எறிகணை 48

எறிகணை 48
எறிகணை 12 Sep 2026

கேள்வி :

சமூகம், சமயம், மொழி  ஆகிய விடயங்கள் பற்றிய பிரச்சினைகள் எழும்போது, அவற்றுக்கு அறிவு பூர்வமாக, நடுநிலைமையோடு, ஆதாரங்கள் தந்து விளக்கமளித்து வருகிறீர்கள். ஆனால் சிலபேர், உங்களை எதிர்ப்பதையே நோக்கமாகக்கொண்டு, அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவற்றைக் காணும் போது உங்கள் மனம் சோர்வடையாதா?

பதில்:

அத்தகைய வீணர்களின் கருத்துக்களால் நான் ஒருநாளும் சோர்வடைவதில்லை. அவர்களுக்குச் சமூகம் பற்றிய கவலை சிறிதுமில்லை. தம்மைப் பற்றிய கவலை தான் அதிகம்.

சரியோ, பிழையோ தாம் சொன்னது நடந்தால் போதும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். தாம் சொன்னது பிழை என்று உறுதியாகத் தெரிந்த பிறகும், ஆணவத்தால் தாம் சொன்னது சரிதான்! எனப்  பிடிவாதம் பிடிக்கும் அவர்களைக் காணும்போது திருவள்ளுவர் சொன்ன,

“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

   போஒம் அளவும்ஓர் நோய்”

என்ற குறள்தான் எனக்கு ஞாபகத்தில் வரும். இத்தகையவர்களைப் “புல்லறிவாளர்கள்” என்கிறார் வள்ளுவர்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவிடம் (AntonChekhov) “தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் கீழ்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்.

“தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக, ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். எந்தச் சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும்தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப் படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்தச் சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்.

அத்தகைய சமூகத்தில் சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.

அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்”.

இதுதான் மேற்சொன்ன அக்கேள்விக்கு ரஷ்ய எழுத்தாளர் அளித்த பதிலாகும். அப்பதிலினைப் படித்தால்,  எனது தெளிவின் காரணம் உங்களுக்குப் புரியும் இவற்றையெல்லாம் படித்தபடியால்த்தான், என்னால் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.

 

கேள்வி :

நல்லூர்த் திருவிழாவிற்கு வந்தீர்களாமே? அங்கு, பிரசன்னாக் குருக்களின் பாடல்களைக் கேட்டீர்களா? அது பற்றி உங்களது அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன்.

பதில்:

சுருங்கச் சொல்வதானால், அவரது பாடல்கள் “அளவுக்கு மிஞ்சி விட்ட அமிர்தமாய்” இருந்தன.

 

கேள்வி :

ஈழத்தில் நம்மவர் பலர் குறும்படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை நீங்கள் பார்ப்பதுண்டா?

பதில்:

யாராவது அப்படங்கள் பற்றிக் குறிப்பாக எடுத்துச் சொன்னால் மட்டும் பார்ப்பதுண்டு. அண்மையில் அவுஸ்ரேலியாவிலிருந்து நல்லூர்த் திருவிழாவிற்காக வருகை தந்திருந்த டாக்டர் சிதம்பரக்குமார் அவர்கள் யாழ், பயணத்தின் போது ஒரு குறும்படத்தை, தனது செல்போனில் பார்க்க வைத்தார்.

முன்பு ஒருதரம் யாழ்ப்பாணத்திலிருந்த குழந்தை சண்முகலிங்கம் போன்ற நாடகத்துறை விற்பன்னர்கள் சிலர் சேர்ந்து, “பொன்மணி” என்ற ஓர் படத்தினைத் தயாரித்து வெளியிட்டார்கள். அப்படத்தில் மறைந்த பேராசிரியர் கைலாசபதி அவர்களின் துணைவியாரும் நடித்திருந்தார்.

அக்காலத்தில் நாடகத்துறை சார்ந்த நம்மவர்கள், நடிகர் சிவாஜிகணேசனுக்கே நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள். அத்தகையவர்கள் எடுக்கும் படம் எப்படியும் சிறப்பாகத்தான்  இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு, அந்தப் படத்தினைப் பார்க்கச் சென்றேன்.

அந்தக் கன்றாவியை ஏன் கேட்கிறீர்கள்? ஒருவர் வந்து சேட்டைக் கழற்றி உடுப்பு ராக்கில் மாட்ட ஐந்து நிமிடம் எடுத்தது. அதை வைத்து அந்தப்படம் எப்படி இருந்திருக்கும் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

இந்தப்படமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தபடி, அந்த டாக்டரின் முகத்திற்காக, அப்படத்தைப் பார்க்கத்தொடங்கினேன். உண்மையில் அப்படம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டது. படத்தின் பெயர் “பசுவும் பரமேஸ்வரியும்” முப்பது நிமிட அளவிலான குறும்படம் அது.

ஒரு சிறு பெண்பிள்ளை தன் வீட்டில் பிறந்த பசுக்கன்றிற்குத் “திரிஷா” என பெயரிட்டு அதனைச் செல்லமாக வளர்க்கத் தொடங்குகிறாள்.  காலம் கழிகிறது. தந்தை இறந்து விட, தாயும் மகளும் அந்த பசுமாடுமாக அவர்களது வாழ்க்கை நகர்கிறது.

திருமண வயதைத்தாண்டியும் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடைபெறாமல் இருக்க அவளுக்கான ஒரு சம்பந்தம் வருகிறது. சுவிஸ் செல்ல இருக்கும் ஓட்டோக்காரனான அந்த மாப்பிள்ளையின் வீட்டார் மாப்பிள்ளையின் கடனை அடைப்பதற்காக, அந்த, “திரிஷாவை” விற்றுப் பணம் தருமாறு கேட்கின்றனர்.

அப்பெண்ணின் குடும்பத்தாரின் மேல், திரிஷாவை விற்பதற்கான அழுத்தம் பலராலும் தரப்படுகிறது. தனக்குத் திருமணமாகாவிட்டாலும் பரவாயில்லை திரிஷாவை விற்க மாட்டேன் என, பிடிவாதம் பிடிக்கும் அப்பெண், கதையின் முடிவில் தனக்குப் பார்த்த மாப்பிள்ளையை நிராகரித்துவிட்டு, அந்த மாட்டினை பராமரித்து வந்த ஒற்றைக் காலில்லாத இளைஞனை, கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். இது தான் அப்படத்தின் கதைச்சுருக்கம்.

ஒரு மாடு, ஒரு இளம்பெண், அவளது தாய், அவளின் காது கேளாத அப்பாச்சி, மாட்டைப் பராமரிக்கும் காலில்லாத இளைஞன், சுவிஸ் செல்லப்போகும் ஓட்டோக்கார மாப்பிள்ளை , அவனது தாய், ஒரு மாட்டுப் புறோக்கர், பெண்ணின் மாமன் என மொத்தம் ஒன்பது பாத்திரங்கள் மட்டுமே கதையில் நடமாடுகின்றன.

அப்பெண் சிறு குழந்தையாய் தந்தையுடன் உரையாடும் முதல் காட்சியிலேயே திரிஷாவும் அதன் மீதான அவளது அன்பும் பதிவாக்கப்படுகிறது. அடுத்த காட்சியில் தாய்மாமனும் மாட்டு புறோக்கரும் திருமணத்திற்காக மாட்டை விற்க வலியுறுத்துவதும் அப்பெண் அதையேற்க மறுப்பதும் மாட்டைப் பராமரிக்கும் இளைஞன் அவளுக்காக வாதிடுவதும் பெண்ணின் தாய் குழப்பமுறுவதும் பதிவாக்கப்படுகிறது.

இவர்கள் வாதங்களுக்கு மத்தியில் எதுவும் காதில் விழாமல், எந்த பாவமும் இல்லாத முகத்தோடும், தோள் வரையும் தொங்கும் காதுகளில் பெரிய தோட்டோடும், அப்பாச்சிக்கிழவி பாக்கு இடித்தபடி உட்கார்ந்திருக்கிறாள்.

பாத்திரங்களுக்கு இடையில் நடைபெறும் விவாதத்தில், அப்பாச்சிக்கிழவியின் தோட்டின் பெறுமதியும், அதைத் தான் சாகும் வரைக்கும் எவருக்கும் தரமாட்டேன் எனும் அவளது பிடிவாதச் செய்தியும் பதிவாக்கப்படுகின்றன.

இதேகாட்சியில் ஒரு “ப்ளாஷ்பாக்” மூலம், மாட்டை விற்கும்படி நிபந்தனை விதிக்கும் மாப்பிள்ளையின் தாயாரின் சுயநல இயல்பு வெளிப்படுத்தப்படுகிறது.

தொடரும் காட்சியில், அப்பெண்ணை வீதியில் மறிக்கும் ஓட்டோக்கார மாப்பிள்ளை சுவிஸ் ஆசைகாட்டி மாட்டை விற்கும்படி தூண்டுகிறான். அவனது ஆழமற்ற தன்மை அக்காட்சியில் வெளிப்படுத்தப்படுகிறது.

நிறைவாகத் தன்னைத் திருமணம் செய்ய நினைக்கும் அப்பெண்ணின் கருத்தை ஏற்க மறுக்கும் காலில்லாத அந்த இளைஞனுடனான உரையாடல் காட்சியும், அப்பெண் அந்த இளைஞனைத் திருமணம் செய்து தாயுடன் விடைபெற்றுச் செல்லும் காட்சியுமாக அப்படம் முடிவடைகிறது.

மிக நேர்த்தியாக, கதையை நகர்த்திச் செல்லும் பாங்கும், கதைத்தொடர்ச்சி பார்ப்பவர்களுக்குப் புரியும்படி வெட்டி, ஒட்டி முழுமை காட்டியிருக்கும் “எடிற்றிங்கும்”, பாத்திரங்களின் உரையாடல்களின் மூலமாகவே, அவற்றின் இயல்பை வெளிப்படுத்தும் உத்தியும் “நறுக்கென” நெஞ்சில் தைக்கும் வசனங்களும், சந்தர்ப்பங்களுக்கேற்ப உணர்ச்சிகளைப் பதிவாக்கும் இசையமைப்பும், நெஞ்சில் ஆழப்பதியும் வசனங்களும் ஒன்று சேர்ந்து, அரைமணி நேரத்திற்குள் எம்மை, படத்தோடு ஒட்டவைத்து விடுகின்றன.

படத்தில் வரும் அப்பாச்சிப்பாத்திரம் அருமையிலும் அருமை! கொந்தளிப்பாகக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறும் தர்க்கங்களின் பாதிப்புச் சிறிதும் வெளிப்படாமல், “சிதப்பிரக்ஞையாய்” பாக்கு இடித்துக் கொண்டிருக்கும் அப்பாத்திரத்தின் நடிப்பு உச்சம்!

படத்தின் நிறைவில் திருமணமாகிச் செல்லும் மணமக்களிடம், தனது தோடுகளைக் கொண்டு வந்து கொடுத்து அப்பாவியாய்ச் சிரிக்கும் அப்பாச்சிக்கிழவி நம்மை அழ வைக்கிறாள்.

“கிழவி செத்தாத்தான் பிரியோசனம். “மாட்டை வித்தாத்தான் பிரியோசனம்” போன்ற வசனங்கள் ஆணி அடித்தாற் போல் நெஞ்சில் பதிகின்றன.

ஒரு மாட்டை வைத்து எடுக்கப்பட்ட சிறிய கதைக்கு இயக்குனர் தனது ஆற்றலால், பூச்சூடி பொட்டு வைத்து நகை சார்த்தி அழகுபடுத்தி, நம் நெஞ்சில் ஆழப்பதிவாகிறார்.

பாராட்டத்தக்கச் சிறந்த முயற்சி. போதிய வசதிகள் கிடைத்தால் ஈழத்துத் தமிழ்ச்சினிமாத் துறையை தமிழ்நாட்டின் சினிமாத் துறையோடு இந்த இயக்குனர் சமப்படுத்துவார் போல் தோன்றுகிறது.

அந்தத் திரிஷாவைப் போலவே, இந்தத் திரிஷாவும் அப்பாவியாய் முகம் காட்டி நம்மை ஆட்கொள்கிறாள். பாராட்டுக்கள்.

 

கேள்வி :

என்னாயிற்று உங்கள் கடிதப் பிரச்சினை? அகில இலங்கைச் சைவர்களுக்கான தலைவர் கிடைத்தாரா இல்லையா?

பதில்:

சைவர்களுக்கு எப்போதோ தலைவர் கிடைத்துவிட்டார். சிவபெருமான் தான் அவர். வேலையில்லாத சிலர் சைவத்திற்கு புதுத் தலைவரைத் தேட முயல்கிறார்கள். திடீர் திடீரெனத் தோன்றும் இத்தகைய சைவக்காவலர்களால்த்தான் சைவம் இடர்ப்படும்போல்த் தெரிகிறது.

சைவ உலகைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, சிலர் செய்த முயற்சிதான் இது. தமது ஆதரவாளர்களென அவர்களால் பெயரிடப்பட்ட அமைப்புக்களிடமிருந்தே “இந்த முயற்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை” என அறிக்கைகள் வரத்தொடங்கிவிட்டன.

சைவம் தன்னைத் தானாக வளர்த்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.