'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' - பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' - பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
இறைவன் திருவருள் சிவகோசரியாரை, திண்ணனார் கண்ணினின்று மறைத்தது போலும், அவன் கண்ணில் பட்டிருந்தால், அவர் பட்டிருப்பார்.



யிர் பதிந்த இறைவர்க்கு இடர் செய்தார் யாரென?
அருகெல்லாம் தேடி யாரையும் காணாது,
நீண்ட சோகத்தோடு மீண்டுவந்து,
இறைவரைக் கட்டிக்கதறுகிறான் திண்ணன்.
தாம் முன் நினைந்தபடியே இறைவர்க்குத் தீமையுற்றதை நினைந்து,
செய்வது யாதென அறியாது திகைக்கிறான் அவன்.

 


திண்ணனார் அறிவில் ஒரு சிறு பொறி.
ஊரில், வீரர்களுக்கு உற்ற வேட்டைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தும்,
மருந்து மூலிகைகளைத் தேடிக் கொணர்கிறார்.
ஐயன் கண்களுள் நாடி விடுகிறார்.
புனத்திடைப் பறித்துக்கொண்டு பூதநாயகன் பால் வைத்த,
மனத்தினும் கடிது வந்(து) அம்மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
இறைவன் கண்களில் வழிந்த இரத்தம் குறையாது பெருகுகிறது.
ஆறாக ஓடும் அவ் இரத்தம் கண்டு,
சோராத திண்ணனார்,
'ஊனுக்கு ஊன்' எனும் பழமொழி நினைவில் வர,
மறு நிமிடமே மனதுள் மகிழ்கிறார்.
உற்ற நோய் தீர்ப்ப(து) ஊனுக்(கு) ஊன் எனும் உரை முன் கண்டார்
அம்பால் என் கண்ணைப் பிடுங்கி அப்பின்,
அது இறைவர்க்கு மருந்தாகும் என,
அன்பால் நினைந்தார் திண்ணனார்.
தன்பால் இருந்த கண்ணைத் தடவிப் பார்த்தார்.
மறுநிமிடம் அவர் கையில் அம்பு!
வருத்தம் சிறிதுமின்றி வன்கணையால்,
திருத்தமுற தன் கண்ணைத் தேற்றமுடன் பிளந்தெடுத்தார்.
தன் கண்ணால் இறைவர் கண்ணை இட்டு நிரப்புகிறார்.
மதர்த்தெழும் உள்ளத்தோடும் மகிழ்ந்து முன் இருந்து தன் கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப



திண்ணனார் செயலால் இறைவர் திகைத்திருப்பார் போலும்.
இறைவர் கண்ணில் இரத்தம் நின்றது.
குதித்தார், குன்றாம் தன் தோள்கள் கொட்டினார்.
கூத்தும் ஆடி நிலத்தில் ஏறி மிதித்தார்.
தன்னறிவைத் தானே மெச்சினார்.
வெறிகொண்டவர் போல,
தனக்குத் தானே சிரித்துக் கொண்டார்.

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தினில் ஏறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார், கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்



இரத்தம் தான் நின்றது.
இறைவனார் விளையாட்டோ நிற்கவில்லை.
பிறைசூடிய பித்தன் தன் விளையாட்டைத் தொடர்ந்தான்.
இலிங்கத்தின் மற்றைக் கண்ணில் இரத்தம் வழியத் தொடங்கியது.
கண்டு நடுங்கினான், கதறினான். கவலையுற்றான்.
வருந்தினாலும் திண்ணன் இம்முறை வாடவில்லை.
'மருந்துளது எந்தன் மற்றைக் கண்' என்றுரைத்து,
அதனைப் பிடுங்கப் போனவன் அடங்கி நின்றான்.
இரண்டு கண்களையும் இழந்தால்,
நோயுற்ற கண்களை தான் உற்று அறிதல் எங்ஙனம்?
திண்ணன் எண்ணம் திகைத்தது.
இறைவனின் குருதி வழியும் கண்ணில்,
பிடுங்கிய கண்ணை பொருத்துவது எங்ஙனம்?
நினைத்தான். அதனால் திகைத்தான்.
இடக்காலை இறைவர் கண்ணில் அணைத்தான்.
விருப்போடு அம்பைக் கையில் எடுத்தான்.
சிவனும் திகைத்தான்.

கண்ணுதல் கண்ணில் தன் கண் இடந்(து) அப்பிக் காணும் நேர்ப்பா(டு)
எண்ணுவார் தம்பிரான் தன் திருக்கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப்பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்



திண்ணனார் கைகளை திருக்காளத்தி அப்பன் கைகள் தடுத்தன.
கண்ணப்பநிற்க! என மும்முறையாய் ஓலமிட்டார் முக்கண்ணனார்.
இரு கண்களையும் கொடுத்தவனுக்கு,
மும் மொழி கொடுப்பதா பெரிது?
திண்ணப்பனை கண்ணப்பன் என்று கூவி,
ஓலமிட்டு அவனை உயர்த்தினார் சிவனார்.
திண்ணப்பர் கண்ணப்பரானார்.

செங்கண் வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை யாண்ட
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்(று) அடுக்கதாக
கங்கணர் அமுத வாக்குக் 'கண்ணப்ப நிற்க' என்ற.



அனைத்தும் கண்டு அயல் நின்ற சிவகோச்சரியார் அதிர்ந்தார்.
அவன் அன்பின் ஆற்றலை உணர்ந்தார்.
ஞான மாமுனிவர் நெகிழ்ந்தார்.
வானவர் பூமாரி பொழிந்தார்.
மறைகள் ஓங்கி ஆர்த்தன.

கானவர் பெருமானார் தம் கண்ணிடந்(து) அப்பும் போதும்
ஊன் அமு(து) உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூமாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப



அன்பின் பேறு இதன் மேல் உண்டோ?
இறைவனின் துன்பம் கண்டு அஞ்சி,
தன் கண்ணை இடந்து அப்பிய,
கண்ணப்பனார் கை பிடித்த இறையனார்,
தன் வலத்திருக்கும் வரம் கொடுத்து அவரை மகிழ்விக்கிறார்.
இறைவனார் ஆகத்தினில் பாகம் பெற்று,
அன்னைக்கு நிகரானார் எம் ஐயன் கண்ணப்பர்.

பேறினி இதன்மேல் உண்டோ? பிரான் திருக்கண்ணில் வந்த
ஊறு கண்(டு) அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவுங் கையை
ஏ(று) உயர்ந்தவர் தம்; கையால் பிடித்துக்கொண்(டு) என் வலத்தில்
மாறிலாய்! நிற்க! என்று மன்னு பேர் அருள் புரிந்தார்.



கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்,
என்னப்பன் என்னொப்பில் என்னையும்  ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து என்னை வா என்ற வான் கருணை நினைந்து
தன் நிலையை ஒப்பிட்டு தாழ்வால் மனம் வருந்தி,
வாசகனார் மணிவாக்கால் வருந்தி உரைக்கின்றார்.
இறையருளை எண்ணித்தான் ஏங்கிக் கரைந்தவரே,
வேடுவனார் அன்பதனை வியந்து உரைக்கின்றார்.
நேசமுடை வேடுவனார் நெஞ்சத்து அன்பதனை,
வாசகனார் மணிவாக்கே வணங்குவதை என் சொல்ல?



கண்ணப்பன் கதையினையே கருத்தில் பதித்ததனால்,
எட்டடிடவே முடியாத ஏற்றமிகு அவன் அன்பை,
பட்டினத்து அடிகளுமே பாடிப் பதறுகிறார்.
நாளாறில் கண்ணிழந்து அப்ப வல்லேன் அல்லேன்.
ஏற்றமிகு அடியவர்கள் இதயமதால் தாம் உருகி,
தேற்றமுறப் போற்றுகிற திண்ணப்பர் பெருமையதும்,
வேற்றவர்க்கும் வந்திடுமோ வியந்தவன் தாள் போற்றிடுவோம்.



அத்தகைய அன்பின் சிகரமாய் விளங்கியவர் கண்ணப்பனார்.
மேலுரைத்தது அவர் தம் இனிய வரலாறு.
ஒப்பற்ற இறைவர் முன்பு,
அன்பே முதன்மையுறும் எனும் அரிய செய்தியை,
கண்ணப்பர் வரலாறு நமக்குக் காட்டுகிறது.
இறைவழிபாட்டில் விதிகள் பலவற்றை விதித்த சைவமே.
அன்புக்கு முதன்மை கொடுத்து, விதிவிலக்கையும் அங்கீகரிப்பது,
அற்புதத்திலும் அற்பதம்!
ஆண்டாண்டு காலமாய் அருந்தவமியற்றி,
அடியார் பலர் ஆண்டவனைக் காண முயற்சிக்க,
இறைவனுக்காக கண் இடந்து அப்பவல்ல அன்பு பூண்ட,
கண்ணப்பர்க்கு ஒப்பாரார் எவர் உளர்?



சுந்தரரின் திருத்தொண்டர் தொகையும்,
சேக்கிழாரின் பெரியபுராணமும்,
கண்ணப்பர் வரலாறு உரைக்கையில்,
காட்டும் நுட்பங்கள் களிப்புத் தருபவை.
அவை கண்டு உணர்ந்து மகிழ்தல்,
கற்றார் தம் கடனாம்.
அடுத்தவாரத்தில் அவை காண்பாம்.



                                                                                                                                (தொடரும்)
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.