மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

ப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்
ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு
தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்
பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்
முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும்
பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத
எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொத்தாகக்
கிள்ளி முகர்ந்தான் கிறுகிறுத்துப் போகின்றான்.
வாடும் வயலுக்கு வார்க்கா முகில்க்; கதிர்கள்
சூடும் சிறுபயிர்மேல் 'சோ' வென்று நள்ளிரவிற்
கொட்டும் உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்
எட்டுத் திசையும் நடுங்கி முழங்கி எழும்
ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்
பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே
கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று........பின்னர் அது
வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி
பற்றி, அதோ பார் பழையபடி கிண்டுகிறான்
சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.
                                     ◒◒◒

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.