நினது மணிவிழாக் காணும் கொடுப்பினை தந்தருள் எமக்கே!
கவிதை முற்றம் 23 Oct 2017
சுழிச் சிரிப்பினிலே மடக்கி
பெற்றிட முடியாப் பேரமு தளிக்கும்
பெருமக! உரைப் பேரழக!
கற்றவர் உளராம் பலரிவ் வுலகில்
கண்ணிய ஆளுமை ஒன்றைப்
பெற்றவன் நீயாம் ஒருவனே என்னும்
பெரும்பெயர் நிறுவிய புகழே!
ஒற்றை நெம்பு கோலினாற் புரட்டி
உலகினை உத்தம வழியில்
பற்று வைத்திடச் செய்கிற உளத்துப்
பண்பனே! எங்களின் அன்பே!
விற்றனர் மரபை வீரிய மில்லோர்
விதைமறந் தருங் கனி புசித்தார்
கற்றிடு மாறு கவினுறத் தமிழைக்
கண்டங்கள் தோறிலும் அறைந்தாய்.
சேது பந்தனம் இட்டனர், காலம்
செல்லரித்திட வழிஎமக் கினிமேல்
ஏதென இருந்தோம், அறிவினாற் பாலம்
இனியதாய்த் தமிழகத் தமைத்தாய்,
சாதுதான், மிரண்டால் சகம்பொறுக் கொணாது
சரித்திரங் குறிக்கிற வகையில்
மோதுவாய் தரும நெறி துலங்கிடவே,
மொழிகுவாய் அது விளங்கிடவே.
மற்றவர் துயரம் பொறுத்திடா மனத்தாய்,
மாண்புகழ் தொடர்ந்து வந்துன்னை
உற்றிடும் பொழுதும் ஒருநிலை தவறாய்,
உத்தம! வித்தக விறலோய்!
பற்றினம் உனது பாதையை, அதனால்
பல உயர் வடைந்தனம் இன்று,
கொற்றவ! நினது மணிவிழாக் காணும்
கொடுப்பினை தந்தருள் எமக்கே.
-மாணவர்கள் சார்பில் ஸ்ரீ. பிரசாந்தன்