மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 1

மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 1
 
கடந்த இருவாரங்களுக்கு முன்பு, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும், அதுதொடர்பாக வடக்குமாகாண முதலமைச்சர் மீதான ஐயங்களையும் கருவாகக்கொண்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதி உகரத்தில் வெளியான "கொழும்பின் சதியா? யாழின் விதியா?" எனும் கட்டுரை பெரும் அதிர்வினை உருவாக்கியது வாசகர் அறிந்ததே.

அக்கட்டுரையில் தமிழ் மக்கள்  பேரவை தொடர்பாகவும், முதலமைச்சர் தொடர்பாகவும் சொல்லப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக வலம்புரியில் அடுத்தடுத்த நாட்களே, புருசோத்தமன் எனும் புனைபெயரில் "கம்பவாரிதிக்கு ஓர் அன்புமடல்" எனும் தலைப்பில் மூன்று பாகங்களாக கட்டுரை வெளியாகியது. உகரமும் 'பத்திரிகா தர்மத்தை' மதித்து அதனைப்பிரசுரித்தது.
 
தொடர்ந்து அம்மடலுக்கு பதில்மடலாக "வலம்புரி புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல்" எனும் தலைப்பிலே உகரத்தில் மூன்று பாகங்களாக கம்பவாரிதியின் மடல் வெளியாகியது. 'வலம்புரியும்' அதனை அப்படியே வெளியிட்டு தன் ஊடக தர்மத்தை கூட்டிக்கொண்டது. அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் கம்பவாரிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அதன் பாகம் ஒன்று இன்றைய வலம்புரியில் வெளியாகியது. அதனை இங்கு உகரம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.
 
 
கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்!
2016-01-04 10:28:44
 
பேரன்பிற்கும் பெரும திப்பிற்கும் உரிய  கம்ப வாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
வலம்புரியில் தங்க ளுக்கு எழுதப்பட்ட  அன்பு மடலுக்கு தாங்கள் எழுதிய பதில் மடல் கண்டோம்.
கெளரவர் சேனையில் பீஷ்மர் நின்று போராடிய தற்காக பீஷ்மர் மீது எவரும் குற்றம் கண்டிட முடியாது என்பது நம் தாழ்மையான கருத்து. அந்த வகையில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் எம்மில் ஒரு துளியேனும் குறைந்தில.
எங்கள் தமிழ் இளைஞர்களை வழிப்படுத்துவது என்றால்  அது கம்பவாரிதியின் பேராற்றல் மிகுந்த உரை யால் மட்டுமே முடியும் என்பது உறுதியான முடிவு.
 
 கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் உலகம் முழுவதும் சென்று  ஆற்றிவரும் உரையால் எங்கள் தமிழ்மண் மார்தட்டி நிற் கிறது என்ற பெருமை தங்களால் தரப்பட்டது. தாங்கள் ஆற்றுகின்ற உரையை  இமைத்தல் மறந்து கேட்பவன் நான்.
கம்பவாரிதி ஜெயராஜ் பேசுகிறாரா அல்லது அவருக்குள் இருக்கக்கூடிய  பேரருட்சக்தி பேசுகிறதா? என்றெல்லாம்  நாம் நினைப் பதுண்டு.
 
யாழ்ப்பாண மண்ணில் இருக்கவேண்டிய எங்கள்  போதி தர்மரை கொழும்பு மண் தனதாக்கிக் கொண்டது. நாங்கள் எங்களுடன் அவரை வைத்திருக்கத்த வறியது எங்கள் தவக்குறை என்றுணர்ந்தேன்.
1995 களுக்கு முன்னர் திருநெல்வேலி சிவன் ஆலயத்திலும் யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் கோயிலிலும் உங்கள் இராமாயணத் தொடர் உரை இடம்பெற்றது.
 
இரவு 7மணிக்கு ஆரம்பமாகும் அந்த உரையைக் கேட்பதற்கு இளைஞர்கள் சாரிசாரியாக  ஓடிவருவது கண்டு ஆனந்தமுற்றேன். அது ஒரு காலம் என்று சொல்வதைத் தவிர இப்போது எதுவுமில்லை.
இன்று எங்கள் நிலைமை வேறு. தமிழ்மக்களின் துன்பங்களும் இழப்புகளும் அரசியல்வாதிகளின்   வியாபாரப் பொருளாகின.
 
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த பெரும்  போரில் எங்கள் அருமந்த உறவுகள் துடிதுடித்துப் பலியாகிப்போன அந்தப் பாவத்தைப் பயன்படுத்தி  பதவி பெறுவது என்ற நிலைமை இந்த மண்ணில் உருவாகிய பின்னர் தர்மத்தை எடுத்துக்கூறுவது என்பது காலாவதியான  கருப்பொருள் என்றே கருது கிறேன்.
 
 இருந்தும் எங்கள் பதில் மடல்கள் மாறி மாறி நீண்டு செல்வதும் ஏற்புடையதன்று. என்னசெய்வது நடுவர் இல்லாத பட்டிமண்டபம், நீதிபதி இல்லாத சட்டத்தரணிகளின் வாதங்கள் முடிவிலியாகவே இருக்கும் என்ற உண்மையையும் உணராதவன் அல்ல நான்.
 
அதிலும் நடுவராக இருக்கக்கூடிய  தகைமையுடையவர்  ஒரு தரப்பில் நின்று விட்டால் நிலைமை எவ்வ ளவு ஆபத்தானது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் உணருகிறேன். எது எப்படியாயினும் ஒரு பக்கத்தில் நின்று  தமிழ்மக்கள் பேரவை  ஒரு அரசியல் கட்சி என்றும் மாற்று அரசியல் தலைமை என்றும் கருத்துரைக்கும் தாங்களே நடுவராகவும் இருக்கவேண்டும். உங்கள் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதைத் தலை சாய்த்து ஏற்பேன் என்பதை சத்தியப்படுத்துகிறேன்.
 
எனினும் தமிழ்மக்கள் பேரவையின் செயற்பாடு எங்ஙனம் அமைகிறது என்று ஒரு கணம் பொறுத்திருந்து பார்த்து நீங்கள்  தீர்ப்பு ரைப்பதாக இருந்தால் அது கண்டு மகிழ்வுறுவேன் என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்கிறேன்.
அன்புமிகு கம்பவாரிதி அவர்களே! வலம்புரி பத்திரிகை என்றும்  நடுவுநிலை யோடு செயற்படும் என்ப தைத் தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
 
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி என்றார் வள்ளுவர். எனவே  நடுவுநிலை தவறினால் அதற்கான தண்டனை என்ன என்பதையும் அறிந்துள்ளேன். தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் தங்கள் சந்தே கங்கள் மற்றும் வடக்கின் முதலமைச்சர்  நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் மீது நீங்கள் முன்னெ டுத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் வலம்புரி தனது நாளிதழில் வெளிப் படுத்திக்கொண்டது.  அதே போல் யாம் எழுதிய தங்க ளுக்கான பதிலையும் தங்கள் இணையத்தளத்தில் இணைத்துக் கொண்டீர்கள். அதற்காக நன்றி கூறிக் கொள்கிறோம்.
 
எனினும் சில ஊடகங்கள் தமிழ்மக்கள் பேரவையின் அனைத்துச் செயற்பாடுகளையும் வேண்டு மென்றே இருட்டடிப்புச்  செய்து விட்டு பேரவைக்கு எதிரான புனைவுகளை மட்டும் பரப்புரை செய்கின்றன. இத்தகைய பக்கச் சார்புடையவர்கள்  தமிழ் மக்களின் நலன்சார்ந்து பேசுவதாகவும் காட்டிக் கொள்கின்றனர்.  
இவ்விடத்தில் ஒன்றை மட்டும் நாம் கூறிக்கொள்ள முடியும்.  ஊடக தர்மம் என்பது சகல தரப்பும் தமது பக்க நியாயங்களைக் கூறுவதற்குச் சந்தர்ப்பம் கொடுப் பதாகும்.
 இந்தத் தர்மத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாதவர்கள் தமிழ்மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்க முடியுமா என்ன? 
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களை முதன்மை வேட்பா ளராக அழைத்து வந்தவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின்  தலைவர் இரா. சம் பந்தர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூ டிய அனைத்துக் கட்சிக ளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தேர்தலில் போட் டியிட வருவேன் என்று பதவி ஆசை ஏதுமற்ற நீதியரசர் கூறியிருந்தார். 
 
இதுபற்றி முன்னைய பதிலிலும்  தெரிவித்திருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரன்  அவர்களை அழைத்து வந்த போது அதனை முதலில்  ஆதரித்தது வலம்புரி என்பதையும் இவ்விடத்தில்  கூறிக்கொள்கின்றோம். அதுமட் டுமல்ல ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர்  ஆதரித்த போது அதற்கு  ஆதரவாக வலம் புரி குரல் கொடுத்திருந் தது. ஆக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் விக் னேஸ்வரனையும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவையும் கூட்டமைப்பு ஆதரித்த போது அதற்கு  ஆதரவாக வலம்புரி குரல் கொடுத்திருந்தது எனும் போது கூட்டமைப்பின் நல்ல செயற்பாடுகளை வலம்புரி ஆதரிக்கத் தவறவில்லை என்பது உறுதி யாகின்றது. 
 
எனினும் சில ஊடகங்கள் யானையைப் பார்த்த குருடர்கள் போல் எம்மைப் பார்க்கின்றார்கள் என்ற  செய்தியை உங்களுக்கான பதிலாக அன்றி, தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் என்ற வகையில் இவ்விடத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம்.
தயவு செய்து நாம் தரும் பதில் எல்லை தாண்டுவதாக நினைத்து விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறோம். 
 
ஏனெனில் தமிழ் மக் கள் பேரவை உயிர்ப்படைவதற்கு காரணமாக இருந்தவை என்ன என்பதை நீங்களே பட்டியல் படுத்தி இருக்கிறீர்கள். ஆகை யால் தாங்கள் அறியாத பல விடயங்களும் பேசுபடு பொருளாக இருக்கும் பேரவையுடன் தொடர்பு பட்டவையாக இருப்ப தால்,  அவை பற்றியும் உங்களுக் கான பதிலில் இணைத்துக் கொள்வது ஐயம் தெளிவுபடுத்தும் என நம்பி இப்பகு தியில் குறிப்பிட விளைகின்றோம்.
  (நாளை தொடரும்)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.