சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

சீச்சீ இவையும் சிலவோ?  - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
லகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது.
சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து,
தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர்.
தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண்,
இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள்.
வந்த தோழியர்க்கோ கோபம்.
நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா?
தோழியர் குற்றம் உரைக்க,
அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளே உறங்கிக் கிடந்த தோழி,
தன்மேல் குற்றம் சொன்னவர்களைப் பார்த்து,
'இதென்ன, நீங்கள் சின்னவிஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுகிறீர்கள்.
நீங்கள் குற்றம் சொல்லவேண்டிய நேரமா இது?" என்றுரைத்து,
தன் குற்றம் மறைக்க முனைகிறாள்.
இஃது மணிவாசகரின் திருவாசகத்தில் வரும்,
திருவெம்பாவைப் பாடல் ஒன்றின் செய்தி.

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
         பேசும் போது எப்போதும் இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்!
         சீச்சீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
         கூசும் மலர்ப்பாதம்  தந்தருள வருந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்து
         ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய் 
 

 


✜ ✜ ✜

இதென்ன! அரசியல் கட்டுரையில் திடீரென சமயம் எழுதுகிறார்.
இவருக்கென்ன கழண்டு கிழண்டு விட்டுதோ?
உங்களில் சிலபேர் முணுமுணுப்பது தெரிகிறது.
நீங்கள் நினைப்பதிலும் தவறில்லை.
கழறக்கூடிய சூழ்நிலையில்தான் நாம் வாழவேண்டியிருக்கிறது.
நமது தமிழ்த்தலைவர்கள் அடிக்கும் கூத்தை கவனித்துப் பார்த்தால்,
எவருக்கும் கழண்டுதான் போகும்.
அதென்ன கூத்து என்கிறீர்களா?
அதைச் சொல்லத்தான் ஐயா இந்தக் கட்டுரை.

✜ ✜ ✜

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளை சரிசெய்யவென,
சம்பந்தரால் வருந்தி அழைத்து வரப்பட்ட வடக்கின் முதலமைச்சர்,
சில காலங்களிலேயே தனது சுயரூபத்தைக் காட்ட தொடங்கியதும்,
பிளவை அடைக்க வந்தவரே பிளவுகளை உருவாக்க,
அவர் செய்த மித்திரபேதத்தால் கூட்டமைப்புக்குள் விரிசல்கள் பெரிதாகியதும்,
அனைவரும் அறிந்த செய்திகள்.

✜ ✜ ✜

அதுவரை காலமும் கூட்டமைப்பின் ஏக சக்கரவர்த்தியாய் சம்பந்தர் இயங்க,(?)
கட்சியின் அனைத்து விடயங்களையும் முழு உரிமை பெற்ற இளவரசராய்,
சர்வாதிகாரத் தன்மையோடு இயக்கி வந்தார் சுமந்திரன்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை பறக்கும் பட்டமாய் சுமந்திரன் விளங்க,
கூட்டமைப்பில் இணைந்திருந்த ஏனைய கட்சிகள் அப்பட்டத்தின் வாலாய்த் தொங்கிக்கொண்டிருந்தன.

 
தான் பறக்கும் இடமெல்லாம் அவ்வால்கள் வரவேண்டியதுதான் என்ற,
அதிகாரத்தொனியோடு இயங்கி வந்த சுமந்திரனுக்கு,
முதலமைச்சரின் போக்கு தலையிடியைத் தரத்தொடங்கியது.
கூட்டமைப்பின் வாலாய் வேறு வழியில்லாமல் தொங்கிக்கொண்டிருந்த மாற்றணிகளின் தலைவர்கள்,
பட்டம் பறக்க வாலும் அவசியம் என்பதை முதலமைச்சரை முன்வைத்துக் காட்டத் தொடங்கினர்.
சுமந்திரனின் நிலை இக்கட்டுக்குள்ளானது.

✜ ✜ ✜

திடீரென கூட்டமைப்புக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து,
அறிவிப்பின்றி ரகசியமாய் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு,
தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்களைத் தவிர,
அக்கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்கள் சிலரும்,
மாற்றணித்தலைவர்களும் அழைக்கப்பட்டபோது,
கூட்டமைப்பின் மாற்றணித்தலைவர்கள்,
அதுவரை தம்மனத்துள் மூளாத்தீப் போல் வைத்திருந்த தம் பகையை வெளிப்படுத்தி,
கூட்டமைப்பின் அனுமதியின்றியே அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அச்சம்பவத்துடன் கூட்டமைப்பின் மீதான சுமந்திரனின் இரும்புப்பிடி மெல்ல தளரத் தொடங்கியது.

✜ ✜ ✜

முதலமைச்சரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று,
அவுஸ்திரேலியாவில் வைத்து அறிக்கை விட்டார் சுமந்திரன் .
இடைக் காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தனது புரட்சிக் கருத்துக்களால்,
உணர்ச்சிவயப்பட்ட தமிழ்க்குழுவினரை ஈர்த்திருந்தார் முதலமைச்சர்.
அவரது அவ் ஆதரவுக்குழுக்கள் சுமந்திரனது கருத்துக்களால் கடுப்பேறிப்போயின.
அக்குழுக்கள் ஊடகங்கள் மூலமும் சமூகவலைத் தளங்கள் மூலமும் வெளியிட்ட கருத்துக்களால்,
முதலமைச்சரின் செல்வாக்கு மெல்லமெல்ல வளர ஆரம்பித்தது.

✜ ✜ ✜

சுமந்திரனின் கருத்துப்பற்றி தலைவர் சம்பந்தரிடம் ஊடகங்கள் வினவ,
நடந்தது ஏதும் தெரியாதவர் போல அது சுமந்திரனின் சொந்தக் கருத்து எனக் கூறி,
சுமந்திரனை நட்டாற்றில் கைவிட்டார் சம்பந்தர்.
பிற்காலத்தில் முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினரால்,
நம்பிக்கையில்லாப் பிரேரணை கவர்னரிடம் கையளிக்கப்பட்டபோது,
தம் கதை முடிந்துவிட்டது என முதலமைச்சர் தளர்ந்ததாய் செய்திகள் வெளிவந்தன.
பின்னர் தமிழ்மக்கள் பேரவை, தமிழ்காங்கிரஸ் போன்றவற்றின் ஆதரவு அணிகள்,
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி கிளப்ப,
பழையபடி துணிவுபெற்ற முதலமைச்சர்,
தன்னை அஞ்ஞா நெஞ்சத்து அரசியல்வாதி போல் காட்டி பெருமை தேடிக்கொண்டார்.
அப்போதும் சம்பந்தர் இச்சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதாய் காட்டியும் பேசியும்,
தன் தலைமையின் நிமிர்வின்மையை மீண்டும் நிரூபித்தார்.

✜ ✜ ✜

தமிழரசுக்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை,
தலைவரின் அனுமதியில்லாமலா கொண்டுவந்தனர்? எனும் கேள்வி,
மக்கள் மத்தியில் எழுமே என்ற அடிப்படை தர்க்க அறிவைக்கூடப் புறக்கணித்து,
சிறிதும் நாணமின்றி அவர் உரைத்த பொய்ச்சமாதானம்,
அவர்மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்தது உண்மை.
ஒன்று பிரேரணை தன் அனுமதியுடன்தான் நகர்த்தப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
அது இல்லையெனின் தன் அனுமதியில்லாமல் பிரேரணையைக் கொண்டு வர முயன்றவர்களை,
தண்டித்திருக்கவேண்டும்.
இரண்டுமில்லாமல் 'அசுமந்தமாய்" அமர்ந்திருந்தார் சம்பந்தர்.
மொத்தத்தில் கூட்டமைப்பினர் தமது திட்டமிடப்படாத குழப்பமான செயல்களால்,
முதலமைச்சரின் மக்கள் ஆதரவை தாமே பெருக்கிக் கொடுத்துத் தத்தளித்தனர்.

✜ ✜ ✜

இனத்திற்காக எதுவுமே செய்யாமலும்,
ஏற்றுக்கொண்ட பதவியில் எதையும் சாதிக்காமலும்,
அதிஷ்டவசத்தாலும் மற்றவர் பலயீனத்தாலும் பெருமை தானே தேடிவர,
தமிழ்மக்களை ஈர்க்க வெற்றுச்சவடால்கள் மட்டும் போதும் என்பதை தெரிந்துகொண்ட,
முதலமைச்சரின் துணிவும் பதவி ஆசையும் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.
இடையில் அடுத்த முதலமைச்சர் மாவைதான் என சுமந்திரன் அறிக்கைவிட,
அதனை ஆதரித்துப் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செய்தி வெளியிட,
தமது பதவி பறிபோகும் நிலையை உணர்ந்து முதலமைச்சர் உசாரானார்.
கூட்டமைப்புக்குச் சவால் விடும் வகையில்,
தனது ஆதரவுக்கட்சிகளை துணை சேர்த்து தனித்து தேர்தலில் நிற்கப் போவதாய்,
முதலில் ஊகமான அறிக்கைகளை விடத்தொடங்கினார்.
பின்னர் சாதனைகள் ஏதும் செய்யாமலே முடியப்போகும் தனது பதவிக்காலத்தை,
தன்னை முதலமைச்சராய்க் கொண்டு நீட்டித்துத்தரவேண்டுமென,
ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை வைத்ததாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இங்ஙனமாய் வேகவேகமாக கூட்டமைப்புக்கு எதிராக,
காய்களை நகர்த்தத் தொடங்கினார் முதலமைச்சர்.

✜ ✜ ✜

முதலமைச்சருடன் சந்தர்ப்பவசத்தால் இணைந்திருந்த கஜேந்திரகுமார் போன்றோருக்கு,
மேற் செய்திகள் தேனாய் இனிக்கத் தொடங்கின.
கடைசியாய் நடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில்,
முதலமைச்சரின் அணியைக்  கைவிட்டு,
திடீரென  கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரியுடன் இணைந்த,
சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும்,
வரும் தேர்தலில் முதலமைச்சர் அமைக்க நினைக்கும் தேர்தல் கூட்டில் இணையத்தயாரென அறிக்கை விட்டனர்.
திடீரென ஏற்பட்டிருக்கும் முதலமைச்சருக்கான ஆதரவை,
தமக்குச் சாதாகமாய்ப் பயன்படுத்துவதே மேற் சொன்ன கட்சித்தலைவர்களது நோக்கமாய் இருந்தது.
தம்மைப் போல கட்சிப்பின்னணிகள் ஏதுமற்றும், தனிமனிதராய் செல்வாக்குப் பெற்றிருக்கும் முதலமைச்சரைப் பயன்படுத்தி, கூட்டமைப்பின் செல்வாக்கை உடைத்தால்
முதுமையுற்ற முதலமைச்சரின் காலத்திற்குப் பின்னால்,
தமிழினத்தின் தலைமையை கூட்டமைப்பிடமிருந்து தாம் கைப்பற்றலாம் என்பதே,
அவர்தம் கனவாய் இருந்தது.

✜ ✜ ✜

கிட்டத்தட்ட  மேற் தலைவர்களின் புத்திக் கணக்குகள்,
முற்றுப் பெற்ற நிலைக்கு வந்திருந்தன.
மக்களும் ஒற்றுமைதான் உயர்வின் வழி என்பதை மறந்து,
நம் தலைவர்களின் சுயநல ராஜதந்திரத்திற்குப் பின்னால்,
குழுக்களாய்ப் பிரிந்து அணிதிரளத் தொடங்கினர்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல்குறும்பும் என,
ஒரு நாட்டைச் சீரழிப்பதற்கான வள்ளுவன் சொன்ன காரணிகளை,
பேரழிவு கண்ட நம் இனத்தில் தலைவர்களும் மக்களுமாக,
பெருமையோடு நம் அரசியல் பாதையில் பதிக்கத் தொடங்கினர்.

✜ ✜ ✜

எல்லாம் முடிவாகிவிட்டது என்ற நிலையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென ஒரு பெருமாற்றம்.
யாரும் கணிக்காத யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் யாழில் நடந்து முடிந்து
நம் அரசியல் பாதையின் எதிர்காலம் என்னாகப்போகிறதோ என,
பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
முதலமைச்சரின் உரைகளின் எழுத்தாக்கங்களை புத்தகமாக்கி,
இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட அவரது ஆதரவாளர்கள் ஒழுங்கு செய்தனர்.
அவ்விழாவுக்கென அடிக்கப்பட்ட முதல் அழைப்பிதழில் சம்பந்தரின் பெயர் இருக்கவில்லையாம்.
பிறகு சம்பந்தரின் பெயர் இணைக்கப்பட்டு புதிய அழைப்பிதழ் ஒன்று அடிக்கப்பட்டது.
போடப்பட்ட அரசியற் கணக்குகள் அத்தனையும் தலைகீழாகும் வண்ணம்,
தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும்,
விழாவின் முன்வரிசையை நிரப்பினர்.
சம்பந்தருடன் உடன் வந்த சுமந்திரனை,
கைலாகு கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர்.
சம்பந்தருக்கு மேடையில் இடம்.
அதுவரை பிரிவுபற்றி பேசி வந்த முதலமைச்சர்,
திடீரென இனநன்மைக்காய் கொள்கை அடிப்படையில் அனைவரும் உடன்படுவது பற்றிப் பேசி,
அதுவரை எதிர்காலத் தலைமைக் கனவுகளுடன்,
தன்னோடு உடன் இருந்தோர் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

✜ ✜ ✜
 
நூல் வெளியீட்டன்றும் முதலமைச்சரின் 'குசும்பு" குறையவில்லை.
பகை மறந்து தன்னைத் தேடி வந்த சுமந்திரனை,
குறிப்பால் தன் பகைவராய்ச்சுட்டி அவர் பேச,
அவருக்கான கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்து,
'தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி" இதிலென்ன ஆச்சரியம்?
யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரையும்,
மேடைக்கு அழைத்து நூல்களை வழங்கி கௌரவித்த முதல்வர்,
ஏனோ சுமந்திரன், மாவை போன்றோரை மேடைக்கு அழைக்காமல்,
வேண்டுமென்றே அலட்சியம் செய்தார்.
நாகரீகம் மறந்து வலிய வந்தோரை இழிவு செய்த முதலமைச்சரின் ஆணவப்போக்கு,
பலரையும் முகம் சுழிக்கவைத்தது.

✜ ✜ ✜
 
விழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் வெளிச்சென்ற பின்பு,
அரச அட்டவணையில் இயங்கும் டக்ளஸ் போன்றவர்களை,
கொள்கை ரீதியான இணைப்பில்  இணைக்கமுடியாது என,
பகிரங்கமாய் திருவாய் மொழிந்தார் முதலமைச்சர்.
இதே டக்ளஸை சில காலத்தின் முன்,
முதலமைச்சர் பாராட்டியதை தமிழ் மக்கள் மறக்கவில்லை.
சரி அதைத்தான் விடுவோம்.
இணைப்பில் சேர்க்கமுடியாத டக்ளஸை தனது புத்தக வெளியீட்டில் மட்டும்,
அழைப்பு விடுத்து முதல்வர் இணைத்துக் கொண்டது எங்ஙனம்?
ஆட்டுமந்தை மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் எனும் துணிவேயாம்.

✜ ✜ ✜

ஏதோ ஒரு வெளிச் சக்தியின் அழுத்தமே முரண்டுபிடித்து நின்ற,
இவ்விரு குழுவினரையும்  ஒன்றாக்கி இருக்கவேண்டும் என்பதைக் கணிக்க,
பெரிய அரசியல் ஞானம் ஏதும் தேவையில்லை.
தமிழரசுக்கட்சியின் சரணாகதி நிலை,
அந்த வெளிச்சக்தியின் அழுத்தத்தாலேயே நிகழ்ந்திருக்கவேண்டும்.
ஆனால் தன்மானம் அற்ற அவர்களின் அச்சரணாகதி நிலையை,
எவராலும் ரசிக்கமுடியாது என்பது திண்ணம்.
யாரை நீக்கப்போகிறோம் என்றார்களோ அவர் முன்னால்,
அவரது புறக்கணிப்புக்களைப் பொறுப்படுத்தாது கைகட்டி பணிந்து நின்ற,
தமிழரசுக்கட்சியினரின் செயலை எந்த தன்மானம் உள்ள தமிழனும் ரசிக்கமாட்டான்.
தம் பதவிப்பித்திற்காக தன்மானத்தை இழக்கத் தயாராகவிருக்கும் இவர்களா
தமிழினத்தின் தன்மானத்தைக் காக்கப் போகிறார்கள்?
வெளி அழுத்தங்களால் இணைப்பு என்ற நிலை வந்திருந்தாலும் கூட,
ஒரு பாரம்பரியமிக்க கட்சி,
தன்னால் நியமிக்கப்பட்டு பதவி பெற்றபின் தலையிடி தரும் முதல்வரை,
வலிய தேடிச் சென்று இந்த அளவுக்கு தாழ்ந்து போகாமல்,
தமது நிகழ்ச்சி ஒன்றிற்கு முதலமைச்சரை அழைத்து மதித்து இணைந்திருக்கவேண்டும்.
அவர்களது இந்த விட்டுக்கொடுப்பில் நாகரீகத்தினதோ  இன நன்மையினதோ,
சிறிய சாயலைத்தானும் காணமுடியவில்லை என்பது மட்டும் உறுதி.
அத்தனையும் பதவிப்பயத்தால் விளைந்த  அசிங்கங்கள் என்றே தோன்றுகின்றன.

✜ ✜ ✜

முதல்வரின் செயற்பாட்டிலும் அதே பதவிப்பரிதவிப்பைத்தான் காணமுடிகிறது.
நேற்றுவரை புதுக்கட்சி தொடங்குகிறேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தவர் அவர்.
இவரது துணிவையும் மக்கள் ஆதரவையும் கண்டு,
கட்சிகள் சில, 'கூட்டமைப்பு உடைந்தது" என்று ஆரவாரித்து,
'நீயே கதி ஈஸ்வரா!" என்று பஜனைபாடி,
முதலமைச்சருக்காக இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிலும் கூட,
கொடிபிடித்துக் கூக்குரலிட்டு நின்றனர்.
இன்று திடீரென முதலமைச்சர் தமிழரசுக்கட்சியினரை கைபிடித்து வரவேற்ற காட்சி கண்டு,
அவர்தம் தலைகளெல்லாம் கவிழ்ந்து கிடக்கின்றன.
அடிக்கடி நிறம் மாறும் நிலையான புத்தி இல்லாத,
இந்த மனிதனை நம்பினால் இதுதான் கதி என்று,
அவர்களில் பலர் விழா மண்டபத்தில் முணுமுணுத்து நின்றதாய்க் கேள்வி.
இவர் எவரது நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார் என்பது தெரியாமல்,
கூட நிற்பவர்களே இன்று குழம்பி நிற்கின்றனராம்.

✜ ✜ ✜

எப்படிப் பேசினால் தமிழ்மக்களுக்குப் பிடிக்கும் என்பதை நன்கு அறிந்துவிட்ட முதலமைச்சர்,
அன்றைய கூட்டத்திலும் மற்றவர்கள்மேல் 'நொட்டை" வாசித்து,
மற்றவர்களெல்லாம் குற்றவாளிகள் என்பது போலவும்,
தான் ஒருவரே தூயவர் என்பது போலவும் காட்டி,
மற்றவர்களுக்கு நிபந்தனை விதித்து எக்காளமிட்டு உரையாற்றியிருக்கிறார்.
அடுத்தடுத்த நாட்களிலேயே வந்த முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன்முறையீட்டுத் தீர்ப்பு,
சத்திய வித்தகரின் உண்மைத் தன்மையை ஐயத்திற்கு இடமாக்கியிருப்பது வேறு விடயம்.

✜ ✜ ✜

அன்றைய நிகழ்வில் சாத்தியமற்ற முதலமைச்சரது நிபந்தனையை,
தலைகுனிந்து கேட்டிருந்த சம்பந்தர்,
திடீரென ஞானம் உதித்தவர் போல் இன்றைய நிலையில் இன ஒற்றுமையின் அவசியத்தை,
வலியுறுத்திப் பேசி அமர்ந்திருக்கிறார்.
முன்பு உடன் கூடியிருந்த கட்சிகளை உதாசீனம் செய்கையிலும்,
'வீட்டுக்குள்" அடங்காத எவரும் நாட்டுக்கு உதவார் என்றாற்போல் அலட்சியமாய் நடக்கையிலும்,
கூட்டமைப்பை ஒரு கட்சியாய்ப் பதிவு செய்யும் கோரிக்கை வந்தபோது,
அதைத் துச்சமாய்  நினைந்து மறுக்கையிலும்,
இன நன்மைக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணராத, உரைக்காத சம்பந்தர்,
'தேர்தல் காய்ச்சல்" வந்ததும் அவ் அவசியத்தை உணர்ந்து உரைப்பதன் பின்னணி,
பதவி ஆசையே என்பதை எவர்தான் உணரார்?

✜ ✜ ✜

மாவையே அடுத்த முதலமைச்சர் என்று,
முன்பு அடித்துப் பேசிய சுமந்திரன்,
இப்போது அது தன் சொந்தக்கருத்து என்றும்,
கட்சியின் முடிவு எது என்று தனக்குத் தெரியவில்லை என்றும்,
கட்சியின் முடிவை அனுசரித்து தான் நடப்பேன் என்றும்,
உரைத்திருப்பது வேடிக்கையின் உச்சம்.
வருங்காலத்திலேனும் எது தம் சொந்தக் கருத்து,
எது தம் கட்சியின் கருத்து என்பதை நம் தலைவர்கள் பிரித்துரைப்பார்களாயின்,
தமிழ் மக்களும் ஏன் ஒருசில தமிழ்க்கட்சிகளும் கூட ஏமாளிகள் ஆகாமல் இருக்கலாம்.

✜ ✜ ✜

மொத்தத்தில் ஒன்று தெரிகிறது.
முதலமைச்சரானாலும் சம்பந்தரானாலும்,
இன நன்மை அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.
பதவிச்சுகமே அவர்களது முதல் பற்றுதல் என்பதே அது.
அப்பதவிச் சுகத்திற்காகவே இன நன்மை பற்றி,
அவர்கள் இராப்பகலாய்ப் பேசுகின்றனர்.
பின் நாற்காலிச் சுகம் கிடைத்துவிட்டால் எல்லாம் மறக்கின்றனர்.
முன்னர் இப்படி இப்படிச் சொன்னீர்களே என,
எவராவது அவர்களது குறைகளை சுட்டிக்காட்டினால்,
'சீச்சீ இவையெல்லாம் தீர்வு நோக்கி நகரும் இவ்வேளையில் பேசுகிற பேச்சா?"
எனக் கேட்டு வாய் அடைத்து விடுகின்றனர்.

✜ ✜ ✜

மொத்தத்தில்,
முதல் பந்தியில் நான் சொன்ன,
திருவெம்பாவை பெண்களின் நிலைதான் நம் தலைவர்களின் நிலையும்.

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் 
இராப்பகல் நாம் பேசும் போ தெப்போ(து) 
இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்! 
சீச்சீ இவையும் சிலவோ? 
விளையாடி ஏசும் இடம் ஈதோ!

மேற்பாடலில் பரஞ்சோதி என்பதற்குப் பதிலாக இனநன்மை என்றும்,
போதார் அமளிக்கு என்பதற்குப் பதிலாக பதவி நாற்காலிக்கு என்றும்,
நேரிழையாய் என்பதற்குப் பதிலாக தலைவனே என்றும்,
நேரிழையீர் என்பதற்குப் பதிலாக மக்களே என்றும் சொற்களை மாற்றிப் பாருங்கள்.

பாசம் இன நன்மைக்கென்பாய்  
இராப்பகல் நாம் பேசும் போ தெப்போ(து) 
இப்போ பதவி நாற்காலிக்கு நேசமும் வைத்தனையோ தலைவனே? 
என்று மக்கள் கேட்க,
மக்களே! சீச்சீ இவையும் சிலவோ? 
விளையாடி ஏசும் இடம் ஈதோ!
என்கின்றனர் தலைவர்கள்.
இவ்வளவும் என் மனத்தில் உதித்தவை.
இன்னும் சில குசும்பர்கள்
விண்ணோர்கள் ஏத்துதற்கு
கூசும் மலர்ப்பாதம்  தந்தருள வருந்தருளும் என்ற அடிக்கு,
உலக நாடுகள் நினைக்க முடியாத,
தீர்வுத் திட்டத்தை தருவதற்காய் வந்து அருள இருக்கின்ற என்றும்,
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்து ஈசனார்க்கு எனும் அடி
நமது மாண்புமிகு ஜனாதிபதியையும் பிரதமரையும் குறிக்கும் என்றும்,
அன்பார் யாம் ஆடேலோ ரெம்பாவாய்  எனும் அடிக்கு,
அத்தலைவர்களுக்கு நாம் அன்புடையோம் என்றும்,
பொருளுரைக்கத் தலைப்பட்டால்,
அதற்கு நான் பொறுப்பாளி அல்லன் என்று இப்போதே சொல்லிவிட்டேன்.

✜ ✜ ✜

இப்போது தெரிகிறதா?
நம் தலைவர்கள் செய்வதும் திருவெம்பாவை கூட்டுப் பிரார்த்தனையை ஒத்த ஒன்றுதான் என்று.
தாளம் போடவும் சங்கூதவும் அங்கு போலவே இங்கும் நம்மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
என்ன? ஒரே ஒரு வித்தியாசம் என்றால்,
திருவெம்பாவை பஜனையில் துயின்றவர்கள் எழுப்பப்படுகிறார்கள்.
நம் தலைவர்களின் பஜனையிலோ,
விழித்திருப்போரும் உறங்க வைக்கப் படுகிறார்கள்.
ஏமாற்றுபவனில் குற்றமில்லை ஏமாளிகளில்தான் குற்றம்!

✜ ✜ ✜✜ ✜ 

 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.