ஆண்டவனின் அம்மை- பகுதி 8: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆண்டவனின் அம்மை- பகுதி 8: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்ற வாரம்)
தனது மறுதாரத்தையும் மகளையும் அழைத்துக் கொண்டு, அன்னை தன்னைத் தேடி வருமுன்,
முன்னே சென்று அவரைக் காண்பதே முறையென நினைந்து, அவர் இருப்பிடம் நாடி ஓடி வருகிறான் அவன்.

ற்றாரும் உறவினரும் காத்திருந்த இடத்திற்கு,
அச்சத்தோடு வந்து சேர்கிறான் பரமதத்தன்.
கணவனைக் காண ஆவலோடு அலங்கரித்து மருட்சியோடு நின்ற,
நம் மாண்புமிகு அன்னையின் அடிகளில்,
தன் புதிய மனைவியோடும் மழலையோடும் வீழ்கிறான்.
வீழ்ந்து எழுந்த பரமதத்தன் அன்னையை நோக்கி,
'உமது அருளே எனது வாழ்வாம் என்றும்,
இம்மழலைக்கும் உம் நாமம் இட்டு மகிழ்ந்தனன்' என்றும் உரைத்து,
மீண்டும் அன்னையின் அடியில் தாழ்கிறான்.

தானும் அம் மனைவி யோடும் தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
'யான்உம தருளால் வாழ்வேன், இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்' என்று முன் பணிந்து வீழ்ந்தான்.


முன்பு நம் அன்னையை ஆசில் கனி அவனருளால் அழைத்தளிப்பாய் என,
உரிமையால் ஒருமையில் பேசி வந்த பரமதத்தன்,
இப்போது உமது நாமம் என அவரை மரியாதைப் பன்மையிட்டு அழைக்கிறான்.
மனைவி என்ற நிலையினின்றும் அன்னையை அவன் துறந்த செய்தியை,
இம்மரியாதை விளிப்பும், மரபுக்கு மாறாய் மனைவியின் அடிபணியும் அவன் செயலும்,
நமக்கு உணர்த்துகின்றன.
இப்பாடலின் இறுதி அடியில்,
பரமதத்தன் மனதால் பணிந்ததையும், உடலால் வீழ்ந்ததையும் ஒருமித்து,
பணிந்துவீழ்ந்தான் எனச் சேக்கிழார் குறிப்பிடுதல் கவனிக்கத்தக்கதாம்.

கணவனின் செயல்கண்ட புனிதவதியார்,
அஞ்சி ஒதுங்கி அன்புச் சுற்றத்தார்தம் அயல் சார்ந்தார்.
பரமதத்தன் செயல்கண்டு பதறி வெள்கினர் உறவினர்.
உன்னை வணங்கவேண்டிய மனைவியை,
உலகினர் முன் நீ வணங்கும் காரணம் யாது? என வினவினர்.

கணவர்தாம் வணங்கக் கண்ட காமர்பூங் கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி 'உன்திரு மனைவி தன்னை 
மணனலிதாரி னாய்! நீ வணங்குவ தென்கொல்?' என்றார்.

உற்றார்தம் வினாவுக்கு,
பக்தியோடு பதிலுரைக்கிறான் பரமதத்தன்.
இவ் அன்னையை மானுடர் என்று நினைந்து நீர் மயங்காதீர்,
தெய்வம் இவரென்று தெரிந்த பின்னால்,
மெல்ல அகன்றேன். இம்மென்மகளைக் கைப்பிடித்தேன்.
பிறந்த மகவுக்கு இப்பெண் அணங்கின் பெயர் கொடுத்தேன்.
தெய்வம் இவளென்று தெரிந்ததனால் மனம் ஒப்பி,
அன்னை இவர்தன்னின் அரும்பதங்கள் வணங்கினன் யான்.
சிவனாரின் அருள்பெற்ற சீரிய இந்நற்தாயை,
கூடிவணங்கிக் கும்பிட்டு உய்திடுவீர்! என்றே உரைத்தான்.
எல்லோரும் வியந்தனராம்.

மற்றவர்  தம்மை நோக்கி 'மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப் பேரிட்டேன் ஆத லாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின்' என்றான்.
⬥ ⬥ ⬥
என்கொல்? இதுவெனச் சுற்றத்தார் வியந்தனர்.
வணிகன் சொன்ன வார்த்தைகள்,
நம் அன்னையின் இதயத்தை அதிரச் செய்தது.
துணைவன் தன்னைத் துறந்தது அறிந்ததும்,
அன்னை இவ்வுலகைத் துறந்தாள்.
அவள் அகம், சிவன் அகம் புகுந்தது.
சிந்தை ஒன்றிடச் சிலிர்த்து நிமிர்ந்தாள்.
உலகோர் அறிய உரைசெய்யத் தொடங்குகிறாள்.

என்றலுஞ் சுற்றத் தாரும் 'இதுஎன்கொல்!' என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றைவார் சடையினார் தம் குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய் கின்றார்.

முன்பு கணவர்தாம் வணங்கக் கண்ட காமர்பூங் கொடியனார் என்று,
பரமதத்தனை நம் அன்னை, கணவனாராய்க் கண்ட தன்மையை உரைத்த,
தெய்வச் சேக்கிழார்,
இப்பாடலில் பரமதத்தனின் வார்த்தைகளைக் கேட்டதும்,
அன்னை அவனைக் கணவன் என்னும் நிலையிலிருந்து துறந்தததை,
நமக்கு உணர்த்துதற்காய்,
மன்றலங் குழலி னாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா என்று,
அவனைக் கணவனாயன்றி வணிகனாய் உரைக்கும் நுட்பம் கண்டு,
மகிழ்கிறது நம் நெஞ்சம்.

பெண்மை பேரெழுச்சி கொள்கிறது.
இறையுணர்வால் ஏற்றம் கொள்கிறாள் நம் அன்னை.
அதுவரை கணவனாய்க் கண்ட பரமதத்தனை,
மைந்தனாய் நினைகிறது மாற்றமுற்ற அவளின் மனம்.
அதனால் அவனை ஒருமையில் பேசத் தொடங்குகிறாள்.
'இதுவே இவன் கொள்கை எனின்,
இவனுக்காக நான் இதுவரை தாங்கிய,
உடம்பென்னும் இத்தசைப்பொதியை இப்போதே உதறுவேன்.
உலகம் காணும் உடம்பு இனி எனக்கு வேண்டாம்.
உன்னைப் போற்றும் பேய்வடிவை உதவுக!.' என,
பரமன்தாள் பரவினார் அப்பாவை.
இதுவரை பரமத்ததனுக்கு ஆளாகி நின்ற அப்பாவை,
இப்பொழுது பரமனுக்கு ஆளாகி பரநிலையுற்றார்.

'ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி(வு) அடியேனுக்குப்
பாங்குற வேண்டும்' என்று பரமர்தாள் பரவி நின்றார்.

அன்னையின் வேண்டுதல் நம் ஐயன்தன் திருச்செவியில் விழுகிறது.
மன்றாடும் அன்னையின் வேண்டுதல் கேட்டு,
மன்று ஆடும் அச்சிவனார் மனம் இளகினார்.
வேதமுதல்வன் விரும்ப, அன்னையின் பூத உடம்பு,
சிந்தி விழுந்து சிதறிற்று.
வனப்பு அழிய அன்னை என்புருவானார்.
வானமும் நிலமும் வணங்க,
பேய்வடிவம் கொண்டு பெருந்தெய்வமாய் நின்றார் அவர்.

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளி னாலே
மேல்நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற்பு உடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்.

பேயுருக்கொண்ட நம் அன்னையை,
மேலும் கீழும் இடையும் நின்ற மூவுலகும் வணங்கிற்று,
என்பதனை நமக்கு உணர்த்துதற்காய்,
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்,
என்கிறார் சேக்கிழார்.
இவ் அடியில் வரும் வானமும் என்ற சொல்லினால்,
மேல் உலகங்கள் அனைத்தையும்,
மண்ணும் எல்லாம் என்ற தொடரினால்,
இடை நின்ற, கீழ் நின்ற உலகங்கள் அனைத்தையும்,
குறிப்பால் சுட்டுகிறார் நம் தெய்வச் சேக்கிழார்.

அன்னை பேயுருவான பேருருக்கொள்ள வானம் பூமாரி வழங்கிற்று.
தேவ துந்துபி முழக்கம் திசை எட்டும் கேட்டதுவாம்.
அவ் அருள் நிலைகண்டு பெருமுனிவரெலாம் மகிழ்வுற்றனர்.
சிவகணங்கள் நம்முள் ஒருவர் நயப்புற வந்தார் என மகிழ்ந்து,
பாட்டும் கூத்தும் கலந்த 'குணாலை'க் கூத்து ஆடின.
நிகழ்ந்தது கண்ட நேச உறவினர் அஞ்சி அதிர்ந்து அகன்று போயினர்.
தனித்து நின்றாள் நம் தாய்.
ஆண்டவனைத் தேடி அவள் பயணம் தொடங்கிற்று.

மலர் மழை பொழிந்த தெங்கும் வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாங் குணலையிட்டன முன் நின்ற
தொலைவில்பல் சுற்றத் தாரும் தொழுதஞ்சி அகன்று போனார்.


                                                                                         (அடுத்த வாரத்திலும் அம்மை வருவாள்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.