செய்தியும்.. சிந்தனையும் .. 03 | தாக்குப்பிடிக்குமா தமிழ்நாடு? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

செய்தியும்.. சிந்தனையும் .. 03 | தாக்குப்பிடிக்குமா தமிழ்நாடு? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
செய்தி
 
நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: நடிகர் கமல்ஹாசன்
தினமணி 19.07.2017

இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன்
மாலைமலர் 08.08.2017
 
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
சிந்தனை
 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.          
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் :467)
 
பொருள்: (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
 
 
 
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
தாக்குப்பிடிக்குமா தமிழ்நாடு?
 

லகம் பூராகவும் உள்ள தமிழர்களுக்கு இப்போது இறங்குகாலம் போல் தெரிகிறது.
ஈழத்துத் தமிழர்களுக்கு மட்டும் தான் இடர் என்றில்லை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அதே கதிதான்.
இங்கு நாம் எதிரிகளால் இடருறுகிறோம். அங்கோ அவர்களே அவர்களுக்கு இடர் விளைவித்துக் கொள்கிறார்கள்.
காலத்தின் கோலமன்றி வேறென்ன? 
பெரும்புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள்,
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என ஆளுமைத் தலைவர்களை முன்னிறுத்தி கடகடவென உச்சந்தொட்டன.
இன்று பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என ஆளுமை அற்ற தலைவர்களால்,
வளர்ந்த அதே வேகத்தில் இறங்கத் தொடங்கியிருக்கின்றன.
தனது ஆணவப் போக்கால் பலரது வெறுப்பைச் சம்பாதித்தாலும்,
ஆளுமை பெற்று அசையாமல் நின்ற ஜெயலலிதாவின் மறைவோடு,
தமிழ்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் வெடித்திருக்கிறது.
ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனை காட்டி முதலமைச்சர் ஆகலாம் என நினைந்த சசிகலா,
இன்றைக்கு சிறைச்சாலைக்குள்.
காலில் விழுவதே கடைத்தேற வழி என்றிருந்த ஓ.பி.எஸ். திடீரென ஜெயலலிதா சமாதியில் ஞானம் பெற்று,
சசிகலாவுக்கு எதிராகப் புரட்சி கிளப்ப அவர் வகித்த பதவி பழனிச்சாமிக்குப் பரிசாகக் கிடைத்தது.
இன்று பழனிச்சாமியும் சசிகலா குழுவினருக்கு எதிரான புரட்சியாளர்கள் வரிசையில்.
ஆளுங்கட்சி மூன்றணியாகப் பிரிந்து கிடக்கிறது.
தேர்தல் சின்னத்திற்காக அவற்றில் இரண்டு அணிகள் ஒன்று சேர முனைந்து கொண்டிருக்கின்றன.
இங்ஙனமாய்க் குழம்பிய தமிழ்நாட்டு அரசியல் குட்டையுள் மீன் பிடிப்பதற்காய்,
மீண்டும் சினிமாத்துறையிலிருந்து புதிய வரவுகள் முனையத் தொடங்கியுள்ளன.
சினிமாத் துறையினரை மீறி தமிழ்நாட்டு அரசியலுக்குள் இனி எவரும் வரமுடியாது போல் தெரிகிறது.
சட்டத்துறையினரை நம்பி கெட்டது ஈழத்து அரசியல்.
சினிமாத்துறையிiரை நம்பி கெட்டது தமிழ்நாட்டு அரசியல்.
‘தாமரை’ வரவேற்க தாவி வரத்தயாராகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
கமலிடமும் திடீரென தர்ம ஆவேசம். ஆவேசத்தின் நோக்கம் அரசியல் பிரவேசம்.
ஜெயலலிதா காலத்தில் அஞ்சி ஒடுங்கி ஊரை விட்டே ஓடப்போகிறேன் என்றுரைத்த கமல்,
இன்று தர்மம் பேசி அரசுக்கு அடிக்கடி சவால் விடுகிறார்.
‘பூனை மெலிந்தால் எலி சுகம் கேட்குமாம்’ என்ற கதைதான்.
ரஜினிக்கூடாக தமிழ்நாட்டில் தாவிப்படர விளைகிறது ‘தாமரை’க்கொடி.
அரசியலில் பிரவேசிக்க ஆண்டவனின் அனுமதிக்காய்க் காத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இவர்  என்ன செய்யப்போகிறார்? என்று ஆண்டவனே பதிலறியக் காத்திருப்பார் போல.
பிற மாநிலக்காரன் தமிழ்நாட்டை ஆளுவதா? எனச் சீறிப்பாயும் சீமான் போன்றவர்களைப் புறந்தள்ளி,
ரஜினியின் அரசியல் பயணம் விரைவில் தொடங்கப்போவதாய் அறிக்கைகள் வந்தபடி இருக்கின்றன.
கமலோ நான் அரசியலுள் எப்போதோ பிரவேசித்துவிட்டேன் என்கிறார்.
 
இவ்விருவர்தம் அச்சுறுத்தலாலும், ஆளுங்கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சிகளும் சற்று அசைந்துதான் போயிருக்கின்றன.
தமிழ்நாட்டின் தலைவிதி என்னவாகப்போகிறதோ?
அரசியலுக்கு நடிகர்கள்தான் வரவேண்டும் என்ற முடிவிலிருந்து தமிழர்கள் என்றுதான் மாறப்போகிறார்களோ?
அது அவர்கள் விருப்பு. அரசியலில் நுழைய முற்படும் ரஜினி, கமல் எனும் இருவரில் அங்கீகரிக்கப்படத்தக்கவர் யார்?
ஆராயவேண்டிய விடயம் அதுவாகத்தான் இருக்கிறது.
நிதானம், மக்கள் நேசிப்பு, இறைநம்பிக்கை, சத்திய நோக்கு, 
அங்கீகரிக்கப்பட்ட குடும்ப வாழ்வு, செல்வப்பின்னணி என்பவை ரஜினியின் பலங்கள்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் ‘தாமரை’யின் ஆதரவு அவரது தனிப்பலம்.
மாற்று மாநிலத்தவர் என்கின்ற ஒன்றே ஒன்றுதான் அவரது பலயீனம்.
 
கமலைப் பொறுத்தவரை மேற்கூறிய தகுதிகளில் அவர் மிகவும் பின் நிற்கிறார்.
தனது இளமையை காலம் வேகமாய்க் கரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து,
இனி சினிமா எத்தனை தூரம் கைகொடுக்குமோ எனும் ஐயத்தில் 
தன்னை நிலைநிறுத்த அரசியலில் நுழைய ஆர்வமாய் முயல்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் வேரோட்டமாய் விரிந்து கிடக்கும் ஆத்மீகத்தில் உடன்பாடின்மை.
தமிழ்நாட்டில் காலாகாலமாய் தொடர்ந்து வரும் குடும்ப அமைப்பில் நம்பிக்கையின்மை,
தான் புதிதாய் வகுத்துக் கொண்ட தனி வாழ்விலும் பலதரமாய்ப் படுதோல்வி.
ரஜினி அளவிலான மக்கள் ஆதரவின்மை.
அரசியல் பின்னணி இன்மை என்பவை கமலினது பலயீனங்கள்.
தனி வாழ்வில் அவரது தோல்வி பகிரங்கமானது.
தனிவாழ்வை நாம் ஏன் ஆராயவேண்டும்? என சிலர் கேட்கலாம்.
தனி வாழ்வில் வெற்றிபெற முடியாதவர் பொதுவாழ்வில் வெற்றி பெறுதல் எங்ஙனம்?
திராவிட மரபில் ஊறிய தமிழ்நாட்டு அரசியலில்,
அவரது பிராமணர் என்ற ‘வர்ண’ அடையாளம்,
நிச்சயம் அவரை மேலெழும்ப விடப்போவதில்லை.
மேற்கூறியவை கமலினது ‘மைனஸ் பொயின்டுகள்’.
இங்ஙனமாய் சீர் தூக்க, அரசியல் அரங்கில் கமலைவிடப் பல படிகள் மேலே நிற்கிறார் ரஜினி.
ஆனால் முடிவெடுக்க முடியாத ஆளுமைக்குறைவும், 
நோயால் நிகழ்ந்திருக்கும் உடல் பலயீனமும் ஒன்றுசேர்ந்த ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ,
அவ்வருகை திராவிடர் கழகங்களிடமிருந்து தமிழ்நாட்டு அரசியலைப் பறித்து,
‘தாமரை’க்கட்சிக்கு அதனை தானம் செய்யமட்டுமே பயன்படும் போல் தெரிகிறது.
இது தமிழ்நாட்டுக்கு நலன்தரப்போகிறதா தீங்கிழைக்கப்போகிறதா என்பதைக் காலம்தான் முடிவு செய்யவேண்டும்.
அரை நூற்றாண்டுக்கு மேலான திராவிடகழகங்களின் ஆட்சிகள்,
ஏராளமாய்த் தவறுகளை இழைத்திருந்த போதும்,
தமிழ்நாட்டின் தனித்துவத்தை ஏதோ வகையில் இதுவரை காத்துவந்துள்ளன.
தேசிய நீரோட்டத்தில் இணையும் புதிய பாதை திறந்தால் அத்தனித்துவம் நிலைக்குமா?
அன்றேல் இன்றைவிட தமிழ்நாடு செழிக்குமா?
விடைக்காய்க் காத்திருக்கிறது வரலாறு.
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.