கந்தன் கவியமுதம் 10
கவிதை முற்றம் 04 Sep 2026
ஆதவனுக்கொளி கொடுக்கும் எங்கள் ஐயன்
அருள் பொழிந்து வருகின்ற நாளில் நல்ல
நாதனவன் ஜோதியிலே வெய்யோன் தானும்
நலம் குன்றி ஒளி மழுங்கி நிற்பான் கந்தன்
பூதகணம் புடை சூழப் பொலிந்து வந்து
போற்றுகிற அடியவர்க்கு அருளும் செய்வான்
கீதமொடு நாதங்கள் கிளர்ந்து பொங்கக்
கேதம் அறும் கேட்பார்க்கு அனைத்தும் கிட்டும்
எழு குதிரை தான் பாய எழுந்து நிற்கும்
ஏற்றமிகு சூரியனைத் தனதாய் ஆக்கி
மழுவுடைய சிவன் மகனும் மண்ணில் வந்தால்
மனமெல்லாம் உருகித்தான் அடியார் தங்கள்
நழுவுகிற உடை மறந்தும் நல்லைக் கந்தன்
நல் அழகில் தமை இழந்து மயங்கி நிற்பர்
அழுதுருகி அவர் வணங்க நல்லூரானின்
அடியர்களால் யாழதனில் அருவி பாயும்