கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
ள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன்.
‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என,
கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.
தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?’ என்று,
அக்கறையுடன் விசாரிப்போர் ஒருபுறம்.
‘அஞ்சுவதுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்ற,
நாவுக்கரசரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் எனக்கு,
மிரட்டலாவது ஒன்றாவது.
மொத்தத்தில் ‘உகர’ வாசகர்களின் அக்கறை உற்சாகம் தருகிறது.
காரியசித்திக் கணபதி ஆலய நிர்மாணப் பணிகள்,
சொற்பொழிவுக்காய் அடுத்தடுத்து வந்த பயணங்கள்,
‘உகர’ ஆசிரியர் சொபீசனின்,
தொழில் ரீதியான சீனப்பயணம் என்பவை காரணமாகவே,
உகரக் கட்டுரைகளில் சிறிது இடைவெளி விடவேண்டி வந்தது.
உண்மைக்காரணம் அதுவே.
தயைகூர்ந்து அவ் இடைவெளியைப் பொறுத்தருளுங்கள்.
இறையருள் வேண்டி மீண்டும் கட்டுரை முயற்சியைத் தொடர்கிறேன்.
 

♦  ♦

அதென்ன உள்ள உவப்பு?
கட்டுரையின் முதல் அடியைப் படித்துவிட்டு நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.
அவசரப்படாதீர்கள்!
அதைப்பற்றித்தான் விரிவாய்ச் சொல்லப்போகிறேன்.

♦  ♦

நம் வள்ளுவக் கடவுளார் ‘நட்பு ஆராய்தல்’ எனும் அதிகாரத்திலே,
அற்புதமான ஒரு குறளை அமைத்திருக்கிறார்.
ஒரு குறளென்ன ஒரு குறள்? அத்தனை குறள்களும் அற்புதங்கள் தானே!
சொல்ல வந்த விடயத்தின் தேவை நோக்கியே,
அற்புதம் என இக்குறளைத் தனித்துச் சொன்னேன்.
‘குறளைச் சொல்லாமல் இது என்ன சுற்றி வளைப்பு?’ என்கிறீர்கள் போல,
இதோ அந்தக் குறளைச் சொல்லி விடுகிறேன்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

கேடு வரும்போதே நமக்கு உறவானவர் யாரென உறுதியாய்த் தெரியவரும்.
அதனால்தான் கேட்டினை உறவை அளக்கும் அளவுகோலாய்
உரைக்கிறார் நம் வள்ளுவர்.

♦  ♦

‘இவர் பெரிய பரிமேலழகராக்கும்,
எல்லோரும் சொல்லிச் சொல்லிப்புளித்துப் போன குறளையும்,
அதன் பொருளையும் சொல்லி தேவையில்லாத பெருமை கொள்கிறார்’ என,
நீங்கள் நினைப்பது புரிகிறது.
இக்குறளையும் அதற்கான பொருளையும் சொல்வதல்ல எனது நோக்கம்.
இன்றைய நிலையில், நமது நாட்டுச் சூழலில்,
மழையால் விளைந்துள்ள பேரவலம் பற்றியும்,
அப்பேரவலத்தால் விளைந்திருக்கும்,
பகை மறந்த இன ஒற்றுமை பற்றியும்; சொல்லவே,
வள்ளுவரின் இக்குறளை இங்கு நான் நினைவு கூர்ந்தேன்.

♦  ♦

அரசியல்வாதிகளாலும் அறிஞர்களாலும் மதவாதிகளாலும்,
செய்யமுடியாத ஒரு பெரிய விடயத்தை,
இயற்கைப் பேரழிவு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
இயற்கை அனர்த்தத்தால், இருநூறிற்கு மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்திருக்கின்றன.
காணாமல் போனோர் தொகையைப் பார்த்தால்,
அவ் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் போல்த் தெரிகிறது.
இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை, சொத்திழப்பு என,
நிகழ்ந்திருக்கும் இழப்புக்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் தலைசுற்றிப் போகிறது.
இவை அனைத்தும்  பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலேயே நடந்திருக்கின்றன.
அவலப்பட்டு நிற்கிறார்கள் பேரினத்து மக்கள்.

♦  ♦

மனிதாபிமானமுள்ள எவர்க்கும்,
இச்செய்தி நெஞ்சை வருத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உறவிழப்பு, உடமையிழப்பு என்பதான,
இப் பேரிழப்புக்களை நம் தமிழினம் மிக அண்மையில்த்தான் சந்தித்து முடித்தது.
அந்தக் காயங்களின் வேதனைகளும் வடுக்களும்,
இன்னும் தமிழனத்தார் நெஞ்சை விட்டு முழுமையாய் அகலவில்லை.
இன்று பேரினத்தார்க்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்களோ இயற்கை தந்தவை.
நம் இனத்தார்க்கு ஏற்பட்ட இழப்புக்களோ,
ஆணவத்தாலும், கற்பனையான அச்சத்தாலும், சிற்றினம் தானே எனும் அலட்சியத்தாலும்,
பேரினத்தாரால் விளைவிக்கப்பட்டவை.
இதுதான் வித்தியாசம்.

♦  ♦

ஆனாலும் அவை பற்றி ஆராய இது நேரமன்று.
தமிழர்க்கும் சிங்களவர்க்குமான பகை என்பது,
எப்போதும் உள்ளதன்று.- உருவாக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தமிழர்க்கும் சிங்களவர்க்கும் இருந்த உறவு நிலையை,
இன்று நினைத்தாலும் நம் மனம் சிலிர்க்கும்.
அவர்கள் எங்களைத் தேடி வந்ததும்,
நாங்கள் அவர்களைத் தேடிச் சென்றதும்,
எங்கள் பனங்கள்ளையும் தோசையையும் அவர்களும்,
அவர்களது கொண்டைப் பணியாரத்தையும் ‘கொக்கிஸை’யும் நாங்களும்,
ஒருவருக்கொருவர் வழங்கி உபசரித்து மகிழ்ந்ததும் அந்தக்காலம்.
புலிகளின் போராளிக் கவிஞரான புதுவையே அவ் இன்ப அனுபவத்தை,
தன் கவிதைகளில் பதிக்கத் தவறவில்லை.

‘‘முந்தி வெசாக்கால விடுமுறைக்கு  நான் வருவேன் 
சந்திப்பாய், 
வீட்டில் தடல்புடலாய்ச் சாப்பாடு 
தந்து மகிழ்வாய்..... தமிழனுக்குப் பாய்விரித்து 
நித்திரைக்குப் போகும் வரை 
நீயருகில் நின்றிருப்பாய் !

சித்திரையில்  
புதுவருடத்தினத்தில் நீ வருவாய் 
வந்தெங்கள் வீட்டில் வடை, தோசை என்றெல்லாம் 
உந்தனது ஆசைகளை உரைப்பாய் - சாப்பிடுவாய்  

ஆறு மணிக்கெல்லாம் அடிவளவுப் பனையிலே 
ஊறிவரும் கள்ளை உறிஞ்சி மகிழ்ந்திடுவாய் 
எங்களுக்குள் 
பேதம் எதுவும் இருக்கவில்லை 
தங்கச்சி என்றே என் தாரத்தை நீ அழைப்பாய் 
இன்றிவைகள் ஒன்றும் இயலாத காரியங்கள்”

கவிதையைப்படிக்க கண்கள் கசிகின்றன.
எத்தனை இனிய நல்வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

♦  ♦

சிங்கள இனத்தார்க்குக் கொடுமை செய்த ஆங்கிலேயரை,
இலங்கை மண்ணிலிருந்து அப்புறப்படுத்த சேர். பொன் ராமநாதன் அவர்கள்,
லண்டன் சென்று வாதிட்டு வென்ற வரலாறும்,
தனி ஈழம் கோரத்தொடங்கிய பின்பும் கூட,
ஸ்ரீமாவோ அம்மையாரின் பிரஜாவுரிமையை ஜே.ஆர். பறிக்க முற்பட்ட போது,
அதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அமரர் அமிர்தலிங்கம் வாதிட்ட வரலாறும்,
தமிழர்களின் இனப்பற்று கடந்த மனிதாபிமானத்தின் ஆதாரங்கள்.
அது போலவே துன்பப்பட்ட தமிழர்க்காக தம் இனத்தாரிடம் வாதிட்ட,
விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற சில சிங்களத் தலைவர்களின்,
குரல்களும் அதே மனிதாபிமானத்தின் ஆதாரங்களேயாம்.

♦  ♦

எல்லா இனங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும்  இருக்கிறார்கள்.
எந்த இனத்தையும்  முழுமையான தீய இனமென்றோ,
முழுமையான நல்ல இனமென்றோ பிரித்தல் ஆகாது.
நம் தேசம் பகையால் பிளவுறக் காரணம்,
தீயவர்களை வலிமையாய்ச் செயற்படவிட்டு,
நல்லவர்கள் அமைதியாய் இருந்ததேயாம்!
தீயவர்கள், தம் கருத்தை வலியுறுத்தி வலியுறுத்தி,
நல்லவர்களையும் தீயவர்களாக்கி இத்தேசத்தைச் சிதைத்தனர்.
அதனாற்றான் இலங்கை என்னும் இச்சொர்க்க பூமியில்,
இனத்துவேசம் என்னும் பகைவிதை விதைக்கப்பட்டு,
அவ் விஷ விருட்சத்தின் வீரிய விளைவுகளால் இரத்த வெள்ளம் ஓடியது.

♦  ♦

பகை இல்லாமல் இருப்பது சுலபம்.
அதனை விதைத்துவிட்டால் பின் நீக்குவது மிகமிகக் கடினம்.
விளைந்த பகையை நீக்கவேமுடியாதா? கேள்வி பிறக்கும்.
மனித மனங்களுக்குள் சுருண்டு கிடக்கும் ஆணவப் பாம்புகள் ஆடத்தொடங்கிவிட்டால்,
அதனை அடக்குவது கடினம் தான்.
அடக்கவே முடியாதா? எனக் கேட்டால்,
அடக்கலாம்! என்பதே பதிலாம்!
அதற்கு பகைத்திறத்தார் இருவரும் வலிந்து முயலவேண்டும்.
ஆணவப்பாம்பை அன்பென்னும் மகுடியால் மட்டுமே அசைக்கமுடியும்.
அடக்கவும் முடியுமாம்!

♦  ♦

விளைந்துவிட்ட பகையை ஊதி ஊதி உக்கிரப்படுத்த,
நம் இரண்டு இனத்தாரிடமும் சிலர் அன்றும் இருந்தனர்.
இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
அவர்தமக்கு இனம்; பற்றிய கவலையில்லை.
இனத்தலைமை பற்றிய கவலையேயாம்.
நல்லார் ஒன்றுதிரண்டால் அன்றி,
அத்தீயாரின் வலிமையை அறுக்கலாகாது என்பது நிஜம்.

♦  ♦

பகைத்திறத்தாரிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி என்ன?
பகைவர் வீழ்கையில் அவர்மேல் நாம் காட்டும் பரிவே அவ்வழியாம்.
எதிரிகள் இடருற்ற காலத்தில் நம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதால்,
அவர்தம் மனப்பகையின் வேரை அசைக்கலாம்.
அதனால்த்தான் தோற்று நின்ற இராவணனை மன்னித்து அனுப்பி வைக்கிறான்  இராமன்.
ஈழத்தின் இறுதிப்போரின் முடிவில், ஆயிரமாய் உயிர் அழிவுகளைச் சந்தித்து,
இழிவின் எல்லை தொட்டு ஈழத்தமிழர்கள் நின்ற வேளையில்,
முன்னைய ஜனாதிபதி மஹிந்த மட்டும்,
‘தமிழர்களும் நம் சகோதர்கள்தான்,
இறந்த போராளி இளைஞர்களும் எம் பிள்ளைகள்தான் என்று நினையுங்கள்,
நாம் செய்த தவறே அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது,
இருபக்கமும் பேரழிவைச் சந்தித்து விட்டோம்.
இனியேனும் பகை மறந்து ஒருமித்து வாழ்வோம்’ என,
சிங்கள மக்களுக்கு உரைத்திருப்பாரேயானால்,
அவர் ஒரு சரித்திரப் புருஷராகியிருப்பார்.
இவ் இலங்கை மண் மீண்டும் சொர்க்கமாய் மாறியிருக்கும்.

♦  ♦

என்ன செய்ய?
இலங்கையில் விதியின் விளையாட்டு விட்டபாடில்லை.
‘மஹிந்தவுக்கு’,
சரித்திரத்தில் தன் பெயரைப் பதிவு செய்வதைவிட,
பதவிச் சுகத்தை பறிகொடுக்காமல் விடுவதிலேயே அதிக அக்கறை இருந்தது.
அதனால்த்தான் ஒரு பக்கம் தமிழர்கள் துன்பத்தால் துவண்டு கிடக்க,
அது பற்றிய எந்தக் கவலையுமில்லாமல்,
காலிமுகத்திடலில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி,
பகை விதையை மீண்டும் விதைத்து விளைவித்தார்.
ஏற்றமிகு நம் இலங்கைத்தாயின் மடியில் மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டார்.

♦  ♦

ஆண்டுகள் பல ஓடிவிட்ட இன்றைய நிலையிலும்,
முன்னைய ஜனாதிபதியின் பாதையைப் பின்பற்றி இனப்பகை வளர்த்து,
தத்தம் தலைமையை உறுதி செய்ய முனையும் தலைவர்கள்
இத்தேசத்தின் இரண்டு இனத்தாரிலும் எழுச்சி பெற முயன்று வருவதுதான் கொடுமை.
இரத்த வெள்ளத்தில் குளித்து எழுந்த பின்பும்;,
அனுபவப்பதிவில்லாத அசடர்கள் அவர்கள்.
அழிவின் பாதிப்பை அறியாத அறிவீனர்கள்.
அறிவைப் புறந்தள்ளி வெற்றுணர்ச்சியின் வீம்பையே தலைமைப் பண்பாகக் கருதும்,
அத்தகைய தலைவர்களைப் பின்பற்றவும்,
இரு இனத்திலும் இன்றும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.
அழிவுக்கு மீண்டும் மீண்டும் வித்திட நினைக்கும்,
அவ் அறிவிலிகளை என் செய்ய?

♦  ♦

இயற்கை,
இந்நிலையில்த்தான் பேரினத்தார்க்குப் பேரிடர் விளைத்திருக்கிறது.
‘நமக்கு அழிவு நிகழ்த்திய மாதத்திலேயே,
அவர்க்கும் அழிவு நிகழ்ந்த  அதிசயத்தைப் பார்த்தீர்களா?’ என்று,
மனிதாபிமானமே இல்லாமல்,
மானுட வீழச்சியை மகிழ்ந்து கொண்டாட நினைக்கின்றனர் சிலர்.
‘பேஸ்புக்கிலும்’ ‘டுவிற்றரிலும்’ ‘வாட்சப்பிலும்’ ‘வைபரிலுமாக’,
தம் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்து,
மானுட வீழ்ச்சியில் மகிழ்வு கொண்டாடுகிறது அக்கீழ்மைக் கூட்டம்.

♦  ♦

ஆனாலும் மானுடம் மாளவில்லை.
அச்சிறுமதியார் செயலையும் தாண்டி,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்தம் மானுட நேசிப்பை,
உலகறிய உரத்துச் சொன்ன சங்கப் புலவர்தம்,
பாரம்பரியத்தில் வந்த தமிழர்தாம் நாம் என நிரூபித்து,
இடருற்ற பேரினத்தார்க்கு கைகொடுக்கவும் கைகொடுப்பிக்கவுமாய்,
முனைந்து நிற்கும் தமிழ்ச்சமூகம் சார்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகள்,
தமிழினத்தைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன.

♦  ♦

இடருற்ற சிங்கள மக்களுக்கு உதவுவதற்காய்,
தமிழ் மக்கள் மத்தியில் உதவி கோரி நிற்கிறது அகில இலங்கை இந்துமாமன்றம்.
அதுபோலவே வடமாகாண வர்;த்தகர்சங்கம்,
பேரினத்தார்க்கு உதவ பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
இப்படியாய், இன்னும் பல அமைப்புக்களின் முயற்சிகள் பற்றி,
அடுத்தடுத்து வரும் செய்திகளைக் கண்டு,
தமிழர்தம் மனங்களில் மானுடம் சாகவில்லை எனும் உண்மை தெளிவாக,
தலைநிமிர்ந்து நிற்கிறோம் நாம்.

♦  ♦

எல்லாவற்றிற்கும் மேலாக ஜூன் முதலாம் திகதியாகிய இன்று,
ஊடகங்களில் வெளிப்பட்டிருக்கும் ஓர் செய்தி,
உள்ளத்தில் உவப்பையும், உற்சாகத்தையும் விளைவிக்கிறது.
அமெரிக்காவில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின்,
தலைமைப் பிரதிநிதியாகிய விசுவநாதன் உருத்திரகுமார்,
‘இயற்கை அனர்த்தத்தால் இடருற்ற இலங்கை மக்களுக்கு உதவ முன்வாருங்கள்’ என,
புலம்பெயர் தமிழர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுதான் ஆனந்தம் தந்த அச்செய்தி.
பாராட்டப்படவேண்டிய நல்ல முன்னுதாரணம்.

♦  ♦

போரும் பகையும் புலம்பெயர் தமிழர்களுக்கு பொழுதுபோக்கு..
தமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு,
நம்;மக்களின் பாதுகாப்பைப் பலயீனப்படுத்துவதே அவர்கள் வேலை..
தமிழர்களை குறுகிய மனம் எனும் குட்டைக்குள் தள்ளுகிறவர்கள் அவர்கள்..
இங்ஙனமாய் இதுவரை புலம்பெயர் தமிழர்மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை,
உருத்திரகுமாரின் அறிக்கை உடைத்தெறிந்திருக்கிறது.
இனப்பகை கடந்து சிந்திக்கவும் எங்களால் முடியும் என உரைத்திருக்கிறார் அவர்.
பாராட்டுக்கள்.

♦  ♦

தமிழர்கள், யார்க்கும் எதிரிகள் அல்லர்.
அவர்கள் தமக்கான நியாயபூர்வமான உரிமைகளைக் கோரியும்,
அநியாயமாய் தம் மேல் திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர்த்துமே போராடி வருகின்றனர்.
தமது உரிமைகளைக் கோரும் அதே நேரத்தில்,
மற்றையவர் உரிமைகளை மதிக்கவும், மானுடத்தை நேசிக்கவும் அவர்கள் தயங்கார் எனும்,
உயரிய செய்தியை பேரினத்தார்க்கு இயற்கை விளைவித்திருக்கும் இவ் இடர் நேரத்தில்,
தெளிவாக, துணிவாக, நியாயபூர்வமாக தமிழினம் உரைத்திருக்கிறது.

♦  ♦

புறமுதுகிட்டவனோடு போர் செய்தல் ஆகாது என,
போர்க்களத்திலேயே அறம் பேணி நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்.
அந்நிமிர்வை இன்று தக்கநேரத்தில் தரணிக்கு நிரூபித்த,
தக்கார் அனைவரையும் தமிழினத்தார் வணங்கி நிற்கின்றனர்.
தமிழர்தம் இந்த நேசிப்புச் சமிக்ஞையை,
பேரினத்தாரின் இதயங்கள் நேர்மையாய்க் கவனிக்குமாயின்,
இம்மண்ணில்  பல தசாப்தங்களாய் இனங்களைப் பிரித்து நீண்டு கிடக்கும்,
இனப்பிரச்சினை எனும் இரும்பு வேலி,
நூல்வேலியாய் நொடியில் அறுந்து போம்.
இலங்கை அன்னை ஏற்றமுறுவாள்.
அவ் ஏற்றத்திற்கு வழி செய்து,
இடருற்று பேரினத்தார் இருக்கும் இந்நேரத்தில்,
‘நாம் இருக்கிறோம் அஞ்ஞாதீர்!’ என,
நல்ல தருணத்தில் நட்புக்கரம் நீட்டியுள்ள தமிழினத்தார் அனைவரையும்,
மனமார வாழ்த்துகிறேன்.
வள்ளுவர் வழிநின்று கேட்டிலும் உறுதி விளைவித்திருக்கும் அப்பெரியாரை,
போற்றி மகிழ்கிறது என் உள்ளம்.

♦  ♦

முடிந்து போன தலைமுறையோடு மூண்ட நம் இனப்பகை முடியட்டும்.
புதிய தலைமுறை பகையில்லாப் புத்திலங்கையை உருவாக்கட்டும்.
இனம் சார்ந்த பிரச்சினைகளில் வீரியத்தோடு செயற்படும்,
நம் பல்கலைக்கழக இளைஞர்களுக்கு ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.
உங்கள் உயர்வை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் தருணம் இது.
எல்லா விடயங்களிலும் ஒன்றுகூடி இயங்குவது போலவே,
பேரினத்தார் பேரிடர்ப்பட்டிருக்கும் இந்நேரத்திலும்,
ஒன்றுகூடி உதவிக்கரம் நீட்ட அவர்தமை நாடி ஓடிச் செல்லுங்கள்.
கூட்டம் கூடி, குழுக்கள் அமைத்து,
பரிதவிக்கும் மக்கள் வாழும் பகுதிக்கெல்லாம் உங்களின் பயணம் உடன் நடக்கட்டும்.
ஆகா! இவர்க்கா நாம் தவறிழைத்தோம் என,
அவர்களை ஏங்க வைக்க கிடைத்திருக்கும் தருணம் இது.
அதனை விட்டுவிடாதீர்கள்.
நீங்கள்தான் இம்மண்ணின் நாளைய தலைவர்கள்.
அழுக்கை விதைத்து அசிங்கத்தை அறுவடை செய்த,
முன்னைய தலைவர்களைப் போல அல்லாமல்,
அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்ய நீங்கள் முன்வரவேண்டும்.
இஃது என் அன்பு வேண்டுகோள்.

♦  ♦

நிறைவாக,
வெள்ள அனர்த்தம் தொடங்கி ஒருவாரம் முடிந்திருக்கும்,
ஜூன் மாதம் பிறந்த இன்றைய நிலையிலும்,
தமிழ்த்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் எவரிடமிருந்தும்,
சிங்கள மக்களுக்கான அனுதாபச் செய்திகளோ, ஆதரவு முயற்சிகளோ,
வெளிவந்ததாய்த் தெரியவில்லை.
தம் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி,
இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் சென்று பணியாற்ற,
அவர்களுள் எவரும் இன்றுவரை முயன்றதாயும் அறியவில்லை.
அனைத்து இலங்கையருக்கும்  பொதுவான,
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்றிருக்கும் சம்பந்தன் ஐயாவும்,
இவ் இடர்கண்டும் மௌனமாய் இருக்கிறார்.
அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் நம் வடமாகாண முதலமைச்சரும்,
இதுவரை இவ் இடர் பற்றி ஏதும் பேசியதாய்த் தெரியவில்லை.
அனைத்துத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து,
இன்று இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் போய் நின்றிருந்தால்,
எத்துணை பெருமையாய் இருந்திருக்கும்.
தலைவர்கள்தான் மக்களுக்கு வழிகாட்டவேண்டும்.
இங்கோ மக்கள் தலைவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
என்ன செய்ய? நம் விதி அப்படியிருக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவரின் அறிக்கையின் பின்னேனும்,
நமது நாடுகடவாத் தலைவர்களின் புத்தியில் உண்மை உறைக்கட்டும்!
  ♦  ♦  ♦
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.