நுண்மாண் நுழைபுலத்தரிசனம்: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
சிந்தனைக்களம் 29 Dec 2019
அடுத்தடுத்த மாதங்களில் பரீட்சை முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. எங்கள் ஐயாவும் சித்தியடைந்த செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது. இனி குருநாதரின் முகத்தில் எப்படி விழிப்பது? என்று அஞ்சி, ஐயா, அவரின் கண்ணில்படாமல் ஒழிந்து திரிந்திருக்கிறார். ஒருநாள் தற்செயலாக வீதியில் கணேசையரை நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம். தலைகுனிந்து ஐயா நிற்க, 'பண்டிதர் வாரும்' என்று கிண்டலாய்க் கூப்பிட்டாராம் கணேசையர். பிறகு ஐயாவைப் பார்த்து, 'இனி நீ படிக்கமாட்டாய். அதனால் வீட்டுக்கு வந்து, பாலபண்டிதர் வகுப்புக்குப் பாடம் சொல்லு' என்று சொல்லிவிட்டுப் போனாராம். குருநாதர் தன்னைக் கையாண்ட விதம் பற்றிச் சொல்லி மகிழ்வார் ஐயா.
'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே' எனும்,
சங்கச்சான்றோரின் வார்த்தைகள் எவ்வளவு நிதர்சனமானவை,
உயர்ந்தவரான கணேசையர் பற்றி எங்கள் ஐயா சொல்லச் சொல்ல,
மேற்தொடரின் உண்மை நினைந்து நான் உருகியிருக்கிறேன.;
இனி, கணேசையர் பற்றி ஐயா சொன்ன மற்றொரு சம்பவம்.
💚💚💚💚
தனது பிற்காலத்தில்,
தன் சொத்துக்களை எல்லாம் உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு,
ஊர்க்கோயில் வாசலில் ஓர் குடிசைபோட்டு வாழ்ந்து வந்தாராம் கணேசையர்.
சிலவேளைகளில் பணத்தட்டுப்பாடு அவரை நெருக்க,
தன்னிடம் பணம் கேட்டு வாங்குவாராம்.
பின்னர் பெறுமதிமிக்க தன்னுடைய தமிழ்நூல்களை,
அப்பணத்திற்குப் பதிலாகத் தனக்குத் தந்துவிடுவாராம்.
கணேசையரது வறுமையைக் கேள்விப்பட்டு அப்போதைய அரச அதிபர்,
அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் 'பென்ஷன்' வழங்க ஒழுங்கு செய்தாராம்.
அதற்கான பத்திரத்தில் கணேசையரின் கையொப்பத்தை யார் சென்று வாங்குவது? என்று,
கேள்வி எழுந்திருக்கிறது.
மாணாக்கர்கள் எல்லோரும் கணேசையரிடம் சென்று அதனைக் கேட்க அஞ்சி ஒதுங்க,
கடைசியாக அப்பொறுப்பு ஐயாவிடம் கொடுக்கப்பட்டதாம்.
ஐயா, பயந்து பயந்து அவரிடம் சென்று மேற்படி விடயத்தை எடுத்துச் சொல்ல,
'எனக்கெதற்குப் பணம்' என்று கையொப்பமிட மறுத்துவிட்டாராம் கணேசையர்.
என்னே அம்மாமனிதரின் உயர்வு?
💚💚💚💚
படிக்கும் காலத்தில் கணேசையர் வீட்டு வாசலில் நின்ற,
ஆலமர நிழல்தான் தங்களது வகுப்பறையாய் இருக்குமாம்.
ஆலம்பழம் பழுக்கும் காலத்தில் மரத்தின் மேலிருந்து எறும்புகள் விழத்தொடங்குமாம்.
எறும்புகள் விழுந்தாலும் மாணவர்கள் அசையாமல்,
'சித்திரப்பாவையின் அத்தக அடங்கி' அமைதியாகப் பாடம் கேட்பார்களாம்.
கணேசையரும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லியபடி,
தன்மேலும் விழும் எறும்புகளைத் துன்புறுத்தாமல்,
அவற்றை ஒவ்வொன்றாய்ப் பிடித்து வெளியில் விட்டபடி,
தடையின்றிப் பாடம் சொல்லிக்கொண்டிருப்பாராம்.
💚💚💚💚
இவையெல்லாம் தனது குருநாதர்பற்றி எங்கள் ஐயா சொன்ன நினைவுப்பதிவுகள்.
வசதிகள் ஏதும் அற்ற காலத்தில் குருபக்தியோடும் தெய்வ நம்பிக்கையோடும்,
அவர்கள் கற்ற கல்வி எங்கே? இன்று நாங்கள் கற்கும் கல்வி எங்கே?
ஒருமுறை எங்கள் கம்பன்விழாவில்,
ஏழாலைப் பண்டிதர் மு. கந்தையா அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
இன்று கல்விக்கான வசதிகள் பத்துமடங்கு உயர்த்தப்பட்டு,
கல்வியின் தரம் பத்துமடங்கு குறைந்திருக்கிறது என்றார் அவர்.
எவ்வளவு உண்மையான கருத்து அது.
💚💚💚💚
ஐயா பற்றிய எஞ்சிய சில செய்திகளும் நினைவுக்கு வருகின்றன.
ஐயாவினது கடவுள் நம்பிக்கை புதுமையானது,
அன்றாடம் 'மானதபூஜை' செய்வார்.
'பண்டிதர் கோவில்களுக்கு அதிகம் போவதில்லை போல'
மற்றவர்களின் இத்தகு கூற்றுக்குச் சிரிப்பே அவரது பதிலாகும்.
பிற்காலத்தில் என்னோடு ஐயா சிலகாலம் வந்து தங்கியிருந்தார்.
அவரது ஆசாரத்திற்குக் குறைவராமல்,
அந்தணர் வீடுகளிலிருந்து உணவெடுத்துக் கொடுத்து,
அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தோம்.
அதிகாலையில் எழும்பிக் குளித்துவிட்டு,
வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருப்பார் ஐயா.
அவரது கண்கள் மூடியிருக்கும்.
அபிஷேகம் செய்வது, பொட்டு வைப்பது,
கற்பூரம் காட்டுவது, பூக்கள் போடுவது போன்ற,
அபிநயங்கள் அவரது கைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
ஆரம்பத்தில் இவர் என்ன செய்கிறார் என்று குழம்பிய நான்,
பின்னர்தான் அவர் அகப்பூசை நிகழ்த்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.
பிற்காலத்தில் ஐயா அதிகம் ஆலயம் செல்லாததன் காரணத்தையும்,
அப்போதுதான் புரிந்துகொண்டேன்.
பின்னர் அவ்வழிபாட்டு முறை எனக்கும் பயன் செய்யத் தொடங்கியது.
💚💚💚💚
மற்றொரு சம்பவம்.
ஒருநாள் ஆலய வாசலில் உட்கார்ந்து,
வழமைபோல பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்,
ஐயாவைத் தேடி வந்தார்.
அவரது முகத்தில் பெருமிதம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
வந்தவர் ஐயாவை வணங்கி,
'ஐயா நான் கலாநிதிப்பட்டம் வாங்கிவிட்டேன்' என்று,
மிக மகிழ்வோடு ஐயாவிடம் சொன்னார்.
முகத்தில் மெல்லிய புன்னகை காட்டிய ஐயா அவரைப் பார்த்து,
'அப்படியா, அப்ப இனி நீர் படிக்கத் தொடங்கலாம்.' என்றாரே பார்க்கலாம்.
பேராசிரியரின் முகம் மாரிகால வானமாய்க் கறுத்துப்போயிற்று.
💚💚💚💚
மேற்சொன்ன செய்திகளால்,
ஐயாவின் அறிவின் ஆழத்தை ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.
அவரின் ஆரம்பவாழ்வு......?
அறிய ஆவல்படுவீர்கள்.
உண்மை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
தனது இளமை வாழ்வு பற்றி,
ஐயாவே எனக்குச் சொன்னதை இங்கு பதிவுசெய்கிறேன்.
💚💚💚💚
சின்னப்பையனாய் இருக்கும்போது,
ஐயாவுக்குக் கல்விமீது அத்தனை வெறுப்பாம்.
ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் போது,
பள்ளி செல்வதாய்ச் சொல்லிவிட்டு,
ஆடு, மாடு மேய்க்கும் பையன்களுடன் விளையாடித் திரிவாராம்.
பின்னர் பள்ளி முடியும் நேரத்தில் பள்ளிக்குச் சென்றவர்போல வீடு திரும்புவாராம்.
ஒருநாள் கையும் களவுமாய் அகப்பட,
கோபத்தின் உச்சிக்குச் சென்ற தந்தையார் அடித்த அடியில்,
உடம்பில் காயம் ஏற்பட்டு இரத்தம் வரத் தொடங்கியிருக்கிறது.
பதறிப்போன தந்தையார்,
'சரி உனக்குப் படிக்க விருப்பமில்லா விட்டால்,
இனிமேல் என்னோடு வயலுக்கு வந்து வேலை செய்'
என்று கூறி படிப்பை நிறுத்தினாராம்.
படிப்பு நின்றதில் ஐயாவுக்குப் பெரிய மகிழ்ச்சி.
ஒருசில ஆண்டுகள் இப்படியே கழிந்திருக்கிறது.
💚💚💚💚
மாலை நேரங்களில் ஐயாவின் தந்தை,
தன்னுடைய நண்பர்களுடன் சீட்டாடச் செல்வாராம்
அப்படி ஒருநாள் அவர் சென்றபோது ஐயாவும் அவருடன் சென்றிருக்கிறார்.
சீட்டு விளையாடியபடி பெரியவர்களில் ஒருவர் நுட்பமான விடுகதைகளைச் சொல்லி,
மற்றவர்கள் விடைதேடுவார்களாம்.
ஐயா அங்கு சென்ற அன்று,
அந்தப் பெரியவர் மிகக் கடினமான ஓர் விடுகதையைச் சொல்லியிருக்கிறார்.
பதில் தெரியாமல் மற்றவர்கள் விழித்தபோது,
கணிதம் சார்ந்த அவ்விடுகதைக்கு ஐயா உடனடியாகப் பதில் சொல்லியிருக்கிறார்.
அந்தப் பெரியவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
அவர் ஐயாவின் தந்தையைப் பார்த்து,
'இவன் பெரிய கெட்டிக்காரனாய் இருக்கிறானே எங்கே படிக்கிறான்?' என்று கேட்டிருக்கிறார்.
💚💚💚💚
அந்தக் கேள்வி படிக்காததை நினைந்து,
ஐயாவை முதல் முதலாய் வெட்கப்பட வைத்திருக்கிறது.
மூன்று, நான்கு ஆண்டுகள் படிக்காமல் இருந்துவிட்டு,
அந்தப் பெரியவரின் வார்த்தைகள் தந்த ஊக்கத்தால்,
தந்தையைக் கேட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிவிட்டாராம்.
அதன்பின்னர்தான் அவரிடம் அறிவுநதி புகத்தொடங்கியிருக்கிறது.
விடுகதை மீட்டுத்தந்த வித்தகர்.
💚💚💚💚
தனது குருநாதர் கணேசையரை நினையும் போதெல்லாம்,
'ஐயாவின் அறிவோடு ஒப்பிடும்போது,
எங்கள் அறிவு ஒரு துரும்பு' என,
அவர் எப்போதும் சொல்லுவார்.
அவர் அப்படிச்சொல்ல நான் என் அறிவு நிலை எண்ணி நாணுவேன்.
என்னுடைய அறிவின்மை கண்டபின்னும்,
'என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப்பணித்து என்னை வா என்ற வான் கருணை'
எண்ணி வியப்பேன்.
💚💚💚💚
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கையிலும்,
கொழும்பில் இருந்து நான் தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு,
பதில் கூறிப் பல கடிதங்கள் அவரிடமிருந்து அடுத்தடுத்து வந்தன.
அறிவால் நோயையும் வென்று நிற்பார்.
படித்தவர்களுடன் அதிகம் பேச விரும்பாத ஐயா,
வயல் வரம்பில் குந்தியிருந்து சாதாரண தோட்ட வேலைக்காரரோடு,
அவர்கள் நிலையில் நின்று விரும்பிப் பேசிக்கொண்டிருப்பார்.
அது கண்டு வியப்பேன் நான்.
அப்பேச்சிலும் உண்மை இருக்கும்.
'நான்' எனும் தருக்கு அவர் வார்தைகளில் என்றும் இராது.
வினயம் சம்பந்தமான வித்தை அவரது.
💚💚💚💚
பொருள் பற்றிய சிந்தனையே இன்றி,
அறிவே வாழ்வாக,
அறிவே தேவையாக,
அறிவே உணவாக,
அறிவே சுவாசமாக வாழும்,
மனிதருள் மனிதரல்லாத மனிதர் அவர்.
'திருவேறு தெள்ளியராதல்வேறு' எனும் குறளடிக்கு,
தன் வாழ்வால் விளக்கம் தந்தார்.
உலகத்தில் ஒட்டாமல் வாழ்ந்த அவரது வாழ்வு வியப்பேற்படுத்தும்.
இஃது எங்ஙனம் சாத்தியம்? எனக்கேள்வி பிறக்கும்.
தமிழ் தந்த தெளிவே காரணம் எனக் கூடவே பதிலும் பிறக்கும்.
💚💚💚💚
இப்படி ஒருசிலரேனும் வாழப்பழகினால் தான்,
அறிவுலகம் நிலைக்கும்.
இன்றைய பொருளுலகிற்கு,
ஐயா ஒரு அருங்காட்சிப்பொருள்.
தமிழைப்போலவே ஐயாவையும்,
விளங்க விளங்க,
விளங்காமையின் விரிவே விளங்குகிறது.
கல்வி உலகில் கால் வைக்க விரும்பும் இளைஞர்க்கு,
ஐயாவின் வாழ்வே ஒரு செய்தியாம்.
💚💚💚💚
மொத்தத்தில்,
என் அறிவு கடந்து நிற்கும் அற்புதர் அவர்.
இப்பொழுது என் வேண்டுதல் எல்லாம்,
'அடுத்த பிறவியிலாவது அவரிடம் இருந்த அறிவு முழுவதையும்,
அறியும் அறிவோடு மீண்டும் என்னை,
அவரது மாணவனாய்ப் படைத்துவிடு இறைவா!' என்பதேயாம்.
💚💚💚💚
எண்ணங்கள் விடாது தொடர்கின்றன.
தாயிடம் பாலூட்டும் கன்றை,
பற்றி இழுத்துக் கட்டுதல் போல்,
ஐயாவின் எண்ணங்களில் மூழ்கும் மனதை,
வலிந்து இழுத்துக் கட்டவேண்டியிருக்கிறது.
இப்படியே போனால் இது கட்டுரையாய் அன்றி,
நூலாய் ஆகிவிடும்போல் தெரிகிறது.
அதனால் விரிவஞ்சி விடுகிறேன்.
முடிவுரையாய் சில வார்த்தைகள்,
இவரைச் சந்தித்ததால்,
இவர்மேல் கொண்ட பக்தியைவிட,
தமிழ் இலக்கியங்கள் மேலும்,
தமிழ்ப் புலவர்கள் மேலும்,
தமிழின் மேலும்,
உண்டான பக்தி அதிகமாயிற்று.
அவர் இட்ட அறிவுப் பிச்சையால்,
அறிவுலகில் இன்று நானும் ஒரு செல்வன் போல் வாழ்கிறேன்.
'நல்லாரைக் காண்பதுவும் நன்றே!'
💚💚💚💚
(அடுத்த வாரம் என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் பற்றி)