தனுவை ஒத்த தலைவன் - திருநந்தகுமார்
கவிதை முற்றம் 17 Nov 2017
உ
இனிய ஆங்கிலத் தமிழ் எழுந்தது
விந்தை தேவனின் விருப்பு வழியிலே
வீறு கொண்டது நடை பயின்றது
எந்தை கம்பனின் கழக மேறுபெற்
றினிய தாகவே நடை பயின்றிட
நந்த னென்றொரு தலைமை வந்நது
நாலு திக்கிலும் புகழ்மி குந்தது!
நீண்ட மூக்கதன் கூர் அழகதா?
நிமிர்ந்த வாக்கதன் நேர் அழகதா?
பூண்ட சத்திய நெறி பொலிந்திடப்
புரியும் தருமமாம் சீர் அழகதா?
சீண்டுகின்ற மறத்தைக் காய்கிற
சினத்தின்போதும் சிலிர்க்கும் அன்பினைத்
தூண்டுகின்ற மன வேர் அழகதா?
துலங்க வில்லையெம் தூய ஐயனே!
இணுவையம் பதி இருந்து புகழ்பெறு
எண்ணில் சாதனையாளர் வரிசையில்
தனுவை யொத்த தலைவ! உந்தனின்
தகவு கூட உள்ளது, அப்பனே!
அணுவையே பிளக்கின்ற சக்தியின்
ஆற்றல் சான்ற உரைவல் லாளனே!
மனுவை வெல்லுந் திருக்குறள் போலநின்
மகிமை யெங்கும் பரவ வாழ்கவே!
அணிசெய் பணி பல்லாயிரஞ் செய்து
ஆங்கில நாட்டும் தமிழ்மொழி நாட்டும்
துணிவே! நிமிர்வின் தூய உருவே!
தொடர்ந் தோடிடும் இளமை நன்கு
மணிவிழா வின்று காண்கிற தென்னும்
மகிழ்ச்சியில் மலர்ந்தது உள்ளம்,
கனிவே! அன்புக் கடலே! இன்னும்
காணுக நூறு பல் லாண்டே!
-அகில இலங்கைக் கம்பன் கழகம் சார்பில்
கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன்