'பாவிகளை மன்னிப்பீராக!' -பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'பாவிகளை மன்னிப்பீராக!' -பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்றவாரம்)
இவர்களது இவ் இருநிலைப்பட்ட போக்கையும் அதன் நோக்கத்தையும், அரசாங்கமும் போராளிகளும் அறிந்திருந்தபோதும், அம்மதத்தாரின் உலகளாவிய விரிந்த அரசியல், பொருளாதாரம் சார்ந்த செல்வாக்கை, அவ்விருவராலும் நிராகரிக்க முடியவில்லை. அதனால் இம்மதத்தார்தம் இருமைப்போக்கு வெற்றியாக இம்மண்ணில் ஓடிக்கொண்டிருந்தது. இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

📌📌📌📌

உண்மை சுடும் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
நான் சொல்லத் தொடங்கியிருக்கும் உண்மைகளும்,
பலரையும் சுடத்தொடங்கியிருக்கின்றன.
எதிர்வினையாய் வரத்தொடங்கியிருக்கும் கருத்துக்களிலிருந்து அது தெரிகிறது.
என் கருத்துக்களை மறுக்கமுடியாதவர்கள் என்மேல் பாயத்தலைப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் மதம் மாற்றினால் சைவர்கள் ஏன் மதம் மாறவேண்டும்?
அப்படி அவர்கள் மாறுகிறார்கள் என்றால்,
உங்கள் சமயத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்று தானே அர்த்தம் என்கிறார் ஒருவர்.
சிரிப்புத்தான் வருகிறது.
'கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும்' என்று பழமொழியே இருக்கிறது.
ஒற்றுமையாய் வாழும் ஒரு ஏழைக் கணவன், மனைவியர்க்கிடையில்,
வசதிமிக்க ஒருவன் புகுந்து தன் செல்வத்தையும் வசதிகளையும் காட்டி ஈர்க்க,
அப்பெண் மனம் மாறினாள் என்றால்,
அது அவள் கணவனின் குறையாகுமா? அல்லது,
கணவனுக்கு விஸ்வாசமாய் இருந்த அப்பெண்ணின் மனதை,
செல்வத்தையும் வசதிகளையும் காட்டி ஈர்த்தவனின் குறையாகுமா?
இதுதான் என் கேள்வி.

📌📌📌📌


ஒற்றுமையாய் இருந்த ஒரு குடும்பத்தைத் தன் வசதிகளைக் காட்டிப் பிரிப்பது,
எவ்வளவு பெரிய குற்றமோ? அதே அளவான குற்றமாய்த்தான்,
ஒரு மதத்தைப் பின்பற்றுபவரை, வசதிகளைக் காட்டி ஈர்ப்பதுவும் என்று கருதுகிறேன்.
நான் மட்டுமல்ல நடுநிலையுள்ள அனைவரும் அப்படித்தான் கருதுவார்கள்.
ஒரு விஸ்வாசியை மனமயக்கம் செய்வதை இயேசுபிரான்தானும் ஏற்றுக்கொள்வாரா?
ஆரம்பத்தில் தீய அப்பிள் பழத்தைக் காட்டி,
ஆதாம் ஏவாளை ஈர்த்த சாத்தானின் செயலுக்கு ஒப்பானதன்றோ இச்செயல்.
இது புரியாமல், தம் செயல் சரிதான் எனத் தர்க்கம் செய்ய முற்படும்,
சாத்தான்களை நான் என் செய்ய?

📌📌📌📌

இனி, விடயத்தைத் தொடர்கிறேன்.
நம் இந்துமதத்தாரும் இந்நாட்டின்  மேற்கிலும் தெற்கிலும் ஆலயங்கள் அமைத்துச் செயற்பட்டாலும்,
அங்கும் அம்மதத்தைப் பின்பற்றுவோர் தமிழ்மொழி பேசுபவராக மட்டுமே இருக்கின்றனர்.
சிங்களவர்கள் இந்து ஆலயங்களுக்கு வந்து வழிபட்டபோதும்,
அவர்கள் தம்மை சிங்கள பௌத்தர்களாகவே இனங்காட்டி நிற்கின்றனர்.
இந்துமதத்தோடு அவர்கள் ஒருகாலும் தம்மைக் கரைத்துக் கொள்வதில்லை.
தமது ஆலயத்தைத் தேடி வரும் சிங்கள பௌத்தர்களை,
இந்து மதத்தவர்களாக மாற்ற நமது இந்துமதம் என்றும் எங்கும் முயற்சிப்பதில்லை.
இதுதான் நமது  இந்துமதத்தின் கண்ணியப்பெருமை.
நமது நாட்டின் மதங்களைப்; பொறுத்தவரை,
இந்துமதம் ஒன்றே தமிழ்மொழியை மட்டும்,
தனித்து தம் தாய்மொழியாய் உட்கொண்டு நிற்கிறது.
அதுபோலவே எம் மதத்தவரையும் தம் மதத்திற்குள் ஈர்க்கவும் அது முயற்சிப்பதில்லை.
இது மற்றைய மதங்களுடனான ஒப்பீட்டில் இந்துமதத்தின் தனித்துவமாம்.

📌📌📌📌

இலங்கையின் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை,
பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் என்ற பலம்,
நம் இந்துமதத்திற்கே உரியது.
இதுவும் இங்குள்ள இந்துமதத்தின் தனித்துவங்களில் ஒன்றாகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் மதங்களைப் பின்பற்றுவோர் வரிசையில்,
இலங்கையில் இந்துமதத்திற்கு மிகப் பிற்பட்டநிலையிலேயே,
கிறிஸ்தவ மதமும் இஸ்லாமியமதமும் இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட இரண்டு மதங்களும்,
உலக அளவில் பெரும்பான்மை பெற்றிருந்தாலும்,
இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளைப் பொறுத்தவரை இந்துமதமும்,
மொத்த நாட்டைப் பொறுத்தவரை பௌத்தமதமுமே,
பெரும்பான்மை மதங்களாய்த் திகழ்கின்றன என்பதுவே நிதர்சனம்.

📌📌📌📌

தமது பெரும்பான்மையை வைத்து இந்நாட்டில் தம் மதத்திற்கே முதன்மை உரிமை என,
போராடி நிற்கும் சிங்கள பௌத்தர்களைப் போல,
வடக்கிலும் கிழக்கிலும் தமக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து,
இங்கு எம் மதத்திற்கே முதல் உரிமை தரப்படவேண்டுமென,
இந்துமதத்தவர் ஒருக்காலும் போராடியதில்லை.
இந்துமதத்தின் பெருமைக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று.

📌📌📌📌

அதுமட்டுமன்றி கிறிஸ்தவம், இஸ்லாம் எனும் இவ்விரண்டு மதத்தாரினதும்,
உலகளாவிய தொடர்பு பற்றிய ஓர் உண்மையையும்,
நாம் இவ்விடத்தில் காணல் வேண்டும்.
கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் உலகளாவி நிர்வாகப்படுத்தப்பட்டு,
இயங்கிவரும் மதங்களாய்த் திகழ்கின்றன.
மேற்கு நாடுகளின் பலத்தோடு, கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமாய்,
உலக அளவில் இயங்கிவரும் 'ரோம்' என்ற நாடு,
'போப்' ஆண்டவரின் தலைமையில் ஓர் அரசாகவே இயங்கிவருகிறது.
இது இம் மதத்தார்க்கு உலகப்பலத்தை ஏற்படுத்தி வருவது வெளிப்படையான உண்மை.
அதுபோலவே இஸ்லாமிய மதத்தாரின் ஆட்சியில் இயங்கிவரும்,
மத்திய கிழக்கு நாடுகளின் பெற்றோலிய வளமும்,
அவ்வளத்தால் அவர்கள் அடைந்திருக்கும் பணபலமும்,
உலகம் பூராவும் உள்ள இஸ்லாமிய மதத்தார்க்கு,
பெரும்பலத்தை ஏற்படுத்தி வருவது நிதர்சனம்.

📌📌📌📌

இந்த விடயத்தில் இந்துமதம் உலகளாவிய பலத்தில்,
மற்றைய மதங்களுக்கு மிகவும் பிற்பட்டே நிற்கிறது.
இந்துமதத்தின் பிறப்பிடமாய்க் கருதப்படும் பாரததேசம்,
இந்துமதத்தாரைப் பெரும்பான்மையாய்க் கொண்ட மாபெரும் தேசமாய்த் திகழ்ந்தபோதும்,
கடந்த காலங்களில் அது மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியாய்ப் பேணியதால்,
இந்து மதத்தைப் பலம் செய்யும் ஒருதேசமாய் அதுவும் திகழவில்லை.
இந்து மதத்தாரும் உலகளாவி ஆங்காங்கு தமது ஆலயங்களை அமைத்து வந்தாலும்,
மேற்படி மதங்களுக்கு இருப்பது போன்ற உலக பலமோ, நிர்வாகப் பலமோ, பண பலமோ,
நம் இந்துமதத்திற்கு இல்லை என்பது வெளிப்படை.

📌📌📌📌

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைப்பீர்கள்.
இன்னும் சில விடயங்களைச் சொல்லிவிட்டு அதுபற்றிச் சொல்லத் தொடங்குகிறேன்.
பொதுவாக உலகளாவிய ஓர் உண்மை இருக்கிறது.
ஓர் இடத்தில் வாழும் இரண்டு மக்கட் பிரிவினருள்,
பெரும்பான்மை மக்கள்பலமுள்ள இனம்,
அவ்விடத்தில் தலைமை தாங்குவதும்,
சிறுபான்மை  இனம் அங்கு இரண்டாம் நிலை வகிப்பதும்,
உலகெங்கும் காணப்படும் பொது உண்மைகளாம்.

📌📌📌📌

அதுமட்டுமன்றி,
பெரும்பான்மை மக்கள்பலம் பெற்ற இனம் அப்பலத்தைக் கொண்டு,
அதிகாரங்களைப் பலவந்தமாகத் தமக்குரியதாக்குவதும்,
தம்மோடு இணைந்து வாழும் சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதும் கூட,
உலகெங்கும் நிகழும் உண்மைகளாகும்.
மேற்சொன்னவைகள் நிஜத்தை உணர்த்தும் தரவுகள்,
இனி நான் சொல்லவந்த விடயத்திற்கு வருகிறேன்.

📌📌📌📌

பலம் பெற்ற மக்கள் தொகுதி, பலம் குன்றிய மக்கள் தொகுதியை,
அடக்கியாள்வது இயல்பு என்று சொன்னேனல்லவா?
நமது தமிழர் பாரம்பரியப் பிரதேசமான வடக்கிலும் கிழக்கிலும்,
அண்மைக்காலமாக இது மாறி நடந்து வருகின்றது.
உலக விதிக்கு மாறான விதிவிலக்குச் சம்பவங்கள் சில,
அதிசயமாய் இங்கு நடந்து வருகின்றன.
அதுபற்றித்தான் இக்கட்டுரையில் எழுத நினைக்கிறேன்.

📌📌📌📌

குறிப்பாகக் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சில மதத்தலைவர்களும்,
அம்மதத்தைப் பின்பற்றுவோர் சிலரும்,
நம் பிரதேசத்தில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு,
பெரும்பான்மை பலம் பெற்ற இந்து மதத்தவர்களை,
வெளிப்படையாக வெறுக்கவும் விமர்சிக்கவும் செய்வதோடு,
அம் மதத்தாரை அடக்கியாளவும் முயன்று வருகின்றனர்.
தமது உலகளாவிய பலம்கொண்டு இப்பிரதேசங்களில்,
பகிரங்கமாக இந்து மத்தவர்களை மதமாற்றம் செய்யும்,
இவர்களது செயற்பாடுகள் அருவருக்கத்தக்கன.
இது தவறு என்று யாரும் விரல் நீட்டினால்,
தம் மதத்திற்குள் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டி,
நான் இல்லை அவர்தான், அவரில்லை இவர்தான் என்று,
இவர்கள் செய்யும் விளையாட்டு வேடிக்கையானது.
இவர்களுள் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அத்தனை பிரிவுகளும்,
மதமாற்ற முயற்சியைப் பகிரங்கமாகச் செய்வது வெளிப்படை.
அதுபற்றிய ஒரு வேடிக்கையான விடயத்தை அடுத்தவாரம் சொல்கிறேன்.

📌📌📌📌

                                                                                                                 (மிகுதி அடுத்தவாரத்தில்)
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.