காற்றாக உழைத்தவனே !

காற்றாக உழைத்தவனே !
 
வற்றாத முகச் சிரிப்பு வறுமையின்றி 
          வார்த்தையிலே எப்போதும் தேன் இனிப்பு
கற்றோர்கள் தமைக் கண்டால் களித்து நிற்கும்
          கண்ணியத்தில் உவமையில்லாப் பெருவிருப்பு
சற்றேனும் சோர்வுபடா உயர் உழைப்பு
          சாற்றுவதை நிறைவேற்றும் தனி முனைப்பு
முற்றாத வயதினிலே காலன் கொள்ள
          முன்சொன்ன தகுதிகளே விடயமாச்சோ?

 

ஏற்றமுறு தமிழ்ச்சங்கத் தலைவனானாய் 
          இயல்பாக இந்துமகா மன்றந்தன்னின் 
போற்றுகிற செயலாளனாகி நின்றாய் 
          பொலிவுடனே இந்துப் பேரவையில் நல்ல
மாற்றமிலா பெருந்தொண்டன் ஆகி நின்றாய்
          மனக்கினியோய் எல்லோர்க்கும் சோர்வே யின்றி
காற்றெனவே உழைத்தவனே! கடிதிற் சென்றால்
          கற்றவர்கள் என் செய்வார் கலங்கிடாரோ?

எங்களது கம்பனவன் கழகந்தன்னை 
          எப்போதும் நேசித்த இனிய ஐய!
பொங்குகிற விழவுகளில் முன்னே நின்று 
          புன்சிரிப்பால் ஈர்த்திடுவாய் அனைவர் தம்மை
பங்கமிலா உன் குணத்தால் அன்பே பொங்க
          பாரில் எமக்குறவென்று பரிந்து நின்றாய்
தங்கி எமைக்காக்காமல் போனதென்னே?
          தயை மறந்து வானுலகம் சென்றதென்னே?

வற்றாத உன் பெருமை காலம் தாண்டி
          வளமாக நிற்கும் அதில் ஐயம் இல்லை
பற்றோடு தமிழ் வளர்த்த ஐய! உந்தன்
          பற்பலவாம் பணிகளிலே நிலைத்து நிற்பாய்
கற்றோர்கள் நெஞ்சமெலாம் காலந்தாண்டி
          கதிர்காமநாத உனதன்பு நிற்கும்
சற்றேனும் சோர்வு படா தமிழ வேளே
          சரித்திரமாய் ஆனவனே அமைதி கொள்வாய்.
                                  ✽
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.