தமிழில் தேசியகீதம் - சமாதான ஓவியத்திற்காய் இடப்பட்ட முதற்புள்ளி !

தமிழில் தேசியகீதம் - சமாதான ஓவியத்திற்காய் இடப்பட்ட முதற்புள்ளி !
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 யர்ந்த ஒரு முன்னுதாரணம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு,
இரண்டாந்தரமாக சுதந்திரதின விழாவில்,
தமிழில் தேசியகீதத்தைப் பாடியிருக்கிறார்கள்.
சுதந்திரதினவிழாவில் தமக்குரிய அங்கீகாரம் மீண்டும் கிடைத்ததில்,
சிறுபான்மை இனங்கள் மகிழ்ந்திருக்கின்றன.
இந்நிகழ்வு பற்றி இணையத்தள முகநூல்களில்,
பாராட்டியும், தூற்றியும் பல விமர்சனங்கள்.
 

 

 
கடந்த பல தசாப்தங்களாக,
உலக அளவில் சிறுபான்மையினராய் இருக்கும் சிங்களவர்கள்,
இலங்கை அளவில் தமக்குக் கிடைத்த பெரும்பான்மையை வைத்து,
இந்நாட்டின் தமிழர்களை வதைத்ததும், சிதைத்ததும் வரலாறு.
சிங்களவர்கள் என்று பொதுப்படச் சொல்வதுகூடத் தவறென்றே படுகிறது.
தமதும், தமது கட்சியினதும் வெற்றிக்காய்,
பேரினத் தலைவர்கள் சிலர் ஏற்றிய விஷத்தை உட்கொண்டு, 
பேரினவாதப் பித்துக் கொண்ட ஒரு சில குழுக்கள் செய்த அக்கிரமம் அது.
தமிழர்களின் வாழ்வில்,
சிங்களவர்களின் தாழ்வு இருப்பதாய்ச் சொல்லிச் சொல்லியே,
பேரினத்தின் பெருங்கட்சிகள் அனைத்தும், 
ஏன் சிறுகட்சிகள் கூட,
சிங்கள மக்களின் மனதைக் கலைத்தன.
அவர்கள் விதைத்த விஷ விதை மெல்ல மெல்ல வளர்ந்து,
இனமோதல்களாயும், இனக்கலவரங்களாயும் வெளிவந்தன.
முடிவில்,
இனங்களுக்கிடையிலான போராகவும் வெடித்து.
இச்சிறிய தீவின் பெரிய பெருமையை நாசம் செய்தது.
 
காலத்திற்குக் காலம் வெடித்த இனக்கலவரங்களால்,
தமிழ்மக்கள் பட்ட இன்னல்களுக்கு ஓர் அளவில்லை.
அவர்களை வீதியில் நிர்வாணப்படுத்தி உயிரோடு கொளுத்திய காட்சிகள்,
இன்றும் இணையத்தளங்களில் உலா வருகின்றன.
மிதவாதத் தமிழ்த்தலைவர்கள் இப்பிரச்சினையைத் தீர்க்க,
அகிம்சை ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது,
அதனையும்,
இம்சையைக் கையாண்டு இழிவுபடுத்தினர் இனவாதச் சிங்களத் தலைவர்கள்.
இனவாதிகள் செய்த இந்த இழிவே,
தனிஈழம் என்ற கொள்கையை நோக்கி,
தமிழ்த்தலைமைகளை நகர்த்திற்று.
 
தமிழ்த்தலைவர்கள் முன்வைத்த தனிஈழக்கொள்கை,
பிராந்திய, உலக அரசியல்ச் சூழல்களால்,
மெல்ல மெல்ல வலிமைபெற்று,
தமிழ் இளைஞர்களின் கையில் ஆயுதங்களை ஏற்றியதும்,
இனமோதல் பெரும் போராய் வெடித்ததும்,
அப்போரில் இருதிறத்தாரும் சேதங்களைச் சந்தித்ததும்,
தமிழினம் தனது தகுதியை நிரூபித்து,
பின் இறுதியில் தோற்றதுவும் உலகறிந்த வரலாறுகள்.
நிகழ்ந்த தோல்வியின்போது,
தமிழர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
அரசபலத்தைக் கையில் வைத்து,
போராளிகளை அழிப்பதாய்க் கூறி,
அப்பாவித் தமிழர்களையும் அரசு அழித்தபோது,
அதைக்கண்டு உலகே விதிர்விதிர்த்தது.
 
தமிழர்களை வென்றுவிட்டதாய்,
பேரினவாதிகள் மகிழ்ந்து தலை நிமிர்த்த நினைக்கையில்,
உலக சமுதாயம் துணிந்து இலங்கையைக் குற்றக்கூண்டில் ஏற்றியது.
மீண்டும் பேரினவாதிகள் தலையில் இடி இறங்கிற்று.
மற்றை நாடுகளின் உதவி பெற்று வாழும் இலங்கையால்,
உலக சமுதாயத்தை அலட்சியம் செய்து வாழமுடியாத நிலை.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜதந்திரமாய் நினைந்து,
பிராந்திய வல்லரசுகளுக்கிடையே சூது விளையாட நினைந்தார்.
அது அவரது ஆட்சியையும், அதிகாரத்தையும் பறித்து,
அவரை நிர்க்கதியாக்கியது.
இலங்கை தலைகவிழ்ந்து உலக அரங்கில் குற்றவாளியாய் நின்றது.
அதை மீட்கும் முயற்சியோடு புதிய ஜனாதிபதி,
புதிய முகம் காட்டி எழுந்தார்.
 
தமது சுயநலத்தேவைகளை பின்னணியில் வைத்துக்கொண்டு,
உலக, பிராந்திய வல்லரசுகள் அறம்நோக்கிப் பேசுவதாய்க்காட்டி தந்த நெருக்கடி,
இலங்கையை இக்கட்டிற்குள் தள்ளியது.
அவ்வல்லரசுகள் தந்த அழுத்தத்திலிருந்து நாட்டைமீட்க,
உலக சமுதாயத்தைத் திருப்திப்படுத்தல் ஒன்றே வழி எனத்தெரிந்து கொண்டதால்,
இனப்பகை விளையாட்டு இனிச் செல்லாது என்பதை அறிந்து,
சிங்களப் பேரினத்தின் பெருங்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசையும் அமைக்க,
நாட்டில் மெலிதாய், சமாதானக்காற்று வீசத்தொடங்கிற்று.
 
சூழ்நிலை தந்த நெருக்கடியால்,
தமிழினத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையில் பேரினத்தார்.
அதேபோல இன்றைய உலக அனுதாபத்தைத் தொலைத்து விட்டால்,
இனி ஈடேற வேறுவழியில்லை என்ற நிலையில் நம் தமிழினத்தார்.
காலம் தந்த இந்த நெருக்கடிகள் 
பகை மறந்து இரு இனத்தையும்,
கைகோர்க்க வைத்திருக்கின்றன.
 
இந்நேரத்தில் முன்னைய பகைகளை மறந்து,
ஒருவருக்கொருவர் தமக்குள்ளே காட்டிக்கொள்ளும் சிறிய நட்படையாளங்களும்,
பெரும் பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்தகைய ஒரு நல்ல நட்புச் சமிக்ஞையை,
பேரினவாதிகளின் எதிர்ப்பையும் மீறி,
சுதந்திரதினத்தில் தமிழில் தேசியகீதத்தைப் பாட அனுமதித்து,
இன்றைய சிங்கள அரசு காட்டியிருக்கிறது.
 
அதேபோல உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும்,
வெளிவந்த தமிழின வெற்றுணர்ச்சியாளர்களின் எதிர்பபைப் புறக்கணித்து,
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும்,  உறுப்பினர் சுமந்திரனும்,
சுதந்திரதினவிழாவில் கலந்து,
தமிழ்மக்கள் சார்பாக தமது நற்சமிக்ஞையையும் காட்டியிருக்கிறார்கள்.
பாராட்டத்தகுந்த விடயங்கள்.
 
இருபக்கத்திலும் இருக்கும் வெற்றுணர்ச்சியாளர்கள்,
இந்த நற்சமிக்ஞைகள்,
இனங்களுக்கிடையிலான உறவை மீண்டும் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சத்தில்,
தம்மால் முடிந்த அளவு  சேற்றை வாரி,
தூற்றி மகிழ்கின்றனர்.
அறிவீனச் செயல்கள் !
முடிந்த பகையைத் திரும்பத்திரும்பப் பேசுவதால்,
விளையப்போவது ஒன்றுமில்லை.
சொறிந்து கொண்டே இருப்பதில்,
சிரங்குக்காரனுக்கு மகிழ்ச்சி வருவதுபோல,
சிலருக்கு திரும்பத்திரும்ப பகைபேசி பகை விளைப்பதில்,
அப்படியொரு மகிழ்ச்சி.
இத்தகையோர் இனங்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய முன்வரார்.
மற்றவர்கள் தியாகங்களில் விளைகிற,
அழிவுகளில் இவர்களுக்கு ஒரு ருசி.
 
பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள் ஈச்சமுட்களைத் தின்னுமாம்.
அப்போது அம்முள் குத்த தன் வாயில் கசியும் இரத்தத்தைச் சுவைத்துப் பழகி,
சுவைப்பது தன் இரத்தத்தைத்தான் என அறியாமல்,
திரும்பத்திரும்ப அச்சுவைக்காக அம்முள்ளையே கடிக்குமாம்.
அதுபோல பகையால் விளைந்த சுவையில் மனம் செலுத்தி,
முடிந்துபோன இன அழிவைச் சொல்லிச்சொல்லி,
மீண்டும் மீண்டும் பகை விளைத்து,
மீண்டும் மீண்டும் அழிவு விளைத்து,
அதனைச் சுவைக்க விரும்புவோர் தொகை
நம் இனத்திலும் இன்று அதிகரித்து விட்டது.
அத்தகையோர்க்கு போரும், அழிவும் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
தம் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு,
மற்றையோர்  அழிவை இனப்பற்றோடு விமர்சிப்பதில்,
அவர்களுக்கு அப்படியோர் திருப்தி.
அத்தகையோரே இந்த நல்ல சமிக்ஞையை தூஷித்து, விமர்சித்து வருகின்றனர்.
 
சிங்களவர்களில் ஒருவர் தமிழ்த் தேசிய கீதத்திற்கான எதிர்ப்பை,
மலசலகூடம் ஒன்றில் ஏறிநின்று தெரிவித்திருக்கிறார்.
அவருக்குரிய இடம் எது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது.
தமிழர்களில் ஒருவர் புலிக்கொடியைக் கையில் பிடித்து,
இலங்கை தேசியக்கொடியை காலில் மிதித்து,
அதனைப் படம் எடுத்து இணையங்களில் பகிரங்கப்படுத்தி,
தம்இனப்பற்றை எடுத்தியம்பி இருக்கிறார்.
பெரும்பாலும் வெளிநாடொன்றில்,
பாதுகாப்பாய் வாழ்பவராய் அவர்  இருப்பார் என்பது நிச்சயம்.
 
இரு இனத்தாரும் இனி இத்தகையோர் கருத்துக்களை எடுத்ததெறிந்தாலன்றி,
இத்தேசத்தை எவராலும் காத்தல் முடியாது.
தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது, 
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நெகிழ்ந்ததை,
இழிவாய் விமர்சித்து இணையத்தில் எத்தனையோ செய்திகள்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த,
இன விடுதலைப்போரின் வடுக்களைக்கண்டு வாடிய 
அம்முதியவர் மனதில்,
தமிழில் தேசியகீதம் என்னும் சிறிய சமிக்ஞையில் அடங்கியிருக்கும்,
பெரியவெற்றியின் பெறுமதி தெரிந்ததிலும்,
அது அவரை நெகிழச் செய்ததிலும்,
ஆச்சரியப்பட ஏதுமில்லை.
 
யாரின் நல்லகாலமோ?
இனவாதிகளை எதிர்த்து தமிழர்க்கு நற்சமிக்ஞை காட்டும்,
சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு புறம்.
தம் இனத்தின் அதி தீவிரவாதிகளை எதிர்த்து,
நட்புக்கு நாம் எப்பொழுதும் தயார் என,
தமிழர் சார்பாக நற்சமிக்ஞை காட்டத் துணிந்து நிற்கும்.
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறமுமாக,
இருபக்கத்தலைவர்களும் ஒற்றுமை நோக்கி எழுச்சி கொண்டு நிற்பது,
இத்தேசத்தின் வருங்கால நல்வாழ்வுக்கு கட்டியம் கூறி நிற்கிறது. 
 
தம் இழப்புத் துயரங்களைப் பதிவு செய்ய,
கறுப்புக்கொடி காட்டியும், உண்ணாவிரதங்கள் இருந்தும்,
சுதந்திரதினத்தில் போராடும் தமிழர்களின் உளக்கொதிப்பும் நியாயமானதே.
ஆனால் அவர்கள் ஒன்றை மனதில் நினைக்கவேண்டும்.
சென்ற ஆட்சிக்காலத்தில் இவற்றையெல்லாம் எம்மால் செய்ய முடிந்ததா?
துணிந்தால் பணிவதும் பணிந்தால் துணிவதுமாக இருப்பது பண்பல்லவே.
அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் என்றான் வள்ளுவன்.
பணிகின்றவரைக் கண்டால் அவரின் முன்,
அவரினும் மேம்பட்டு நிற்பானாம் கீழ்மகன்.
நம் பாட்டன் சொன்ன கீழோர் வரிசையில்,
நம் ஈழத்தமிழர் இணைதல் பெருமையா? 
 
வேறு சிலர் தேசியகீதத்தைத் தமிழில் பாடியது,
ஒரு பெரிய விஷயமா? என்று கிண்டல் செய்து நிற்கின்றனர்.
தமிழர்களின் சுதந்திரவேட்கையின் முன்,
இது சிறிய விஷயம்தான்! 
அதில் ஐயம் இல்லை.
ஆனால் அச்சிறிய விஷயம்,
தெளிவான ஒரு நற்தொடக்கத்தின் நல் அடையாளம் என்பதிலும் ஐயமில்லை.
புள்ளி தொடாமல் கோடு போடுவது எங்ஙனம்?
சிறிய விதையின்றி விருட்சம் விளைவது எங்ஙனம்?
சிறிய மழைத்துளிகள் சேர்ந்துதான் வெள்ளம் உண்டாகிறது.
சிறியது என்பதற்காக புள்ளியையும் விதையையும், மழைத்துளியையும் புறந்தள்ளினால்,
கோடும் விருட்சமும் வெள்ளமும் என்றும் கிடைக்கப்போவதில்லை.
சுதந்திரதினத்தில் தமிழில் பாடப்பட்ட தேசியகீதம்,
இனச்சமாதானத்திற்கான முதற்புள்ளி.
தேசஒற்றுமைக்கான முதல் விதை.
தமிழரின்  உரிமை அங்கீகரிப்புக்கான முதல் மழைத்துளி.
இவ் உண்மை அறியாதார் அறியாதாரே!
இருளைப் பற்றி அதிகம் பேசுவதைவிட,
ஒளியைக் கொணர ஒன்று சேர்ந்து முயல்வோம்.
இத்தேசம் உருப்பட அது ஒன்றே வழி !
அந்நன்னோக்கில் செயற்படும்,
இத்தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை,
நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது.
 

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.