"அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்று உரைக்கின் ஆமேயாம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்று உரைக்கின் ஆமேயாம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

('அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம்' என்பது பரம்பொருள் பற்றி கம்பன் சொன்ன ஒரு கவிதைவரி. இலது என்றால் இலதாம், உளது என்றால் உளதாம், என்பது இதன் பொருள்.  இக்கதையில் வரும் ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பது தெரியாமலே கதை கடைசி வரையில் செல்கிறது. அச் செய்தி பொய் என்று எண்ணுவார்க்குப் பொய் என்றேபடும் படியாகவும் மெய் என்று எண்ணுவார்க்கு மெய் என்றேபடும்படியாகவும் கதை முழுவதையும் கொண்டு சென்றுள்ளேன். படித்துப் பாருங்கள்.)

ள்ளம் கொதிக்க கொழும்புக் கல்யாணம் ஒன்றில்,
கால்கடுக்கத் தட்டேந்தி நிற்கிறேன்.
மனக்கழுகு முப்பத்தைந்தாண்டுத் தூரத்தை,
பின்னோக்கிப் பார்க்கிறது.
ஊர்க்கல்யாணம்,
சம்பவங்கள் ஒவ்வொன்றாய்,
உள்ளத்துள் 'மெகா'த் தொடராய் விரிய,
மனநாக்கு உருசிக்கத் தொடங்குகிறது.
மலர் ஆசையம்மாவின் மறக்கமுடியாத கல்யாணவீடு.
சாகும்வரையும் அச்சம்பவம் மறக்குமா?
நேற்று நடந்தாற்போல் மனப் பசுமை.
பசுமை என்று அதைச் சொல்ல முடியுமா?
நினைக்க இப்பொழுதும் மனம் சிலிர்க்கிறது.
அந்தக் கல்யாணவீடு பற்றி,
உங்களுக்கு முக்கியமான ஒரு விசயம் சொல்லவேண்டும்.
அதை முடிவில் சொல்கிறேன்.

 

மலர் ஆசையம்மாவின் கல்யாணம்.
'முப்பத்து மூன்று வயதிலாவது குமர் கரையேறுகிறதே' என்ற குதூகலம்,
ஆச்சியின் முகத்தில்.
பெரிய மாமா, அப்பர் மாமா, சீனி மாமா, வரதர் மாமா,
எல்லோர் முகத்திலும் சுமை நீங்கிய களை.
அம்மா, தேவியாசையம்மா, கிளியாசையம்மா ஆகியோர்,
கூடிக்கூடிக் குதூகலமாய்க் குசுகுசுக்கின்றனர்.
மலராசையம்மாதான் குடும்பத்தின் கடைக்குட்டி.
மொத்தம் எட்டு உருப்படிகள்.
கிளிஆசையம்மாவின் கல்யாணம்,
பத்து வருசத்துக்கு முந்தி நடந்ததாம்.
பத்தாண்டுகளின் பின்,
வீட்டில் நடக்கப்போகும் தங்கையின் கல்யாணம்,
குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக்கியிருந்தது.
மூத்த பிள்ளைகளுக்கு கொடுத்து மிஞ்சியவை,
அண்ணன்மார்,
தம் மனைவியருர்க்குத் தெரியாமல் கொடுத்த உழைப்பின் ஒருபகுதி,
வளவும், வயலும் தந்த பயன்கள்.
இவையெல்லாம் மலராசையம்மாவிற்குச் சீதனமாக,
கல்யாணம் நிச்சயமாகி இருந்தது.



அப்போது எனக்கு வயது ஏழு.
பள்ளிக்கூட லீவுக்கு ஊருக்கு வரும்போது,
ஆச்சி தந்த ஐஞ்சு மோதகத்துக்குப் பிறகும்,
அவவுக்குத் தெரியாமல் இரகசியமாய் ஒரு மோதகம் தரும்,
மலராசையம்மாவில் கொள்ளைப்பிரியம் எனக்கு.
அவவுக்குக் கல்யாணம்.
கல்யாணம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும்,
உறவு கூடியதில் மகிழ்ந்துபோய் நிற்கிறேன்.
வீடே குதூகலிக்க,
அடிவளவில் நிற்கும்,
மலராசையம்மாவிற்குப் பிடித்த நாவல்மரத்திற்குக்கீழ்,
அவவின் மடியில் படுத்துக் கிடக்கிறேன்.


எதுவும் பேசாமல்,
ஆசையம்மாவின் கண்கள் ஆகாயம் நோக்குகின்றன.
ஆசையம்மாவின் முகத்தில் மாற்றம் உணர்கிறேன்.
நான் உணர்ந்ததை,
அடுத்தநாள் எல்லார் முன்னாலும்,
பூரணம்மாமி வாய்விட்டுச் சொல்கிறா.
'கல்யாணக் களையில மலரிட முகமே மாறிப்போச்சு.'
அவ சொல்ல, 'ஓம் ஓம்' என்று உறவு அங்கீகரித்தது.
ஒன்றும் பேசாமல் மலராசையம்மா உள்ளே போகிறா.
'பார் பார் கலியாணத்தைப் பற்றிக் கதைச்சவுடன,
அவவுக்கு வெட்கமாக்கும்,
மாப்பிள்ளை எப்ப வர்றாராம்?'
பூரணம் மாமி புதினம் விசாரிக்கிறா.
அவ மாப்பிள்ளையைப் பற்றிக் கதைச்சவுடன,
போனமாசம் பொம்பிள பார்க்க வந்த
மாப்பிள்ளையின் முகம் நினைவில் வருகிறது.
அது மறக்கமுடியாத நாள்.
இந்தக் கல்யாணம் பற்றி
முக்கியமாய் உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும்.
முதலில் பொம்பிளை பார்த்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு,
பிறகு அதைச் சொல்கிறேன்.



இருந்த ஒரே வீடு,
எங்கள் அம்மாவுக்கும், தேவியாசையம்மாவுக்கும்,
சீதனமாய்த் தரப்பட்டது.
ஆசையம்மாவின் புருஷன் 'ஹெட் கிளாக்.'
எங்கட ஐயாவை விடப் பெரிய உத்தியோகம்.
பதவியால் வீட்டின் மூன்றில் இரண்டு பகுதி,
அவருக்குச் சீதனமாய்க் கொடுக்கப்பட,
மூன்றில் ஒருபகுதியைச் சீதனமாய் வாங்கிய,
'ஓவசியரான' எங்கள் அப்பாவிற்குக் கடுங்கோபம்.
மூத்த மாப்பிள்ளையான தான் அவமதிக்கப்பட்டதாய்,
அப்பாச்சியின் ஆலோசனையின்பின் கொதித்தெழுந்தார்.
'முழுவீட்டையும் எடுத்துக்கொண்டு,
எங்கள் பங்குக்கான காசைத்தாங்கோ!
நாங்கள் வேறெங்கையும் வீடு வாங்கிறம்.'
சாதுவான ஆனந்தம்; சின்னையா வேண்டுகோள் விடுக்க,
'முடியாது' என முரண்டுபிடித்தார் எங்கள் அப்பா.
'அப்ப உங்கட பங்கையெண்டாலும் எங்களுக்குத் தாங்கோ!'
மீண்டும் சின்னையாவின் கோரிக்கை.
'அம்பட்டனுக்கு வித்தாலும் விப்பனே தவிர,
உங்களுக்குத் தரன்.'
அப்பாவின் உயர்சாதி வெள்ளாள இரத்தம் பேசிற்று.
இரண்டு மாப்பிள்ளைகளும் முகம் திருப்பிக்கொள்ள,
பகை பதிவாயிற்று.



மாற்றுச்சடங்காய்க் கல்யாணம் முடித்த,
கிளியாசையம்மா,
தனக்குச் சீதனம் ஒன்றும் தரவில்லையென்று,
ஒவ்வொருதரம் வரும்போதும்,
சீலைத்தலைப்பைக் கண்ணீரால் நனைத்தபடி.
வெள்ளைக்காரியை முடித்த பெரியமாமா,
வெள்ளைக்காரத் தனமாய் எதிலும் ஒட்டாமல் கொழும்பில்.
வருசம் ஒருக்கா கள்ளுச் 'சீசனில' வந்துபோவதோடு,
அவரது தலைமகன் கடமை முடியும்.
கல்யாணம் குழம்பிய துரைமாமாவிற்கு,
அரை'லூஸ்' என்று ஊரில் கதை.
இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து முடிப்பதற்குள்,
மலராசையம்மாவிற்கு முப்பத்திரண்டு வயது முடிந்திருந்தது.



புரோக்கர் கதிர்காமத்தார் கொண்டுவந்த இந்தக்கல்யாணம்,
சீதன பாதனங்களால், ஓரளவில் பேசிமுடிவாயிற்று.
'மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசுதானென்றாலும்,
ஆட்கள் நல்ல சாதிமான்கள்.'
கதிர்காமத்தார் புழுகினார்.
பொம்பளை பார்க்க மாப்பிள்ளை வரவேண்டியதுதான் பாக்கி.
ஏதேதோ செய்து,
ஆச்சி, குடும்ப நவக்கிரகங்களை ஒன்று சேர்த்திருந்தா.
ஊருக்கும், உறவுக்கும் தெரியாமல்,
மாப்பிள்ளை வீட்டார் வர ஒழுங்காகியிருந்தது.
'தெரியவந்தால் கந்தசாமி கார்பிடித்துப் போயும் கல்லுக்குத்துவான்.'
இது எங்கள் அம்மாவின் அபிப்பிராயம்.
ஐயனாருக்கு நேர்ந்தபடி ஆச்சி இருக்க,
மாப்பிள்ளை வீட்டுக்'கார்' உள்ளே புகுந்தது.



பரபரப்பு.
ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே வர,
அழகான, மலராசையம்மாவைக் கல்யாணம் முடிக்கப்போகும்,
மாப்பிள்ளையை என் கண் தேடுகிறது.
'மாப்பிள்ளை வாங்கோ!'
அப்பர் மாமா கைகொடுத்தவரைக் கண்டதும்,
எனக்கு அதிர்ச்சி!
சட்டிக்கரி நிறம்.
துருத்திய பற்கள்.
ஐயனார் மீசை.
ஆளைப்பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.
கோப்பி, பலகாரம் கொடுத்து முடிய,
ஆசையம்மா அழைத்து வரப்படுகிறா.
புதிய சிவப்புச் சீலையில்,
ஆசையம்மா இன்னும் அழகாய்த் தெரிகிறா.
அவவின் வெள்ளை முகம் சிவந்து கிடக்கிறது.
கோழிக்குஞ்சைப் பார்க்கும் கழுகாய்,
மாப்பிள்ளையின் கண்கள் அவவை மொய்க்க,
மீண்டும் ஒருதரம்,
ஆச்சி ஐயனாரைக் கையெடுத்து வேண்டிக்கொள்கிறா.



'சம்மதம்' சொல்லி மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப,
வீடே குதூகலிக்கிறது.
முகத்தை நீட்டிக்கொண்டிருந்த என் அப்பா கூட,
ஒருதரம் சிரிக்கிறார்.
எனக்கு மாப்பிள்ளை பிடிக்காவிட்டாலும்,
எல்லோரும் சந்தோசப்பட,
நானும் ஆனந்தத்துடன் ஆசையம்மாவைப் பார்க்கிறேன்.
அவவின் கண்கள் கலங்கினாற்போல் ஒரு தோற்றம்.
கிளியாசையம்மா அவவைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் வடிக்கிறா.
'என்ன மலர்?
இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் எண்டு,
சொல்லிப்போடுவார் எண்டு, பயந்து போனியே!'
கிளி ஆசையம்மா கேட்க,
'சீச்சீ' என்று சமாளித்து,
மலர் ஆசையம்மா குசினிக்குள் ஓடுறா?
'என்ட ஐயனாரே நீதான் குமரக் கரையேத்த வேணும்.'
பழையபடி கையெடுத்துக் கும்பிட்டு ஆச்சி விம்முது...
சொல்ல வந்த முக்கியமான விசயத்தை,
இன்னும் நான் சொல்லவில்லை.
கல்யாணத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு,
பிறகு அதைச் சொல்கிறேன்.



'மலருக்குக் கல்யாணம்.'
அடுத்தகிழமை முழுவதும் எங்களூரின் தலைப்புச் செய்தி இது.
'சாதி, சனமெல்லாம் சரியாய் விசாரிச்சனீங்களோ?'
கல்லுக்குத்த முடியாமற்போன கவலையில் இருந்த கந்தசாமி,
அக்கறைப்படுமாப்போல விசாரிக்கிறார்.
'உந்த நாய் சட்டியைக் கவுக்கப்பாக்குது கலை அங்கால',
குசினி வாசலில் நின்ற நாயைக் கலைச்சு,
ஆச்சி இரட்டை அர்த்தத்தில் பேச,
கந்தசாமி மெல்ல நழுவுகிறார்.
நாய் குரைக்கப் படல திறக்கிற சத்தம்...
கள் இறக்க உள்ளே வருகிறான் நளப் பொன்னன்.



இழுத்துக்கட்டிய கொடுக்குக்கு வெளியே திரண்டிருந்த,
அவன் பருத்த தொடைகளும்,
மரமேறி மரமேறித் திரண்டிருந்த தோள்களும்,
உரோமம் நிறைந்து விரிந்த நெஞ்சும் ஆண்மை பேசின.
முப்பது வயதுக்கு மிஞ்சிய கம்பீரம்.
ஆரோ என்று குரைத்த பப்பி,
அவனைக்கண்டதும் நட்புக்காட்டி வாலாட்டியது.
தலைகுனிந்து பொன்னன் போக,
'டேய் பொன்னன் இங்க வா,
தங்கச்சிக்கெல்லே கல்யாணம் நிச்சயமாகி இருக்கு,
உனக்குத்தான் சரியான வேலை கிடக்கு,
எல்லா மரத்துத் தேங்காயும் பிடுங்க வேணும்,
பனையோலை வெட்டி வேலி அடைக்க வேணும்,
படலை ஆடிக்கொண்டிருக்குது,
அதையும் ஒருக்காச் சரிபண்ணவேணும்,
துலாவும் சரியில்ல, முடிஞ்சா அதையும் மாத்த வேணும்,
சரியா ஒருகிழமைதான் கிடக்கு,
செய்து முடிச்சுப்போடுவியோ?' அப்பர்மாமா கேட்க,
பொன்னனின் முகம் இருளுகிறது.
இலுப்பக் கொட்டை உடைச்சுக் கொண்டிருந்த ஆச்சி,
திரும்பவும் ஒருக்கா 'ஐயனாரே' என்று கும்பிடுது.



'என்ன! வேலை சொன்னவுடன முகம் கறுக்குது.
வேற ஆர் இதையெல்லாம் செய்யிறது?'
அப்பர்மாமா பொன்னனை முறைக்க.
'சீச்சீ இல்லை ஐயா! எல்லாம் செய்வம்.'
பொன்னன் குசினி ஜன்னலைப் பார்த்தபடி தலையாட்டுகிறான்.
ஐன்னலுள்,
ஆசையம்மாவின் முகம் என்னைப் பார்க்குமாற்போலத் தோன்ற,
சந்தோசமாய் கையசைக்கிறேன்.
உயிர்ப்பூட்டும் எண்ண அலைகள்.
சொல்ல வந்ததை விட்டுவிட்டு,
வேறென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் பொறுங்கள்,
அதற்குமுதல் கல்யாண ஆயத்தங்கள்பற்றி சொல்லவேண்டும்.



பொன்னுருக்கு முடிந்து கன்னிக்காலும் நட்டாகிவிட்டது.
சந்ததித் திமிர்காட்டி கொழுத்து நிற்கும் முள்முருக்கின்,
கதியால் ஒன்று வெட்டப்பட்டு,
ஆசையம்மாவின் பெயரால் நடப்பட்டது.
'பெரியக்காவுக்கும், தேவிக்கும், கிளிக்கும் நட்ட,
கதியால்களைப் பாருங்கோ!
என்ன செழிப்பாய் நிக்குதெண்டு!
மலருக்கு நடுறதும் இப்படித்தான் வரும்.'
நட்ட கதியாலுக்குத் தண்ணீர் வாத்துக்கொண்டு,
அப்பர்மாமா சொல்லுறார்.
ஆச்சி பிறகும் ஒருதரம் 'ஐயனாரே' என்று,
கையெடுத்துக் கும்பிடுது.
'என்னண, நெடுக நெடுகக் கும்பிடுர' சீனி மாமா கேட்க,
'பிரச்சினை ஒண்டும் இல்லாம,
என்ட குமர் கரையேறிட வேணும்.'
திருப்பியும் கிழவி கும்பிடுது.



'நாளைக்குப் பலகாரச்சூட்டுக்கு சரசுக்குச் சொன்னனிங்களே!
அவவுக்குத்தான் சீனியரியதரப் பதம் சரியாவரும்.
அப்பர் நீ ஒருக்காச் சொல்லிட்டு வா'- இது என் அம்மா.
'ஓம் பெரியக்கா நான் போறன்.
இல்லாட்டி அவ நாளைக்குவர பெரிய அருக்கு விடுவா.'
அப்பர் மாமா அவசரமாய் வெளிக்கிடுறார்.
அடுத்தநாள் நடந்த பலகாரச்சூட்டை,
இப்பவும் என்னால் மறக்கமுடியாது.
ஏழு வயதுக்குப் பாய்கிறது மனம்.
சொல்ல வந்ததை விட்டுட்டு,
வேறேதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
பலகாரச்சூட்டைப்பற்றி கொஞ்சம் சொல்லி விட்டு,
பிறகு அதைச் சொல்லுகிறேன்.



பலகாரச்சூடு தொடங்கியாச்சு.
உறவுப்பெண்கள் சூழ்ந்து உட்கார்ந்திருக்க,
காட்டுக் கல்லில அடுப்பு மூட்டி பெரிய தாச்சி வைச்சாச்சு.
அதனுள்ளே தேங்காயெண்ணெய் பளபளக்கிறது.
'இராசாத்தி! உந்த எண்ணெய்ப் பானைய ஒருக்காத் தா!'
எண்ணெய்விட்டு வைத்திருந்த மண்பானையை வாங்கி,
மணந்து பார்த்து,
'உது எப்ப ஆட்டினதெண?'
சரசு மாமி கேட்க,
அம்மா ஆச்சியைப் பார்க்கிறா.
'இந்த வருசம் ஆட்டின எண்ணெய்தானெண.
போனவருசத்தானும் கொஞ்சம் கிடந்தது.'
ஆச்சி சொல்ல,
'நினைச்சனான், அதுதான் பாண்டலடிக்குது.
கொஞ்சம் புளி கொண்டாங்கோ!'
இது சரசு மாமியின் உத்தரவு.
'அல்லனி வளவுக்க பிடுங்கின புதுப்புளி இருக்கு,
எடுத்துக்குடெண!'
ஆச்சி சொல்ல, அம்மா கொண்டோடி வருகிறா.
'உது காணாது உந்த முருக்கம் இலையும் கொஞ்சம் பிடுங்கு.'
பக்கத்தில் நின்ற வதனி அக்காவுக்கு உத்தரவு போகிறது.
'முள்முருக்கோ, கறிமுருக்கோ?' வதனி அக்கா கேட்க,
'நீ எந்த ஊரால வந்தனி? நளினம் விடுற,
உந்தக் கறிமுருங்கை இலை கொஞ்சம் பிடுங்கடி'
சரசு மாமி பாய,
கூடியிருந்த மற்றப் பெண்டுகள் சிரிக்கினம்.
'சரி சரி கனக்கச் சிரியாதயுங்கோ' என்றபடி
பழையபடி ஆச்சி ஐயனாரைக் கும்பிடுது.



'சரி சரசுமாமி நீங்கள் மாவைக் குழையுங்கவன்.'
அன்னம் மாமி சொல்ல,
'சட்டியக் கொண்டு வாங்கோ!' என்கிறா சரசு மாமி,
தேவி ஆசையம்மா,
பெரிய பித்தளைச் சருவச்சட்டியைக் கொண்டு வருகிறா.
'உதுவே சட்டி?
உதில குழைச்சால் பலகாரம் சரிவராது.
எடி சின்னவள்! இஞ்ச வா!
வீட்டில அவள் இஞ்சி நிற்கிறாள்,
ஓடிப்போய் அவளிட்ட சீனி அரியதரம் குழைக்கிற,
பெரிய மண்மூடிச்சட்டியைத் தரட்டாம் எண்டு,
வேண்டிக்கொண்டு வா!'
சின்னவள் ஓட, கதைக் கச்சேரி தொடர்கிறது.


 'இவள் குஞ்சுட தாயைக் காணேல.
அவளுக்கு நீங்கள் சொல்லேலேயே?' பெரியகுஞ்சு அத்தை கேட்க,
'அவள் இப்ப ஒரு கல்யாணவீட்டுக்கும் போறதில்லையாம்.
முப்பத்தைஞ்சு வயசில குமர வச்சுக்கொண்டு,
ஊர்க்கல்யாண வீடுகளுக்கு நான் பலகாரம் சுடவே? என்று கேட்கிறாள்.'
சின்னக்குஞ்சு அத்தை பதில் சொல்லுறா.
'ஓம் ஓம் அவளும் பாவந்தான்.
அவன் சித்தன் குடிச்சுக் குடிச்சு,
எல்லாச் சொத்தையும் அழிச்சுப்போட்டான்.
அது என்ன செய்யும்? பாவம்!' சரசு மாமி ஆமோதிக்கிறா.
'அது சரி. அவள் மகேசுவரி,
நெசவுக்குப் போறன், நெசவுக்குப் போறன் எண்டு,
உங்க பனைவளவுக்குள்ள
உவன் தோட்டம் செய்யிற தம்பிமுத்தோட,
கதைச்சுக்கொண்டு நிற்கிறாளாம், கேள்விப்பட்டனியளே?'
இது பொன்னம்மா மாமி.
'இஞ்சார் பொன்னம்மா! எங்களுக்கேன் தேவையில்லாத கதை'
'பானைல இல்லாமலே அகப்பையில வந்தது?'
சரசு மாமி ஆமோதிக்கிறாவா மறுக்கிறாவா எண்டு,
விளங்காமலே முடிக்கிறா.



'இஞ்ச கொண்டா மோன,
இந்தச் சட்டி இருந்தால்தான் எனக்கு சீனி அரியதரம் குழைக்க வரும்.
எத்தின கலியாணவீட்டிற்கு இதில குளைச்சுப்போட்டன்.'
சின்னவள் கொண்டுவந்த சட்டியை வாங்கி,
மாக்குழைக்க ஆயத்தம் பண்ணுகிறா சரசு மாமி.
சீலையைத் கணுக்கால்களுக்குள் இடுக்கி,
காப்பைப் பின்னுக்கு இழுத்துவிட்டு மாக்குழைக்க அவ தயாராக,
'ஓ! சீனி அரியதரத்தில மாமி ஒரு 'ஸ்பெசலிஸ்'ற்றாக்கும்.'
கிளி ஆசையம்மா சொல்ல, எல்லாரும் சிரிக்கினம்.
சரசு மாமி பிள்ளையாரைக் கும்பிட்டு,
முதற்சீனி அரியதரத்தை தாச்சிக்குள் போட,
அது பொங்காமல் தட்டையாய் மிதக்குது.
'என்ன சரசிட பலகாரமும் பிழைச்சுப்போச்சுது போல'
பூரணம் மாமியின் வார்த்தைகளில் பொறாமைத் துளிர்.
'என்ர ஐயனாரே' ஆச்சி பதறிக் கும்பிடுது.



'உந்தப் பொடியள அங்கால கலையுங்கோ!
இவங்கள் சுற்றி நின்று பார்க்கிறாங்கள்.
அதுதான் சீனி அரியதரம் பொங்குதில்ல.'
சரசுமாமி பழியை எங்களில போடுறா.
நாங்கள் கலைக்கப்படுகிறோம்.
'மாமி! உந்த முதற்பணியாரத்தை,
அடுப்பு நாச்சியாருக்குப் போடுங்கோ!
இனிப் போட்டுப் பாருங்கோ! பொதுபொதெண்டு பொங்கும்.'
பொன்னம்மா மாமி சொல்ல,
'ஓமடி நீ சொல்றதும் சரிதான்' என்றபடி,
சரசுமாமி தோற்றுப்போன தன் முதற்பணியாரத்தை,
அடுப்புக்குள் எறியிறா.
அடுத்தமுறை பணியாரம் போடப்படுகிறது.
இந்தமுறை பணியாரம் பொங்கி எழும்புகிறது.
தூர நின்ற நாங்கள் ஆச்சரியமாய்ப் பார்க்கிறோம்.
'அதுதானே பார்த்தன்! சரசுமாமின்ர கை பிழைக்குமே!'
பெரிய குஞ்சு சொல்ல,
சரசுமாமி வாய்க்குள் ஆணவமாய்ச் சிரிக்கிறா.



கடகடவென பலகாரம் போட்டு அள்ளப்படுகிறது.
குஞ்சுப்பெட்டிக்குள்; போடப்பட்ட பணியாரங்களை,
ஓடியோடிப்போய் அள்ளித் தின்கிறோம்.
'இவங்களை அங்கால கலையுங்கோ!' சரசுமாமி சத்தம்போட,
'போடா அங்கால' எண்டு சொல்லி,
கலைக்குமாற்போல,
மற்றவர்களுக்குத் தெரியாமல்,
கையைப்பிடித்து இரண்டு பணியாரங்களைத் திணிக்கிறா அம்மா.
அவவின் உத்தியறிந்து,
எண்ணெய் ஊறஊற,
பொத்திய கையைப் பொக்கற்றுக்குள் விட்டபடி ஓடுகிறேன்.
'அவள் ராணி பிள்ளத்தாச்சியெல்லே!
அவளுக்குச் சுடச்சுட ஐஞ்சாறக் குடுத்துவிடுங்கோ! தின்னட்டும்.'
இது பூரணம் மாமி.
ஓம் ஓமென்று சொல்லி,
இரண்டு பூவரசம் இலைய சிரட்டைக்குள்ள வைச்சு,
அதுக்குள்ள ஐஞ்சாறு பலகாரங்களை அள்ளிவைக்கிறா,
தேவியாசையம்மா.
மைம்மல் பொழுதாப்போச்சு,
ஒரு கரிக்கட்டையை வைச்சுக் குடுத்துவிடு.
சரசுமாமியின் பிரேணனை ஏற்கப்படுகிறது.



 'பெரிய தங்கச்சி, கிளி, தேவி இங்க ஒருக்கா வாங்கோ!'
மாப்பிள்ளை வீட்டார் 'வேள்வு' கொண்டு வந்திருக்கினம்.
ஆச்சி கூப்பிட,
அம்மாவும், ஆசையம்மாமாரும் உள்ளே போகினம்.
'உவள் மலருக்கு,
இவ்வளவு கெதியில் கலியாணம் நடக்குமெண்டு நான் நினைக்கேல.
சகோதரங்கள் எல்லாம் கலியாணம் முடிச்சு,
கொழும்பும், கண்டியுமெண்டு போக,
கிழவியோட,
இந்த வளவைக் காவல் காத்துக்கொண்டு கிடந்தவள்.
சீதனப்பிரச்சினையில,
வந்த மூத்த மாப்பிள்ளைமாருக்குச் சண்டை.
ஏதோ கிழவி ஒருமாதிரிச் சமாளிச்சு  மலரைக் கரையேத்துது.'
நான் நிற்பது தெரியாமல்,
கதையை எங்கள் வீடுநோக்கித் திருப்பிறா சரசுமாமி.
'இஞ்சபார் இராசாத்தியின்ர மோன்,
திருப்பிப் பலகாரத்துக்கு வாறான்.'
நான் நிற்பதைப் பூரணமாமி மறைமுகமாய் உணர்த்த,
சரசுமாமியின் கதை அப்படியே நின்றுவிடுகிறது.



இப்படி ஒருகிழமையாய்ப் பலகாரச்சூடு நடந்து முடிந்தது.
இதுக்கிடையில் நடந்த,
சொக்கட்டான் பந்தல் வேலையைச் சொல்லவேணும்.
சொல்ல வந்ததை விட்டுவிட்டு ஏதேதோ சொல்கிறேன்.
ஆனாலும் பந்தல்க் கதையைச் சொல்லாமல் இருக்க முடியாது.
அதைச் சொல்லிவிட்டுப் பிறகு சொல்லவந்ததை சொல்கிறேன்.



முத்தத்தில ஆம்பிளைகள் கூட்டம்.
'இதுதான் எங்கட வீட்டுக் கடைசிக் கல்யாணம்.
திருநாவண்ண! திறமான சொக்கட்டான் பந்தல் போடவேணும்.
சின்னராசாட மேளம் கொண்டு வரவேணும்.
அந்த ஆள் வந்தாலே சபைக்கு ஒரு இலட்சணம்தான்.
அவர் மேளம் அடிக்கிறதவிட,
தாளக்காரனை அடிக்கிறது திறமா இருக்கும்.
சமையலுக்கு பண்டாரத்திட்ட ஒருக்காச் சொல்லிப் போடுங்கோ.
உதுகள் உங்களுக்குத்தான் தெரிஞ்ச விசயம்.
கிடாரங்கள், பந்திப்பாய்களுக்கும் சொல்லி வைக்கவேணும்.
சீவரத்தினம் மாமாவீட்டதான் நாலஞ்சு கதிர்ப்பாய் கிடக்கு.
அவர் லேசில தரார்.
நான் எப்பிடியும் மாமியைப் பிடிச்சு வேண்டிப்போடுவன்.
மாமி சொன்னா,
பிறகு அங்க வேறொருவரும் கதைக்க முடியாது.
இந்தமுறையான் தோட்டத்து மிளகாயும், பயறும்,
போதியது கிடக்கு.
அதுகள் வேண்டத் தேவையில்ல.
நேற்றுத் தெய்வானை வந்து தூள் இடிச்சுப் போட்டாள்.
ஊத்தின நல்லெண்ணையும் கிடக்கு.
போனவருசத்தான் மொட்டக் கருப்பன் நெல்லுக்கிடந்து,
அம்மா அவிச்சு அரிசியாக்கிப்போட்டா.
மிச்சங்களப் பாத்து வேண்டுங்கோ! காசத் தர்றன்.
உங்களுக்குத்தானே கன கலியாணம் செய்விச்சுப் பழக்கம்.
எல்லாப் பொறுப்பும் உங்களிட்ட விட்டாச்சு.'
மாமா சொல்ல,
திருநாவுக்கரசர்,
வெறும் மேலில் கிடந்த சால்வையை இழுத்துவிட்டுக்கொண்டு,
'உத நீ சொல்லவேணுமே தம்பி.
இவள் மலரின்ர கலியாணத்த,
நான் நிண்டு செய்யாமல் வேற ஆர் செய்யுறது,'
என்றபடி வேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.



அடுத்த நாள் பந்தல் வேலை ஆரம்பம்.
காட்டுத்தடிகள் நட்டு,
கிழக்குப்பார்த்து அறுபதடியில் கொட்டில்.
பின்வளவில் அடுக்கிக் கிடந்த கிடுகெல்லாம் மேலே ஏறுகிறது.
'எடேய்! சின்னான்,
சித்திரை மாசம், சிலவேள மழை வந்தாலும் வரலாம்!
ஒருதுளி உள்ளே ஒழுகப்படாது, நெருக்கி வேய்,'
பனை ஈர்க்குக்கட்டை எறிஞ்சபடி,
திருநாவண்ணை உத்தரவு இடுகிறார்.
'உதென்ன கதையும்,
நான் வேஞ்ச கொட்டில் எண்டைக்காவது ஒழுகியிருக்கே?
நமக்கு எல்லாம் ஐமிசம்தான்!
எத்தின நாளா நமக்குக் கொட்டில்போடுறன்.
என்ட கொடுக்குக் கட்டு அவிழ்ந்தாலும் அவிழும்,
ஈர்க்குக் கட்டு அவிழாது.'
சின்னான் சொல்ல பந்தல் முழுதும் சிரிப்பலை.



 'இவன் பொன்னன இரண்டு மூண்டு நாளாக்காணேல,
எங்கபோய்த் துலைஞ்சானென்டு தெரியேல.
சும்மா சும்மா வளவைச் சுத்திக்கொண்டு நிப்பான்,
இப்ப அவசரத்திற்குக் காணக்கிடைக்கிறானில்ல.
இரண்டு நாளா கள்ளிறக்கவும் வரேல.
உடம்பு கிடம்பு சுகயீனமோ தெரியேல.' அப்பர் மாமா சொல்ல,
'அவன்ட உடம்பே சுகயீனப்படுறது.
வெள்ளன வந்துடுவான்,
நீ உன்ட வேலையப் பார்' என்கிறார் திருநாவண்ணை.



'அதுசரி வெள்ளகட்ட இவன் கட்டாடி வீரசிங்கத்த வரச்சொன்னனான்
அவனக் காணேல.'
திருநாவண்ணை சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
வீரசிங்கம் உள்நுழைகிறான்.
'என்னடா வீரசிங்கம்!
இனித்தொடங்கி எப்ப வெள்ள கட்டி முடிக்கப்போற?
நாலு நாளில கலியாணம்.
நீ மாசாமாசம் வெள்ள கொண்டு வர்ற மாதிரி,
எல்லாத்திலயும் 'லேற்' தான்.'
திருநாவண்ணை முறுகுகிறார்.
'ஏன் சொல்ல மாட்டியள்?
இவ்வளவு பெரிய பந்தலுக்கு வெள்ள கட்டிறதெண்டால்,
எத்தின வேட்டி, சீலை வேணும்.
ஊரில கலியாண வீடெண்டால்,
ஒருதரும் வெள்ள வேட்டி, வெள்ளச் சீலை,
வெளுக்கப் போடாயியள்.
ஆனா தங்கட தங்கட வீட்டுக் கலியாணங்களுக்கு மட்டும்,
சரியா வெள்ள கட்டவேணும்.
பழம் வேட்டி தானாக்கிழிஞ்சாலும்,
வெள்ளகட்டிக்கிழிச்சுப் போட்டானென்டு எனக்குத்தான் பழி.
மத்தளம் மாதிரி இரண்டு பக்கமும் அடிவேண்டி,
நாங்கள் படுறபாடு எங்களுக்குத்தான் தெரியும்.'
வீரசிங்கம் முணுமுணுக்கிறான்.
'வீரசிங்கம், விட்டால் நீ கனக்கக் கதைச்சு,
வெளுத்துவாங்கிறதில கெட்டிக்காரனென்டு சொல்லவே வேணும்.
உந்தக் கதையளை விட்டுட்டு,
எப்ப கட்டிமுடிப்ப எண்டு சொல்லு?'
திருநாவண்ணை சிலேடையாய்,
அவன் தொழிலைச்சுட்டி கிண்டலாய்ச் சொல்ல,
அதைக் கவனியாதவன் போல்,
'இது நல்ல கதையாக் கிடக்கு,
ஏதோ இண்டைக்குத்தான் வெள்ள கட்டிப்பழகிறனான்போல.
இரண்டு பெற்றோல்மக்சைக் கொளுத்தித் தாங்கோ.
விடியிறதுக்குள்ள என்ட வேலை முடிஞ்சுபோம்
என்னோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்காமல்,
உங்கட வேலையள நீங்கள் போய்ப் பாருங்கோ!'
சொல்லியபடி வேலையைத் தொடங்கினான் வீரசிங்கம்.



சொன்னாற் போலவே,
காலையில் பந்தல் வெள்ளையாய்ச் சிரித்தது.
சிற்றம்பலம் ஈயத்தாள் வெட்ட,
அப்பன் கிறே பேப்பர் சுத்த,
குலசிங்கம் பலூன் ஊதிக்கட்ட,
இரவில் பந்தல் அரண்மனையாயிற்று.
நாளை மறுநாள் கலியாணம்.
ஏதோ சொல்லவந்து ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இனியும் இழுப்பது சரியில்லை.
இதோ நான் சொல்ல வந்தது இதுதான்.



கலியாணத்திற்கு இரண்டு நாட்கள் முந்தி.
மலராசையம்மா கிணத்துக்குள் விழுந்து செத்துப்போனா.
மாப்பிள்ள வீட்டுக்கு 'வேள்வு' கொண்டுபோகவெண்டு,
குசினிக்குள்ள எல்லாரும் கொழுக்கட்டை அவிக்கேக்க,
கிணத்தடிக்குத் தண்ணீ அள்ளப்போன மலராசையம்மா,
கிணத்துக்குள்ள தவறி விழுந்திட்டாவாம்.
நினைச்சால் இப்பவும் நெஞ்சு நடுங்குது.
ஆச்சி 'ஐயனாரே ஐயனாரே' எண்டு,
கதறின கதறு காதுக்குள்ள இப்பவும் கேட்குது.
அப்பர் மாமாவும், சீனி மாமாவும் அந்த வளவெல்லாம்,
உருண்டுருண்டு அழுகினம்.
நெஞ்சு நெஞ்சா அடிக்கும்,
ஆச்சிட கையைப்பிடிச்சுத் தடுத்துக்கொண்டு,
கிளியாசையம்மாவும், தேவியாசையம்மாவும்
மற்றைக் கையால தங்கட நெஞ்சில அடிச்சுக் கதறுகினம்,
பிரேதமாக் கிடக்கும் ஆசையம்மாட காலைப்பிடிச்சுக்கொண்டு
அம்மா தலைதலையா அடிக்குது.
பந்தல் போட்ட சின்னான்,
கட்டாடி வீரசிங்கம்,
அம்பட்டன் முத்தையன்,
மாவிடிக்கிற தெய்வானைக்கிழவி,
சரசு மாமி, பூரணம் மாமி எண்டு
ஊரே வளவுக்குள்ள நிண்டு ஒப்பாரி வைச்சு அழுகுது.
கல்லாய் அசையாமல் நீண்டு கிடக்கிறா மலராசையம்மா.
இரகசியமா மோதகம் தருகிற ஆசையம்மா,
பேசாமற்கிடக்கிறதப் பார்க்க,
எனக்கும் அழுகை அழுகையா வருகுது.
சனத்திட அழுகைச் சத்தம் கேட்காமல் இருக்க,
தனக்குப் பிடிச்ச இடம் எண்டு சொல்லி,
நெடுக ஆசையம்மா என்னைக் கூட்டிக்கொண்டுபோய் வைச்சிருக்கிற,
நாவல் மரத்தடிக்கு ஓடிப்போய்
மரத்தில தலைசாய்ஞ்சு நிக்கிறன்.



ஆசையம்மாட மடியில சாய்ஞ்ச மாதிரி ஒரு உணர்வு.
மரத்திட மற்றப்பக்கத்தில யாரோ விம்முகிற சத்தம்.
இங்க யார் அழுகிறது?
எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.
மெல்ல மரத்தைச் சுத்தி வந்து எட்டிப்பார்க்கிறன்.
முழங்கால் மடக்கி,
பருத்த தோளும், தொடையும் குலுங்க,
தலைகுனிந்து ஓர் உருவம்,
விம்மி, விம்மி, அழுதுகொண்டிருக்கிறது.
மைம்மல் இருட்டில் யாரெண்டு சரியாய்த் தெரியேல்ல.
பயமாவுங்கிடக்கு.
அது ஆரெண்டு பாக்க,
துணிஞ்சு கொஞ்சம் கிட்டப்  போறன்
என் கால் அசைவால் சருகு ஓசை கிளப்ப,
குனிந்து அழுத உருவம் தலைநிமித்துது.
நளப் பொன்னன்.



தமிழ்நாட்டு வாசகர்களுக்காக
யாழ்ப்பாண பேச்சு வழக்கு சொற்களின் அகராதி

ஆசையம்மா-சின்னம்மா,
குசுகுசுத்தல்-மெல்லப்பேசுதல்
அவவுக்கு-அவருக்கு
ஓம்-ஆமா
எங்கட ஐயா-எங்கள் அப்பா
அப்பாச்சி-தந்தை வழிப்பாட்டி 
வேறெங்கையும்-வேறு இடத்தில்
புழுகினார்- மிகைப்படுத்திப் பேசினார்.
கல்லுக்குத்துதல்-புறஞ்சொல்லுதல்
அங்கால-அப்பால்
தங்கச்சிக்கெல்லே-தங்கைக்கு
பலகாரம் - பட்சணம்
தாச்சி - வானலி
எடுத்துக்குடெண – எடுத்து குடு மகளே
சீனி அரியதரம் - அதிரசம்
கலையுங்கோ –துரத்துங்கோ
சிரட்டை – கொட்டாங்கச்சி
மைம்மல் – மாலை இருள் நேரம்
முத்தத்தில – முற்றத்தில்
பண்டாரம் - சமையல்காரன்
இந்தமுறையான – இம் முறை வந்த
கன – பல
போடாயியள் – போட மாட்டீர்கள்
வேள்வு – மாப்பிள்ளை வீட்டுக்கு மரியாதைப் பட்சணம்
வளவு – வீட்டுக்காணி

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.