"பாவிகளை மன்னிப்பீராக!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"பாவிகளை மன்னிப்பீராக!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
ள்ளம் வருந்துகிறது.
நாட்டில் நடக்கும் ஓர் பிழையைச் சுட்டிக்காட்டுவதற்காய்,
நான் எழுதத்தொடங்கிய கட்டுரையின் நோக்கத்தை,
சிலர் தவறாகப் புரிந்துகொண்டு,
கட்டுரைக்கும் எனக்கும் வேறு சாயம்பூச முற்படுகின்றனர்.
நிச்சயமாக நான் கிறிஸ்தவ மதத்தின் எதிரியல்லன்.
கிறிஸ்தவமதத்திற்கு என்றில்லை வேறு எந்த மதத்திற்கும் நான் எதிரியல்லன்.
என்னுடைய மதமான இந்துமதம்,
எந்தமதத்தையும் வெறுக்க எனக்குக் கற்றுத்தரவில்லை.
நான் பூணுகிற விபூதி, பொட்டு, காவி என்பவற்றை வைத்து,
என்னை ஒரு இந்துமதத் தீவிரவாதியாகக் கற்பனைபண்ணிக் கொண்டு,
நான் எழுதுவது கிறிஸ்தவ மதத்தைத் தாக்கவே என முடிவு செய்த சிலர்,
கட்டுரை பற்றிக் குறிப்புகள் எழுதும்போது என்னை மகிழ்விப்பதாய்க் கருதி,
கிறிஸ்தவ மதத்தைக் கேவலப்படுத்தி எழுதுகின்றனர்.
எனக்கு அதில் உடன்பாடில்லை.
💧💧💧💧


காலம் கடந்து நிலைத்து,
மக்களால் பின்பற்றப்படும் எல்லா மதங்களும்,
உயர்ஞானிகளால் உருவாக்கப்பட்டவையேயாம்.
அந்த ஞானிகள் மக்களின் ஆத்மவளர்ச்சி நோக்கியே,
தத்தம் மதக்கொள்கையை உருவாக்கி வளர்த்தனர்.
உலகியற்பற்று நீக்கி மக்கள் இறையைச் சார்வதற்காய்,
அந்த ஞானிகளால் உருவாக்கப்பட்ட மதங்களைப் பின்பற்றுவோர் சிலர்,
பற்று நீக்க வகுக்கப்பட்டதான தமது மதத்தின்  மீதே பற்று வைத்து,
'எனது மதம்தான் உயர்ந்தது மற்றைய மதங்கள் தாழ்ந்தவை' என,
ஆணவ முனைப்பால் போராடத் தலைப்படுகின்றனர்.
அத்தகைய போராட்டங்கள் எம்மதத்தில் உருவானாலும்,
அதில் எனக்குச் சம்மதமில்லையாம்.
💧💧💧💧
அச்சம்மதமின்மையின் வெளிப்பாடாகவே,
இக்கட்டுரையை எழுதத்தொடங்கினேன்.
தயைகூர்ந்து கட்டுரை பற்றிய குறிப்புகள் எழுதுவோர்,
எனது இந்நோக்கத்தை அறிந்து எந்த மதத்தையும் இழிவு செய்யாமல்,
தமது கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என,
தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இனி, சென்றவாரக் கட்டுரை தொடர்கிறது.
💧💧💧💧
(சென்ற வாரம்)
இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என்ற, இம்மதத்தவர்களிலிருந்து வேறுபட்டு, நம்நாட்டுக் கிறிஸ்தவர்கள் மட்டும், மதமாற்றப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்து, மற்றைய மதத்தவரை வெளிப்படையாய் விழுங்க முற்படுவதோடு, இத்தேசத்திற்கு ஆபத்தான மதவெறி என்ற விஷத்தை ஊட்டி,
இனபேதம் போல மதபேதம் ஒன்றையும் உருவாக்கி, இந்நாட்டு மக்களைப் பிரிக்க முயல்வது, மிகுந்த மனவருத்தத்தினைத் தருகிறது. அதுபற்றியே இக்கட்டுரையில் விபரிக்கப்போகிறேன்.
💧💧💧💧
யர்வான நமது இலங்கை நாட்டில்,
சிறுபான்மை இனமாய்க் கருதப்படும் தமிழினத்தின் உட்பிரிவுகளாய்,
மூன்று மதப்பிரிவுகள் அமைந்திருக்கின்றன.
இந்துமதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமியமதம் என்பனவே அவையாம்.
இலங்கையின் தமிழ்ச்சிறுபான்மை இனத்தின்,
மேற்குறிப்பிட்ட மூன்று மதப்பிரிவினர்களுக்கிடையில்,
இந்துமதம் தனக்கான சில தனித்துவங்களைக் கொண்டிருக்கிறது.
அதுபற்றிப் பின்னர் விபரிக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட மதங்களுள் கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும்,
தமிழர்களைத் தமது உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அதேவேளை,
சிங்களவர்களையும் தம் மதத்துள் உட்கொண்டு நிற்கின்றன.
சிங்களம்பேசும் கிறிஸ்தவர்கள், சிங்களம் பேசும் இஸ்லாமியர்கள் என்பதாய்,
சிங்களப் பகுதிகளுள் மேற்குறிப்பிட்ட மதக்குழுவினர் வாழ்ந்து வருவது வெளிப்படை.
பேரினத்தார் வாழும், வடக்கு, கிழக்குத் தவிர்ந்த மற்றைய பகுதிகளில்,
மதத்தால் கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தழுவி,
மொழியால் சிங்களவர்களாகவே வாழ்கின்ற பலரை நம்நாட்டில் காணலாம்.
💧💧💧💧
இஸ்லாமிய மதத்தாரைப் பொறுத்தவரை,
அவர்கள் தம்மை இஸ்லாமியமதம் கொண்டு இனங்காட்டுவார்களே அன்றி,
எந்த மொழியையும் கொண்டு தம்மை இனங்காட்டுவதில்லை.
அதனால் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் என்ன மொழி பேசினாலும்,
தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகின்றனர்.
அதனாற்றான் மத முரண்பாடுகள் வருகின்றபொழுது,
சிங்களப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களும்,
பேரினத் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது வழக்கமாகியிருக்கிறது.
💧💧💧💧
மதக்கிரியைகளைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள்,
அரபுமொழியையே தமது வழிபாட்டுமொழியாய்ப் பயன்படுத்துகின்றனர்.
அதில் என்றும் எங்கும் அவர்கள் மாறுபடுவதில்லை.
சிங்களவர்களோடு சிங்களம் பேசி வாழ்ந்தாலென்ன?
தமிழர்களோடு தமிழ்பேசி வாழ்ந்தாலென்ன?
அவர்களது பள்ளிவாசலில் நடக்கும் வழிபாடு,
அரபு மொழியை அடிப்படையாய்க் கொண்டதாகவே அமைந்திருக்கும்.
அம்மதத்தாரின் நிர்வாகத்தில்,
சிங்கள இஸ்லாமியத்தலைமை, தமிழ் இஸ்லாமியத்தலைமை,
என்ற பிரிவுகள் இருப்பதில்லை.
இது அவர்களின் உறுதிப்பட்ட மதநிலைப்பாடாம்.
💧💧💧💧
கிறிஸ்தவ மதத்தார்தம் நிலை அப்படியானதன்று.
அவர்கள் எந்தச் சூழலில் வாழ்ந்து எம்மொழியைப் பேசுகிறார்களோ,
அம்மொழியைச் சார்ந்தே தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.
சிங்களப்பகுதிகளில் தம்மை சிங்களக் கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்தும் இவர்கள்,
தமிழ்ப்பகுதிகளில் தம்மை தமிழ்க் கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்துகின்றனர்.
இந்நிலைப்பாடு கிறிஸ்தவ மதத்தினது நிர்வாக நிலையிலும் பேணப்படுகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் கிறிஸ்தவ மத நிர்வாகத்தில்,
மதத்தின் உயர்பதவியான ஆயர் பதவியில்,
தமிழ்பேசும்  ஆயர் ஒருவரே இருப்பார்.
அதுபோலவே பேரினத்தார் வாழும் பகுதிகளில்,
சிங்கள ஆயர் ஒருவரே அம்மதத்தாருக்குத் தலைமை தாங்குவார்.
💧💧💧💧
கடுமையான போர்க்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த கிறிஸ்தவ மதத்தலைவர்கள்,
போராளிகளை ஆதரித்தும் அனுசரித்தும் அவர்தம் தொடர்போடு வாழ்ந்தனர்.
அதுமட்டுமன்றி போராட்டத்தை அவர்கள் கடுமையாக ஆதரிக்கவும் செய்தனர்.
அதேநேரத்தில் சிங்களப்பகுதிகளில் இருந்த கிறிஸ்தவ மதத்தலைவர்கள்,
பேரினத்தாரின் உணர்வுசார்ந்தே இயங்கிக் கொண்டிருந்தனர்.
இங்ஙனமாய் 'மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும்' காட்டி இயங்கி,
இருசாராரினதும் ஆதரவைப் பெற்று தம்மதத்தை வளர்ப்பதில்,
இவர்கள் என்றுமே சமர்த்தர்களாய் இருந்தனர் - இருக்கின்றனர்.
💧💧💧💧
இந்த ஆயர் பதவியில் கூடப் பெரும்பான்மை நோக்கிய வேறுபாடு இருந்தது.
தலைநகர் சார்ந்த பெரும்பான்மை பங்குகளை உடைய கிறிஸ்தவத் தலைவர்,
ஆயர் என்று அழைக்கப்படாமல் பேராயர் என்றே அழைக்கப்பட்டார்.
இப்பேராயர் பதவியில் இதுவரை தமிழர் எவரும் இருந்ததாய்
த் தெரியவில்லை.
எல்லோர்க்கும் பொதுவான மதமாய்த் தம் மதத்தைக் காட்டிக்கொண்டு,
பெரும்பான்மை இனத்தாரைத் திருப்திப்படுத்தும் இவர்தம் ராஜதந்திரத்தின் வெளிப்பாடாகவே,
இப்பதவியில் இதுவரை தமிழர்கள் அமர்த்தப்படாததைக் கருதவேண்டியிருக்கிறது.
இன்று இப்பேராயர் பதவியில் இருப்பவர்,
போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் தகுதி கொண்ட குழுவினரில் ஒருவராய்,
'கர்தினால்' பதவி பெற்று உயர்வு கொண்டுள்ளார்.
இதுதவிர, இலங்கைக்கான கிறிஸ்தவ தலைமைகளை நெறிப்படுத்தவென,
போப் ஆண்டவரால் நியமிக்கப்டும் 'நன்சியோ' என ஓர் பதவி நிலையும் உண்டு என்கிறார்கள்.
💧💧💧💧
இதில் வேடிக்கை என்னவென்றால்,
நம்நாட்டின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை,
சிங்களப்பகுதிகளிலும் தமிழ்ப்பகுதிகளிலும்,
தனித்தனிக் கொள்கைகளோடு இயங்கும் ஆயர்களை,
மேற்படி உயர் பதவித் தகுதி நிலை பெற்றோர் எவரும்,
'எல்லோரும் ஒருநிலைப்பாட்டுக்குள் வாருங்கள்' என்று,
கட்டுப்படுத்தியதாய் வரலாறு இல்லை.
💧💧💧💧
இங்ஙனமாய் ஒரு தலைமைக்குள் இயங்கும் இரு பிரிவினர்,
பிரிவுபட்ட கொள்கைகளோடு தத்தம் பிரதேசத்தில் இயங்க அனுமதிக்கப்படுவதன் நோக்கம்,
எல்லாப் பகுதிகளிலும் தமது மதத்தை வலிமைப்படுத்துவதேயாம்.
ஒருதலைமை, இருவேறு கொள்கை என இயங்கும் இவர்கள்,
தமது மதச்செயற்பாடுகளைப் பொறுத்தவரை என்றும் ஒன்றுபட்டே நிற்கும் விநோதம்,
மதம் பரப்பும் நோக்கத்துடன் கூடியது என்பது சொல்லாமலே எவர்க்கும் புரியும்.
💧💧💧💧
இவர்களது இவ் இருநிலைப்பட்ட போக்கையும் அதன் நோக்கத்தையும்,
அரசாங்கமும் போராளிகளும் அறிந்திருந்தபோதும்,
அம்மதத்தாரின் உலகளாவிய விரிந்த அரசியல், பொருளாதாரம் சார்ந்த செல்வாக்கை,
அவ்விருவராலும் நிராகரிக்க முடியவில்லை.
அதனால் இம்மதத்தார்தம் இருமைப்போக்கு,
வெற்றியாக இம்மண்ணில் ஓடிக்கொண்டிருந்தது.
இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.
💧💧💧💧
                                                                                                            (மிகுதி அடுத்தவாரத்தில்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.