எறிகணை 49
#கேள்வி :
பட்டிமண்டபநடுவர், மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் பற்றிய உங்களது எண்ணங்களைப் பதிவு செய்யலாமே
#பதில்:
பட்டிமண்டப நடுவர், தமிழறிஞர் போன்ற தகுதிகளெல்லாம் அவருக்குச் சூட்டப்பட்ட மகுடங்கள் தான். பொதுவாகவே மனிதர்கள் ஒருவரை அவரது பட்டம், பதவி ஆகியவற்றைக் கொண்டுதான் மதிப்பிடப் பார்க்கிறார்கள். பட்டங்கள் பதவிகளெல்லாம் ஒருவருக்குச் சூட்டப்படும் அணிகலன்கள் மட்டும் தான்.
அணிந்து கொள்ளும் அணிகலன்களால் ஒருவருக்கு மதிப்பு வருவதில்லை. அணிந்து கொள்பவரால்த்தான் அணிகளுக்கு மதிப்பு வரவேண்டும். இதுதான் எனது அபிப்பிராயம். பட்டங்கள், பதவிகளை எல்லாம் அகற்றிவிட்டு, தனித்து நிற்கும் ஒரு மனிதரின் பண்பாட்டு உயர்வே அவரது உண்மை உயர்வாம்.
இராமனைக் கண்டதும் சுக்கிரீவன், இவன் சிவனோ? பிரம்மனோ? வேறு தெய்வங்களுள் ஒருவனோ? என்று ஐயுற்று, பின்னர் தெய்வங்களாகிய அவர்களைவிட, இராமனின் மானுடம் உயர்ந்து நிற்பதாய் நினைகின்றான். (“வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா”)
பாப்பையா ஐயாவை நான் அப்படித்தான் முதலில் கணிக்க விரும்புகிறேன். ஆழ்ந்த தமிழ்ப்புலமை, வியக்கத்தக்க சொல்வன்மை, கல்வியால் ஆணவப்படாத பணிவு, மற்றவர்களின் உயர்வு நோக்கி மகிழும்மனம், எல்லோரும் நல்லபடி வாழவாழ்த்தும் தூயசிந்தை, மதங்கடந்து இறைவனைப்பற்றும் மனப்பக்குவம், புகழ்ப் போதையில் மயங்காத எளிமை என அவரிடம் இருந்த நற்பண்புகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
எப்போதும் அவரது உதடுகளில் சிரிப்பும் இன்சொல்லும் ஒட்டிக்கொண்டிருக்கும். அவர், ஒருவரின் மனம் நோகப்பேசியதை நான் கேட்டதேயில்லை. எங்களது கொழும்புக்கம்பன் விழாவில் அவருக்கு நாங்கள் “கம்பன்புகழ் விருது” வழங்கிக் கௌரவித்தோம்.
அந்நிகழ்வின் போது அவரை, சிம்மாசனத்தில் அமர வைத்து எங்கள் கழக உறுப்பினர்களெல்லாம் அவரது பாதங்களில் விழுந்து வணங்கிய பொழுது, “மீனாட்சி மீனாட்சி” என வாய்விட்டு உரைத்து, கண்களில் கண்ணீர் வழிய அவர் இருந்த காட்சியும், அவர் அழுவதைக் கண்டு சபையின் முன்வரிசையிலிருந்த ராஜா அவர்களும், பாரதி பாஸ்கர் அவர்களும் விம்மி விம்மி அழுத காட்சியும், இப்போது நினைத்தாலும் என் நெஞ்சை நெகிழச் செய்யும் மானுடத்தின் எல்லை தொட்ட அவரது வாழ்வின் வெற்றியை எவராலும் மறுக்கமுடியாது என்பது நிஜம்.
இனி, தமிழறிஞரான சாலமன் பாப்பையா பற்றி, சில சொல்கிறேன். முன்பு எங்கள் கோவில்களில் காத்தவராயன்கூத்து விடியவிடிய நடைபெறும். அதில் காத்தவராயனாக நாடகத்தின் முதல் பகுதியில் ஒருவரும், இரண்டாம் பகுதியில் ஒருவரும் நடிப்பார்கள். நாடகம் முடியும்போது, அதை ரசித்துப் பார்த்த மக்களில் சிலர், முற்கூத்துக் காத்தவராயனின் நடிப்புத்தான் திறம் என்றும், பிற்கூத்துக் காத்தவராயனின் நடிப்புத்தான் திறம் என்றும் சொல்லிக் கொண்டு செல்வார்கள்.
நம்முடைய பாப்பையா ஐயா அவர்களுடைய மேடைப்பயணத்திலும் முற்கூத்து, பிற்கூத்து என இரண்டு பிரிவுகள் இருந்தன. எழுபது எண்பதுகளில் நிகழ்ந்த அவரது முற்கூத்து மேடைப்பேச்சின் ரசிகன் நான். பட்டிமண்டபங்களில் எனது குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டு பேர் என் உள்ளத்தைத் தம்தமிழால் கவர்ந்தார்கள்.
ஒருவர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் இரா. காந்திமதி அம்மையார் அவர்கள். அவருடைய பேச்சுத்தொனியும் தமிழ்ப்புலமையும் தர்க்கநுட்பமும் கண்டு நான் வியந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென, இனி மேடையில் பேசுவதில்லை என முடிவுசெய்து, பேச்சை நிறுத்திவிட்டு ஒரு ஞானி போல் இன்று அவர் வாழ்ந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் பாப்பையா ஐயா அவர்களின் பட்டிமண்டபங்களில் அவர்தான் ஒரு அணிக்குத் தலைமை தாங்கி வந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக என் உள்ளத்தைத் தனது பேச்சால் பெரிதும் ஈர்த்தவர் பாப்பையா ஐயா தான். அந்தக் காலத்தில் அவரது மேடைப்பேச்சுப் பாணியே வேறாக இருந்தது. தழுதழுத்த குரலில் அவர் சிங்கம் போல் கர்ச்சித்தால் மேடை அதிரும். எதிரணிகளின் கருத்துக்களைத் தனது உறுதியான வாதங்களால் ஊதித்தள்ளுவார். பட்டிமண்டபப் பேச்சில் இவ்விருவரையும் அடிக்க ஆளில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த மேடைகள் தான் பாப்பையா ஐயாவின் முற்கூத்து மேடைகள்.
ஐயாவின் பிற்கூத்து, தொலைக்காட்சிகளின் வருகையோடு நிகழ்ந்தது. தமிழை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில், தனது முன்னைய பாணியை முற்றாக மாற்றி ஒரு புதிய பாணியைக் கையாளத் தொடங்கினார் ஐயா.
தமிழை எளிமைப்படுத்த நினைந்து, அவர் தொடங்கிய அந்த பிற்கூத்துப் பாணியில் எனக்கு கொஞ்சமும் ஈர்ப்பு ஏற்படவில்லை. அவரது அந்தப் பாணியால் தமிழ் எளிமைப்பட்டதைவிட மலினப்பட்டதென்பதே உண்மை.
மக்களை ஈர்ப்பதற்காக அவர் மேடைகளில் விகடத் தனமான ஒரு நாடகபாணியைப் பின்பற்றியும், வெற்றுச்சொற்களை அள்ளி இறைத்தும், தன்னைத்தான் தாழ்த்திக் கொண்ட பொழுது நான் மிகவும் வேதனைப்பட்டேன். சிகரத்தில் நின்ற ஒருவர் பாதாளத்தில் வீழ்வதைக் கண்டால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா என்ன?
அவர் தன்னிலை விட்டுக் கொஞ்சம் இறங்க, அந்தப்பாணி பாமரமக்களுக்கு நிரம்பப் பிடித்து போயிற்று. மக்கள் ஆதரவு பெருகுவதைக்கண்டு, செயற்கையாய் அவர் உருவாக்கிய அப்பாணியையே தனது இயற்கையாய் அவர் ஆக்கிக்கொண்டார். அதிலிருந்து பட்டிமண்டபங்களின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.
அவர் பாதையில் நடக்கிறேன் என்று பயணம் தொடங்கிய லியோனி, தமிழின் தரத்தை இன்னும் அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றார். அந்தப் பழியும் ஐயாவையே வந்து சார்ந்தது. ஆனால் ஒன்று ஐயாவின் அந்தப்பாணி பிடித்துப்போக, தொலைக்காட்சிகளும் பின்னர் வந்த பேச்சாளர்களும் ஐயாவின் அந்தப் பாணியையே பட்டிமண்டபப் பாணியாய் ஆக்கி, தமிழை இழிவு செய்யத் தொடங்கினார்கள்.
பின்னாளில் ஐயா இந்தப்பாணியால் பிரபலமாகி, சினிமாக்களில் வேறு நடிக்கத் தொடங்கினார். அவ்வளவு உயர்ந்த அறிஞர், சாதாரண நகைச்சுவை பாத்திரங்களில் சினிமாக்களுக்குள் வந்த பொழுது அவரது பழைய ரசிகர்கள் பெரிதும் வருந்திப் போனார்கள்.
அந்த வகையில் பாப்பையா ஐயாவின் தமிழ் வாழ்வு வெற்றி பெற்றதாய் நான் சொல்ல மாட்டேன். ஆனாலும் ராஜா, பாரதிபாஸ்கர் போன்ற சொல்வன்மைமிக்க இரண்டு பேச்சாளர்களைத் தனது சீடர்களாய் அவர் இனங்காட்டிச் சென்றிருக்கிறார். அவரது மறைவின் போது அவ்விருவரும் வடித்த கண்ணீர், பார்த்தோர் நெஞ்சத்தையெல்லாம் பதற வைத்தது.
வருங்காலத்தில் ஐயாவின் இடத்தை நிரப்பப்போகும் இவர்கள், பட்டிமண்டபங்களின் தரத்தை மீண்டும் தமது அறிவார்த்தமான பேச்சுக்களால் நிமிரச் செய்தும், ஐயாவின் பழைய முற்கூத்துப் பாணியை மீண்டும் மேடைப் பாணியாக ஆக்கச் செய்தும், ஐயாவின் உண்மைப் பெருமையை பழையபடி மீட்டெடுப்பார்கள் என நம்பி நிற்கின்றேன். “சாதனை செய்க பராசக்தி”
#கேள்வி :
மஹிந்தவின் பொதுக்கூட்டத்தில் அர்ச்சுனாவின் பேச்சினைக் கேட்டீர்களா?
#பதில்:
எப்போதும், ஏமாற்றுகிறவர்கள் மேல் எனக்கு கோபம் வருவதில்லை. ஏமாறுகிறவர்கள் மேற்தான் எனக்குக் கோபம் வரும். அர்ச்சுனா முன்பு இருந்தபடிதான் இப்போதும் இருக்கிறார். நம் மக்கள்தான் காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரென வந்த அர்ச்சுனாவை, எந்தவித ஆராய்வும் இல்லாமல் எப்படியெல்லாமோ நம்மவர்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டாடினார்கள். இன்று அர்ச்சுனாவின் செயலுக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாற் போல, அவர்களே அவரைத் தூற்றியும் திரிகிறார்கள். அதனைக் கண்டு நான் ஆச்சரியம் உறுகிறேன்.
ஓரளவாவது நம் இனத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர்களையெல்லாம், வஞ்சகர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பட்டம் சூட்டி, தமது “கொமன்ஸ்” மூலம் சிலுவையில் அறைந்து வரும் இத்தகையவர்கள், அர்ச்சுனா காட்டும் ஆட்டத்திற்கு எதிராட்டம் ஆடத்தெரியாமல் மௌனித்திருப்பதைக் காணச் சிரிப்புத்தான் வருகிறது.
அர்ச்சுனாவின் அழகில் மயங்கி, அவரைக் “ஹீரோவாக்கி”, புகழ்மாலையும், பொருள் மாலையும் சூட்டிய நமது புலம்பெயர் “அன்ரிமார்களை” முதலில் கழுவேற்ற வேண்டும். எங்கோ இருந்தபடி இங்குள்ளவர்களுக்குச் “சூனியம்” வைத்த அந்தச் சூர்ப்பணகைகள் இப்போதாவது அர்ச்சுனா மீதான மயக்கத்தில் இருந்து வெளிவந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
அர்ச்சுனாவை நம்பி, அவருக்காக மற்றவர்களைத் திட்டிவந்த “தமிழ்அடியான்” போன்றவர்களெல்லாம் இப்போது அர்ச்சுனாவின் செயல்களால் பாதிக்கப்பட்டு, தமது “கற்பினை” தமிழ்மக்களுக்கு முன் நிரூபிப்பதற்காக, வார்த்தைத் தீமூட்டி தீக்குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ச்சுனா புத்திசாலிதான் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. அவருக்கு இருக்கும் அரசியல் புத்திசாலித்தனத்தின் நூறில் ஒரு பங்குகூட, நமது மக்குத் தமிழ்த் தலைவர்களுக்கு இல்லை என்பது உறுதியிலும் உறுதி.
அர்ச்சுனா, இனியும் தமிழ்மக்களை ஏமாற்றித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு, மொட்டுக்கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம், அவர்களின் அன்பைப்பெற்று, வரும் தேர்தலில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தேசியப்பட்டியல் இருக்கைகளில் ஒன்றைப் பெற்றுக் கொள்ளத் தெளிவாக அத்திவாரமிடத் தொடங்கிவிட்டார்.
யார் கண்டது? அக்கட்சி எதிர்காலத்தில் அரசமைக்கும் பட்சத்தில், எம்.பி அர்ச்சுனா அமைச்சர் அர்ச்சுனாவாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாட்டியை ஏமாற்றிக் களவெடுத்த வடையை, இன்ன மரக்கொப்பில் இருந்துதான் தின்ன வேண்டுமென, காகம் நினைக்கப் போகிறதா என்ன? எந்தக் கொப்பில் இருந்தேனும் வடையைத் தின்னக் கிடைத்தால் போதும் என்று தானே அது நினைக்கும். அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
#கேள்வி :
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றும் (வாசிக்கும்) ஆளுங்கட்சி அமைச்சர்களதும், உறுப்பினர்களதும் தமிழ்ப் புலமைகளைப் பார்த்தீர்களா?
#பதில்:
அவர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். கடுமையான சொற்களைத் தவறாக உச்சரித்தால் மன்னித்து விட்டுப்போகலாம். அன்றாடம் பயிலப்படும் சொற்களைக்கூட, அவர்கள் பிழை, பிழையாய் உச்சரிப்பதைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
முதலாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன்கூட, இவர்களை விட அழகாக எழுதி வைத்திருப்பதைப் படித்துவிடுவான். இவர்கள் சபையைக் கண்டு பயப்பிடுகிறார்களா? தமிழைக் கண்டு பயப்பிடுகிறார்களா? என்று தெரியவில்லை.
தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு தமிழ் தெரியாமல் நிற்கும் இவர்களைக் காண வெறுப்புத்தான் தோன்றுகிறது. இந்த இலட்சணத்தில் ஒரு அமைச்சர், நான் இப்படித்தான் பேசுவேன் என்று சவால் வேறு விடுகிறார். ஒரு காலத்தில் மொழி நுட்பம் தெரிந்த தலைவர்கள் அதை மட்டும் வைத்து நாட்டைக் கெடுத்தார்கள். வருங்காலத்தில் மொழியே தெரியாத தலைவர்களால் நாடு குட்டிச்சுவராகிப் போகும் போல்த் தெரிகிறது.
மொழி தெரியாததைக்கூட விட்டுத்தள்ளுங்கள். கணிதத்தில் கூடவா இத்தனை பலயீனம்? நூறுக்குப் பிறகு ஆயிரத்தையும், ஆயிரத்திற்குப் பிறகு லட்சத்தையும் வரிசைப்படுத்தி அவர்கள் மாறி மாறி எண்களை உச்சரிப்பது கண்டு உலகம் சிரிக்கிறது. இவர்களால் “யுரியூப்பர்களுக்கு” வேறு நகைச்சுவை தேடும் வேலை இல்லாமல் போயிற்று,
இன்றைய நிலையில் இவர்களது உரைகளால் சட்டமன்ற நிகழ்ச்சிகள் மக்களை ஈர்க்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளாக மாறியிருக்கின்றன. ஒருதரம், இரண்டுதரம் நடந்தால் பரவாயில்லை. இந்த அநியாயம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
#கேள்வி :
இராவணனை நீங்கள் வெறுப்பதற்குக் காரணம் என்ன?
#பதில்:
அதுபற்றி முன்பும் நான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கேட்பதால் சற்று விரிவாக அதனைச் சொல்ல முனைகிறேன்.
இராவணனைத் திறமை இல்லாதவன் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. தலைமைத்துவமும் அவனிடம் இருக்கத்தான் செய்தது. தன்னுடைய தனி ஆற்றலை வைத்துத்தான் அவன் தனது அரச சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான்.
அவன் பெற்ற முழு வெற்றிக்கும் அவனே மூலகாரணன் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. அவனால், கூட இருந்தவர்கள் அனைவரும் பலன் அடைந்தார்கள். அதுநாள்வரை மற்றவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த தேவர்களை, தன் தனி ஆற்றலால் அடக்கி ஆட்டிப்படைத்தவன் அவன். தாம் வைத்ததே சட்டம் என்றிருந்த தேவர்களைப் படியிறங்கச் செய்தவன் அவன்.
அத்தகையவன் அடக்கமுடியாத தனது காமத்தால், தானும் வீழ்ந்து, தன்னை நம்பியவர்களையும் வீழச்செய்ய வழிவகுத்ததுதான் கொடுமை. காதல் செய்யவேண்டிய வயதில் வளர்ந்த மகன் இருக்கத்தக்கதாக, தனது காதலுக்கும், காமத்திற்குமாக அலைந்து திரிந்ததுதான் அவன் செய்த பெரும் குற்றம்.
இல்லத்தில் இருந்த தனது சொந்த மனைவியின் மனம் வருந்தும் என்பது பற்றிக்கூடச் சிந்திக்காமல், பிறபெண் ஒருத்தியைத் தன் இடத்திற்கே கொண்டு வந்து வைத்து அவன் ஆடிய கூத்து அசிங்கமானது.
தலைவனாக இருக்கும் தனது இந்தக் கேவலமான செயலைக் கண்டு உலகம் பழிக்கும் என்ற நாணம்கூட இல்லாமல், அவள் முன்னே விழுந்து, பணிந்து. இரந்து நின்ற அவனது செயல் நாகரீக எல்லையைக் கடந்தது.
“நீ செய்வது பிழை” என்று உரைத்தவர்களை அவன் வெறுத்து ஒதுக்கினான். அவனை ஏதும் செய்ய முடியாமல் அவன் மனைவி தனித்து வருந்திக் கிடந்தாள். தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற அவனது பிள்ளை, உலகத்திற்குத் தன் தந்தையை விட்டுக்கொடுக்காமல் பேசியதைக் கேட்ட பின்பும்கூட, அவனுக்காகத் தான் வாழவேண்டும் எனும் எண்ணம் இவனுக்குக் கடைசிவரை வரவேயில்லை.
தன் பிழைக்குத் துணை போய் வால் முறுக்கி ஆதரவளித்தவர்களை அருகில் வைத்துக்கொண்டான். அவன் தானாகத் திருந்த நினைத்தபோதும், அவனை அங்ஙனம் நினைக்கவிடாமல் தூண்டி நின்றவனே அவனது அமைச்சனாய் இருந்தான்.
இப்படியாய் பிழையான வேலைகள் செய்து, வாராது வந்த மாமணியாகிய தனது அரசாட்சியை, அவன் இறுதியில் இழந்தே போனான்.
இவன் தன் சுயநலத்திற்காக, இத்தனை பிழைகளைச் செய்தபோதும், அவனைச் சூழ இருந்த யாரும் அவனை வெறுக்காமல். கடைசிவரை அவனுக்கு ஆதரவாய் நின்றது ஒரு ஆச்சரியம்.
அவனை நான் வெறுக்க இவையெல்லாம் தான் காரணங்களாயின. நான் இலங்கையை ஆண்ட இராவணனைப் பற்றித்தான் இதுவரை சொல்லி வந்தேன். நீங்கள் என்னை ஏதோ சந்தேகமாய்ப் பார்ப்பது போலத் தெரிகிறது. நான் எழுதியவற்றிற்கு நீங்கள் வேறு வேறு வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியாகமாட்டேன் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.
#கேள்வி :
“தமில்” பூசைகளைத்தான் நம் “தமில்” கடவுள்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதுகிறேன் நான். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
#பதில்:
அதுபற்றி எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. அதைச் செய்வதற்கு முன்பாக தமிழை, தமிழ் என்று சொல்லப் பழகுங்கள். நீங்கள் சொல்லும் “தமிலில்” பூசை செய்தால் நிச்சயம் இறைவன் அதனை ஏற்கமாட்டான் என்பது மட்டும் உறுதி.