எறிகணை 45

எறிகணை 45
எறிகணை 22 Aug 2026

#கேள்வி :

இப்போதெல்லாம் அடிக்கடி பூகம்பங்கள் வருகின்றனவே! அதற்கான காரணம் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா?

#பதில்:

இந்த விளையாட்டுத் தானே வேண்டாம் என்பது! பூகம்பம் பற்றி எல்லாம் சொல்ல, நான் பெரிய விஞ்ஞானியா என்ன? என்னைக் கிண்டல் செய்வதற்காகத்தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

ஆனாலும் அதுபற்றி எனக்குள் ஓர் கற்பனை அபிப்பிராயம் இருக்கிறது. அதை நான் சொன்னதும், “இந்தாளுக்குப் பைத்தியம்! விஞ்ஞான அடிப்படை தெரியாமல் பிதற்றுகிறார்!”  என்றெல்லாம் நீங்கள் என்னைத் திட்டப்போகிறீர்கள்.

திட்டினால் திட்டிவிட்டுப் போங்கள்! காகம் திட்டி மாடு சாகவா போகிறது? கற்பனைகளை வைத்துத்தான் விஞ்ஞானத்திலும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. யார் கண்டது? என் கற்பனையும் வருங்காலத்தில் உண்மையாகப் போகிறதோ என்னவோ?  “சுற்றி வளைக்காமல் விடயத்திற்கு வாரும்” என்கிறீர்களா? வருகிறேன்.

 அந்தரத்தில் நிற்கும் பூமி, தானாகவே தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டுள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது. அதனால்த்தான் பூமி முழுவதும் ஒரே மாதிரியான சமதரையாய் இல்லாமல், சில இடங்களில் மேடும், சில இடங்களில் பள்ளமும்,  சில இடங்களில் வறட்சியும், சில இடங்களில் செழிப்பும், சில இடங்களில் காடுகளும், சில இடங்களில் பாலைவனங்களுமாக, வேறுவேறு விதமான தன்மைகள் அதில் அமைந்திருக்கின்றன.

பூமியானது தனது சமநிலை நோக்கியே இங்ஙனமாய்த் தன்னை ஒழுங்குபடுத்தி இருக்கிறதோ? என்று  நான் நினைத்துக் கொள்வேன்.  பூமியில் இருக்கும்  பெரிய மலைகள் எல்லாம், வேறோரு இடத்தில் இருக்கும் பாரத்தைச் சமநிலைப்படுத்தவே உருவாகியிருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்ஙனம் தனது சமநிலைக்காக, பூமி ஆக்கி வைத்திருந்த இயற்கை அமைப்பை, தமது தேவைக்காக விஞ்ஞானத்தின்  துணைகொண்டு மனிதர்கள் மாற்றத் தொடங்கி விட்டனர். இன்று பெரியபெரிய மலைகளையெல்லாம் உடைத்து இல்லாமல் ஆக்குகிறார்கள். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரைத் தடுத்து பெரியபெரிய நீர்த்தேக்கங்களைச் செயற்கையாய் உருவாக்குகிறார்கள்.

 பூமியின் இயற்கைச் சமநிலை பற்றிச் சிந்திக்காமல், நூறுமாடி, இருநூறுமாடி என மிகப் பெரிய கட்டிடங்களைக் கட்டி, தமக்கு வசதியான இடங்களில் பூமியில் பாரம் ஏற்றுகிறார்கள். காட்டு மரங்களையெல்லாம் வெட்டி அந்த இடத்தைச் சமவெளி ஆக்குகிறார்கள்.

இப்படியாகப் பூமி தன்னிலைக்கேற்ப தானாய்ச் செய்து வைத்திருந்த சமநிலையை இன்று மனிதர்கள் தம் வசதிக்கேற்ப மாற்றுவதால், பூமியின் இயற்கைச்சமநிலை பாதிக்கப்பட்டிருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

அதனாற்றான், சமநிலை கெட்டுப்போன பூமி, அடிக்கடி நடுங்க ஆரம்பிக்கிறது. அப்படி ஆடி அசைவதன் மூலம் தனது சமநிலையைக் குழப்பும் கட்டிடங்களையும், நீர்த்தேக்கங்களையும், பாலங்களையும் உடைத்து, அது மீண்டும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொள்ள முயல்கிறதோ? எனும் ஐயம் எனக்கு உண்டாகிறது.

மனிதர்கள் தமது தேவைக்காய் பூமியின் சமநிலையை அழிக்க, பூமி தனது தேவைக்காய்  மனிதர்களை அழிக்கிறதோ? என்று கருத வேண்டியிருக்கிறது.

துருவப் பகுதிகளிலிருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதும், குளிர்ந்த பகுதிகள் வறட்சிப் பகுதிகளாகுவதும், வறட்சிப் பகுதிகள் குளிர்ந்து போவதுவும், திடீர் திடீரென சில இடங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுவதும், வேறு சில இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதுவும், கடல் பொங்கி பூமிக்குள் வருவதுவும், சூறைக்காற்றுகள் தோன்றுவதுவுமாகிய செயல்களெல்லாம், பூமியின் சமநிலையைப் பேணித்தருவதற்காய் இயற்கை நடத்தும் விளையாட்டாய் இருக்குமோ? என  நினைக்க வேண்டியிருக்கிறது.

அவ்வவ்போது பூமியில் பாரம் ஏறி, அதன் சமநிலை கெட்ட காலங்களில், பூமாதேவி தன் சிரமத்தை இறைவனிடம் எடுத்துரைத்து வருந்த, இறைவன் அவதாரம் எடுத்துப் பூபாரம் நீக்கிப் பூமாதேவியைக் காத்து உதவியதாய் நமது புராணங்கள் சொல்கின்றன.

மஹாபாரதத்தில் கண்ண பரமாத்மா சகாதேவனை நோக்கி, “மஹாபாரதப் போரை நிறுத்த உன்னால் முடியுமா?” எனக் கேட்டபோது சகாதேவன் கண்ணனை நோக்கி, “நீ பூபாரம் தீர்க்கப் பிறந்த புயல்வண்ணன் ஆதலால், உன்னைக் கட்டிப் போட்டாலேயன்றி பாரதப்போர் நிற்காது” என்கிறான்.

பாரதக்கதை சொல்லும் கண்ணன் என்பவன்தான் இயற்கையின் வடிவம். கண்ணனின் வடிவான இயற்கையைக் கட்டிப்போட, சகாதேவன் போன்ற ஒரு ஞானியால் மட்டுமே முடியும். ஆனால் இயற்கையின் இயல்பை அறியும் அத்தகைய ஒரு ஞானியும், இயற்கையின் செயற்பாட்டைத் தடுக்க முயலமாட்டான்.

சுயநலத்தால் தன்னைப் பாதிக்கும்  மனுக்குலத்திற்கெதிரான தனது  யுத்தத்தை, இன்று இயற்கை தொடங்கி விட்டதாய்த் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடாய்த்தான் அண்மைக்காலமாய் அடிக்கடி நடந்துவரும் பேரழிவுகளை நான் காண்கிறேன்.

என்மனதிற்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். வாசகர்கள் உடன்பட்டோ, மறுத்தோ  தங்கள் கருத்துக்ளைப் பதிவிட்டால் மகிழ்வேன்.

 

#கேள்வி :

அடுத்தடுத்து, போதைவஸ்துக் கடத்தற்காரர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

#பதில்:

மூன்று வினாக்கள் மனதிற் தோன்றுகின்றன. இதுநாள் வரை இத்தகைய கடத்தற்காரர்கள் பிடிபடாமல் இருந்ததற்கு யார் காரணம்? என்பது முதற்கேள்வி. அவர்கள் பிடிபடாமல் இருந்தார்களா? அல்லது பிடிபடாமல் காக்கப்பட்டார்களா? என்பது அடுத்த கேள்வி. உண்மைக் குற்றவாளிகள் அக் கடத்தற்காரர்களா? அவர்களைக் காத்தவர்களா? என்பது அதற்கடுத்த கேள்வி.

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிய வருகிறபோது, உலகம் அதிரப்போகிறது. அதுவரை புதிய ஜனாதிபதியும், அரசும் இத்தகு தீயவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதில் மிகக்கவனம் செலுத்தவேண்டும்.

 

#கேள்வி :

தமிழக முதலமைச்சர் விஜய் பற்றி, தமிழ்நாடு, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்த விமர்சனத்தைக் கேட்டீர்களா?

#பதில்:

மக்கள் மன்றத்தில் நிற்கிறோம் என்ற உணர்வுகூட இல்லாமல் இவர்களால் இப்படியெல்லாம் எப்படிப் பேசமுடிகிறது என்று தெரியவில்லை. ஆயிரம்தான் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரைக் கேவலமாய் இழிவு செய்வதென்பது அரசியல் நாகரீகமான செயலல்ல!

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு இவர் பேசும் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்களால், தமிழ்நாட்டில் இவர்களின் கட்சி இன்னும் பின்தள்ளப்படப்போகிறது. அண்ணாமலை இவர்களைவிட்டு ஏன் பிரிந்தார்? என்பதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது.

 

#கேள்வி :

சென்னைக் கம்பன்விழாவிற்குச் சென்றீர்களாமே. விழா எப்படி இருந்தது?

#பதில்:

அதே நாட்களிலேயே “யுடியூப்பில்” விழா நிகழ்ச்சிகள் நேரலையில் பதிவாகிவிட்டனவே. அதற்கு மேல் நான் என்னத்தைச் சொல்ல? இம்முறை விழா மிகச்சிறப்பாக அமைந்து போயிற்று. அவ்விழாவின் வெற்றிக்காக பெரிய ஒரு குழுவே செயற்பட்டது.  அக்குழுவில் பெண்களின் தொகைதான் அதிகமாக இருக்கிறது. அரசியலில் 30 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுப்  பெண்கள் போராடுகிறார்கள். இங்கோ அத்தகைய ஒரு இட ஒதுக்கீட்டிற்காய் ஆண்கள்தான் போராடவேண்டி இருக்கும் போல் தோன்றியது.

மேற்சொன்ன குழுவினருக்கு, மேனாள் மத்திய அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். அரசியலில் இருந்தாலும் அவரது ஆர்வம் தமிழின் மேலேதான் கொட்டிக் கிடக்கிறது. அவர் மேடையில் வாய்திறந்தால் ஆழ்வார் பாசுரங்கள் அருவியாய்ப் பாய்கின்றன. தனக்குக்கிடைத்த “நயவுரைநம்பி” எனும் பட்டத்திற்கு அவர் நீதி செய்கிறார். 

உணர்ச்சிகரமான செய்திகளைக் கேட்டதுமே, அவரது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டத் தொடங்குகிறது. அவரைக் காணும் போதெல்லாம், இந்த மனிதர் அரசியலில் எப்படி இருக்கிறார்? என்று நினைத்துக் கொள்வேன்.

அந்த அளவிற்கு அவர் உணர்வுமிகுந்த மனிதராய் இருக்கிறார்.  மேடை நிகழ்ச்சிகளைச் சரியானபடி நகர்த்தும் போதுமட்டும், இந்த மென்மை மனிதரிடம் வன்மை வந்து விடுகிறது. இன்று அவரது செல்வாக்கால்த்தான் சென்னைக் கம்பன்கழகம் இத்தனை உயர்வு பெற்று இருப்பதாய்த் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை. அவர் வேறெந்தப் பேச்சாளர்களையும்விட என்மேல் அளவற்ற அன்பு காட்டுகிறார்.  மேடையில்கூட என்னைத் தன் பிள்ளை என்று அறிமுகம் செய்கிறார். எப்படி இந்த அன்பு விளைந்ததென்று எனக்குத் தெரியவில்லை.  முன்னைப்பிறவித் தொடர்பு ஏதேனும் இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர் எனக்கு ஒரு “இறைத்தந்தை” (God father) அவ்வளவே!

புகழ்பெற்ற சமய, இலக்கியப் பேச்சாளர் டாக்டர் திருமதி சாரதா நம்பியாரூரன் அவர்கள் கழகத்தின் செயலாளராய்ச் செயற்படுகிறார். சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை ஒத்தமுகம் என, இராமன் பற்றிச் சீதை சொன்ன வாசகம், இவருக்குத்தான் முழுமையாய்ப் பொருந்துமென்று தோன்றுகிறது. எப்போதும் அவர் முகத்தில் சிரிப்பு ஒட்டிக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியம்.

எண்பது வயதைத் தொட்டு நிற்கும் இவருக்கு, அண்மையில் இரண்டு முறை முதுகெலும்பில் “ஆப்பரேஷன்” நடந்ததாம். வயதின் தளர்வோ, நோயின் தளர்வோ சிறிதுமின்றி அவர் இயங்கியவிதம் கண்டு ஆச்சரியப்பட்டேன். வயதாகிவிட்டதாய் நினைந்து எனக்குள் இருந்த சோர்வு, அவரைக் கண்டதும் பறந்து போய்விட்டது. அவரால்  புதிய இளமையோடு திரும்பி வந்திருக்கிறேன்.

மற்றொருவர் பற்றியும் கட்டாயம் நான் சொல்லவேண்டும். துணைச்செயலாளராய்ப் பணியாற்றும் திருமதி டாக்டர் பிரியா ராமச்சந்திரன்தான் அவர். வைத்தியத்துறையில் புகழ் பெற்ற டாக்டராய் இருந்தும், கம்பனில் அவர் காட்டும் ஆர்வம் வியப்புத் தருகிறது.

கம்பன் குடும்பத்திற்குள் அண்மையிற்தான் அவர் புகுந்தார். ஆனால் இன்று தனது தமிழ் ஆர்வத்தால், பலரையும் முந்தி ஓடிக் கொண்டிருக்கிறார்.  கம்பன் பணியில் அவர் காட்டும் வேகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவரது ஆரம்ப மேடைப் பேச்சுகளுக்கும் தற்போதைய மேடைப் பேச்சுகளுக்கும் இடையில், மடுவிற்கும் மலைக்குமான வித்தியாசம் தெரியத் தொடங்கியிருக்கிறது.

 சில வருடங்களுக்குள் பல நூல்கள் எழுதிவிட்டார்.  நடுத்தர வயதுக்குப் பின்னால் கம்பனுக்குள் நுழைந்தாலும், புதியபுதிய கம்பன் கவிதைகளை,  ஓரிரண்டு தரம் படித்ததும் மனனமாக்கி விடுகிறார். டாக்டர் பிரியாவிடம் நான் கண்டு வியக்கும் ஆற்றல் இது.

இப்போதெல்லாம்  நல்ல பாடல்கள் என் கண்ணில் பட்டாலும் மூப்புக் காரணமாக அப் பாடல்களை என் மனதில்  ஏற்ற முடிவதில்லை. கண்படாமல் அவர் வளர்ச்சி தொடரட்டும்.

 பிரியாவும், உலகப்புகழ் பெற்ற கல்லீரல் சத்திரசிகிச்சை நிபுணருமான டாக்டர் ரேலா அவர்களும் இணைந்து கம்பனைப் பரப்புவதில் பெருந்தொண்டாற்றி வருகின்றனர். கம்பன்மேல் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

வைத்திய நிபுணர் ரேலாவும் இப்போது பேச்சாளராய் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர்களுக்கெல்லாம் இலக்கியம் படிக்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இம்முறை டாக்டர் ரேலாவும், பேச்சாளர் சுமதியும் கம்பனின் பாத்திரங்களாக மேடையில் சந்தித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்காரர்கள் டாக்டர் ரேலாவை இலக்கிய மேடைகளுக்கு அழைப்பது நல்லது தான். இலக்கியம் என்றால் ஏதோ “கிள்ளுக்கீரை” என நினைக்கும் சில அறிவியலாளர்கள், இந்த மருத்துவ மேதையின் இலக்கிய ஆற்றல் கண்டு தம்மை மாற்றிக்கொள்ள முனைவார்கள்.

 ஆனால் ஒன்று! டாக்டர் ரேலாவை நாம், அவரது தரம் உணர்ந்து மேடைகளில் பயன்படுத்த வேண்டும். “தலைமையுரை”, “தனியுரை”, “நிகழ்ச்சித் தலைமை” போன்ற கௌரவமான நிகழ்ச்சிகளில் மட்டுமே நாம் அவரை பயன்படுத்துவது நல்லது.

மிக முக்கியமாகச் சொல்லப்படவேண்டிய இன்னொருவர், பெரியவர் இயக்குனர் திலகம் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். நடிகர்களான கமலையும், ரஜினியையும் வைத்துப் பெரும் வெற்றிப்படங்களை இயக்கிய  புகழ்பெற்ற இயக்குனர் அவர்.

இப்போதெல்லாம் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி, கம்பன் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து வருகிறார். தொண்ணூற்றிரண்டு வயதைக் கடந்தவர் என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் நம்பமாட்டீர்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. மேடை அலங்காரம் முதலிய பல வேலைகள் அவர்  பொறுப்பில் தான் நடக்கின்றன.

விழாவுக்கு முதல் நாளன்று மண்டப வேலைகளைப் பார்க்கும் போது கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட சாயலே தெரியாமல் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். சான்றோர்கள்  இன்னும் நம்மோடு வாழ்கிறார்கள் என்பதற்காம் சான்றாய்த் திகழும் பெரிய மனிதர்.  கம்பர் அவரைக் காக்கட்டும்.

இம்முறை கம்பன்விழாவில் நான் ரசித்த விடயங்களில் ஒன்றாக ஆற்றல்மிக்க இளம் பேச்சாளர்களின் பிரசன்னத்தை முக்கியமாய்க் குறிப்பிடவேண்டும். கம்பன் காலம் கடந்து வற்றாமல் ஓடும் ஒரு நதி. அதனால்த்தானோ என்னவோ காலத்திற்குக் காலம் புதிய, புதிய தலைமுறையினரை அவன் தன்னோடு இணைத்துக் கொள்கிறான்.

இம்முறை திரு. தாமல் கோ சரவணன், திரு.வீர.பாலாஜி, திரு. அ.க. இராஜாராமன், திரு. த. திருமாறன், திருமதி ம.தெய்வானை, திருமதி புதுகை ச. பாரதி, திருமதி ஆ. அனுக்கிரகா போன்ற இளம் பேச்சாளர்கள், தம் புலமையால் சபையை ஆட்சி செய்ததைக் கண்டு மகிழந்தேன்.

இவர்கள் மேடைகளுக்குப் புதியவர்கள் அல்லர். இவர்களைத் தவிர இம்முறை இளையோர் அரங்கில் மேடையேற்றப்பட்ட புதிய இளைஞர்களும் நிகழ்ச்சிகளில் தமது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தனர்.

குறிப்பாக நிறைவுநாள் பட்டிமண்டபத்தில் பேசிய இஸ்லாமியச் சகோதரியான திருமதி பௌசியா பானு அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அறிவாழத்தோடும், தர்க்கத் திறனோடும், நூலாட்சியோடும் அவர் பேசியது மிகச் சிறப்பாக இருந்தது. கம்பன்மேடைகளுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பர்வீன் சுல்தானா இவர்.

மேடை அறிவிப்புக்கள் செய்த கவிஞர் கங்கை மணிமாறனிடம் கவிதை ஊற்றெடுக்கிறது. அவரது ஆற்றல் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவருக்கு ஒன்று சொல்லவேண்டும். கவர்ச்சிக்காக மற்றவர்கள் பற்றி அளவுக்கதிகமாய் மிகைப்புகழ்ச்சி செய்தாலும் வார்த்தைகளின் வலிமை கெட்டுப்போகும். அளவுக்கு மிஞ்சாமல் அவர் கவிதையைக் கைக்கொள்வது நல்லது. 

நிர்வாகிகள் தமது தொடர்புகளுக்காகவும் சில பேச்சாளர்களை மேடையேற்றி இருந்தார்கள். சென்னை விழாவின் “லெவலுக்கு” அவர்களின் பேச்சு அமையவில்லை.

சென்னைக் கம்பன் கழகத்தின் தனிச்சிறப்பாய் அமைவது அதன் விழாச் சபையே! நான் சபைகளில் கற்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கற்றவர்களே சபையாய் இருப்பதைச் சென்னையிற்தான் காண்கிறேன்.

கம்பனை உயிராய் நேசிக்கும் ரசிகர் கூட்டம், குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து சபையை நிரப்புகிறது. அவர்கள் செவியே வாயாகக் கருத்துக்களை விழுங்கித் தள்ளுகிறார்கள். பேச்சாளர்கள் சிரித்தால் அவர்களும் சிரிக்கிறார்கள். பேச்சாளர்கள் அழுதால் அவர்களும் அழுகிறார்கள். உயர்ந்த கருத்துக்களைச் சொல்வோரைக் கொண்டாடித் தள்ளுகிறார்கள். காணக்கிடைக்காத கற்றோர் சபை அது.

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.