எல்லாரும் உருகுகிற பாக்கள் தம்மை இறையருளால் கல்லதனில் பதித்து வென்றான் -கம்பவாரிதி இ.ஜெயராஜ்

எல்லாரும் உருகுகிற பாக்கள் தம்மை  இறையருளால் கல்லதனில் பதித்து வென்றான்  -கம்பவாரிதி இ.ஜெயராஜ்

லகமதை உய்விக்க உதித்த நல்ல
          ஒப்பற்ற வாசகனார் அருளிச்செய்த
விலையதிலா வாசகமாம் அரிய நல்ல
          விண்ணவரின் அமிழ்தமதை வெல்லும் தேனை
தலமதனில் இதுவரையில் எவரும் எண்ணா
          தனித்த பெரும் அரண்மனையை அமைத்து நன்றாய்
பலர் புகழக் கல்லதனில் பதித்தே வென்றான்
          பார் புகழும் திருமுருகப் பெரியோன் வாழி!

உளம் உருக உணர்வுருக உயிரும் சேர்ந்து
          உருகுகிற பேரின்பப் பனுவல் தந்த
நலம் மிகுந்த வாசகனார் சைவம் தன்னில்
          ஞானத்தின் குறியீடாய் நாளும் நிற்பார்
நிலம் முழுதும் ஆளுகிற ஐயன் தன்னின்
          நிகரதிலா வாசகத்தைப் போற்றி நல்ல
பலம் மிகுந்த அரண்மனையை அமைத்த எங்கள்
          பார்புகழும் திருமுருகப் பெரியோன் வாழி!

ஒப்பற்ற வாசகத்தின் ஒரு சொல்தன்னை
          ஓர்ந்துள்ளம் பதித்திட்டால் பிறவி மாயும்
எப்பற்றும் அறுந்தின்பக் கடலில் மூழ்கி
          இறை அடியைக் காணுகிற பேறு நல்கும்
தப்பற்ற வழியதனில் நம்மை ஈர்த்து
          தனித்திறைவன் பாதைதனில் தரிக்கச் செய்து
முப்பற்றின் தளையறுத்து முழுதாய் நம்மை
          முக்கண்ணான் திருவடியில் முனைந்து சேர்க்கும்

கல்லால மரத்தினடி நின்று ஐயன்
          காட்சிதனைத் தந்திடவே கனிந்து நெஞ்ச
உள் ஆழக்கடலதனில் இறையைத் தேடி
          ஒன்றியதால் வாசகனார் தந்த நல்ல
எல்லாரும் உருகுகிற பாக்கள் தம்மை
          இறையருளால் கல்லதனில் பதித்த எங்கள்
வல்லாளன் திருமுருக ஐயன்தன்னை
          வாயார மனதார வையம் வாழ்த்தும்.

ஓங்குகிற அரண்மனையை அமைக்கத் தங்கள்
          உடல் பொருளோடாவிதனை உவந்தே ஈந்தோர்
தாங்குகிற புகழதனால் நிலைத்து வாழ்வர்
          தர்மமதால் இம்மையொடு மறுமை தன்னில்
வீங்குகிற அறம் ஓங்க விளைந்து நிற்கும்
          விளங்குகிற சந்ததியும் வாழ்ந்து நிற்கும்
ஏங்குகிற மனத்தோடு இவரைச் சேர்த்து
          ஏற்றிய நல் பணிசெய்த ஏந்தல் வாழ்க!

வாசகத்தின் பொருளென்ன என்றே அன்பர்
          வாஞ்சையுடன் கேட்டிடவே இறையைக் காட்டி
தாசனென தானும் அவன் ஒளியைச் சார்ந்த
          தன்னிகரில் வாசகனார் பெருமை நிற்க!
மாசதிலா அரண்மனையைச் சமைத்துத் தந்த
          மாண்புடைய திருமுருக! உன்னால் இன்று
தேசுபுகழ் ஈழமதன் அனைத்துப் பேர்க்கும்
          சேர்ந்ததுவே, செகம் உன்னைப் போற்றும் ஐயா!

நரியதனைப் பரியாக்கி நாதன் அன்று
          நல்ல மணிவாசனார்க்கருளே செய்தான்
அரியபல வேலைகளை அவனுக்காக
          அன்றிறைவன் செய்ததனை அவனி தேறும்
நெறியதிலா வாழ்வதனால் வருந்தும் எங்கள்
          நேரதிலா இளையவரை நிமிரச் செய்ய
அரியபெரும் அரண்மனையை அமைத்த இந்த
          அற்புதமும் ஆண்டவனின் அருளே கண்டோம்.
                     ***
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.