்ஃ” கொடுக்கத் தவறாதவர்.

 அறுபது, எழுபதுகளில் வந்த “பத்துமாதபந்தம்” படத்தில் இவர் பாடும் ஆங்கிலப்பொப் பாடல்க்காட்சியும், “எடுப்பார் கைப்பிள்ளை” படத்தில் மூத்த வக்கீலாக இவர் நடித்த நீதிமன்றக்காட்சியும் என்னால் மறக்க முடியாதவை.

இவருடைய முழு நடிப்பாற்றலைக் காணவேண்டுமானால் “அன்னை” என்கின்ற பழைய படத்தை எடுத்துப் பாருங்கள். அந்தப் படத்தின் ஒரு காட்சியில், நடிகர் சந்திரபாபு செத்த எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டுவர, அதைக்கண்டு பதறி சில நிமிடங்கள் இவர் நடிப்பார். “கமராவிற்கு” முன்னால் நின்றுதான் நடிக்கிறாரா? என்று நம்மைத் திகைக்க வைக்கும் காட்சி அது. அத்தகைய ஓர் இயல்பான பதட்டத்தை வசனத்திலும், நடிப்பிலும் கொண்டுவர வேறெவராலும் முடியுமா? என  வியப்பீர்கள்.

அடுத்தவர் நடிகை பத்மினி. “காமசூத்திரம்”, பெண்களை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நால்வகையாய்ப் பிரிக்கும். இவர்களுள் பத்மினி ஜாதிப்பெண்களே  தெய்வ அழகு கொண்ட உயர்ஜாதிப் பெண்களாய் கருதப்படுகிறார்கள்.

நடிகை பத்மினி, உண்மையிலேயே ஓர் பத்மினிஜாதிப் பெண்தான் என்று அடித்துச் சொல்லலாம். அத்துணை மென்மையான ஒளிவீசும் அழகு இவரது. சினிமாத்துறையில் என்று மட்டுமல்லாது, நாட்டியத்துறையிலும் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் இவர். “நாட்டியப்பேரொளி” என்று பெயரெடுத்தவர்.

அந்தக்காலத்தில் “திறீ சிஸ்ரர்ஸ்” என்று அழைக்கப்பட்ட இவரும் இவரது சகோதரிகளான லலிதா, ராகினி ஆகியோரும், தமது நாட்டியக்கலையால் தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தினார்கள்.

“வஞ்சிக்கோட்டை வாலிபன்” என்ற படத்தில், நடிகை பத்மினியும், நடிகை வைஜந்திமாலாவும் ஆடிய “கண்ணும் கண்ணும் கலந்து” என்ற பாடலுக்கான போட்டி நடனம்  இன்றைக்கும்  பேசப்படும் ஒன்றாய் இருக்கிறது. 

 அழுகையோ! சிரிப்போ! காதலோ! எதுவானாலும்,  உணர்ச்சிகளை மென்மையாகவும், நுட்பமாகவும் வெளிப்படுத்துவதில் தன்னிகரற்ற ஆற்றல் கொண்டவர் இவர். நாடி துடிக்க இவர் அழுகின்ற அந்த அழகை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். யாரோடு நடித்தாலும் தனது நுட்பமான முகபாவங்களால் “சிக்ஸர்” அடித்து, எதிராளியை மண் கவ்வ வைப்பார்.

தனது நாற்பத்தைந்தாவது வயதில் “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் கதாநாயகியாய் நடித்து, இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்ந்த சாதனையாளர். நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பிற்கு எதிர் நடிப்புக் கொடுக்க, இவருக்கு நிகரானவர் இவரேதான். “குலமா குணமா”, “வியட்னாம் வீடு” ஆகிய படங்கள், இவரது நடிப்பாற்றலுக்கான மைல் கற்கள்.

அடுத்து எஸ். வரலட்சுமி பற்றிச் சொல்கிறேன். இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் பிற்காலத்தில் நடுத்தர வயதுப் பாத்திரங்களில்த்தான் அதிகம் வலம் வந்தார்.

பாசத்தைக் கொட்டும் தாய்ப்பாத்திரத்தில் நடிக்க இவரைவிட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம். இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த, நடிகை கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமான “நத்தையில் முத்து” படத்தில், ஜாதித் திமிர்பிடித்த, அதேவேளை அன்புள்ளம் கொண்ட ஒரு பிராமணப்பெண்ணாக இவர் நடித்த நடிப்பு மறக்கமுடியாதது. 

அதேபோல “பணமா?பாசமா?” என்ற படத்தில் திமிர்பிடித்த மாமியாராக வந்து ஒரு கலக்குக் கலக்கிய இவரது நடிப்பைப் பார்க்கத் தவறியவர்கள் பாவிகளாவார்கள். சிவாஜியின் “ராஜராஜசோழன்” படத்தில் பெரிய குந்தவை வேடத்தில் அப்படி ஒரு அழகாய்ப் பொருந்தினார்.

 இவர் அற்புதமாய்ப் பாடும் திறமை உள்ளவர். சங்கீதச் சாயலுள்ள இவரது சினிமாப்பாடல்கள் தனித்துவமானவை. இவரது குரலில் ஏதோ ஒருவகை ஈர்ப்பு இருக்கும். “அந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப் பூவில்” என்ற பாடலை ஜேசுதாஸ் ஒருவகையாய்ப்பாட இவர் அதே பாடலை வேறொரு வகையாய்ப் பாடி  அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். 

உணர்ச்சிகளை மெல்லிய அதிர்வுகளோடு வெளிப்படுத்துவதில் மிக வல்லவரான இவர், சிவாஜியில் தொடங்கி கமல்ஹாசன் வரை ஈடுகொடுத்து நடித்தவராவார்.

இந்த மூன்று பேர்களும் நடித்த எந்தப் படமானாலும் அவற்றை நான் பார்க்காமல் விட்டதில்லை. அந்தக்காலத்தில் நான் ரசித்த நடிகைகள் இம்மூவரும் தான்.

 

#கேள்வி          :

உங்கள் ஆசிரியரான சிவராமலிங்கம் ஐயாவுக்கு நூற்றாண்டு விழாவாமே?

#பதில் :

அவரை எனது ஆசிரியர் என்று சொல்வது தவறு! உண்மையில் அவர் எனது ஞானத்தந்தைகளில் ஒருவர். தன்னைவிட என்னை நேசித்தவர். ஊனம் கடந்தும் ஞானம் கொண்டவர். தனது உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களது மன ஊனம் தவிர்க்கப் பாடுபட்டவர்.

இன்றைய உலகத்தின் போக்கை அறிந்து தமிழையும், சைவத்தையும் முன்னெடுக்கும் வழியைக் கற்றுத்தந்தவர். அக்கால இந்துக்கல்லூரியின் சமூகத்தொடர்பாளர். இருமொழி ஆளுமையாளர். பணி ஓய்வுபெற்ற பிறகும் படித்துக் கொண்டேயிருந்த அறிவாளி.

மாணவர்களின் “சரணாலயம்”. மற்றவர்களின் வருத்தம் தீர்க்கத் தன் வருத்தம் பாராது உழைத்தவர். தமிழ் படித்தும் தலைநிமிர்ந்து வாழலாம் எனக் காட்டித் தந்தவர். அன்புக்கு அடிமையாவார்! ஆணவத்திற்கு எதிரியாவார்! பேச்சும், எழுத்தும் ஒருங்கே வரப்பெற்றவர். இவர் எனது முன்னைத் தவப்பயன்.

 

#கேள்வி :

தமிழ்நாட்டின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கைது பற்றி?

#பதில் :

ஜனநாயகம் பேச்சுரிமையை அங்கீகரிக்கிறது. தமிழர் பண்பாடு அப் பேச்சுரிமையில் நாகரீகத்தை வலியுறுத்துகிறது. சட்டத்திற்கு அகப்படாமல் பேசத்தெரிந்திருந்தால் மட்டும் போதாது. தர்மத்திற்கு உட்பட்டும் பேசத் தெரியவேண்டும். பொதுமக்கள் கூடிய சபையில் மிகக் கேவலமான இரட்டை அர்த்தம் வரும்படி அவர் பேசிய பேச்சை ரசிக்க முடியவில்லை.

“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்” என்ற வள்ளுவரின் குறளை, உதயநிதி மட்டுமல்ல அரசியல்வாதிகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

 

#கேள்வி          :

புதுடில்லிக் கம்பன்விழாவிற்குச் சென்றிருந்தீர்கள் போல. விழா சிறப்பாக நடந்ததா? அல்லது பாரதத் தலைநகரில் விழா எடுக்கவேண்டும் என்ற பெயருக்காக மட்டுமே விழா எடுக்கிறார்களா?

#பதில் :

பெயருக்கு விழா எடுக்கிறார்களா என்றா கேட்டீர்கள்? உண்மையைச் சொல்லப்போனால் இம்முறை அவர்கள் எடுத்த கம்பன்விழா தலைநகரின் தலைமை விழாவாக மாறியிருந்தது சத்தியம். மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய தில்லிக்கம்பன்கழகம் மூத்த கம்பன் கழகங்களையெல்லாம் முந்தி ஓடிவிடுமோ? எனும் அச்சத்தை எங்களுக்கெல்லாம் உண்டாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஒரு விழாவின் வெற்றி அதனை நடத்துபவரின் ஆற்றலில்த்தான் தங்கியிருக்கிறது. ஒரு காரியத்தை முன்னெடுக்கத் தொடங்குபவர், அக்காரியத்தை வெற்றியாக்கும் முயற்சியில் முழுமனதோடு ஈடுபடவேண்டும். மனம், மொழி, மெய் எனும் திரிகரணங்களும் எந்நேரமும் அம்முயற்சியின் வெற்றிபற்றிச் சிந்தித்தபடி இருக்கவேண்டும். அப்படி ஒருவர் முயற்சித்தால் அவர் எடுத்த காரியம் வெற்றி பெறுவது சர்வ நிச்சயமாகும்.

இங்ஙனமாய்ச் செயற்படுபவர்களின் தொகை இன்று அபூர்வமாக ஆகிவிட்டது. ஆனால் கம்பனுடைய ராசியோ என்னவோ தெரியவில்லை, அவனது கழகத்தை இயக்குகிற ஒருசிலருக்கு இத்தகைய ஆற்றல் தானாய் வாய்த்துவிடுகிறது.

தில்லிக் கம்பன் கழகத்திற்கு, மேற்சொன்ன ஆற்றலாளர்களில் ஒருவரே தலைமை தாங்குகிறார். அவர் பெயர் கே.வி.கே. பெருமாள் என்பது. முன்பு மத்திய அமைச்சராய்ப் பலகாலம் இருந்த ப.சிதம்பரம் அவர்களின் தனிச்செயலாளராய்ப் பணியாற்றியவர் இவர்.

டெல்லியில் இவரைத் தெரியாத பெரிய மனிதர்கள் என்று எவரும் இல்லை எனலாம். எடுத்த காரியம் எதுவானாலும் அதனைச் சித்திபெறவைப்பதில் தனி ஆற்றல் வாய்ந்தவர். சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்கவர். இனப்பற்றுடையவர். தமிழ்மேல் எல்லையில்லாக் காதல் கொண்டவர். அதனால் கம்பனை உயிர் வரையில் நேசிப்பவர்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏதோவகையில் இவர் மனதுள் கம்பன் புகுந்திருப்பான் போல. அதனால் பாரதத்தின் தலைநகரில், பாரதத்தின் பெரும் புலவனுக்கு விழா எடுக்க முடிவு செய்த இவர், எதையும் பெரிதாகவே செய்யும் தன் வழக்கப்படி கம்பன்விழாவையும் பெரிய அளவில் நடத்தத் தொடங்கினார்.

பெருமாளைப் போற்றினான் கம்பன். கம்பனைப் போற்றுகிறார் இந்தப் பெருமாள். இவரது இந்தப் பெரிய முயற்சிக்குத் தோளோடு தோள் நின்று துணை செய்ய வாய்த்த செயலாளர் எஸ்.பி.முத்துவேலுவையும், பொருளாளர் டி.வி.சரவணன் ராஜனையும் கம்பனின் அருள்கொடை என்றே நினைக்கவேண்டி இருக்கிறது.

அமைதியாக, தம்மை வெளிப்படுத்தும் நோக்கமின்றி, எடுத்தகாரியத்தை வெற்றிபெறச் செய்ய முழுமனதுடன் உழைக்கும் இவ்விருவரும், பெருமாளின் இருகரங்களாகச் செயற்படுகிறார்கள். இவர்கள் பெருமாளுக்குக் கம்பர் கொடுத்திருக்கும் இரு வரங்கள்.

இக்குழுவினர் சென்ற ஆண்டு விழாவின் குறைகளையெல்லாம் கவனித்து, இந்த ஆண்டு அவற்றை நீக்கி, விழாவைப் பெருவெற்றி அடையச் செய்திருந்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலர் வந்திருந்து, விழாவைச் சிறப்பித்தார்கள். வரவழைக்கப்பட்ட புகழ்பெற்ற பல பேச்சாளர்களும், கவிஞர்களும் விழா நிகழ்ச்சிகளை உயரச் செய்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கம்பன்விழா ஒன்றின் கவியரங்கம் பெருவெற்றி அடைந்ததை அங்கு கண்டேன். கவிஞர் அப்துல்காதர் தலைமையில், “எழுதாத கடிதங்கள்” என்ற தலைப்பில் நடந்த அக் கவியரங்கத்தில் பாடிய அனைவரும் சிறப்பாகச் சபையை ஈர்த்துக் கவிதை பாடினார்கள்.

அவர்களுள் முதல் இடத்தை, கவிஞர் தஞ்சை இனியன் கைப்பற்றிக்கொண்டார். அவருக்குக் கவிதை பாடவும் தெரிகிறது. சபையோரைக் கைப்பற்றவும் தெரிகிறது. அவர் பாடத் தொடங்கி முடியும்வரை ரசிகர்களின் கைதட்டுக்களால் சபை அதிர்ந்தபடியே இருந்தது. கம்பன்விழா நடத்தும் அத்தனை கழகங்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய கவிஞர் இவர்.

இவருக்கு அடுத்தபடியாகச் சபையைக் கவர்ந்தவர் ‘கலைமாமணி’ கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள். அவரும் சபையைத் தனதாக்கிக் கொண்டார். அனுபவமிக்க அவரது கவிதைகள் சபையோரது செவிகளைத் தாண்டி நெஞ்சைத் தொட்டன.

தமிழ்நாட்டிற்கு இன்று கிடைத்திருக்கும் பெருமைகளில் முக்கியமான ஒன்றை இவ்விடத்தில் நான் சொல்லவேண்டும். பாரதத்தின் உச்சநீதிமன்ற நீதியரசர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களாய் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, அம்மூவரும் பெரும் தமிழ்ப்பிரியர்களாகவும் இருக்கின்றனர்.

அம்மூவரையும் இவ்வாண்டுக் கம்பன்விழாவில் கலந்துகொள்ள வைத்து விழாவின் சிறப்பைச் சிகரம் தொடவைத்தார் பெருமாள். கலந்துகொண்ட நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ், நீதியரசர் அரங்க மகாதேவன், நீதியரசர் கே.வி. விஸ்வநாதன் ஆகிய மூன்று நீதியரசர்களும் ஆழமாக, அமைதியாகத் தம் கருத்துக்களை வெளிப்படுத்திச் சபையை ஈர்த்தனர். 

விழாவின் குறை என்று சொல்வதானால், நிகழ்ச்சிகளில் நெருக்கம் கூடியதையும், நேரக்கட்டுப்பாடுகளில் சில தவறுகள் நிகழ்ந்ததையும் மட்டுமே சொல்லமுடியும். பட்டிமண்டபத்தில் பேசிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் பட்டிமண்டபத்தில் பேச அனுமதிக்கப்பட்டார்கள். தங்களுக்குத் தரப்பட்ட அந் நேரத்தைச் சிறிதும் சோர்வின்றி அவர்கள் நல்லபடி பயன்படுத்தினார்கள் என்பது வேறு விடயம்.

ஆனால் ஒன்று, பட்டிமண்டபப் பேச்சாளர்களுக்கான நேர ஒதுக்கீட்டில் ஏதாவது ஒரு கட்டுப்பாடு இருந்தே ஆகவேண்டும். அணிப்பேச்சாளர்களை விட, அணித்தலைவர்களுக்குச் சிறிது நேரம் அதிகம் கொடுக்கலாம். அதே சமயத்தில் அணிப்பேச்சாளர்களுக்கான நேரத்தின் மூன்று, நான்கு மடங்கு நேரத்தைத் தலைமைப் பேச்சாளர்களுக்கு வழங்குவது பொருத்தமாயில்லை.

சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக, “டென்டுல்கர்” க்கு மட்டும் ஒரு “ஓவருக்கு” பத்துப்பந்துகள் என்று ஆக்கமுடியாதல்லவா? தரப்பட்ட “ஓவர்”களுக்குள் மற்றைய விளையாட்டு வீரர்களைவிட அவர் சிறப்பாக விளையாடியதால்த்தான் சிறந்த விளையாட்டு வீரராய்க் கணிக்கப்பட்டார். அதேபோன்ற ஒழுங்கு பட்டிமண்டபங்களிலும் இருப்பதுதான் நல்லது.

முனைவர் பர்வீன் சுல்தானா, திருமதி இந்திரா விஜயலக்ஷ்மி, இளைஞர் ஆர்.பிறிட்டோ ஆகியோரும் தம் திறமையால் சபையைக் கவனிக்க வைத்தார்கள். இம்முறையும் கம்பன்விழா நிகழ்ச்சிகளில் மூத்த தமிழ் நடிகர் சிவகுமார் அவர்களும், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களும் கலந்துகொண்டு விழாவின் பெருமையை உயர்த்தி வைத்தார்கள்.

நிறைவு நாள் அன்று ரசிகர்களால், தில்லித் தமிழ்ச்சங்க மண்டபம் நிரம்பி வழிந்தது. “பல்கனியில்” கூட இருக்க இடமில்லாமல் போயிற்று. நிறைவு நாளன்று, இரவு பத்தரை மணி வரையும் சபை நிறைய மக்கள் இருந்து பட்டிமண்டபத்தினைக் கேட்டார்கள்.

டெல்லியில் இது ஒரு புரட்சி என்றே கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்து பெருமாள் அவர்கள்,  நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அடுத்த கம்பன்விழாவுக்கான ஆயத்தங்களைத் தொடங்கியிருப்பார் என்று தோன்றுகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்” என்று திருவள்ளுவர் சும்மாவா சொன்னார்?

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.