நேர்காணல் 13
சென்றவாரம்…
இந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் அப்போது கம்பன் விழாக்களை நடத்த வேண்டியிருந்தது. அதனாற்றான் அக்காலத்தில் நாங்கள் நடத்திய விழாக்கள் எமது வரலாற்றில் முக்கியமானவை என்று சொன்னேன் - தொடரும்….
இந்த வாரம்…
#கேள்வி:
இந்திய இராணுவ வருகைக்கு முன்பு, இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் கால அனுபவத்தைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது மனப் பதிவிலிருக்கும் மற்றைய சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
#பதில்:
மனப்பதிவுகளுக்குக் குறைவேயில்லை. நீங்கள் ஆர்வத்தோடு கேட்பதால் அக் காலத்தில் நடந்த வேறுசில சம்பவங்கள் பற்றியும் சொல்கிறேன்.
அப்போது இலங்கை இராணுவம், குண்டுவீச்சு விமானம் (bomber) அல்லாத சரக்கு ஏற்றுகிற பெரிய விமானம் ஒன்றிலும் வந்து, வட்டமடித்து வட்டமடித்துக் குண்டுகளை வீசும் முறையொன்றைத் தொடங்கியிருந்தது. அந்த விமானத்திற்குச் “சகடை” என்று யாழ்ப்பாணத்தவர்கள் பெயர் வைத்திருந்தார்கள். அந்த விமானம் சுற்றுகிறபொழுது அதன் பின் கதவருகில் வைத்து, மிகப்பெரிய பீப்பாய்க் குண்டுகளை அவர்கள் உருட்டி விடுவார்கள். அந்தக் குண்டுகள் விழுந்து வெடிக்கும் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
அந்தப் பெரிய விமானங்கள் தாழப்பறந்து சுற்றும்விதமே மக்களை மிகவும் பயமுறுத்தியது. அந்தக் காலத்தில்த்தான் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த எங்களது கம்பன் கோட்டமும் தாக்குதலுக்கு உள்ளானது. ஒருநாள் மாலை நேரத்தில் சகடை குண்டுவீசத் தொடங்கியது. அப்பொழுது நாங்கள் வைமன் வீதி வீட்டில்த்தான் தங்கியிருந்தோம். விமானம் வந்ததும் நாங்கள் “பங்கருக்குள்” சென்று பதுங்கிவிட்டோம். வழமைபோலக் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக சகடையும், பொம்மர்களும் தாக்குதலை நிகழ்த்திவிட்டுச் சென்றுவிட்டன.
அவை சென்றதும் நாங்கள் வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சிலர் நல்லூர்ப் பகுதியிலும் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். மைம்மல் பொழுதாகிவிட்டது. ஆனாலும் எதற்கும் ஒருதரம் எங்களது கம்பன் கோட்டத்தைச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைந்து அங்கு சென்றோம்.
மெல்லிய இருள் சூழ்ந்துவிட்ட அந்த நேரத்தில் வெளியில் நின்று பார்க்க, கம்பன் கோட்டத்திற்கு எதுவும் நடந்தாகத் தோன்றவில்லை. எதற்கும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் என நினைந்து உள்ளே சென்றபோது, அதிர்ச்சி காத்திருந்தது. கட்டிடத்தின் நடுப்பகுதியில் உடைந்த கல்த்துண்டுகளும் கண்ணாடித்துண்டுகளும் சிதறிக்கிடந்தன. விளக்கை ஏற்றிப் பார்த்தபொழுது, எங்களது கட்டிடத்தின் மேற்பகுதிக்கு நாம் இட்டிருந்த கொங்கிறீற் தளத்தின் ஒரு பகுதி உடைந்து அதன் நடுவிலிருந்த கம்பித்துண்டுகளெல்லாம் வெட்டப்பட்டுக் கிடந்தது தெரிந்தது.
விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஒரு “றொக்கட் லோஞ்சர்” எமது கட்டிடத்தின் மேற் பகுதியை வந்து தாக்கி, அவ்வளவு கனமான அந்தக் கொங்கிறீற் தளத்தைத் துளைத்துக் கொண்டு உள் நுழைந்து, அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு அறையின் பெரிய கதவையும் உடைத்துக் கொண்டு உட்சென்று அங்கிருந்த சுவர் ஒன்றையும் காயப்படுத்தியிருந்தது.
நாம் மிகவும் சிரமப்பட்டுப் பொருள் சேர்த்துக் கட்டிய கட்டிடத்தின் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திப்போனோம். அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. எதிர்பாராமல் கண்ட காட்சி மனதை அதிரச் செய்திருந்தது. அப்போது அந்த அறையில் எங்களது செயலாளர் குமாரதாசனது தம்பியும் அவனது சில நண்பர்களும் தங்கியிருந்து படித்து வந்தார்கள். நல்லகாலமாக இந்தக் குண்டுவீச்சு நிகழ்ந்தபோது அவர்கள் அங்கு இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர்களின் கதி என்னாகியிருக்குமோ தெரியவில்லை. ஏதோ உயிர்ப்பலி நிகழாமல் தப்பினோமே என நினைந்து, பின்னர் சற்று ஆறுதல் அடைந்தோம்.
கேள்வி :
குறிப்பாக அக்காலத்தில் இவ்வளவு கடுமையான விமானத்தாக்குதல்கள் நடந்ததற்கான காரணம் ஏதும் இருந்ததா?
பதில் :
இருந்தது. அக்காரணம் பற்றியும் சொல்கிறேன்.
புலிகள் யாழ்ப்பாணத்தை முழுமையாகத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்த நேரம் அது. புலிகளால் யாழ் கோட்டைக்குள் இருந்த இலங்கை இராணுவத்தினர் முற்றுகையிடப்பட்டிருந்தனர். ஆபத்தான நிலையில் அகப்பட்டிருந்த அவர்களை மீட்பதற்காகவே இலங்கை இராணுவம் அத்தகைய விமானக்குண்டு வீச்சுகளைத் தொடங்கியிருந்தது.
அப்போது மாலை நேரங்களில் குறித்த நேரத்தில் சகடை விமானமும், பொம்மர்களும் வந்துவிடும். அவை பெரிய வட்டமிட்டுக் குண்டுகளை வீசும். இது தினமும் தொடர்ச்சியாக நடந்து வந்தது. அக்காலத்தில் நல்லூர்ச் சூழலில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கு முதலாக இரவு உணவை முடித்துவிட்டு, பாய், தலையணைகளை எடுத்துக் கொண்டு நல்லூர்க் கோயிலுக்குள் வந்துவிடுவார்கள். இரவு பூராகவும் கோயிலுக்குள் படுத்திருந்துவிட்டு, விடிந்ததும் வீடு செல்வார்கள்.
இலங்கை இராணுவம் கோயிலுக்குள் குண்டு வீசாது எனும் நம்பிக்கையினாலும், நல்லூர் உள்வீதியின் மேற்தளத்திற்கு போடப்பட்டிருந்த கனமான “கொங்கிறீற்” தளம் தம்மைக் காப்பாற்றும் என்ற நினைப்பாலும், முருகன் தம்மைக் காப்பாற்றுவான் எனும் எதிர்பார்ப்பாலுமே மக்கள் அங்ஙனம் செய்து வந்தனர்.
நாட்டுச் சூழ்நிலையால் மக்களுக்கு அபயமளிக்க வேண்டிய தேவையையும் அறிந்து அப்போதைய கோயில் எஜமானர் குமாரதாஸ மாப்பாண முதலியார் மக்கள் வந்து தங்குவதற்காக கோயிலைப் பெருமனதோடு திறந்துவிட்டிருந்தார்.
அப்படி ஒருநாள் கோயிலின் உள்வீதி முழுவதுமாக மக்கள் படுத்திருந்தனர். நாங்களும் அங்கேதான் படுத்திருந்தோம். இரவு நேரத்தில் வழமை போல சகடை விமானம் சுற்றிச் சுற்றி குண்டுகளை வீசத் தொடங்கியிருந்தது. உள்ளே குண்டு விழாது என நினைத்தாலும் தப்பித்தவறி விழுந்துவிட்டால் என்னாவது என்ற பயத்தில் மக்கள் நடு நடுங்கிப்போய் இருந்தார்கள்.
நான் பாயில் அண்ணாந்து படுத்தபடி, உள்ளே இருந்த வெளியினூடாகத் தெரிந்த, கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென கோபுரத்தில் சிவப்பு நிறமான ஒரு வெளிச்சம் பிரகாசமாய்ப் படர்ந்தது. என்ன நடந்தது என்று சிந்திப்பதற்கு முன்பாக, மிக அருகில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. மக்கள் எல்லாம் தூக்கிவாரிப் போட எழுந்திருந்தார்கள். என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
காலையில் எழுந்து பார்த்தால், வெளியே கோயிலுக்கு மிக அருகில், ஒரு பீப்பாய்க்குண்டு விழுந்து வெடித்த சங்கதி தெரியவந்தது. கோயிலின் வெளிவீதியில் இருந்த நாவலர் மண்டபப் பிரகாரத்தில் ஒரு மிகப்பெரிய வேப்பமரம் நின்றிருந்தது. கிளைபரப்பி நின்ற அந்த வேப்பமரத்திற்கு உள்ளேயே அந்தக் குண்டு விழுந்து வெடித்திருக்கிறது. அந்தக் குண்டுவெடிப்பால் வலிமையான அந்தப் பெரிய வேப்பமரம் தும்பு தும்பாகச் சிதறி வீதியெல்லாம் பரவிக் கிடந்ததைக் கண்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.
விமானம் பறந்துகொண்டே போட்ட குண்டு அது. ஒருசில அடி தூரம் விமானம் நகர்ந்த பின்பு அக்குண்டு வீசப்பட்டிருந்தால், அது கோயிலுக்குள் வீழ்ந்திருக்கும். அப்படி வீழ்ந்திருந்தால் வேப்பமரத்திற்குப் பதிலாக நல்லூர் வீதியெல்லாம் மக்களுடைய உடல்கள்தான் சிதறிக் கிடந்திருக்கும். முருகனுடைய கருணையினால் குண்டு வெளியில் விழ, அந்தக் குண்டின் அதிர்வினை முழுமையாக அந்த வேப்பமரம் தான் வாங்கிச் சிதறிக் கிடந்தது. வேறு சேதம் ஏதும் கோயிலுக்கு ஏற்படவில்லை.
இச்சம்பவம் நடந்த பிறகு, கோயிலுக்குள் மக்கள் யாரும் படுக்க வருவதில்லை. வேறு, வேறு இடங்களில் சென்று மக்கள் தம்மைப் பாதுகாக்கத் தொடங்கினார்கள். முருகன் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அந்த அளவுதான் இருந்தது.
கேள்வி:
அதன் பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில் :
நாங்களும் விதிவிலக்கில்லை. மற்ற மக்களைப் போலத்தான் அன்றிலிருந்து மாலை மூன்று, மூன்றரை மணியானதும் நானும், இரத்தினகுமாரும், குமாரதாசனும் சைக்கிளில் ஏறி வட்டுக்கோட்டையிலிருந்த எனது அண்ணனது வீட்டிற்குச் சென்று இரவு தங்கிவிட்டு காலையில் எழுந்து மீண்டும் இங்கு வருவோம்.
அப்படி ஒருநாள் விமானம் வரப்போகிறது என்ற பயத்தில் அவசர அவசரமாக நாங்கள் புறப்பட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தபோது, தெரிந்த ஒருவர் என்னை நிறுத்தி வைத்துப் பேசத் தொடங்கிவிட்டார். அந்நேரம் பார்த்து விமானமும் சுற்றத் தொடங்கிவிட்டது. அந்த மனிதரோ கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் தன் கதையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாதிரியாக அவரை அனுப்பி வைத்துவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு நாம் ஓடத் தொடங்கினோம்.
சிறிது தூரம் சென்ற நிலையில், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகிலிருந்த ஒரு காளிகோயிலடிக்கு நாம் சென்றபோது குண்டுவீச்சு விமானம் ஒன்று எம்மை நோக்கி நேராகப் பதியத் தொடங்கியது. நடுங்கிப் போன நாங்கள் சைக்கிளை வீதியிலேயே போட்டுவிட்டு, அந்தக் கோயில் மதில் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றோம். வந்த விமானமும் அதிலிருந்து குண்டு கழற்றி விடப்படும் காட்சியும் கண்களில் தெளிவாகத் தெரிந்தன.
நல்லவேளை குண்டு எங்கள் பக்கமாக விழவில்லை. விமானம் அடுத்த சுற்று சுற்றத் தொடங்கியதும், எங்களைக் காப்பாற்ற நினைந்து, அருகிலிருந்த வீட்டிற்குள் ஓடிப்போனோம். அப்போது “பங்கர்” இல்லாத வீடு என்று எதுவும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்றதனால், இந்த வீட்டிற்குள்ளும் எப்படியும் “பங்கர்” இருக்கும் என்ற நம்பிக்கையில்த்தான் அந்த வீட்டிற்குள் நாம் நுழைந்தோம்.
விமானம் சுற்றிக் கொண்டிருந்ததால் அந்த வீட்டில் ஒருவரையும் காணவில்லை. பொதுவாக “பங்கர்களை” வீட்டின் பின்பகுதியில்த்தான் அமைப்பார்கள். அந்த நம்பிக்கையில் பின்னே சென்று பார்ப்போம் என நினைந்து அங்கு ஓடினோம். அங்கே ஒரு “பங்கர்” இருந்தது. அதற்குள் அந்த வீட்டுக்காரர்கள் பயத்தோடு உட்கார்ந்திருந்தார்கள். அருகில் கேட்ட குண்டுச் சத்தத்தால் அவர்கள் மிகவும் பயந்துபோய் இருந்தார்கள்.
ஓடிப்போன நாங்கள் அந்த “பங்கருக்குள்” நுழைய முயல அவர்களுக்குக் கடும்கோபம் வந்துவிட்டது. “நீங்கள் ஓடி வந்ததைப் பாத்துவிட்டு அவங்கள் இங்க குண்டைப் போடப் போறாங்கள். உங்களை இங்க ஆர் வரச்சொன்னது? உடன வெளியில போங்கோ” என்று கடுமையாக எங்களைத் திட்டித் துரத்தினார்கள்.
அச்சம், மனிதத்தன்மையைக் கூட இல்லாது செய்துவிட்டதைக் கண்டு நான் மனம் வருந்தினேன். அங்கும் இங்குமாய் ஓடி நாங்கள் தத்தளித்தோம். ஒரு மாதிரியாக விமானங்கள் திரும்பிச் சென்றன. அதன்பிறகு வீதியில் போட்டிருந்த எங்களது சைக்கிள்களை எடுத்துக் கொண்டு வட்டுக்கோட்டை நோக்கி ஓடத் தொடங்கினோம். அப்படி நாங்கள் திருநெல்வேலிச் சந்தைக்கு அருகில் சென்றபோது மூன்று, நான்கு பேர் உடல் சிதறி இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள்.
நாங்கள் நின்ற கோயிலடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்த இடத்திற்கும் இடையில் சில நூறு யார்கள் இடைவெளிதான் இருந்தது. எங்களைக் காப்பாற்றிய தெய்வம் அங்கு விழுந்து கிடந்தவர்களைக் கைவிட்டிருந்தது. இந்தச் சம்பவம் எனது மனதைப் பெரிய அளவில் பாதித்தது. அப் பாதிப்பால் சில நாட்களின் பின்னர் நான் மன அழுத்த நோய்க்கு (Depression) ஆளானேன். அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன்.