கவியமுதம் 11
கவிதை முற்றம் 05 Sep 2026
மருகனது திருவிழவில் மாமன் வந்து
மயங்கிடவே குழலூதி மகிழ்ந்து நிற்பான்
அருகிருந்து சந்தானம் ஈயும் நல்ல
அற்புதனாய்க் கோபாலன் அருளி நிற்பான்
தருக்கதனால் கைலாய மலையைத் தூக்கி
தலையறுத்து இசை பாடி அருளும் பெற்ற
அரக்கனவன் ராவணனும் அடியைப் போற்றும்
அற்புதமாம் வாகனத்தில் ஐயன் ஊர்வான்.
கயிலாய மலை நகர்ந்து வருமாப்போல
கந்தனவன் வாகனமும் வீதி சுற்றும்
ஒயிலாக வள்ளியொடு தெய்வயானை
உடனிருக்க நல்லூரான் உள்ளம் ஈர்ப்பான்
பயிலாத மூடர்களும் பாதம் தொட்டால்
படிப்பதனின் பயன் பொருந்தி உயர்வர் நல்ல
மயில் மீது உலவுகிற கந்தன் வேலின்
மகிமையதால் அறிவெவர்க்கும் அமைந்து போகும்