சந்தியா வந்தனம்!

சந்தியா வந்தனம்!
 
லகு இருள், ஒளி என இரு நிலைப்பட்டது.
இவ்வுலகின் அனைத்து விடயங்களிலும்,
இவ் இருளும் ஒளியும் கலந்துள்ளன.
வறுமை இருள். செல்வம் ஒளி.
மடமை இருள். அறிவு ஒளி.
சீற்றம் இருள். அன்பு ஒளி.
துன்பம் இருள். இன்பம் ஒளி.
இங்ஙனமாய் அனைத்திலும் பரவிய இவ்விருளும் ஒளியும்,
ஒவ்வொரு நாளிலும்,
ஒவ்வொரு வாரத்திலும்,
ஒவ்வொரு மாதத்திலும்,
ஒவ்வொரு ஆண்டிலும் பதிந்துள்ளன.
ஒரு நாளில் கலந்திருக்கும்
ஒளியையும் இருளையும் பகல் இரவு என,
தெளிவுறத் தெரிந்திருக்கும் நாம்
வாரம், மாதம், வருடம் என்பவற்றில்,
அவை பொருந்தியிருக்குமாற்றை,
தெளிவுற அறிந்திலேம்.
அறிதல் நம்கடன் அன்றோ?
 


➧➧➧

ஒரு நாளானது,
ஒளியில் தொடங்கி இருளில் முடிவது போலவே,
ஒரு வாரமும் ஒளியில் தொடங்கி இருளில் முடிகின்றது.
ஒரு வாரத்தின் ஏழு நாட்களும்,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களுக்குரியனவாம்.
கால ஓரையின்படி,
அவ்வக் கிரகங்களுக்குரியதான நாளின் முதல் ஓரை,
அவ்வக் கிரகங்களுக்குரியதாய் அமைவதை,
பஞ்சாங்கங்களில் காணலாம்.
அதனாலேயே,
அந்நாள் அக்கிரகத்திற்குரிய நாளாய் உரைக்கப்படுகிறது.
வாரத்தின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை.
ஞாயிறு - சூரியன், கிழமை - உரிமை.
சூரியனுக்கு உரிமையானதால்,
அந்நாள் உன்னத ஒளி நாளாம்.
பின்னர் ஒளி இறக்க வரிசைப்படியே,
மற்றைய நாட்கள் வகுக்கப்படுகின்றன.
ஒளி பொருந்திய,
சூரியனுக்குரிமையான நாளில் தொடங்கும் வாரம்,
நிறைவில்,
இருளான சனிக்குரிமையான நாளில் முடிவடைகின்றது.
இதுவே,
ஒளியில் தொடங்கி இருளில் முடியும் வார ஒழுங்காம்.

➧➧➧

அதுபோலவே ஒரு மாதமும்,
ஒளியாலும் இருளாலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
திங்கள் என்பது மாதத்திற்கான மற்றொரு பெயர்.
அப்பெயர் சந்திரனைக் குறித்தே அமைக்கப்பட்டது.
சந்திரன்,
இருபத்தேழு நட்சத்திரங்களையும்,
கடக்க எடுக்கும் நாட்களே,
ஒரு மாதமாம்.
அதனால்,
ஒரு மாதமானது,
சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே,
அமைக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.
சந்திரனின் ஒளிக் காலத்தையும், இருட்காலத்தையும்,
அடிப்படையாகக் கொண்டே,
ஒரு மாதம் இரு பகுதிகளாய் பிரிக்கப்படுகின்றது.
சந்திரன் பூரண ஒளி பெற்று நிற்கும் பௌர்ணமி நாளிலிருந்து,
மெல்ல மெல்ல ஒளி குன்றத் தொடங்குகின்றது.
அது முற்றாய் ஒளி குன்றிப்போகும் நாள் அமாவாசையாம்.
இவ்விரண்டு நிகழ்வினதும் தொகுப்பான நாட்களே,
ஒரு மாதம் எனப்படுகின்றது.
அமாவாசையிலிருந்து பௌர்ணமிவரை,
ஒளி வளர்ந்து வரும் நாட்கள்,
ஒரு மாதத்தின் ஒளி நாட்களாய்க் கருதப்பட்டு,
அம் மாதத்தின் ‘பூர்வபக்கம்’ எனப்படுகின்றன.
அதுபோலவே பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை,
ஒளி குறைந்து வரும் நாட்கள்,
ஒரு மாதத்தின் இருள் நாட்களாய்க் கணிக்கப்பட்டு,
அம்மாதத்தின் ‘அபரபக்கம்’ எனப்படுகின்றன.
‘பூர்வபக்கம்’, ‘அபரபக்கம்’ எனும் இவையே,
ஒரு மாதத்தின் ஒளி, இருள் பகுதிகளாம்.

➧➧➧

இவ் ஒளியிருள் அடிப்படையிலேயே,
ஓராண்டினையும்,
ஆன்றோர் இரு பகுதிகளாய்ப் பிரித்தனர்.
ஓராண்டு என்பது சூரியனின் இயக்கம் கொண்டு
கணிக்கப்படுவது.
பன்னிரண்டு இராசிகளையும்,
சூரியன் கடக்க வருவது ஓராண்டாம்.
ஓராண்டில் சூரியனின் ஒளி மிகுந்த காலம்,
‘உத்தராயணம்’ ஆகும்.
இருள் சூழ்ந்த காலம் ‘தெட்சணாயனம்’ ஆகும்.
இங்ஙனமாய்,
ஒளி, இருள் கொண்டே,
ஓராண்டும் இரு பகுதிகளாய்ப் பிரிக்கப்படுகின்றது.
தையிலிருந்து ஆனிவரையிலான காலம்,
ஓராண்டின் ஒளி பொருந்திய ‘உத்தராயனப்’ பகுதியாகும்.
ஆடியிலிருந்து மார்கழிவரையிலான காலம்,
ஓராண்டின் இருள் பொருந்திய ‘தெட்சணாயனப்’ பகுதியாகும்.

➧➧➧

இருளும் ஒளியும் நம் அறிவால் தெளிவாய் அறியப்படுவன.
இவ்விரு நிலை தவிர,
இருள் முடிந்து ஒளி தோன்றும் போதும்,
ஒளி முடிந்து இருள் தோன்றும் போதும்,
இருளும், ஒளியும் கலப்பதான ஒரு நிலை தோன்றும்.
இருளும், ஒளியும் கலந்து தோன்றும் நிலை,
தனித்த ஒளி போன்றோ தனித்த இருள் போன்றோ,
தெளிவுற அறிவால் விளங்கப்படாது அறிவை மயக்கி நிற்கும்.
ஒளியும், இருளும் சந்திப்பதான இந்நிலையினையே,
‘சந்தி’ என்கிறோம்.
சந்திக்கும் இடத்தைச் ‘சந்தி’ என்பது தமிழ் வழக்கு.

➧➧➧

இருளும் ஒளியும் மயங்குவதான அச்சந்தி நிலையில்,
நம் அறிவும் மயக்கமுறும்.
அறிவு மயக்கமுறும் அவ்வேளைகளில்,
நல்லியல்புகளுக்குக் காரணமான சாத்வீக குணமும்,
முயற்சிகளுக்குக் காரணமான இராஜச குணமும் குன்ற,
பிழைகளுக்குக் காரணமான தாமச குணம் மிகும்.
தாமச குணத்தின் அடிப்படை மயக்கமேயாம்.
அக்குணத்தால் சோர்வு, காமம் முதலிய பண்புகள் அதிகரிக்கும்.
அது நோக்கியே மாலைப் பொழுதை,
காமம் மலரும் பொழுதாய் வள்ளுவரும் உரைக்கின்றார்.
காலையரும்பி பகலெலாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்  என்பது குறள்.

➧➧➧

ஒளியிலிருந்து இருளுக்குச் செல்வது
இருளிலிருந்து ஒளிக்குச் செல்வது என,
இச்சந்தி நிலை இருவகைப்படும்.
இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் சந்தி நிலை,
அறிவைத் தெளிவாக்கும் தன்மை கொண்டதால்,
மயக்க நிலை அன்றாம்.
அஃது தெளி நிலை என அறிக.
இரவிலிருந்து பகல் நோக்கிச் செல்வதான சந்தி நிலையில்,
நம் அறிவு தெளிவுறுவதால்,
அவ்வேளையில் மனம் ஒருமித்து,
இறைவனைத் தொழுது பயன் பெறுதல் கூடும்.
ஆதலால் அச்சந்தி நிலை உயர் வழிபாட்டிற்குரியதாம்.

➧➧➧

ஒளியிலிருந்து இருளுக்குச் செல்லும் சந்தி நிலை,
அறிவை மயக்கும் தன்மை கொண்டதால்,
அச்சந்தி நிலையில்,
நாம் தவறிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அவ்வேளையில் இறைவனைத் தொழுது,
மயக்கத்துள் அழுந்தி மாளாமல் இருக்க முயல்வதும்
அறிவுடையார் கடன்.
➧➧➧

மேற் காரணங்களை மனங்கொண்டு,
சந்தி நேரங்களில்,
வழிபாடு செய்வதன் அவசியத்தை உணர்ந்து,
நம் ஆன்றோர்,
‘சந்தியா வந்தனம்’ எனும் முறைமையை உருவாக்கினர்.

➧➧➧

இச்சந்தியா வந்தனம்,
நாள், வாரம், மாதம், வருடம் என,
பிரிவுபட்டு இயற்றப்படுகிறது.
அவ் வழிபாட்டு முறையை,
சற்று விரிய ஆராய்வாம்.

➧➧➧

நாம் முக்குணங்களுக்கு ஆட்பட்டவர்கள்.
சாத்வீகம், இராஜசம், தாமசம் என்பவையே,
அம் முக்குணங்களாம்.
இம் முக்குணங்களுள்,
சாத்வீகம் நல்லியல்புகளின் அடிப்படை.
இராஜசம் முயற்சிகளின் அடிப்படை.
தாமசம் தவறுகளின் அடிப்படை.
சாத்வீக குணத்தின் நிறம் வெண்மை.
இராஜச குணத்தின் நிறம் செம்மை.
தாமச குணத்தின் நிறம் கருமை.
ஒரு நாளின் காலைப்பொழுது வெண்மை ஒளி கொண்டது.
அதனால் அப்பொழுது சாத்வீகப் பொழுதாம்.
ஒரு நாளின் மதியப்பொழுது செம்மை ஒளி கொண்டது.
அதனால் அப்பொழுது இராஜசப் பொழுதாம்.
ஒரு நாளின் இரவுப்பொழுது கருமை நிறம் கொண்டது.
அதனால் அப்பொழுது தாமசப் பொழுதாம்.
இம் முக்குணங்களும் மாறும் அடிப்படையைக் கொண்டு,
குணக் கலப்பினாலான சந்தி நிலை,
ஒருநாளில் மும்முறை தோன்றுமாம்.
இரவு நீங்கி உதயம் நிகழும்போது,
தாமசம் நீங்கிச் சாத்வீகம் பிறப்பதான முதற் சந்தி தோன்றும்.
காலை நீங்கி மதியம் தொடங்கும்போது,
சாத்வீகம் நீங்கி இராஜசம் பிறப்பதான,
இரண்டாம் சந்தி தோன்றும்.
மதியம் நீங்கி இரவு தொடங்கும்போது ,
இராஜசம் நீங்கித் தாமசம் பிறப்பதான,
மூன்றாவது சந்தி தோன்றும்.
முதலதை, காலைச்சந்தி என்றும்,
இரண்டாமதை, பகற்சந்தி என்றும்,
மூன்றாமதை, மாலைச்சந்தி என்றும் உரைப்பது வழக்கம்.
ஒரு நாளின் இம்மூன்று சந்திகளிலும்,
சந்தியா வந்தனம் இயற்றுவது,
நல்லோரின் கடனாம்.

➧➧➧

பகற்சந்தி,
ஒளி, இருட்கலப்பிற் தோன்றாது,
தனித்த ஒளி நிலையிலேயே தோன்றுமாம்.
வெண்மை, செம்மை ஒளிக் கலப்பினால் நிகழும் இச்சந்தி,
காலை புலர்ந்து மதியமாகும்,
பகலின் உச்சிப்பொழுதில் நிகழும்.

➧➧➧

ஒரு குணம் மற்றொரு குணமாக மாறும் சந்தியில்,
நின்ற குணம் பலயீனப்பட,
தோன்றும் குணம் வலிமை பெறும்.
ஆதலால்,
காலைச்சந்தியில் சாத்வீகக் குணமும்,
மதியச் சந்தியில் இராஜச குணமும்,
மாலைச் சந்தியில் தாமச குணமும்,
உச்சநிலை பெறுமாம்.
இவ் அடிப்படைகள் கொண்டே,
ஒரு நாளுக்குரிய சந்தியா வந்தன வழிபாட்டின்,
முக்கியத்துவம் பெறப்படுகிறன்றது.

➧➧➧

சாத்வீகம் நிறைந்ததான,
காலைச்சந்தி மிக உயர்ந்ததாம்.
இச்சந்தியில்,
தாழ்நிலையுற்ற குணம் உயர்நிலையடைகிறது.
அதனால்,
அச்சந்தியில் மயக்கம் நீங்கித் தெளிவுண்டாகிறது.
இருளான தாமச குணத்தில் இருந்து,
ஒளியான சாத்வீக குணத்திற்குச் செல்கையில்,
தாமசம் மிகக் குன்றி, சாத்வீகம் மிக உயர்ந்து நிற்றலால்,
இச்சந்தி மிக உயர்ந்ததாய்க் கருதப்படுகிறது.
அதனாலேதான் காலைச்சந்தி வழிபாடு,
மிகவும் போற்றப்படுகிறது.
இச்சந்தி வேளை கல்விக்குரியதாய் சொல்லப்படுவதும்,
இக்கருத்தை நோக்கியேயாம்.

➧➧➧
குணம்,உயர்நிலையிலிருந்து தாழ்நிலை மாற்றமடையும் போதே,
சந்திகளில்  மயக்கநிலை தோன்றுமாம்.
சாத்வீகத்திலிருந்து இராஜசம் செல்வதான,
மதியச் சந்தியும்,
குணத் தாழ்ச்சியால் மயக்கத்திற்குரியதேயாம்.
அதனால் அச்சந்தி வழிபாடும் அவசியமாம்.

➧➧➧

மாலைச் சந்தியில்,
குணம்,
மேலும் கீழ்நிலைப்பட்டுத் தாமசமாகிறது.
ஆதலால்,
ஒளியிலிருந்து இருளுக்குச் செல்வதான மாலைச் சந்தியில்,
சாத்வீகம் மிகக்குன்றி தாமசம் மிகவுயர்ந்து நிற்குமாம்.
அதனால் இச்சந்தியே பெரும் மயக்கத்திற்குக் காரணமாகிறது.
இம் மயக்கத்திற்கு ஆட்படாமல் காப்பதற்காய் இயற்றப்படும்,
மாலைச் சந்தி வழிபாடும்,
மிக அவசியமானதாம்.
தாமசம் பிறப்பதான இம் மாலைச் சந்தி வழிபாட்டில்,
மயக்கநிலைக்கு முற்றாய் ஆட்பதாதிருக்கவே,
அவ் வழிபாட்டை இருந்து இயற்றலாகாது என,
ஆசாரக் கோவை சொல்லிற்று.

➧➧➧

இவ்வடிப்படைகள் கொண்டே,
தெளிவின் உச்ச நிலையான காலைச் சந்தியிலும்,
மயக்கத்தின் உச்ச நிலையான மாலைச் சந்தியிலும்,
வழிபாடு இயற்றுதல் வலியுறுத்தப்பட்டது.
இவற்றுள் முதலது வலிமை பெறுதற்காய் இயற்றப்படுவது.
மற்றையது குற்றம் நீங்குதற்காய் இயற்றப்படுவது
மதியச்சந்தி இவ்விரு இயல்பிலும் இடைநிலையுற்றதால்,
மேற்சந்திகளின் அடுத்த நிலையிலேயே,
இச்சந்தி வழிபாடு இயற்றப்படுகிறது.
ஒரு நாளில்,
இம் மூன்று சந்தியா வந்தனங்களையும் இயற்றுதல்,
இயற்கையைப் பகுத்தறிந்த அறிவோர் தம் கடனாம்.

➧➧➧

வாரத்தின் சந்தி வழிபாடு இருள், ஒளி அடிப்படையில்,
இயற்றப்படுகிறது.
ஒளி வாரமாகிய ஞாயிறும்,
இருள் வாரமாகிய சனியும்,
வாரத்தின் சந்தியா வந்தன வழிபாட்டுக்குரிய நாட்களாய்,
கணிக்கப்பட்டுள்ளன.
சனியில் தாமசம் முற்றுப்பெற்று,
ஞாயிறில் சாத்வீகம் உதிக்கின்றது.
இருள் நீங்கி ஒளி உண்டாகும் முன்,
இருளின் தொடக்கு அகற்ற,
உடலை நீராலும் உள்ளத்தை வழிபாட்டாலும்,
தூய்மை செய்தல் மரபாம்.
அதுநோக்கியே,
சனி நீராடும் மரபு உருவாகிற்று.
‘சனி நீராடு’ என ஒளவை உரைத்ததும்,
இக்கருத்தினாலேயாம்.
சனிக்கிழமை இருள் நிறைந்த நாள் ஆகையாற்றான்,
அந்நாளில் மங்கல காரியங்கள் விலக்கப்படுகின்றன.

➧➧➧

இவ் இருள், ஒளி அடிப்படையிலேயே,
மாதச் சந்திகளும் தீர்மானிக்கப்படுகின்றன.
நிறை இருள் நாளான அமாவாசையும்,
நிறை ஒளி நாளான பௌர்ணமியும்,
வழிபாட்டுக்குரிய தினங்களாய் அமைக்கப்பட்டன.
இவை மாதச் சந்திகளாம்.
சிலர் அமாவாசைத் தினத்தை,
அமங்கல தினமாய்க் கருதுவர்.
அது தவறாம்.
அமாவாசை தினம் சாத்வீக சந்தியாதலால்,
அத்தினம் வழிபாட்டிற்கும்,
மங்கல காரியங்களுக்கும்,
மிக உகந்த தினமாம்.

➧➧➧

வார, மாதச் சந்திகளைப் போலவே,
ஒளி, இருள் கொண்டே தீர்மானிக்கப்படும்,
ஆண்டுச் சந்திகளும் வழிபாட்டுக்குரியவை.
தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரையிலான,
உத்தராயண மாதங்கள் ஒளி மாதங்கள் எனக் கண்டோம்.
அதுபோலவே ஆடியிலிருந்து மார்கழி வரையிலான,
தெட்சணாயன மாதங்கள் இருள் மாதங்களாம்.
முதற் சொன்ன அடிப்படையில்,
ஆடி மாதச் சந்தி ஒளியிலிருந்து இருளுக்குச் செல்லும்,
தாமசச் சந்தியாகவும்,
மார்கழி மாதச்சந்தி இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும்,
சாத்வீகச் சந்தியாகவும் அமைகின்றன.
ஓராண்டின் மார்கழிமாதச் சந்தியே,
இயற்கையில் சாத்வீகம் அதி உச்சம் பெற்ற காலமாகும்.
அக்காலத்தில் செய்யும் வழிபாடு,
மிக உயர்ந்ததாய்க் கருதப்படுகிறது.
சாத்வீகம் நிறைந்த இம் மாதத்தின் புனிதம் நோக்கியே,
‘மாதங்களில் நான் மார்கழியாகிறேன்’ என,
‘கீதை’யில் கண்ணன் உரைத்தனன்.

➧➧➧

சைவர்களாலும், வைஷ்ணவர்களாலும் அனுஷ்டிக்கப்படும்,
பாவை நோன்பு,
மார்கழி மாதத்தில் அமைந்ததுவும் அது நோக்கியே.
இவ் விரத காலங்களில் பாடப்படும்,
திருவெம்பாவை, திருப்பாவை என்னும் தோத்திரங்கள்,
துயிலெழுப்பும் பாணியில் அமைக்கப்பட்டிருப்பதன்,
பொருத்தப்பாட்டினையும் கண்டுணர்க.

➧➧➧

ஆடி மாதச்சந்தி தாமசச் சந்தி ஆதலால்,
ஆடி மாதம் நம் வழக்கத்தில்,
பீடை மாதமாய்க் கருதப்படுகிறது.
இம் மயக்க மாதத்தில் குழந்தைகள் உருவானால்,
அவை துர்க்குணங்கள் நிறைந்ததாய் உலகிற் தோன்றும்.
அது நோக்கியே,
கணவன், மனைவியர்,
இவ் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கப்படுகின்றனர்.
இம் மாதத்தில் மங்கல காரியங்கள் விலக்கப்படுவதன்
காரணமும் இஃதே.

➧➧➧

மார்கழி மாதம்,
சாத்வீகச் சந்தி மாதம் எனக் கண்டோம்.
மார்கழி மாதத்தில் வரும்,
திருவாதிரை நட்சத்திரக் காலமே,
அச் சந்தி முகூர்த்தமாம்.
அத் திருவாதிரை நட்சத்திரத்தினை நிறைவாகக் கொண்டு,
முன் பத்து நாட்கள்,
திருவெம்பாவை விரதம் அனுட்டிக்கப்படும்.
இத் திருவாதிரை நட்சத்திரத் தினத்தில்,
சிவாலயங்களில் ‘ஆருத்திரா தரிசனம்’ நிகழ்த்தப்படும்.
ஆருத்ரை என்பது திருவாதிரைக்காம் ஒத்த கருத்துச் சொல்.
அந் நட்சத்திரத்தில் நிகழும் தரிசனம் என்பதால்,
அச் சிவதரிசனம் ஆருத்ரா தரிசனம் எனப்பட்டது.

➧➧➧

இவ் ஆருத்ரா தரிசனத் தினத்தில்,
சிவாலயங்களில் நடேஸ்வர மூர்த்திக்கு,
பெரும் அபிஷேகங்கள் நிகழ்த்தப்படும்.
ஓர் ஆண்டின் உத்தராயண, தெட்சணாயன காலங்கள்,
தேவருலகின் பகல், இரவாய் கருதப்படுவன.
தெட்சணாயன நிறைவு மாதமான மார்கழி மாதமே,
தேவர்தம் காலைச்சந்தி வழிபாட்டுக் காலமாம்
அதனாலேதான்,
அக்காலம் எவர்க்கும் வழிபாட்டிற்குரியதாகிறது.

➧➧➧

மேற்சொன்ன நாள், வார, மாத, ஆண்டுச் சந்திகளைப் போலவே,
ஊழிக் காலமும் பின் உலகு உதிக்கும் காலமும்,
இருள் ஒளிக்காலங்களாய்க் கருதப்படுகின்றன.
ஊழிக் காலத்தில் இறைவன் உலகனைத்தையும் ஒடுக்கி,
தன் ஐந்தொழிலையும் உள்வாங்கி அமைதியுற்றிருப்பன்.
பின் அவ் ஊழிக்கால முடிவுச் சந்தியில்,
தன் ஐந்தொழில் நடனம் புரிந்து,
உலகை மீண்டும் உருச் செய்வன்.
அங்ஙனம் இறைவன் உலகை உருச் செய்ய,
ஐந்தொழில் நடனம் புரியும் வேளையும்,
இம் மார்கழி மாத,
திருவாதிரை நட்சத்திர வேளையாகவே கருதப்படுகிறது.
அது நோக்கியே மார்கழித் திருவாதிரையின்போது,
ஆலயங்களில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகமும்,
தொடர்ந்து நிகழும் உற்சவத்தில்,
ஐந்தொழில் நடனமும் நிகழ்த்துவிக்கப்படுகின்றன.

➧➧➧

இம் மார்கழித் திருவாதிரை உற்சவத்தின் போது,
வீதியுலா வரும் நடராஜ மூர்த்தியை,
கண்ணாடியில் தரிசனம் செய்யும் வழக்கம் ஒன்று உண்டு.
இறைவனது விம்பமே இவ்வுலகாம்.
இவ்வுற்சவத்தில் இறைவனது விம்பத்தைத் தரிசித்தல்,
தன் ஆடல் ஐந்தொழிலால்,
இறைவன் உலகைப் படைத்ததன் உண்மையை
உணர்த்தும் நிகழ்வேயாம்.
இவ்வுலகு இறையாற் படைக்கப்பட்டது.
நம் அறிவுக்கு அகப்படா இறையை,
நம் அறிவுக்கு அகப்படும் இறை விம்பமான,
இவ்வுலகைக் கொண்டே உணர்தல் கூடுமாம்.
நடராஜ விம்பத்தை,
கண்ணாடியில் தரிசிப்பதன் உட்பொருள்களில்,
இதுவும் ஒன்று.

➧➧➧

மார்கழி மாதத்திலும்,
மங்கல காரியங்கள் விலத்தப்படுகின்றன.
அடிப்படை புரியாத பலர்,
அது கொண்டு,
மார்கழி மாதத்தையும்,
பீடை மாதமாய் உரைத்து மயங்குகின்றனர்.
அவர் கருத்துத் தவறாம்.
ஆன்ம பலம் பெறத் தக்க,
அதியுயர் சாத்வீக ஆண்டுப் பகுதியில்,
மங்கல காரியங்களை விதித்தால்,
மக்கள் வழிபாடியற்றி ஆன்ம பயன் பெறாமல்,
உலகியலில் மூழ்கி அக்காலத்தை வீண் செய்வர்.
அது நோக்கியே,
மார்கழி மாதத்தில் மங்கல காரியங்கள் விலத்தப்பட்டன.

➧➧➧

நாள் வாரத்துள் அடக்கம்.
வாரம் மாதத்துள் அடக்கம்.
மாதம் வருடத்துள் அடக்கம.
எனவே,
நாள், வார, மாதச் சந்தி வணக்கம் செய்யாதோரும்,
மார்கழியில் வரும்,
வருடச் சந்தி வணக்கம் செய்து உய்யலாம்.
நாம் அச்சந்தி வழிபாட்டைச் செய்து உய்யும் பொருட்டே,
மார்கழியில் திருவாதிரைத் திருநாளை,
நம் மூதாதையர் அமைத்தனராம்.
என்னே அவர்தம் கருணை!

➧➧➧➧➧➧
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.