நீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

நீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்ற வாரம்)
தலைமை மீதான உண்மை விசுவாசம் இன்மையே, இக்கட்சி இணைப்பில் ஏற்பட்ட  பெரிய பலயீனமாம். ஒருமித்த இலட்சியம் இன்மையையும் இவர்தம் இரண்டாம் நிலை பலயீனமாய் உரைக்கலாம். உண்மை நட்பும், ஒருமித்த இலட்சியமும் இல்லாது, இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாடு, வெறும் புத்திக்கணக்கால் ஏற்பட்ட இணைப்பேயாம்.

💥 💥 💥 💥

உலகம் அதிர கூட்டமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி,
அவர்களை அதிர வைத்து,
தனக்கெதிரான சதிவேலைகளையெல்லாம் முறியடித்து,
தனது பதவிக்காலத்தின் கடைசிநாள் வரை,
முதலமைச்சர் பதவியில் ஒட்டியிருந்துவிட்டு,
பதவி காலியான உடனேயே தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டத்தில்,
தனது 'தமிழ்மக்கள் கூட்டணி' கட்சியை ஆரம்பித்தார் முதலமைச்சர்.
முதலமைச்சரைப் பொறுத்தவரை அவரது பிறவி இயல்பான,
தனித்துவம் தேடும் சுயமுனைப்பும்,
புகழாலும் வேறுசில விடயங்களாலும் ஏற்பட்ட தலைமை விருப்புமே,
அவரது இக்கட்சி ஆக்கத்திற்கான அடிப்படை என்று பலரும் கருதுகின்றனர்.
தமிழ்மக்கள் பெரிய இன்னல்பட்ட காலத்தில் எல்லாம்,
கொழும்பில் சுகவாழ்வில் திளைத்திருந்த இவரிடம்,
முதலமைச்சர் பதவி கிடைத்தபின்பே,
திடீரென இனப்பற்று தலைதூக்கியதாய் இவரது எதிரிகள் வசைபாடி நிற்கின்றனர்.
எது எப்படியோ, இன்றுவரை  செயற்பாடற்ற வாய் வீரமிக்க தனது அறிக்கைகளால் மட்டுமே,
தன்னை குட்டிப்பிரபாகரனாய் வெளிப்படுத்த இவர் முயல்கிறார் என்பது மட்டும் உண்மையாம்.

💥 💥 💥 💥

 

தன் மடியில் அதிஷ்டத்தால் தவறிவிழுந்த,
மாகாணசபை முதலமைச்சர் பதவியை வைத்து,
இவர் சாதித்தவை,
நிர்வாகக் குழப்பங்களும் இனக் குழப்பங்களும் மட்டுமேயாம்.
இன நன்மை நோக்கிய வளர்ச்சியில்,
வெறும் வாய்ச்சொல் வீரராய் அன்றி,
இவர் இதுவரை இயற்றிய சாதனைகள் ஏதும் இல்லை என்பது,
வருத்தம் தரும் நிதர்சனமாம்.

💥 💥 💥 💥

வினோதமான வடிவங்கொண்டது இந்தத் தமிழ்மக்கள் கூட்டணி.
முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இக்கட்சியில்,
தமது கட்சிகளைக் கரைக்கவிரும்பாமல்,
தத்தம் சுயம் பேணி இக்கட்சியில் இணைந்து செயற்பட,
சுரேஷூம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆரம்பத்தில் முன் வந்தனர்.
தனிப்பட்ட கொள்கை ரீதியான இணைப்பு ஏதும் இல்லாமல்,
கூட்டமைப்பின் பகைவர்கள் என்ற ஒரே தகுதியைக் கொண்டே,
இக்கட்சியில் இணைந்திருக்கும் அணிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
கட்சித் தலைவரான முன்னாள் முதலமைச்சரின் கருத்தை மீறி,
அவர்தம் முடிவை ஏற்று நடக்க சம்மதிக்காமல்,
ஏலவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
இக்கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்.
கிட்டத்தட்ட தமிழரசுக்கட்சியிலிருந்து துரத்தப்பட்டநிலையில்,
இக்கட்சியில் இணைந்த அருந்தவபாலன் வேறு போக்கிடம் இல்லாமல் இங்கு வந்து ஒட்டியவர்.
சுரேஷ் பிரேமச்சந்திரனோ கூட்டமைப்பின் அலட்சியத்தால் அங்கிருந்து வெளியேறி,
பின்னர் தமிழர் விடுதலை கூட்டணித்தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து,
இப்போது மூன்றாம் கட்டமாகத் தமிழ்மக்கள் கூட்டணியுள் நுழைந்திருக்கிறார்.
மொத்தத்தில் இவர்களின் இணைப்பு என்பது,
எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் எனும்,
வினோதகொள்கை அடிப்படையில் ஆனது என்பதில்,
எவ்வித ஐயமுமில்லை.

💥 💥 💥 💥

ஆரம்பத்தில் மாகாணசபையில் முதலமைச்சர் பதவி ஏற்றதும்,
முன்னாள் நீதியரசரின் முதற் பகையாளிகளாக,
சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது கட்சியினருமே இருந்தனர்.
முன்னரே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி,
தமது கட்சிக்குரிய அமைச்சர் பதவியைத்தர முதலமைச்சர் மறுத்தபோது,
சுரேஷ் அணியினருக்கும் முதல்வருக்குமான பகை பகிரங்கமாய் வெடித்தது.
முன்னாள் ஆயுததாரியின் சொற்கேட்டு என்னால் நடக்க முடியாது என்றாற்போல,
அப்போது முதலமைச்சர் ஒரு செய்தி வெளியிட்டதாய் ஞாபகம்.
இது முற்கூத்தில் நடந்த விடயம்.

💥 💥 💥 💥

தமிழரசுக்கட்சியினரோடு பகைவெடித்ததன் பின்னதாக,
அவர்களுக்குச் சவால் விடுவதற்காய்,
அவர்களால் அமைச்சுப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்ட நபரை நிராகரித்து,
முன்னர் எவருக்கு அப்பதவியைத் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ,
அதே நபரான சுரேஷின் தம்பியாருக்கு,
பிற்கூத்தில் அமைச்சர் பதவி கொடுத்து,
தமிழரசுக்கட்சியின் பல்லை ஆட்டிப் பார்த்தார் முன்னாள் முதலமைச்சர்.
அந்த மாயா நட்பின் இறுக்கமே இன்று சுரேஷை இக்கட்சிக்குள் அமர்த்தியிருக்கிறது.

💥 💥 💥 💥

சுரேஷை வெளியேற்ற வேண்டும் என்பது கஜேந்திரகுமாரின் கோரிக்கை.
அது நடக்காததால் தமிழ்மக்கள் கூட்டணி கட்சியுடனான இணைப்பை முறித்து,
வெளியேறியிருக்கிறார் கஜேந்திரகுமார்.
அவரது நோக்கம் வேறு.
தன் வெளியேற்றத்தால் அதிர்ந்து, தன்னை மீள அழைப்பார்கள் என்று,
எதிர்பார்த்திருந்த கஜேந்திரகுமாரின் எண்ணம் கைகூடவில்லை.
பிராமணக் கல்யாணங்களில்,
தன்னைத் திருப்பிக் கூப்பிடுவார்கள் என்னும் நம்பிக்கையில்,
காசி யாத்திரை போகப் புறப்படுவது போல்,
மாப்பிள்ளை மிடுக்குக் காட்டி புறப்பட்ட கஜேந்திரகுமார்,
இன்று அந்தரித்த நிலையில் யாரும் அழைக்காமல் அனாதையாய் நிற்கிறார்.

💥 💥 💥 💥

சுரேஷிற்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான முரண்பாடுபற்றி,
இருபகுதியிலிருந்தும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால் உண்மை வேறென அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கூட்டமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பால் சலிப்புற்றிருந்த,
மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் முதலமைச்சரோடு இணைவதன் மூலம்,
அவ் ஆதரவைத் தம் பக்கம் திருப்பினால்,
முதுமையுற்ற முதலமைச்சருக்குப் பின்னால்,
கட்சியின் தலைமையையும் மக்கள் ஆதரவையும்,
தம்பால் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதுவே,
கஜேந்திரகுமாரின் எண்ணமாய் இருந்திருக்கிறது என்கிறார்கள்.

💥 💥 💥 💥

அதுபோலவே ஆனந்தசங்கரியுடன் இருப்பதைவிட,
முன்னாள் முதலமைச்சருடன் இணைந்திருந்தால்,
ஒருகாலத்திலேனும் தமிழினத்தலைமை தன்பால் வருவதற்கான வாய்ப்பிருக்கும்,
என்ற எண்ணத்துடனேயே சுரேஷூம் இவ்வணியில் வந்து இணைந்தார் என்பதும்,
சிலரின் கருத்தாய் இருக்கிறது.

💥 💥 💥 💥

முதலமைச்சருக்குப் பின்னால் இரண்டாம் நிலையில்,
தான் மட்டுமே என்று எண்ணியிருந்த கஜேந்திரகுமாரின் எண்ணத்தில்,
சுரேஷின் வருகை இடியாய் இறங்க,
சுரேஷைத் துரத்தினால்த்தான் தன் நோக்கம் நிறைவேறும் என்ற கருத்தோடு,
தன்பின்னால் சில இளைஞர்கள்  இருக்கிறார்கள் எனும் துணிவால்,
சுரேஷை வெளியேற்றப் பிடிவாதம் பிடித்து நிற்கிறார் கஜேந்திரகுமார்.

💥 💥 💥 💥

முதலமைச்சருக்கும் அவர்மீதான ஓர் மென்மைக்கோணம் இல்லாமலில்லை.
இதற்கிடையில் ஏதோ ஒரு வெளிச்சக்தியின் அழுத்தம்,
கஜேந்திரகுமாரை மீண்டும் கட்சிக்குள் ஈர்க்காமல் இருக்க,
அவருக்கு எதிராகச் செயற்படுவதாய்ச் சொல்லப்படுகிறது.
தனது அறிக்கைகள்மூலம் இந்தியாவே அச்சக்தி என,
கஜேந்திரகுமார் பகிரங்கமாகவே சுட்டிநிற்கிறார்.

💥 💥 💥 💥

அரசியல் அனுபவமும் செயற்பாட்டுத் திறமும்,
ஓர் கட்சியை வழிநடத்தும் ஆற்றலும் இல்லாத முன்னாள் முதலமைச்சர்,
இத் தகுதிகள் உள்ள வேறுசிலரை தம் கட்சிக்குள் இணைத்து,
தம் குறைபாட்டை நீக்க முயன்று நிற்கிறார்.
அதேபோல் உருப்படியாய் இன நன்மை நோக்கி இதுவரை ஏதும் செய்து,
மக்கள் மத்தியில் பெயர் பதியாமலும் இருக்கும்,
சுரேஷூம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்,
மக்கள் செல்வாக்குள்ள ஒருவரை முன்வைத்து,
தாம் தலைமைபெற முயன்று நிற்கின்றனர்.

💥 💥 💥 💥

இங்ஙனமாய் ஒருவருக்கொருவர் தம் குறைநிரப்பும் நோக்கத்தை முன்வைத்து,
இணைந்திருக்கும் கட்சித்தலைவர்களால் ஆக்கப்பட்ட,
அரைகுறை அவியல் கொண்ட கூட்டாஞ் சோறாகவே,
தமிழ்மக்கள் கூட்டணிக் கட்சி இணைப்பு இருக்கிறது.
இப்படி தமது குறைநிரப்ப மற்றவர் துணையை நாடி நிற்கும் இவர்களால்,
தமிழினத்திற்கு பெரிய அளவில் நன்மை விளையப் போவதில்லை என்பது வெளிப்படை.

💥 💥 💥 💥
கல்வி, மக்கள் தொடர்பு, முதிர்ச்சி, நிதானம் என்பவற்றோடு கூடிய,
நீண்டகால அரசியல் அனுபவமிக்க உறுப்பினர் தொகை என்பவை,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒப்பிடுகையில்,
இக்கட்சிக்கு மிகக் குறைவேயாம்.
இது இக்கட்சியின் குறைபாடுகளில் ஒன்றாய்க் கணிக்கப்படுகிறது.

💥 💥 💥 💥

சுருங்கச் சொன்னால்,
செயற்பாட்டுத் திறன் அற்ற தலைமை.
மக்கள் மனம் பதியாத, வேறு வேறு திசைகளில் செல்ல நினைக்கும் கூட்டுக்கட்சிகள்.
குறித்த ஒருசில இளைஞர்களிடம் மட்டுமன்றி, ஊர்தோறும் வேர்விடாத கட்சிச்செல்வாக்கு.
தம்மை வளர்ப்பதைவிட எதிரிகளைக் குறைகாண்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தும் செயற்பாட்டு குறை.
முதுமையால் முழுமையாய் இயங்க முடியாத தலைமைக் குறைபாடு.
மாகாணசபையின் நிர்வாகத்தில் தோல்வியுற்ற கட்சித்தலைவரது ஆட்சித்திறன் பற்றிய நம்பிக்கையீனம்.
பேச்சாற்றல், கொடைத்தன்மை, மக்கள் ஈர்ப்பு முதலானவையற்ற அணித் தலைவர்கள்.
ஒருவருக்கொருவர் குழி தோண்டக் காத்திருக்கும் இணைந்த தலைவர்களின் மனநிலை.
இக்கட்சியை ஒன்றிணைத்த, மக்கள் செல்வாக்கில்லாத, சமூகப் பிரமுகர்களின் தீர்;க்கதரிசனமற்ற வழிகாட்டல்.
என இக்கட்சியின் குறைபாடுகள் பலவாய் விரிகின்றன.

💥 💥 💥 💥

இக்கட்சியைப் பாராட்ட அதில் நிறைவே இல்லையா? என,
கேள்வி பிறக்கும்.
கருத்துக்கு எட்டிய தூரம்வரை ஆராய்ந்து பார்த்தால்,
கிடைக்கும் ஒரே விடையை மட்டுமே அக்கேள்விக்குப் பதிலாய் உரைக்கலாம்.
இதுவரை காலமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகளை,
தட்டிக் கேட்கும் மக்கள் செல்வாக்கோடு கூடிய,
எந்த ஒரு அமைப்பும் நம்மத்தியில் இல்லாதிருந்தது.
அதனால் தமிழ்தேசியக் கூட்டமைப்பு,
கேட்பாரின்றி ஜனநாயகத் தன்மையை இழந்து தன் இஷ்டப்படி நடந்துகொண்டிருந்தது.
இன்று அந்நிலையை மாற்றி அவர்களைக் கேள்வி கேட்கும் ஆற்றலோடு,
ஓரளவு மக்கள் செல்வாக்கும் பெற்று எழுந்திருக்கும் தமிழ்மக்கள் கூட்டணியால்,
முன்னைய அந்நிலை மாறியிருக்கிறது.
கூட்;டமைப்போடு போட்டி போடும் ஆற்றல் பெறாவிடினும்,
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு 'சறுக்குக்கட்டை' போடும் ஆற்றலோடு,
நிலைநிற்கும் கட்சியாய் தமிழ் மக்கள் கூட்டணி மாறியிருப்பது உண்மையேயாம்.
இன்றைய நிலையில் இது ஒன்றே இனத்திற்கு நன்மை தரக்கூடிய,
தமிழ்மக்கள் கூட்டணியின் நிறையாய் கருதப்படுகிறது.
பிழைகள் திருத்தி இன நன்மையை முதன்மைப்படுத்தி,
ஒற்றுமைப்பட்டு இக்கட்சி செயற்படுமானால்,
வருங்காலத்தில் அதன் வளர்ச்சி மேலும் உயரலாம்.

💥 💥 💥 💥💥 💥 💥 💥
                                                                                                                                        (நிறைவுற்றது)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.