நேர்காணல் -9
அதன்பின்னர் எங்களுடனேயே இருந்த ஈசு, நண்பன் வித்தியாதரனது உதவியால் “உதயன்” பத்திரிகையில் ‘எக்கவுண்டனாகச்’ சேர்ந்து சில காலம் வேலை செய்தான். அக்காலத்தில்த்தான் புலிகளுக்கும் இந்திய சமாதானப்படைக்கும் இடையில் மீண்டும் யுத்தம் தொடங்கியது.
கடுமையாக நடந்த அச்சண்டையின் போது, பேராசிரியர் சண்முகதாஸ், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கவிஞர் காரைசுந்தரம்பிள்ளை குடும்பத்தினர், பேராசிரியர் பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் என, பலபேரும் எங்களுடன் வந்து தங்கியிருந்தனர்.
புலிகளை நோக்கி இந்திய இராணுவமும், இந்திய இராணுவத்தை நோக்கிப் புலிகளும் மாறி, மாறி “ஷெல்” மழை பொழிவார்கள். எங்கள் தலைகளுக்கு மேலாகச் ஷெல்கள் “விசில்” அடித்து எப்போதும் பறந்து கொண்டேயிருக்கும். ஷெல் புறப்படுகையில் ஏற்படும் அந்த “விசில்” சத்தத்தைக் கேட்டவுடன் நாமெல்லாம் நிலத்தில் விழுந்து படுத்து விடுவோம். அது தூரத்தில் போய் விழுந்து வெடித்த சத்தம் கேட்டபிறகுதான் எழும்புவோம்.
அக்காலத்தில் எங்களை வெளியே விடாமல், பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களே சைக்கிளில் சென்று எல்லோருக்குமாக உணவுவகைகளை வாங்கிவருவார். அப்போது அவரது துணைவியார் மனோண்மணி சண்முகதாஸ் அவர்கள் “ஜப்பானில்” இருந்தார்.
மெல்ல மெல்ல இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை நெருங்கி வரத் தொடங்கியது. இராணுவம் உள் நுழைந்தால் என்ன செய்யுமோ எனும் பயத்தால், நல்லூரடியில் இருந்த மக்கள் எல்லோரும் பாதுகாப்புக்கருதி கோயில் சூழலுக்குள் வந்து குவியத் தொடங்கினார்கள். அங்கு இருக்கநிற்க இடமில்லாத நிலை ஏற்பட்டது. மழைகாலம் வேறு. மக்கள் படாத துன்பமெல்லாம் பட்டனர்.
அப்போது நல்லூர் கோயிலுக்கு அருகில் நாங்கள் கட்டி வந்த கம்பன் கோட்டக் கட்டிடம், அரைவாசி கட்டி முடித்த நிலையில் இருந்தது. பாதுகாப்புக்கருதி நாங்களும் நல்லூர்ச் சூழலுக்குச் சென்று, அங்கு நிற்கக்கூட இடமில்லாததால் எங்களது கம்பன்கோட்டக் கட்டிடத்திற்குள் போய் இருந்து கொண்டோம்.
எங்கள் கம்பன் கோட்டத்திற்கு முன்னால் “நல்லலக்ஷ்மி ஒழுங்கைக்குள்” இருந்த வீடொன்றில்த்தான் எனது அம்மா, அப்பா, தங்கை ஆகியோர் இருந்தனர். கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை குடும்பத்தாரும் அவர்களோடு சென்று தங்கிக் கொண்டனர்.
நானும், குமாரதாசனும், இரத்தினகுமாரும், ஈசுவும், பேராசிரியர் சண்முகதாசும் ஓரளவு கட்டி முடிக்கப்பட்டிருந்த கம்பன் கோட்டத்தின் ஓர் அறையினுள் தங்கிக் கொண்டோம். இந்திய இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. என்னாகுமோ? என்ற அச்சம் எல்லோர் மனதிலும் சூழ்ந்திருந்தது.
ஒருநாள் அதிகாலைநேரம், மழை தூறிக்கொண்டிருந்தது. கொஞ்சம்கூட இருள் விலகாத நிலையில், திடீரென நல்லூர் மணியோசை கேட்க, நாங்கள் அனைவரும் விழித்துக் கொண்டோம். வீதியில் இராணுவத்தினரின் சப்பாத்துக்கால்கள் நிலத்தில் தேய்த்து எழுப்பிய “சரக்”, “சரக்” என்ற சத்தம் காதில் விழத் தொடங்கியது. அந்தச் சத்தத்திலிருந்து இந்திய இராணுவத்தினர் உள் நுழைந்து விட்டனர் என்று தெரிந்து கொண்டோம். அப்போது பழைய புலி வீரனான ஈசுவும் எங்களுடன் படுத்திருந்ததால் அவனுக்கு என்னாகுமோ எனும் பயத்தில் நாங்கள் நடுங்கிக் கொண்டிருந்தோம்.
#கேள்வி :
உங்களுடன் இருந்த அந்தப் பழைய புலி உறுப்பினர் ஈசு அவர்களை உள்ளே வந்த இந்திய இராணுவத்தினர் இனங்காணவில்லையா?
#பதில் :
அந்தப் பயம் எங்கள் மனதிலும் இருந்தது. நல்லூருக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினர் வேகவேகமாக நல்லூர்க்கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர் வரையில் நல்லூர்ச் சூழலில் இருந்தார்கள்.
உள்ளே நுழைந்த இந்திய இராணுவத்தினர் மிக வேகமாக நல்லூர்க் கோயிலுக்கு உட்பட்ட சுற்றுப் பிரதேசங்கள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வேகவேகமாகச் “சென்றிகள்” அமைத்தார்கள். அதுவரை கோயிலுக்கு அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் தங்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வந்தார்கள். அவர்களையெல்லாம் இந்திய இராணுவம் வீடு வீடாகச் சென்று உடனடியாகக் கோயில் சூழலுக்குள் செல்லும்படியாகத் துரத்தியது.
தமிழர்கள் அல்லாத இந்திய இராணுவத்தினர் சிலர் எங்கள் கட்டிடத்திற்குள்ளும் நுழைந்தார்கள். நாங்கள் பயத்தில் உறைந்துபோய் இருந்தோம். பெரும்பாலும் இளவயதினராக நாம் இருந்ததால், ஒருவேளை அவர்கள் எம்மைத் தாக்குவார்களோ என அச்சப்பட்டோம்.
நல்லவேளை அப்படியாக ஏதும் நடக்கவில்லை. பேராசிரியர் சண்முகதாஸ் எங்களுடன் இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. வந்த இராணுவத்தினர் எம்மையும் கோயில் சூழலுக்குள் போகும்படி உத்தரவிட்டார்கள். கையில் கிடைத்த அவசியமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு நல்லூருக்குள் நாமும் சங்கமமானோம்.
கோயில் உள்வீதி முழுவதும் நிரம்பியிருந்தது. சுத்தத்திற்குப் பெயர்போன கோயில் அது. வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகள் என இருக்க இடமில்லாமல் மக்கள் நிரம்பிவிட்டபடியால், கோயில் மிக மிக அழுக்காகி இருந்தது. நல்லூர்க்கோயிலை நான் அப்படி அதற்கு முன்னும் கண்டதில்லை, பின்னும் கண்டதில்லை.
மழை வேறு பெய்து கொண்டிருந்ததால், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலருக்கும் காய்ச்சல், வயிற்றோட்டம் என நோய்கள் ஏற்பட்டிருந்தன. வெளியில் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் மலம், சலம் முதலியவற்றையும் இருந்த இடத்திலேயே கழித்தனர். கோயில் நாறிப் போயிற்று.
வெளிவீதியிலும் இருக்கக்கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. அப்போது திடீரென ஒரு தாயின் அலறல் சத்தம் கேட்க, நாமெல்லாம் நடுங்கிப் போனோம். முதலில் என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. பின்னர் உண்மை தெரிந்த பொழுது எல்லோருடைய மனங்களும் கனத்துப் போயின.
வீதிக்குள் நுழைந்த ஒரு தாயும் மகனும் இனிப் பயமில்லை எனும் எண்ணத்தோடு வீதியின் ஒரு ஓரத்தில் நின்றிருக்கிறார்கள். அப்போது எங்கோ வெடித்த ஒரு ஷெல்லில் இருந்து பறந்த ஓர் இரும்புத் துண்டு அந்த மகனின் நெற்றிக்குள் புக அவன் இறந்து விழுந்திருக்கிறான். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது அந்தத் தாய் கதறிய கதறல், இன்றும் என் மனதைவிட்டு அகலவில்லை.
போராட்டக் காலத்தில் நான் பார்த்த பல துன்ப நிகழ்வுகளுள் இரண்டு மரணங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன. மேற்சொன்னது அதில் ஒன்று. மற்றொன்று இதைவிடக் கொடுமையானது. சுருக்கம் கருதி அதை விடலாம் என்று நினைக்கிறேன்.
#கேள்வி :
இல்லை இல்லை அந்தச் சம்பவத்தையும் சொல்லிவிட்டே நீங்கள் மேலே தொடருங்கள். போர்க்கால அனுபவங்களை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.
#பதில் :
நீங்கள் கேட்பதால் சொல்லுகிறேன். நான் மீள நினைக்கக்கூட விரும்பாத சம்பவம் அது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலமது. அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
ஒருநாள் நான் நண்பர் குமாரதாசனின் சைக்கிளில் “டபிள்” ஏறி “ஸ்ரான்லி” வீதியில் சென்று கொண்டிருந்தேன். பல வேலைகளுக்குமாக வந்த மக்கள் அந்த வீதியில் நிறைந்திருந்தார்கள். திடீரென விடாது தொடர்ந்து “ஹோன்” அடித்தபடி ஒரு லொறி மிகவேகமாக வந்தது. அதைக்கண்ட மக்கள் பயந்து வீதியின் ஓரத்திற்கு ஓடினார்கள். நாங்களும் சைக்கிளைவிட்டு இறங்கி ஒரு கரையில் ஒதுங்கினோம். அந்த லொறி வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது.
லொறி எம்மைத் தாண்டியதும் லொறியின் பின்னால் நான் கண்ட காட்சியை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். லொறியின் பின் கதவு திறந்திருந்தது. அதில் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த ஒரு இளைஞன் கழுத்தில் மணமாலையோடு இரத்தம் தோய்ந்து விழுந்து கிடந்தான். அவனுக்கு அருகில் கூறைச்சேலை, சடைநாகம், நெற்றிச்சுட்டி, கழுத்தில் புதிய தாலி ஆகியவற்றோடு இருந்த ஒரு புதுமணப்பெண் தலையில் அடித்தபடி கதறிக்கொண்டிருந்தாள். அக்காட்சியைக் கண்டு என் இரத்தம் எல்லாம் உறைந்து போனது.
மணக்கோலம் என்பது மகிழ்வு தருகிற கோலம். அத்தகைய மணக்கோலத்தில் இருந்தவர்களை பிணக்கோலத்தில் கண்ட அந்தக்காட்சி அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. பின்னர் விசாரித்து நடந்த உண்மையைத் தெரிந்து கொண்டேன்.
ஏழு வருடங்களாக அக்காதலர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது. ஜாதிப்பிரச்சினையில் திருமணம் தள்ளிப்போய், கடைசியில் இருவீட்டாரும் மனம்மாறிச் சம்மதிக்க, அன்று காலை கோயிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த மணமக்கள், ஓர் அறையில் தனித்து உட்கார்ந்திருக்கையில், மணமகன் தண்ணீர் கேட்க, மணமகள் உள்ளே சென்றிருக்கிறாள். அப்போது இராணுவத்தால் ஏவப்பட்ட ஒரு ஷெல், அந்த அறைக்குள் வந்து விழ, மணமகன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்திருக்கிறான்.
அக்காலத்தில் வாகனங்கள் ஏதும் இல்லாததால், அருகில் நின்றிருந்த ஒரு லொறிக்குள், விழுந்து கிடந்த அந்த மணமகனை ஏற்ற, மணமகளும் உடன் ஏறியிருக்கிறாள். அவர்களை அந்த லொறி வைத்தியசாலைக்கு அழைத்து வந்த காட்சியைத்தான் நாம் அன்று கண்டோம். பின்னர் அந்த மணமகன் இறந்து போய்விட்டதாய் அறிந்தேன்.
இப்படி எத்தனை சோகங்கள்? எல்லாத் தேசத்தவர்களுக்குமாக இவ்விடத்தில் நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் தேசத்திற்குள் போரை வரவிட்டுவிடாதீர்கள். போரின் முடிவில் ஏதோ ஒரு அணி வெல்லும், ஏதோ ஒரு அணி தோற்கும். ஆனால் போரின்போது அத்தேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் தோற்றுப்போவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
அதனால்த்தான் அணு ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கிற நாடுகளும் போரைத் தொடங்க நினைக்காமல் முடிந்த அளவு அதைத் தவிர்க்கப் பார்க்கின்றன. இராமாயணத்தில் போர் செய்யவென எழுப்பப்பட்ட கும்பகர்ணன், எழும்பும் போதே “ஆனதோ வெஞ்சமம்” எனக் கூறிப் பதறிக்கொண்டு எழுந்த காரணத்தை இக்காலத்தில்த்தான் என்னால் முழுமையாய் உணரமுடிந்தது.
#கேள்வி :
நீங்கள் சொல்லும் சம்பவங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. போர்க்காலத்தில் நம் இனம் பட்ட இன்னல்களை யாரும் இன்னும் உணர்வுபூர்வமாக முழுமையாய்ச் சொல்லவில்லையோ? எனத் தோன்றுகிறது. இலக்கிய இதயம் கொண்ட உங்களால்த்தான் அக்காரியம் முடியும். இந்த நேர்காணலின்போது உங்கள் நினைவுக்கு வரும் இத்தகைய செய்திகளைச் சொல்வதால் நேர்காணல் நீண்டுவிடுமோ என நினைந்து தவிர்த்துவிடாதீர்கள்! இனி நாங்கள் தொடர்ந்து பேசலாம்.
#பதில் :
நேர்காணலைப் படிக்கும் பலபேர் என்னிடம் “நீங்கள் புலிகள் இயக்கத் தொடர்புகள் பற்றித்தான் அதிகம் சொல்லி வருகிறீர்கள். மற்றைய இயக்கங்கள் பற்றி அதிகம் சொல்வதில்லை. புலிகளின் தொடர்பு பற்றிப் பேசினால்த்தான் இப்போது மதிப்பு வரும் என்பதற்காகத்தான் அப்படி பேசுகிறீர்களா?” என்று கேட்கிறார்கள்.
அப்படி ஒன்றும் இல்லை! புலிகள் இயக்கத்தோடு நான் உடன்பட்டும் இருக்கிறேன். முரண்பட்டும் இருக்கிறேன். மற்றைய இயக்கங்கள் வளர்ந்து பலம் பெற்று செயலாற்றத் தொடங்கும் காலத்திலேயே, அவர்களில் பலர் புலிகளால் அழிக்கப்பட்டு விட்டார்கள். சிலர் யாழை விட்டு இடம்மாறிப் போனார்கள்.
நாங்கள் வேகமாக இயங்கத் தொடங்கிய காலத்தில், புலிகளின் நிர்வாகத்தின் கீழ்த்தான் யாழ்ப்பாணம் இருந்தது. அதனால் அவர்களோடு நாங்கள் பல அனுபவங்களைப் பெறவேண்டி வந்தது. அதன் காரணமாகத்தான் அவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது.
மற்றும்படிக்கு புலிகளின் பெயரைச் சொல்லி மக்களின் ஆதரவைச் சம்பாதிக்க, நான் ஒன்றும் அரசியல்வாதி இல்லை என்பதை அப்படிக் கேட்டவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நேர்காணலின் மூலம் என்னுடைய பலவகையான அனுபவங்களையும் பதிவு செய்வதே எனது நோக்கம். முடிந்தவரை போர்க்கால நினைவுகள் என்று மட்டுமில்லாமல், எங்கள் கழகம் சார்ந்த நினைவுகள், கழக உறுப்பினர்கள் சார்ந்த எனது எண்ணப்பதிவுகள், சமூகம் சார்ந்த எண்ணப்பதிவுகள், மற்றும் எங்கள் கழகத்தை வளர்த்தவர்கள், எதிர்த்தவர்கள் என்பவர்கள் பற்றியதான அனைத்து மனப்பதிவுகளையும் நிதர்சனமாக வெளியிடவுள்ளேன்.
#கேள்வி :
உங்களின் பதில்களால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேர்காணல் எவ்வளவு நீண்டாலும் அதுபற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் எண்ணங்களை விரிவாகப் பதிவு செய்யுங்கள். சரி, இனி இந்திய இராணுவம் யாழின் உள்ளே புகுந்த இடத்திலிருந்து உங்கள் எண்ணங்களை மீண்டும் நீங்கள் சொல்லத் தொடங்குங்களேன்.
(தொடரும்)