எறிகணை 46
கேள்வி :
எப்படிப் போகிறது உங்கள் நல்லூர்த் திருவிழா?
பதில் :
அதற்கென்ன குறை? ஓகோ என்று நடந்து கொண்டிருக்கிறது. சண்டைக்காலத்தில் ஊர்த்திருவிழாவாக இருந்தது. சண்டை முடிந்ததும் நாட்டுத் திருவிழாவாக மாறி, “யுடியூப்களின்” வருகையோடு இன்று அது உலகத் திருவிழாவாக மாறிவிட்டது.
எப்படித்தான் நல்லூர்த் திருவிழா மட்டும் இத்தனை பெரிய கூட்டத்தை ஈர்க்கிறதோ தெரியவில்லை. கட்டுப்பாடுகளை வெறுக்கும் நம் மக்கள்கூட, நல்லூர் நிர்வாகம் எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அக்கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு, கோயிலில் வந்து குவிந்து கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமே.
யாழ்ப்பாணத் தமிழ்மக்களின் தலைமைப் பெருமையாக இன்று நல்லூர்க் கோயில்தான் இடம் பிடித்திருக்கிறது என்றால் அதில் மிகையில்லை. கோயில் திருவிழாக்களின் போது புதிய எஜமானரால் முன்பைவிட, பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன.
நல்லூர் தேவஸ்தானம் எதைச் செய்தாலும், அந்தச் செயல் எல்லா ஆலயங்களினதும் அடையாளச் செயலாக மாறுவது யாழில் வழக்கம். வில்மண்டபம், தேர்முட்டி எனப் பலவற்றை இதற்கான உதாரணங்களாய்ச் சொல்லலாம்.
அந்த வகையில் அண்மைக் காலத்தில் நல்லூரால் பிரபலமாகியிருக்கும் கட்டியம் கூறும் புதிய முறை, இன்று நம் நாட்டைக் கடந்து வெளிநாடுகளிலும் பிரபல்யமாகி இருக்கிறது. இங்கு வந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே அதுபற்றிச் சொல்லி வியந்ததை மறக்கமுடியாது.
புதிய எஜமானரான சயந்தன் மாப்பாணமுதலியார் அவர்கள், தன் தந்தையார் குமாரதாஸ மாப்பாணமுதலியார் போலவே தன்னைப் பின்தள்ளிக் கொண்டு கோயிலை முன்னெடுத்துச் செல்கிறார். குலப்பெருமை என்பது இதுதான் போலும்.
முன்பு குமாரதாஸ மாப்பாணமுதலியார், சயந்தனைக் குழந்தைப் பருவத்திலிருந்து இப்பதவிக்காய்த் தயார்ப்படுத்தியதைப் பார்த்திருக்கிறேன். இப்போது சயந்தனும் தனது மகனை அதேபோலத் தயார் செய்து வருவதைக்காண மனம் மகிழ்கிறது.
இவர்களின் நடைமுறையைக் காண, பொது நிர்வாகத்தைவிட தனி நிர்வாகம்தான் சிறந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொது நிர்வாகத்தில் நன்மை வந்தால் அனைவரும் பொறுப்பேற்க முன் வருவார்கள். தீமை வந்தால் ஆளையாள் கைகாட்டி குற்றம் சாட்ட முனைவார்கள்.
தனி நிர்வாகத்தில் அப்படியில்லை. நன்மையோ, தீமையோ அவரவரே பொறுப்பேற்க வேண்டி வருவதால் நிர்வாகிகளிடம் அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இதை மற்றைய ஆலயங்களும் பின்பற்றுவது நல்லது என்றே தோன்றுகிறது.
ஒரு கோயிலைக்கட்டி சிறிய அளவில் அதன் திருவிழாவை 10 நாட்கள் நடத்த நான் படுகிறபாடு எனக்குத்தான் தெரியும். இத்தனை பெரிய கோயிலைக்கட்டி, இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து, ஒழுங்கு தவறாமல் ஒரு திருவிழாவை நடத்துவதென்பது நினைத்தும் பார்க்க முடியாத விடயம் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
எஜமானின் கட்டளைக்குத் தொண்டர்களும், அந்தணர்களும் மட்டுமல்ல, முருகனும் கட்டுப்பட்டு நடப்பதாய்த் தோன்றுகிறது. நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பற்றி அறிய நம் உயர் அதிகாரிகள் நல்லூர் நிர்வாகத்திடம் பாடம் கேட்கவேண்டும்.
தொண்டர்களுக்கான “யூனிபோம்”, திருவிழாவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய புதிய வாத்தியங்கள், சுவாமி வீதியுலாவின் போது நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், நாதஸ்வரத்தோடு போட்டி போடும் பிரசன்னாக் குருக்களின் குரலிசை, தீர்த்தக் கேணியில் அறிமுகப்படுத்தியிருக்கும் அஷ்டதிக்குப் பாலகர்கள், தீப்பந்த விளையாட்டு என திருவிழா “ஜேஜே“ என்று புதுமை பொங்க நடந்து கொண்டிருக்கிறது.
அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைகள் பக்தர்களைக் கவர்கின்றன. கிட்டத்தட்ட “கண்டி பெரஹரா”வோடு போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கிறது நல்லூர்த் திருவிழா.
கைச்சோறு சாப்பிட்டுப் பழகியவனுக்குக் கடைச்சோறு கசக்கும் என்பார்கள். என் நிலையும் அதுதான். குமாரதாஸ மாப்பாணமுதலியார் நடாத்திய அமைதியான நல்லூர்த் திருவிழாவையே பார்த்துப் பழகிய என்னை, இந்த பரபரப்பான திருவிழா கொஞ்சம் ஈர்க்க மறுக்கிறது. அஃது எனது குறைதானோ என்னவோ?
நல்லூரில், சாதாரண நாட்களில் வெளிவீதி சுற்றிவர முடியாத குறையைப் பலரும் பேசுகிறார்கள். அது எஜமான் காதுகளுக்குச் செல்கிறதோ அறியேன். சிலர் தங்கக் கோபுரத்தின் பாதுகாப்புக்காகத்தான் இந்தக் கட்டுப்பாடு என்கிறார்கள்.
அப்படியிருக்காதென்றே எனக்குத் தோன்றுகிறது. பக்தர்களை ஈர்க்கத்தான் தங்கக் கோபுரத்தைக் கட்டியிருப்பார்கள். தங்கக் கோபுரத்திற்காக ஒருநாளும் பக்தர்களைக் கட்டிப் போட நல்லூர் நிர்வாகம் நினைக்காதென்பது உறுதி.
வேறு சிலர், வரும் சில பக்தர்களின் ஒழுங்கீனத்தால்த்தான் இத்தகைய கட்டுப்பாடு என்கிறார்கள். அதுதான் காரணம் என்றால், அத்தகைய சிறிய அளவான குழப்படிக்காரர்களுக்காக பெரிய அளவான பக்தர்களை மனம் நோகச் செய்வது பொருத்தமாய்ப்படவில்லை.
எஜமான் மனமிரங்கி பக்தர்கள் முருகனை அன்றாடம் வலம் வந்து வழிபட ஆவன செய்யவேண்டுமென, இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் வழக்கப்படியே அவர்கள் இதுபற்றி முருகனிடமே ஒருதரம் கேட்டுப் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.
கேள்வி :
யாழ்ப்பாணத்தில் ஒரு கோயிலில் நடந்த திருவிழாவின்போது, போடப்பட்ட ஆடம்பரமான மின்விளக்குகளாலும், வாண வேடிக்கைகளாலும் பலருக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டு விட்டதாமே?
பதில் :
போர் முடிந்து இருந்த கட்டுப்பாடுகள் திடீரெனத் தளர்த்தப்பட்டதும், யாழ்மக்கள் சிலகாலமாய்ச் சமநிலை கெட்டுப்போய் நிற்கிறார்கள். கடும் அழுத்தத்திற்குப் பின்பு வரும் திடீர்ச் சுதந்திரம் இப்படித்தான் ஆகும் போல.
ஒருபக்கம் சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் வறுமை. இன்னொரு பக்கம் பன்னீரால் வாய் கொப்பளிக்க நினைக்கும் கொழுப்பு. ஒருபக்கம் திருமணம் செய்ய வசதியில்லாமல் எத்தனையோ பெண்கள் முதிர் கன்னிகளாய் ஆகிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் ஆளான பெண்ணை யானையில் ஏற்றி ஊர்வலம் நடத்துகிறார்கள்.
பாடுபட்டுச் சேர்த்த காசைக் கரியாக்குவதில் சிலருக்கு அப்படியொரு மகிழ்ச்சி. இவர்களின் இத்தகு செயல்களால், இப்பணம் இவர்களிடம் நேர்வழியில் வந்ததா? என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.
ஒருபக்கம் கோயில்வழக்குகள் “கோர்ட்டில்” குவிந்து கிடக்கின்றன. இன்னொரு பக்கம் ஆளில்லாக் கோயில்களுக்கு அளவுக்கதிகமாய்த் திருப்பணிகள் நடக்கின்றன.
இவைபோலத்தான் இந்தக் கோயில்த்திருவிழாக்களும். இறைபக்திக்கோ, சமூக நன்மைக்கோ, பண்பாட்டு வளர்ச்சிக்கோ எந்தப்பயனும் இல்லாமல், சிலர் தத்தம் பணச்செருக்கைக் காட்டத் திருவிழாக்களை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். கேட்டால் கூட்டம் வரச் செய்வதற்காகவே இந்த முயற்சிகள் என்கிறார்கள்.
நல்லூருக்கும், செல்வச்சந்நிதிக்கும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலுக்கும் இந்த ஆடம்பரங்கள் ஏதும் இல்லாமலே கூட்டம் வரத்தானே செய்கிறது. இதைச் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்?
யாழ்ப்பாண மக்களின் பார்வைக் குறைபாடு, இந்தத் திருவிழாவால் மட்டும் ஏற்பட்டதாய்த் தோன்றவில்லை. அது போர் முடிந்த கையோடேயே தொடங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்.
பக்தியால் பெருமைகாட்ட முடியாவிட்டால் பணத்தால்த்தான் பெருமை காட்ட வேண்டி வரும். நடந்தது அதன் விளைவுதான்.
கேள்வி :
நல்லூர் ஆதீனப் பிரச்சினை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?
பதில் :
அதற்கென்ன? பகையும், போட்டியும், சண்டையும், சச்சரவுமாக அது மங்களகரமாய்ப்(?) போயக்கொண்டிருக்கிறது. இருந்த ஆதீனத்தை ஏதும் தெரியாதவர் என்று இகழ்ந்தவர்களுக்கு இப்போதுதான் அவரது பெருமை தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
ஆதீனத்திற்குக் குருமுதல்வர் வேண்டும் என்ற பிரச்சினை பின்தள்ளப்பட்டு, அவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்குரியது எனும் பிரச்சினை இப்போது பெரிதாகி வருகிறது.
பற்றற்றவரைக் கண்டுபிடிக்க பற்றுள்ளவர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி :
“எல் நினோ” வரப்போகிறது, வரப்போகிறது என்று எல்லோரும் மிரட்டுகிறார்களே. அதென்ன பேயா? பூதமா? உங்களுக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?
பதில் :
படித்துத் தெரிந்த “எல் நினோ” பற்றிய சில செய்திகளை இங்கே சொல்கிறேன்.
கனடாவில் பெரும் பனிப்புயல்கள், இந்தியாவில் மழையின்றிப் பஞ்சம், அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி, பெருவில் மழையினால் வெள்ளப்பெருக்கு, கிழக்கு பசுபிக் நாடுகளில் சூறாவளி, ஆபிரிக்க நாடுகளில் பஞ்சம், பட்டினிச்சாவு என உலகின் பல பகுதிகளிலும் தோன்றியிருக்கும் காலநிலை பாதிப்புக்குக் காரணம் தெரியாமல் உலகம் திகைத்து நிற்கிறது.
இங்ஙனமாய் திடீரெனக் காலநிலையின் சமநிலையைச் சீர்குலைக்கும், இயற்கையின் ஒரு தோற்றப்பாடுதான் இந்த “எல் நினோ” என்கிறார்கள்.
கோடைகாலம், குளிர்காலம் போன்று “எல் நினோ”வும் ஒரு இயற்கைக் காலநிலை மாற்றமாம். ஆனால் மற்றைய சாதாரண காலநிலை மாற்றங்களைப் போன்று ஒரு சீரான கால இடைவெளியில் இது தோன்றுவதில்லையாம்.
“எல் நினோ”ஆனது 2 முதல் 7 வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும் என்கிறார்கள். அங்ஙனம் தோன்றும் “எல் நினோ” காலநிலையானது 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த “எல் நினோ” எப்போது தோன்றும், எப்படி தோன்றும் என்பது பற்றி இன்றுவரை எவராலும் சரியாகச் சொல்ல முடியவில்லையாம். உலகின் காலநிலை, வானிலை மாற்றங்களை மிகவும் துல்லியமாகக் கணிப்பிடக்கூடிய, நவீன செய்மதிகளால் கூட “எல் நினோ” வின் இயக்கத்தைக் கணிப்பிட முடியவில்லை என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.
“எல் நினோ” ஆனது எப்போது முதன் முதலில் தோன்றியது என்று யாருக்கும் தெரியாதாம். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
1567ம் ஆண்டு, தென் அமெரிக்க மீனவர்களினால் பதியப்பட்டு, அவர்களின் குறிப்பேடுகளில் இருந்துதான் “எல் நினோ” பற்றிய முதல் தகவல் பெறப்பட்டதாம்.
பெரு, ஈகுவடார் நாடுகளின் கரையோரத்தில், பசுபிக் சமுத்திர மேற்பரப்பு நீரோட்டத்தின் திடீர் வெப்பநிலை உயர்வும், அதைத் தொடர்ந்து வரும் காலநிலை சீர்கேடும் அநேகமாக கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் ஏற்படுவதால், அந்தக் காலநிலை மாற்றத்துக்கு “எல் நினோ” எனப் பெயரிடப்பட்டதாம்.
“எல் நினோ” என்ற ஸ்பானிய மொழிச் சொல்லின் அர்த்தம், கிறிஸ்துவின் குழந்தை என்பதாகும்.
“எல் நினோ”வுக்கும் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படும் வறட்சிக்கும் பெரும் தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள்.
கேள்வி :
நேபாளத்தில் நடந்திருக்கும் வெள்ளப்பெருக்கின் பயங்கரத்தைப் பார்த்தீர்களா?
பதில் :
உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை நான் பார்க்காமல் இருப்பேனா? நம் ஊரில் ஒன்றும்செய்ய ஆற்றலில்லாதவரை “அவர் ஒரு பச்சத்தண்ணி” என்று சொல்வார்கள். மேற்படி வெள்ளப்பெருக்கைப் பார்த்தபிறகு, இனி யாரும் அப்படிச் சொல்லத் துணியார்கள்.
ஆறோ, கடலோ இல்லாமல் தண்ணீர் வெள்ளமாய்ப் பாய்ந்த காட்சியை முதல்முதலில் கண்டேன். இரும்புப் பாலத்தையே உடைத்தெறிந்து செல்லும் அந்த வெள்ளத்தின் ஆற்றலைக் கண்டு நடு நடுங்கிப்போனேன்.
இமயத்தில் பனிக்கட்டிகளால் தேங்கி நின்ற நீர்த்தொகுதிகள் பூகம்பத்தால் அப்பனிக்கட்டிகள் உடைந்து போகப் பாய்ந்து வந்ததென்றும், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சதி என்றும் என்னென்னவோ சொல்கிறார்கள்.
பெரும் சேதங்கள் விளைந்த பிறகு, அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லத்தான் நம் விஞ்ஞானத்தாலும், விஞ்ஞானிகளாலும் முடிகிறது. அவர்களுக்கு, வந்த பின் காக்கத் தெரிகிறதே தவிர, வரும் முன் காக்கத் தெரியவில்லை. வந்தபின் காத்தால் என்ன? காக்காமல் விட்டால் என்ன?
தமிழ்நாட்டில் “யதார்த்த ஜோதிடர் ஷெல்வி” என்பவர் சில நாட்களின் முன்பாக நடக்கப்போகும் இந்தச் சம்பவம் பற்றி அப்படியே சொல்லியிருந்ததை “யூடியூப்பில்” இப்போது எல்லோரும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையே ஒரு விஞ்ஞானி சொல்லியிருந்தால், எல்லோரும் “ஆஹா பார்த்தீர்களா? அறிவியலின் ஆழத்தை” எனச் சொல்லி வியந்திருப்பார்கள். நமது பாரம்பரிய ஜோதிடக் கலைத்திறனால் சொன்னதால் இதனை இவர்கள் “காக்கா இருக்கப் பனம்பழம் விழுந்த கதை” என்பார்கள். நம் பெருமை நமக்கே தெரியவில்லை.
சென்ற முறை எறிகணையில் பூகம்பம் பற்றிய கேள்விக்கு நான் சொன்ன பதிலை இந்தச் சம்பவத்தோடு தொடர்படுத்தி நினைத்துப் பார்ப்பது நல்லது. எனக்கென்னவோ கலியுகத்தின் முடிவு நெருங்கி வருவதாய்த் தோன்றுகிறது. இன்னும் என்னென்ன பார்க்கப் போகிறோமோ யாரறிவார்?