எறிகணை 44
கேள்வி :
இயக்கச்சி “றீச்சா” பொழுதுபோக்கு மையத்தில் நடந்த உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
கடந்த சில தினங்களாக “பேஸ்புக்”, “யூடியூப்” முதலியவற்றைத் திறந்தால் அடுத்தடுத்து இது பற்றித்தான் பலரும் பேசுகிறார்கள். “யூடியூப்பர்ஸ்” பலர் இவ்விடயம் பற்றித் தனித்தனி நிகழ்ச்சிகளையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அது தவிர “றீச்சா” உரிமையாளர் கந்தையா பாஸ்கரனுடைய பேட்டிகள் வேறு, தினமும் ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்படாமல் எப்படி இருக்க முடியும்?
எதிர்பார்த்ததைவிட அதிகமான கூட்டம் வந்துவிட்டதால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட, கொதிப்புற்ற பொதுமக்கள் கோபித்துக் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. நடந்த விடயச்சுருக்கம் இவ்வளவுதான்.
உணவுத் திருவிழாவில் கலந்துகொள்ளவென வந்தவர்களோ, “றீச்சா” உரிமையாளர்கள் தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று கோபாவேசத்தோடு இணையத்தில் கூக்குரல் இடுகிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பிரமுகர் மூவாயிரம் ரூபா எங்களுக்கு வெறும் பிச்சைக்காசு என்று அலட்சியமாய்ப் பேசுகிறார். அந்தப் பிச்சைக்காசு விருந்தை உண்ணத்தான் அவர் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார் என்பதிலிருந்து அவரது பொய் வாழ்க்கையின் உண்மை நமக்குப் புரிகிறது.
வேறு சில இளைஞர்களும், இளம் பெண்களும் கொதித்துக் கொந்தளித்து, “இவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று கத்துகிறார்கள்.
இந்த விடயம் பற்றிப் பேட்டியளிக்கும் “றீச்சா” உரிமையாளரோ, “உண்ண வந்தவர்களுக்கு நாகரீகம் தெரியவில்லை. உணவுகளை சமைக்கும்போதே சட்டிக்குள் கைவைத்து தூக்குகிறார்கள் என்றும், தனது ஊழியர்களைப் பலர் வீதிகளில் வைத்துத் தாக்கியதோடு தகாத வார்த்தைகளால் பேசினார்கள் என்றும் விருந்துண்ண வந்தவர்களைப் பற்றிக் குறை சொல்லி முறைப்பாடு வைக்கிறார். அத்தோடு நில்லாமல் சில அரசியல்காரர்களின் சதியால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றும் சொல்லி வருகிறார்.
எனக்கென்னவோ இந்த விடயத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று புரியவில்லை? இது சாதாரணமாக ஒரு வியாபாரத்தளத்தில் நடந்த சிறு பிரச்சினை. அதைப்போய் ஏதோ பெரிய இனப் பிரச்சினை போலப் பெரிதுபடுத்துவதைக்காணச் சிரிப்புத்தான் வருகிறது.
வன்னியில் நடந்த இறுதிப்போரில், மக்கள் கூட்டம் கூட்டமாய் மடிந்தபோதுகூட நம்மவர்கள் யாரும் இந்த அளவு கொந்தளித்துத் தம் உணர்ச்சிகளைக் கொட்டியதாய்த் தெரியவில்லை. இப்போது இந்தச் சிறிய விடயத்திற்கு இத்தனை கொந்தளிப்பு.
“ஏமாற்றுப்பட்டுவிட்டோம்”, “நஷ்டப்பட்டு விட்டோம்”, “எங்களுக்கு அந்தச் சாப்பாடு கிடைக்கவில்லை”, “இந்தச் சாப்பாடு கிடைக்கவில்லை” என்றெல்லாம் கூவுகிற கூட்டத்தைப் பார்த்தால், பாரதி சொன்னாற்போல “சொல்லப் பொறுக்குதில்லை நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்” என்று எண்ணத் தோன்றுகிறது.
உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முடிக்கப்பட்டு, பதினேழு வருடங்களேயான நிலையில், நம் மக்கள் எவ்வளவு மாறிப் போய் விட்டார்கள் என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு உரிமைக்காகப் போராடியவர்கள், இப்போது உணவிற்காகப் போராடுகிறார்கள்.
இந்த மக்களின் உரிமைக்காகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடி மடிந்து போன எத்தனையோ இளைஞர்களினது ஆன்மாக்கள், நம் மக்களின் இந்தக் கூத்துக்களைக் கண்டு, இவர்களுக்காகவா நாம் உயிரை விட்டோம்? என நினைந்து பரிதவித்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நம் மக்கள் திசை திரும்பி விட்டார்களா? திசை திருப்பப்படுகிறார்களா? என்று புரியவில்லை.
கேள்வி :
ஆடி அமாவாசை விரத நிர்ணயம் பற்றிய உங்களது அறிக்கை பலரையும் தெளிவுபடுத்தியது. அதுபற்றி; “இந்துக் குருமார் அமைப்பு” வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “கிரகணம் ஏற்பட்டுத் தோற்றம் பெற்றால் மட்டுமே மறுதினம் தர்ப்பணம் முதலிய பிதிர்க்கடன் செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.” அமாவாசை தர்ப்பணத்தை அடுத்தநாளில் செய்வது எப்படிச் சரியாகும்? அறிய விரும்புகிறோம்.
பதில் :
நமது இந்துமத வழிபாடு சம்பந்தமான எல்லா விடயங்களும், நூல் ஆதாரங்களுடன்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே வழிபாடு சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது அதனைத் தெளிவுபடுத்த விரும்புவோர், தாம் சொல்லும் முடிவுகளுக்கான ஆதாரம் எந்த நூலில், எவ்விடத்தில் இருக்கிறது என எடுத்துக் காட்டவேண்டியது அவசியம்.
“இந்துக்குருமார் சங்கம்” சொல்லியிருக்கும் மேற்சொன்ன செய்தி சரியாயிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் சொல்லியிருக்கும் அச்செய்தி உண்மையாயின், அது எந்த நூலில் சொல்லப்பட்டடிருக்கிறது என்று அவர்கள் கூறவேண்டும்.
கேள்வி :
தற்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்களேன்.
பதில் :
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக திராவிடர் கழகங்கள் பயணித்துக் கொண்டிருந்த அரசியற்பாதையை முற்றுமுழுதாய் மாற்றி, புதிய அரசியற்பாதை அமைத்திருப்போர் கூட்டியிருக்கும் சட்டசபை நிகழ்ச்சிகளில் நான் கவனித்த சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அரசியலாளருக்கு “சொல்வன்மை” அவசியம் தான். அதனாற்றான் நம் வள்ளுவர் “சொல்வன்மை” என்கின்ற அதிகாரத்தை, அரசியல் கூறும் பொருட்பாலில் கொண்டுபோய் வைத்திருக்கிறார். திராவிடக் கழகங்கள் அந்த “சொல்வன்மையை” வைத்துத்தான் இதுநாள் வரை காலத்தை ஓட்டினார்கள்.
அவர்களது பேச்சுத்திறத்தில் மயங்கிய தமிழ்நாட்டு மக்கள், ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அவர்களையே தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஆட்சியில் செயலைவிட பேச்சுக்கே அதிகம் மதிப்பளிக்கப்பட்டது. அதனால்த்தான் அவர்களின் வீழ்ச்சியும் தொடங்கிற்று.
இந்நிலையில்த்தான் புதியபுரட்சி நிகழ்ந்தது. “சொல்வன்மை” இல்லாதது மட்டுமல்ல சாதாரணமாக ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாத சிலர் ஒன்று சேர்ந்து, ஐம்பதாண்டு காலமாகத் திராவிடர் கழகங்களின் கையில் நிலைத்திருந்த செங்கோலைப் பறித்தெடுத்தார்கள். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
தற்போது நடைபெறும் சட்டசபைக் கூட்டத் தொடரிலும் ஆளுங்கட்சியினரின் பேச்சுவன்மை இரக்கத்திற்குரியதாகவே இருக்கிறது.
இது ஒரு குறைபாடா? என்றால் இல்லை என்பதுதான் எனது பதிலாகிறது. சிந்தித்துப் பார்க்க, பேச்சிருந்து செயல் இல்லாமல் இருப்பதைவிட, செயலிருந்து பேச்சு இல்லாமலிருப்பது மேலென்றே சொல்லத் தோன்றுகிறது.
புதிய அமைச்சர்களும், ஆளுங்கட்சிச் சட்டசபை உறுப்பினர்களும் தமது உரைகளை நிகழ்த்தப் பெரும்பாடு படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் அந்தத் தடுமாற்றத்தில் மக்களை ஏமாற்றும் தன்மை தெரியவில்லை.
இவர்கள், பேச்சில் வலிமை காட்டாவிட்டாலும் செயலில் வலிமை காட்டுவார்களேயானால், இதுநாள் வரை வெறும் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு ஏமாந்த மக்கள், இவர்கள்பால் ஈர்க்கபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முதலமைச்சர் விஜய் பேசப் பயப்பிடுகிறார் என்பது தெளிவாய்த் தெரிகிறது. பேச்சாற்றல் இல்லாதது தனது குறையில்லை என்பதை அவர் முதலில் உணரவேண்டும். அதைவிடுத்து தன்னால் பேசவும் முடியும் என்று காட்ட அவர் முயற்சிப்பதுதான் பெரும் குறையாகத் தோன்றுகிறது.
பேசுவதற்காக மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதுநாள் வரை அரச இயந்திரத்தில் இருந்த குறைகளை நீக்கிச் செயற்படத்தான் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை அவர் உணர்ந்தால், பேசத் தெரியாது என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து அவர் வெளிவந்து விடலாம்.
அது தெரியாமல், தனக்குப் பேசவும் வரும் என அவர் காட்ட நினைந்து உணர்ச்சி வயப்பட்டு பேச முயல்கிறார். அந்த உணர்ச்சி வயப்பாட்டால் பேச்சில் பிழைகள் தோன்ற அதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கின்றனர். அவர்களைச் சமாளிக்கத் தெரியாமல் பின் விஜய் தடுமாறி உட்கார்ந்து விடுகிறார். தேவையற்ற வேலை இது.
அதுதவிர, அவர் பேச எழும் போதெல்லம் எதிரணியைக் கட்டாயம் தாக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றே தோன்றுகிறது. தனது கொள்கையைத் தனக்கு வரும் தமிழில் அவர் எளிமையாய்ச் சொன்னாலே போதுமானது. அப்படி அவர் செய்வாரானால், அவரது பேச்சு மற்றவரை ஈர்க்காவிடினும், அப்பேச்சில் உள்ள உண்மை மற்றவர்களை ஈர்க்கும் என்பது நிச்சயம்.
சிலகாலத்தின் முன் வந்த “காப்பான்” எனும் சினிமாவில், முதலமைச்சராய் இருந்த “மோகன்லால்” சுட்டுக்கொல்லப்பட, அவரது மகனான “ஆர்யா” திடீரென முதலமைச்சர் ஆக்கப்படுவார். முதலமைச்சரானதும் நடக்கும் சந்திப்பொன்றில் அவரை ஊடகவியலாளர்கள் கேள்விகளால் மடக்க, பதில் சொல்ல முடியாமல் அவர் தடுமாறுவார்.
அப்போது உள்ளே இருந்து அவரை வழிநடத்தும் பாதுகாவலரான “சூர்யா”, “நீங்கள் சிரமப்படாமல் இயல்பாக உங்கள் போக்கில் பேசுங்கள்” என “இயர்(f)போன்” மூலம் காதுக்குள் சொல்ல, அதன் பிறகு ஆர்யா வெகு இயல்பாகப் பேசத் தொடங்குவார்.
“கட்சியைக் காப்பாற்றத் திடீரென அரசியலுக்குள் தான் தள்ளப்பட்டதாகவும், அரசியல் தனக்கு அதிகம் தெரியாது என்றும், நீங்கள் எல்லோரும்தான் என்னை வழிப்படுத்த வேண்டும் என்றும்” கூறி, எல்லோரது அன்பையும் சம்பாதித்துக் கொள்வார்.
அறிவால் பேசுவதைவிட உணர்வால் பேசினால் மிக இலகுவாக மக்கள் மனதில் பதிந்து விடலாம் எனும் உண்மையை, இந்தப் படத்தின் இயக்குனர் இக்காட்சி மூலம் தெளிவாய் வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்தை ஒருதரம் விஜய் போட்டுப் பார்ப்பது நல்லது.
காகம், அன்ன நடை நடக்கத் தலைப்பட்டால்த்தான் இகழப்படும். அது தன் நடையை இயல்பாக நடந்தால் அதை யாரும் குற்றம் சொல்லப் போவதில்லை.
விஜய் எதைச் சொன்னாலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கேட்கத்தயாராக இருக்க, அவர் வீணாகச் சிரமப்பட்டுத் தன்னைப் பேச்சாற்றல் மிக்க ஒரு “ஹீரோ”வாக நிரூபிக்க முயல்வது தேவையில்லாத வேலை என்றே தோன்றுகிறது.
அரசியலுக்குப் புதியவரான அவர், சட்டசபையில் தெரிந்தவற்றைப் பேசலாம். தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள முயலலாம். அங்ஙனம் நடந்தால் அது அவரது மதிப்பை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இந்தக் கூட்டத் தொடரில் பெரும்பாலும் வேட்டி, சட்டைக்கு விஜய் மாறியிருப்பது பாமரமக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. “இவர் நம்மில் ஒருவர்தான்” என்று மக்கள் நினைக்க இவ் உடைமாற்றம் துணை செய்யும் என்று தோன்றுகிறது.
முக்கியமாக மற்றொன்றைச் சொல்லவேண்டும். சட்டசபையில் பேச எழும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் தமது பேச்சு நேரத்தில் அரைவாசி அளவை விஜய்யைப் புகழ்வதற்குப் பயன்படுத்த முயல்கின்றனர்.
இது ஜெயலலிதா காலத்தில் தொடங்கிய நோய். அவர்காலத்தில், ஜெயலிதாவைப் புகழ்ந்து வாய் நொந்துபோவதுவும், மேசையில் தட்டிக் கை நொந்துபோவதுவும்தான் அ.தி.மு.க உறுப்பினர்களின் வேலையாய் இருந்தது. அந்தப் பிழையான பாதையை, புதிய புரட்சியாளர்களும் தொடராமல் இருப்பது நல்லது.
புதிய பாதையைத் திறந்தவர்கள் அப்பாதையில் மக்களுக்கு நன்மை தரும் புதுமைகளை நடத்திக்காட்டினால் நிச்சயம் உலகம் மகிழும்.
கேள்வி :
தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சர் “மரியவில்சன்” சட்டசபையில் பிழை பிழையாய் தமிழைப் பேசினார். “தமிழைப் பிழையில்லாமற்பேச பழகுங்களேன்!”என்று எதிரணியிலிருந்து ஒருவர் எடுத்துச் சொல்ல அமைச்சருக்கு கோபம் வந்து விட்டது.
உடனே அவர் எழுந்து “எனக்கு ஒரு மொழியை ‘கிறிஸ்டியானிற்றி’ கற்றுத் தந்திருக்கிறது. அது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும் பாதிப்பேருக்கு இந்த மொழி புரியாது. நான் ஒரு பிறவிக்கிறிஸ்தவன், (Born Christian) நான் பைபிலில் படித்திருக்கிறேன். என்றெல்லாம் விலாசித் தள்ள, அது இன்று ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக ஆகி இருக்கிறது. அது பற்றி அறிந்தீர்களா?”
பதில் :
அறிவதென்ன அறிவது? அவர் பேசிய பேச்சை ஊடகங்களில் நேராகவே கேட்க முடிந்தது. அரசியல்வாதிகளுக்கு பேச்சாற்றல் அவசியமில்லை என்று, நேற்றுத்தான் ஒரு கேள்விக்குப் பதில் எழுதினேன். நான் எழுதிய மையின் ஈரம் காய்வதற்கு முன்பாக, அது அவசியம் தான் என அந்த நிதி அமைச்சர் உணர்த்தியிருக்கிறார்.
எனவே முன் எழுதிய பதிலுக்கு பின் இணைப்பாகச் சிலவற்றை எழுத வேண்டியிருக்கிறது. ஒரு அரசியல்வாதிக்கு, எதைப்பேசுவது என்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. எதைப் பேசக்கூடாதென்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். பாவம் ‘மரியவில்சனுக்கு’ அது தெரியாமற் போனது துரதிஷ்டமே!
தன் சுயமுயற்சி ஏதும் இல்லாமல் பதவிச்சுகம் கிடைத்ததால், அதன் அருமை அவருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே ‘மிஷனரிமார்’ தான் விஜய்யின் வருகைக்கு வழி சமைத்துக் கொடுத்தார்கள் என்று ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. த.வெ.க. கட்சியின் உறுப்பினர்களே அக்கருத்தை உண்மையென்று நிறுவி விடுவார்கள் போல.
ஏற்கனவே ஆளுங்கட்சியில் இருக்கும் ஒரு இஸ்லாமியர் “நாங்களும் சனாதனதர்மத்தை ஒழிக்கத்தான் வந்திருக்கிறோம்” என்று பேசி இந்து மதத்தை இழிவு செய்தார். இப்போது இவர் தன் பங்கிற்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பு மொழி தெரிய வராது என்று பேசி, தமிழ்மொழியை இழிவு செய்கிறார்.
“எங்கே ஒரு பிழை நிகழும்? எப்போ இவர்களின் காலை வாரலாம்?” என்று எதிரணிகள் காத்திருக்க இவர்கள் அவர்களை வலிய அழைத்து விருந்து வைக்கப் பார்க்கிறார்கள். வலியக் கிடைத்த வரத்தை சாபமாக்க இவர்கள் செய்யும் முயற்சியைக் கண்டு உலகம் சிரிக்கிறது.
“த.வெ.க. கட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் தனித்து முயற்சிக்கத் தேவையில்லை, அந்த நல்ல காரியத்தை நாங்களே செய்து விடுகிறோம்” என்று இவர்கள் சொல்ல முனைவதாய்த் தெரிகிறது.
“நான் ஒரு பிறவி இந்து” என ஒருவர் சொன்னால், உடனே அவருக்கு “சங்கி” என்று பட்டம் சூட்டுபவர்கள் “நான் ஒரு பிறவி கிறிஸ்தவன்” என்று சொல்பவருக்கு என்ன பட்டம் சூட்டப் போகிறார்கள்?
விஜய்யின் புகழால் கஷ்டப்படாமல் இவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதால் இவர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. விஜய்க்காவது அது தெரிந்தால் நல்லது என்று தோன்றுகிறது.