நீதித்தராசில் கூட்டமைப்பு-பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

நீதித்தராசில் கூட்டமைப்பு-பகுதி 2: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்றவார நிறைவில்)
தமிழரசுக்கட்சி தம்மோடு இணைந்த மாற்றணியினரை துரும்பளவும் மதியாமல், அலட்சியப்படுத்திய நிலையில்த்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 'தன்வினை தன்னைச்சுடும் 'ஓட்டு' அப்பம் 'வீட்டை'ச்சுடும்', எனும் தொடரை மெய்ப்பிக்குமாப் போன்று, சம்பந்தனையும் சுமந்திரனையும் அதிரச் செய்த, யாரும் எதிர்பாராத ஓர் நிகழ்வு நடக்கத் தொடங்கியது. அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்!

✠✠✠✠✠

உலகம் வியக்க நிகழ்ந்த அந்நிகழ்வு பற்றித் தொடர்கிறேன்.
தம்மோடு இணைந்து நின்ற அணிகளைச் சார்ந்த பலரையும் மட்டுமல்லாமல்,
முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த தமது கட்சியைச் சேர்ந்த,
சிலரையும் கூட வெறுப்படையச் செய்து குறிப்பாக மாவையாருக்கும் 'அல்வா' கொடுத்து,
மண்ணின் உரிமைக்காய் பாடுபட்ட பலர் இருக்க அவர்களைப் புறந்தள்ளி,
தம் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்குத் 'தண்ணி' காட்டுவதாய் நினைந்து,
நீதியரசரை முதலமைச்சர் பதவிக்காய் வலிந்து அழைத்து வந்தனர் சம்பந்தன், சுமந்திரன் குழுவினர்.

✠✠✠✠✠
 


அழைத்து வந்தது மட்டுமல்லாமல் தம்மாலான முழுமுயற்சியும் செய்து,
அவரை, அறுதிப்பெரும்பான்மை வெற்றியும் அடைய வைத்தனர் இவர்கள்.
யாரிட்ட சாபமோ? அல்லது உடனிருந்தோரின் வயிற்றெரிச்சலோ?,
அல்லது அறத்தின் விளைவோ? திடீரென ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
அதனைத்தான் சென்றவாரத்தில் சொல்லத் தொடங்கி இடையில் விட்டேன்.
முதலமைச்சர் பதவியில் நீதியரசர் வந்து அமர்ந்த சில காலத்திலேயே,
அவருக்கும் சம்பந்தன் குழுவினருக்குமான 'தேன்நிலவு' முடிந்து,
சர்ச்சைகள் பிறக்கத் தொடங்கின.

✠✠✠✠✠

ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலத்தில்,
தமிழரசுக்கட்சிக்கும் நீதியரசருக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு,
இரண்டே ஆண்டுகளில், ஏனென்று தெரியாது தலைகீழாய்ப் போனது.
தனது மாற்றத்திற்குக் காரணம்,
கூட்டமைப்புத் தலைமையின் கொள்கைப் பற்றின்மையும்,
அவர்களது சகிக்க முடியாத ஆணவப் போக்குமே என,
இன்றுவரை நீதியரசர் சொல்லி வருகிறார்.
ஆனால் அவர் சொல்லும் காரணத்தைக் கடந்து,
ஏதோ ஒரு 'மர்மசக்தி' அவரை இயக்கியிருக்கிறது என்றும்,
இன்று வரை இயக்கி வருகிறது என்றும்,
அரசியல் தெரிந்தவர்கள் சொல்லி வருகின்றனர்.
அதுபற்றி விரிவாக அவரது கட்சி பற்றி ஆராய்கையில் காணலாம்.

✠✠✠✠✠

2013 ஆம் ஆண்டு முதலமைச்சராய் ஆட்சிக்கு வந்த நீதியரசர்,
2015 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது,
கூட்டமைப்புத் தலைமையுடன் முரண்படத் தொடங்கினார்.
சம்பந்தன், சுமந்திரன் குழுவினர் தேர்தலுக்கான நிதிசேகரிக்கவென,
வெளிநாட்டிற்கு அழைத்தபோது தனது உடல்நலத்தைச் சாட்டாய்ச் சொல்லி,
மெல்ல அவர் விலகிக் கொண்டார்.
அதே போல, தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தபோதும்,
அதில் அக்கறை காட்டாமல் அலட்சியம் செய்தார்.
அப்பொழுதே இவர்களது முரண்பாட்டின் முளை தெரியத் தொடங்கிவிட்டது.
தேர்தல் நெருங்கிய கடைசி நேரத்தில் முதலமைச்சர் வெளியிட்ட,
'வீட்டைவிட்டு வெளியே வந்து, சைக்கிளில் சென்று வாக்களியுங்கள்' என்ற,
இரட்டை அர்த்தம் மிக்க 'குசும்பு' அறிக்கை,
இவ்விரு பகுதியினரின் பகையைத் தெளிவாக ஊரறியும்படி செய்தது.
'சைக்கிளில் வருக!' என முதலமைச்சர் மக்களை அழைத்ததால்,
சைக்கிள் சின்னத்தை தேர்தல் சின்னமாய்க் கொண்டிருந்த,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அவர் ஆதரவளிக்கிறார் என்பது வெளிப்படையாயிற்று.

✠✠✠✠✠

இங்குதான் சம்பந்தனின் தலைமைப் பலயீனம் தெளிவாய் வெளிப்பட்டது.
கட்சிக்குள் இருந்தபடி, உலகறிய கட்சியை மறுதலித்து நின்ற முதலமைச்சர்மேல்,
சம்பந்தனால் துணிவாக கடைசிவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
முதலமைச்சரின் செய்கை கண்டு கட்சிக்குள் பலரும் கொந்தளித்த பின்,
'தேர்தல் முடிந்ததும் இப்பிரச்சினை பற்றி விசாரிக்கப்படும்' என்றார் சம்பந்தர்.
ஆனால் அந்த அறிக்கையோடு அவ்விடயம் முடிந்து போயிற்று.

✠✠✠✠✠

நடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்,
முதலமைச்சர் ஆதரித்த கஜேந்திரகுமாரின் அணியால்,
பெரிதாய் ஒன்றும் சாதிக்கமுடியவில்லை.
முதலமைச்சரின் மறைமுக தார்மீக(?) ஆதரவு,
கஜேந்திரகுமாருக்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை.
அவரது ஆதரவு கூட்டமைப்புக்கு எதிராக மக்களின் கருத்தைத் திருப்பவும் இல்லை.
அந்நேரத்தில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி,
முதலமைச்சர்மேல் சம்பந்தர் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தாரேயானால்,
அத்தோடு முதலமைச்சரின் அரசியல் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்,
கஜேந்திரகுமாரினது அரசியல் வாழ்க்கையும் தான்.

✠✠✠✠✠

தக்கதருணத்தைத் தவறவிட்டு இன்று தள்ளாடி நிற்கிறார் சம்பந்தர்.
சங்கரியார், கஜேந்திரகுமார் என அனைவர்மேலும் வீரியமாய் நடவடிக்கை எடுத்து,
கட்சியை விட்டு வெளியேற்றிய அல்லது வெளியேறும்படி செய்த சம்பந்தர்,
தக்க காரணமும் வாய்ப்பும் இருந்தும் முதலமைச்சரை வெளியேற்றாத மர்மம்,
இன்றுவரை எவர்க்கும் புரியவில்லை.

✠✠✠✠✠

தேர்தலில், தான் ஆதரித்த அணியின் தோல்வியின் பின்பும்,
முதலமைச்சர் முற்றாய்ச் சோர்ந்து போய்விடவில்லை.
கூட்டமைப்புக்கு எதிரான அவரது 'குழிபறிக்கும்' வேலை,
திரைக்குப் பின்னால் நடக்கத்தொடங்கியது.
கூட்டமைப்பின் மேல் வெறுப்புற்றிருந்த பல அணிகள்,
கூட்டமைப்பினுள் நிகழ்ந்த இந்த உட்பகையை,
தமக்கான தக்கவாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டன.
முதலமைச்சரை முகமாக வைத்து செயலாற்ற அவை திட்டமிட்டன.
மக்கள் ஆதரவால் அடுத்தடுத்த பல தேர்தல்களில் வெற்றிபெற்றும்,
பெரிய அளவில் இனநன்மை நோக்கி எதனையும் சாதித்திருக்காத,
கூட்டமைப்பின்மேல் மக்களில் ஒரு பகுதியினர்,
மெல்ல மெல்ல வெறுப்புக் கொள்ளத் தொடங்கியிருந்த நேரமது.
அது எதிராளிகளின் பாதையை எளிமையாய்த் திறந்துவிட்டது.

✠✠✠✠✠

ஆளும் கட்சிகளில் இருப்போர்க்குப் பொதுவாய் ஏற்படக்கூடிய அபாயம் தான் அது.
தேர்தலில் தோற்றவர்கள் தாம் எதுவும் செய்யாமல், ஆளுங்கட்சியைக் குற்றஞ்சாட்டி மட்டுமே,
மக்களைத் தம் பக்கம் ஈர்ப்பது எப்போதும் எங்கும் நடப்பதுதான்.
தலைமைப் பொறுப்பேற்றவர்கள்தான், தம் இனத்தின் உயர்வுக்கு வழி செய்யவேண்டும்.
அக்காரியத்தின் கடினமும் நடைமுறைச் சாத்தியச்சிரமும் அவர்களுக்குத் தான் தெரியும்.
எதிரணியிலிருந்து அவர்களை விமர்சிக்கும் மற்றவர்களோ,
'தாம் என்றால் வானமேறி வைகுண்டம் போவோம்' என,
ஆட்சியாளர்களில் கசப்புற்றிருக்கும் மக்களை இலகுவாய்த் தம் பக்கம் ஈர்ப்பர்.
பதவிக்கு வந்தால்த்தான் அவர்கள்  கூரை ஏறி கோழிதானும் பிடிப்பார்களா? என்பது தெரியவரும்.
அதுவேதான் கூட்டமைப்புக்கும் நடந்தது.
கூட்டமைப்பைவிட்டு வெளியே நின்ற கட்சிகள்,
தங்களை தியாகிகளாகவும் இனப்பற்றாளராகவும் காட்டிப் போட்ட சத்தங்கள்,
கூட்டமைப்பின் வீட்டை மெல்ல மெல்ல சிதைக்கத் தொடங்கியது உண்மையே.

✠✠✠✠✠

ஆனால் இந்தச் சூழ்நிலையை சம்பந்தரோ, சுமந்திரனோ சரியாக் கணித்தததாய்த் தெரியவில்லை.
2015 தேர்தல் தந்த வெற்றியால் அவர்களது தலைக்கனம் மேலும் ஏறத் தொடங்கியது.
கூட்டமைப்பு என்பது தமிழரசுக்கட்சியே! என்பது போலவும்,
மற்றவர்கள் தாம் போடும் பிச்சையிலேயே வாழ வேண்டும் என்பது போலவும்,
இவர்கள் நடக்கத் தொடங்கினர்.
கூட்டமைப்பை ஓர் கட்சியாய்ப் பதிவுசெய்யவேண்டும் என்று,
உடனிருந்த மற்ற அணியினர் ஆரம்பம் முதல் கோரிகை வைத்தபோதும்,
தமிழரசுக்; கட்சி அதனை ஏற்க முன்வரவில்லை.
புலிகளின் 'பிரம்புக்கு'ப் பயந்து மற்ற அணியினருடன் இணைய உடன்பட்ட சம்பந்தனார்,
புலிகளின் மறைவுக்குப் பிறகு அடுத்தடுத்துக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் ஆணவப்பட்டு,
'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என சவுக்குச் சுழற்றி நடக்கத் தொடங்கினார்
அந்த தலைக்கனச் செயற்பாட்டுக்குச் சுமந்திரனும் பக்கபலம் செய்யத் தொடங்கினார்;.
அவர்கள் வீசிய சவுக்கின் நுனிபட்டு மாற்றணியினர் மட்டுமன்றி,
தமிழரசுக்கட்சிக்குள் இருந்த சிலரும்  வருந்தியது உண்மையேயாம்.

✠✠✠✠✠

ஏலவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில்,
தம்மோடு இணைந்திருந்தோரை துரும்புக்கும் மதிக்காத சம்பந்தன், சுமந்திரன் குழுவினர்,
பின்னர் நிகழ்ந்த மாகாணசபைத் தேர்தல் தேர்வுகளின் போதும் அங்ஙனமே செயற்பட்டனர்.
அதன்பின் நிகழ்ந்த மகாணசபை அமைச்சர்கள் தேர்வின் போதும் கூட,
மாற்றணியினருக்குக் கொடுத்த வாக்குகளை அவர்கள் துச்சமாய்க் கருதி ஊதித்தள்ளினர்.
ஐ.நா.சபையில் இலங்கைப் பிரச்சினை ஓரளவு விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில்,
உலகத் தலைவர்களைச் சந்திக்கவென அடிக்கடி வெளிநாடு சென்று வந்த சுமந்திரன்,
அத்தலைவர்களுடன் தான் பேசப்போன, பேசிய இன நன்மை நோக்கிய முக்கியவிடயங்களை,
தம்மோடு இணைந்திருந்த மாற்றணியினருக்கு உரைக்காமல் அவர்களை அலட்சியப்படுத்தினார்.
இப்படியான ஆணவச் செயற்பாடுகளால் தம்மோடு இணைந்திருந்த அனைவரையும்,
வெறுப்பின் உச்சநிலைக்கு இவர்கள் கொண்டு சென்றனர்.

✠✠✠✠✠

ஆரம்பம் தொட்டு ஜனநாயக முகத்தை தமக்காக்கியிருந்த கட்சிகளின் பிரதிநிதிகளான,
ஆனந்தசங்கரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்; மக்கள் தம்மை ஆதரிப்பர் எனும் நம்பிக்கையில், துணிவாய் கூட்டமைப்பைவிட்டு ஏற்கனவே வெளியேறியிருந்தனர்.
ஆனால் கூட்டமைப்பில் இணைந்திருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஸ் அணி), புளொட் ஆகிய, முன்னாள் ஆயுதக் குழுவினர்களுக்கு அத்துணிவு வரவில்லை.
இத்தனை அலட்சியங்கள் நிகழ்ந்த பின்னும் கூட்டமைப்பைவிட்டு வெளியேறாது,
பட்டத்துக்குக் கட்டிய வால் போல் அவர்கள் ஒட்டிக்கிடந்தனர்.
தம்முடைய பழைய வன்முறை வரலாற்றால் பாதிப்புற்ற பொதுமக்கள்,
தாம் தனித்து நின்றால் தம்மை ஏற்பார்களா? எனும் ஐயப்பாடே,
அவர்களை தமிழரசுக்கட்சியிடம் அடிமைப்பட வைத்தது.

✠✠✠✠✠

இந்நிலையில்த்தான் முதலமைச்சர் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்.
சமூகத்தில் பதிவாகியிருந்த அவரது முன்னை ஆளுமைத் திறன்களும்,
கல்வியாளர் என அவர்மேல் விழுந்திருந்த அபரிமித மதிப்பும்,
தன்னை ஒரு குட்டிப்பிரபாகரனாய் அவர் பிரதிபலிக்கச் செய்த முயற்சிகளும்,
தாடியாலும் விபூதியாலும் நெற்றிப் பொட்டாலும் மேடையில் சொல்லும் சுலோகங்களாலும்,
தன்னை ஓர் ஆன்மீகவாதியாய் மக்கள் மத்தியில் பதிவு செய்து அவர் பெற்ற வெற்றியும்,
கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அவர்களை விமர்சித்த தன்மையும்,
அவர்களின் கட்டளையை மீறி நடந்த துணிவும்,
மக்களின் ஒரு பகுதியினருக்குப் பிடித்துப்போக,
முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிப் பின்னணிகள் ஏதுமின்றி,
தமிழினத்தின் மத்தியில் ஒரு தனிமனிதராய் அரசியல் பலம் பெறத் தொடங்கினார்.

✠✠✠✠✠

அவர் பெற்ற அரசியல் பலம்,
கூட்டமைப்பினரை வீழ்த்த நினைத்திருந்த எதிரணியினருக்கும்,
கூட்டமைப்போடு உடனிருந்து இழுக்குப்பட்ட மாற்றணியினருக்கும் வரமாய்த் தோன்ற,
முதலமைச்சரைப் பயன்படுத்தி தத்தம் அணிகளை வளர்க்க அக்கட்சிகள் திட்டமிடத் தொடங்கின.
அத்திட்டத்தின் வெளிப்பாடாய் திடீரென ஒருநாள் வெடித்த 'தமிழ்மக்கள் பேரவை'க் குண்டு,
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரையும் தமிழரசுக்கட்சியையும் மட்டுமன்றி,
தமிழ்ச் சமூகம் முழுவதையும்கூட அதிரவைத்தது உண்மை.
அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.

✠✠✠✠✠
                                                                                                   (நீதித்தராசு நிறுப்பதைத் தொடரும்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.