வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | நிறைவுப் பாகம் (12) | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | நிறைவுப் பாகம் (12) | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 09 Apr 2017
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்கள் மனதில் சென்ற அத்தியாயத்;தில் நான் சொன்ன கருத்துகள்,
நினைவில் நிற்கும் என்னும் நம்பிக்கையில்,
இவ்வத்தியாயத்தைத் தொடரலாமா?
என்ன? விழிக்கிறீர்கள்!
மறந்துபோய்விட்டதா? இதோ ஒரு சின்ன நினைவூட்டல்.
வர்ண ஒழுங்கு என்பது, காரணம் பற்றி வந்ததேயாம்.
அக்காரணம் நீங்க வர்ணத்தகுதி நீங்கிவிடும் என்று சொல்லியிருந்தேன்.
காரணம் நீங்க, வர்ணத்தகுதி நீங்குமாயின்,
காரணம் உண்டாக வர்ணத்தகுதி வருமா? என்ற,
உங்கள் கேள்விக்கு இவ்வத்தியாயத்தில் பதில் சொல்லப்போகிறேன்.
சரி, இனி இவ்வத்தியாயத்துள் நுழைவோம்!
 

♦  ♦

காரணம் நீங்க, வர்ணத்தகுதி நீங்குமாயின்,
காரணம் உண்டாக வர்ணத்தகுதி வருமா? எனும் ,
உங்கள் கேள்விக்கு ‘வரும்’ என்பதே பதிலாம்.
உடனே சான்று கேட்பீர்கள். சொல்கிறேன்!
நம் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்திலேயே அதற்குச் சான்றுண்டு.
சத்திரியனாய்ப் பிறந்த விசுவாமித்திரன்,
தன் முயற்சியால் பிராமணனாய் உயர்ந்த கதையை அக்காவியம் சொல்கிறது.
காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யாதவன் பிராமணன் ஆகான் என,
தன் ‘தெய்வத்தின் குரலில்’ காஞ்சிப் பெரியவரே எழுதியுள்ளார்.
பிராமணனை பிராமணனாக்கும் காயத்ரி மந்திரத்தை,
உலகுக்குத் தந்தவன் ஒரு சத்திரியன் என்பதைத் தெரிந்து கொண்டீர்களானால்,
வர்ண இறக்கத்தை மட்டுமன்றி வர்ண ஏற்றத்தையும்,
நம் மூதாதையர் அங்கீகரித்த உண்மையை நீங்கள் ஐயமின்றி அறிந்து கொள்ளலாம்.

♦  ♦

பியோனின் மகன் மனேஜராகலாம்.
வர்ணதர்மத்தில் அதற்கான வாய்ப்புண்டா? என்று கேட்டவர்கள்,
இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
வேறேதும் புதுப்பிழை கண்டுபிடிக்க முயல்வீர்களாக்கும்.!
நீங்கள் எல்லாம் பிழை கண்டுபிடித்து இறக்கும் அளவிற்கு,
இந்துமதம் ஒன்றும் தாழ்ந்ததில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

♦  ♦

இந்து மதத்தில் வர்ண இறக்கம் போலவே வர்ண ஏற்றமும் உண்டு என்று சொன்னேன்.
அதே நேரத்தில் ஒரு யதார்த்த உண்மையையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.
உயர் வர்ணத்தில் பிறந்தும் பண்பினால் தாழ்ந்த ஒருவர்,
அவ் உயர் வர்ணத்திலிருந்து இறக்கப்படுதல் போல,
தாழ்ந்த வர்ணத்தில் பிறந்தும் பண்பினால் உயர் வர்ணத்தகுதி பெற்ற ஒருவர்,
உயர் வர்ணத்தவராய் ஆவதில் சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.

♦  ♦

என்ன விழி உயர்த்துகிறீர்கள்.
‘பார்த்தாயா உங்கள் வர்ண விளையாட்டின் ஓர வஞ்சனையை’ எனும்,
அர்த்தம் தொனிக்கும் உங்கள் பார்வையின் கேலி புரிகிறது.
ஆனால் அக்கேலிக்கான குற்றம் வர்ணதர்மத்தில் இல்லை.
மனிதப் பொது இயல்பில் இருக்கிறது.
அதையும் சற்று விளக்கிச் சொல்கிறேன்.

♦  ♦

தாழ்ந்த வர்ணத்திலுள்ள ஒருவர்,
உயர்வர்ணத் தகுதி பெற்றாலும்,
அவ்வர்ணத் தகுதிக்காம் அங்கீகாரம் பெற,
சிறிது போராட வேண்டியே வரும்.
அப்போராட்டம் மற்றவர்களுடன் ஆனதல்ல.
தன் மனத்துடன் ஆனது.
வர்ண ஏற்றத்திற்கு இடையூறாய் இருக்கும் காரணம்,
மனித மனங்களின் இயல்பால் விளைவது.

♦  ♦

தாழ்ந்த வர்ணத்தவன் ஒருவன் மேற்பட்ட வர்ணத்தகுதி பெற முயலும்போது,
அவ் உயர்வர்ணத் தகுதிமேல் ஆசை கொள்கிறான்.
அவனது அவ் ஆசையே,
அவ் வர்ணத்தோரை அவன் மனதில் உயர்வாய்ப் பதித்து,
தன் வர்ணம் பற்றிய தாழ்வுச்சிக்கலை அவனிடம் உண்டாக்குகிறது.
எனவே அவன் உயர் வர்ணத்தகுதியினைப் பெற,
முதலில் தன்தாழ்வுச் சிக்கலிலிருந்து விடுபடப் போராடவேண்டும்.
பெரும்பாலும் அங்ஙனம் போராடுகிறவர்கள்,
எவர்களை உயர்வர்ணத்தாராய்க் கருதி அவர்களுக்கு எதிராய்ப் போராடுகிறார்களோ?
அவர்தம் அங்கீகரிப்புக்காய் தம்மை அறியாது மனத்துள்ளே ஏங்கத் தொடங்குவர்.

♦  ♦

புரட்சி செய்து போராடத் தலைப்படும் இவர்தம் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட,
அவர்தம் வர்ணம் சார்ந்த ஒரு குழுவினர் இப் புரட்சியாளரின் பின்னாலே அணிதிரள்வர்.
அவர்தம் ஆதரவைப் பெற்று,
தம் போராட்டத்தை மேலும் வீரியமாய் முன்னெடுத்துச் செல்லும் இப் புரட்சியாளர்கள்,
தம் மனத்தினுள்ளே யாரை மதித்து நின்றார்களோ,
அவர்களால் ஓர் எல்லையில் தான் மட்டும் தனித்து அங்கீகரிக்கப்பட,
அதனால் மகிழந்து தம்பின்னே வந்தவரையும் போராட்டத்தையும் ஒருங்கே கைவிட்டு,
தம்மின் மேல்வர்ணத்தாரின் அங்கீகரிப்பில் கரைந்துபோவர்.
அதனால் வர்ண உயர்வில், வலிமைமிக்க ஓரிருவர் அங்கீகரிக்கப்படுவரேயன்றி,
அனைவர்க்குமான ஒட்டுமொத்த அங்கீகரிப்பு என்பது என்றும் இல்லையாம்.
போராட்டத்தை அங்கீகரிக்காமல் போராளியை அங்கீகரித்து,
அவர்தம் போர் முனைப்பை மழுங்கடிக்கச் செய்வது,
உயர் வர்ணத்தாரின் தந்திரங்களில் ஒன்றாம்.
அங்ஙனம் உயர் வர்ணத்தாரின் அங்கீகரிப்பில் புரட்சியாளன் கரைந்து போக,
இப்புரட்சியாளனைப் பின்பற்றியோர்நிலை, என்றும் இரண்டும் கெட்ட நிலையேயாம்.
இக்கருத்தை விபரிக்க இதிகாசங்களில் சுவாரசியமான ஒரு கதையுண்டு.
அதைச் சொல்கிறேன்.

♦  ♦

கௌசிகன் என்ற ஒரு சத்திரியன்.
ஒரு சந்தர்ப்பத்தில் பிராமணரான வசிட்டமுனிவரிடம் போராடித் தோற்கிறான்.
தன் ஆற்றல் எல்லாம் பிராமணத் தவத்தின்முன் பொடிப்பொடியானது கண்டு,
திகைத்துப்போகிறான் அவன்.
சத்திரியனுக்கே உரிய இயல்பான இராஜச குணத்தால்,
தானும் பிராமணத்தகுதி பெறவேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான்
உடனே ராஜ்ஜியம் துறந்து பெருந்தவம் செய்யத்தொடங்குகிறான்.
அத் தவத்தினால் பெற்ற வரங்களைக்கொண்டு,
இடையிடையே வசிட்டருடன் போராடி வெல்லமுயல்கிறான்.
ஆனால் அம்முயற்சி தொடர்ந்தும் தோற்க,
மீண்டும் மீண்டும் விடாமல் தவம் செய்கிறான்.
‘இராஜரிஷி’ பட்டம்கூட அவனுக்குக் கிடைத்துவிடுகிறது.
ஆனாலும் அவன் திருப்தியுறுகிறானில்லை.
‘பிரமரிஷி’ பட்டத்திற்காய் விடாமல் போராடுகிறான்.
முடிவில் பிரம்மனே தோன்றி அவனுக்கு ‘பிரமரிஷி’ பட்டத்தினை வழங்குகிறார்.

♦  ♦

இங்குதான் நான் மேற்சொன்ன புரட்சியாளர்களின் இயல்பை,
இக்கதை பதிவு செய்கிறது.
யாரை வெல்ல நினைத்தாரோ? அவரிடமே,
விசுவாமித்திரரின் மனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது.
புற வெற்றி அடைந்தவர் அகவெற்றி அடையமுடியாமற் தவிக்கிறார்.
பிரமனே ‘பிரமரிஷி’ பட்டத்தை வழங்கியபோதும்,
திருப்தியுறாத கௌசிகன் என்ற விசுவாமித்திரர்,
வசிட்டர் வாயால் அப்பட்டம் தரப்படவேண்டும் என்று வேண்டிநிற்கிறார்.
அங்ஙனமே அப்பட்டம் வழங்கப்பட நிறைவில் திருப்தியுறுகிறார்.
இது இராமாயணம் சொல்லும் கதை.
இதுவே இன்றைய புரட்சியாளர்தம் கதையுமாம்.

இக்கதையைச் சற்று ஆழ்ந்து கவனித்தால்,
வர்ண உயர்வுக்கான போராட்டமும்,
அப்போராட்ட வெற்றிக்கான சிரமமும்,
அப்போராட்டத்தின் முழுமை வெற்றியில்,
போராளியின் மனநிலையால் ஏற்படும் பாதிப்பும் தெளிவாய்ப் புலப்படும்.
இதனைத்தான் வர்ண ஏற்றத்தில் வரும் பிரச்சினை என்றேன்.

♦  ♦

இது போலவே பெரியபுராணத்திலும் ஒரு கதையுண்டு.
‘திருநாளைப்போவார்’ என்று சொல்லப்படும் நந்தனார் என்ற அடியார்.
மிகப்பெரிய சிவபக்தர்.
புலைச்சாதியில் பிறந்தவர்.
அவர் தில்லை செல்ல விரும்புகிறார்.
தன் வர்ணம் நினைந்து,
தில்லையின் எல்லைதாண்டக் கூசி வருந்தி அங்கேயே நி;ற்கிறார்.
இறைவன் அவரைத் தானும் அங்கீகரித்து,
தில்லைவாழ் அந்தணரைக்கொண்டும் அங்கீகரிக்கச் செய்கிறார்.
ஆனாலும் திருநாளைப்போவார் தில்லையுள் கால்வைக்கக் கூசி,
பின் தீக்குளித்து தில்லை புகுந்தார் என்பது அக்கதை.

♦  ♦

மேற்சொன்ன திருநாளைப்போவார் கதையை எங்கள் நாட்டுப் புரட்சியாளர் சிலர்,
ஒரு காலத்தில் திரிபுபடுத்திச் சொல்லித் திரிந்தனர்.
தில்லை வந்த திருநாளைப்போவாரை,
தில்லைவாழ் அந்தணர்கள் வஞ்சனையாய் அழைத்து வந்து,
நெருப்பிட்டுக் கொளுத்தினார்கள் என்பது அவர்தம் குரூரக்கற்பனை.
நந்தனார் கதையை அவர்கள் அறிந்துகொள்வது பெரியபுராணத்திலிருந்துதான்.
ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாமல்,
அக்கதையை திரிபுபடுத்தி இழிவு செய்யும் இவர்கள்,
ஒன்றுக்கும் உதவாத தம் புனைகதைகளில்,
எவரும் கைவைத்தால் மட்டும் கொதிக்கின்றார்கள்.
அக்கால மரபினைத் துணிந்து ஒழித்து,
அந்தணரைக் கொண்டே புலையரைக் கோயிலுள் அழைத்துச் செல்ல வைத்த,
சேக்கிழாரின் புரட்சியை அங்கீகரிக்க மறுத்து நிற்கின்றார்கள் இவர்கள்.
புரட்சி நிகழ்ந்தது இந்துமதத்தில் அல்லவா!
இதுவே இவர்தம் மறுப்புக்குக் காரணம்.
வேற்று மதத்தில் இக் கதை நிகழ்ந்திருந்தால் இவர்கள் வீழ்ந்து வணங்கியிருப்பர்.
உண்மைஉயர்வை அங்கீகரிக்க மறுத்துநிற்கும் இவர்தம் கீழ்மையை என்னென்பது?

♦  ♦

முன்சொன்ன அதே விசுவாமித்திரர் வரலாற்றிலும்,
இடைச்செருகலான ஒரு கதை உண்டு.
‘திரிசங்கு’ என்ற ஓர் அரசன்.
மனித உடம்போடு சொர்க்கம் செல்ல விரும்புகிறான்.
தன் குலகுருவான வசிட்டரிடம் அவ் ஆசையை அவன் வெளியிட,
அந்த புவனமாற்றத் தகுதியை அவனுக்குத் தரமறுத்துவிடுகிறார் வசிட்டர்.
அவரை அறியாது, அவர் புதல்வர்களிடம்,
அதே வேண்டுகோளை முன்வைக்கிறான் திரிசங்கு.
தம் தந்தையும் அவனின் குருவுமான வசிட்டர் வார்த்தையை மீறிய,
திரிசங்குவின் செயலால் கோபமுற்று,
வசிட்டரின் புதல்வர்கள் அவனைச் சண்டாளனாகச் சபிக்கின்றனர்.
உயர்நிலை உறவிரும்பி உள்ளநிலையும் இழந்த திரிசங்கு,
நாட்டைத் துறந்து காட்டுக்குள் ஓடி ஒழிகிறான்.
அங்கு ‘பிரமரிஷி’ பட்டத்திற்காய் முயன்று தவஞ்செய்து கொண்டிருந்த,
விசுவாமித்திரரை அவன் சந்திக்கிறான்.
தன் நிலையைச் சொல்லி அவன் கலங்க,
தன் எதிரியாகிய வசிட்டரிடம் மோதும் வாய்ப்புக் கிடைத்ததை நினைந்து மகிழ்ந்து,
‘அஞ்சாதே உன்னை இவ் உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புவேன்’ என்று,
திரிசங்குவுக்கு உறுதி தருகிறார் விசுவாமித்திரர்.

♦  ♦

அவனைச் சண்டாள உடலோடு சொர்க்கம் அனுப்பும் முயற்சியாக,
விசுவாமித்திரர் யாகம் தொடங்க,
அத்தனை அந்தணர்களும் அவர் யாகத்திற்குச் செல்லாமல் பகிஷ்கரிக்கின்றனர்.
அவர்தம் செயலால் மேலும் ஆவேசமுறுகிறார் விசுவாமித்திரர்.
தன் முயற்சியில் சற்றும் தளர்வுறாத அவர் தனித்து யாகத்தினைத் தொடங்குகிறார்.
யாகமுடிவில் தன் தவமுயற்சியின் வலிமையால்,
திரிசங்குவை சொர்க்கம் அனுப்புகிறார்.
சண்டாள உடலோடு சொர்க்கம் வந்த திரிசங்குவை ஏற்க மறுத்து,
தேவர்கள் அவனைக் கீழே தள்ளி விடுகின்றனர்.
அபயக்குரல் எழுப்பியபடி தலைகீழாகக் கீழே வந்த திரிசங்குவை,
தன் தவவலிமையால் அந்தரத்தில் நிறுத்துகிறார் விசுவாமித்திரர்.
தன் ஆணையை ஏற்காத தேவர்களை எதிர்த்து,
புதியதோர் உலகம் செய்யும் முயற்சியில் இறங்குகிறார்.
அவரின் முயற்சி கண்டு அதிர்ந்த தேவர்கள்,
ஓடிவந்து விசுவாமித்திரரை சமாதானம் செய்ய முயல,
தேவர்தம் அங்கீகரிப்பில் மகிழ்ந்த விசுவாமித்திரர்,
புதியதோர் உலகம் செய்யும் தன் போராட்டத்தை இடையில் கைவிட்டு,
தேவர்களின் வேண்டுகோளின்படி,
திரிசங்குவை அந்தரத்திலேயே விட்டுவிடச் சம்மதிக்கிறார்.
தேவ அங்கீகாரம் விசுவாமித்திரருக்குக் கிடைக்க,
அவரை நம்பிய திரிசங்கு மேல்நிலையும், கீழ்நிலையும் ஒருங்கே இழந்து,
அந்தரமே வாழ்வாகி அவதியுற்றான் என்பது கதை.

♦  ♦

சுவாரஸ்யமான மற்றொரு கதையையும் சிலர் சொல்வார்கள்.
பிரம்மரிஷியாய் உயர்வு பெற்ற தன்னை,
வசிட்டர் சமமாய்க் கருதுகிறாரா என்பதை அறிய எண்ணி,
ஒவ்வொருமுறையும் தவம் முடிந்ததும்,
வசிட்டரைக் காணச் செல்வாராம் விசுவாமித்திரர்.
வசிட்டரைக் கண்டதும் அவர் எதிர்வணக்கம் செய்வார் எனும் நம்பிக்கையில்,
வசிட்டரை அவர் வணங்குவாராம்.
வசிட்டரோ எதிர் வணக்கம் செய்யாமல் ஆசீர்வதித்து அகன்று விடுவாராம்.
கொதித்துப் போகும் விசுவாமித்திரர் மீண்டும் தவம் செய்து,
மீண்டும் வந்து வணங்குவாராம்.
ஒவ்வொரு முறையும் வசிட்டர் ஆசீர்வாதம் செய்வதும்,
விசுவாமித்திரர் தன்தவவலிமையை உயர்த்த முயல்வதுமாய் காலம் சென்றிருக்கிறது.
நீண்ட நாட்களின் பின் ஒருமுறை,
வசிட்டரிடம் வருகிறார் விசுவாமித்திரர்.
தவ அனுபவத்தால் அவர் மனதில் பக்குவம்.
வசிட்டர் எதிர் வணக்கம் செய்தால் என்ன?
செய்யாவிட்டால் என்ன எனும் எண்ணத்தோடு,
இம்முறை விசுவாமித்திரர் வணங்க,
மனதால் உயர்வுற்ற விசுவாமித்திரரை வசிட்டரும் வணங்கி விடைபெற்றாராம்.
வர்ண உயர்வு பெறுபவர் மனதால் அவ் உயர்வை முழுமையாய்ப் பெற,
சிலகாலம் செல்லும் என்பதை உணர்த்தும் கதை இது.

♦  ♦

எத்துணை பொருத்தமான கதைகள்.
எங்கள் காலத்திலும் வர்ண உயர்வுக்காய்ப் போராடிய பலரும்,
தமக்கு உயர் வர்ணத்தவரின் அங்கீகாரம் கிடைத்ததும்,
அவ் அங்கீகாரத்தால் மகிழ்ந்து
தம்மை நம்பித் தன் பின்வந்தவர்களை,
திரிசங்கு சொர்க்கநிலைக்கு ஆளாக்கி,
தாம் உய்ந்ததற்காம் சான்றுகள் ஓராயிரம் உள.

♦  ♦

வர்ண உயர்வு முயற்சியில் விளையும் இக்கோளாறுகள்,
மனித மனச்சிக்கலின் விளைவுகளே.
இக்கோளாறுகள் வர்ணஉயர்வு நோக்கி முயலும்,
அனைவர்தம் வாழ்விலும் பதிவாகியிருப்பது நிதர்சனம்.
இஃதொன்றே வர்ண உயர்வு முயற்சியில் நிகழும் சிக்கல்.
ஆனாலும் அசையாத வலிமையோடு முயல்வாரின்,
வர்ண உயர்வு அங்கீகரிக்கப்படும் என்பதற்காம் சான்றாகவே,
‘பிரமரிஷி’ பட்டம்பெற்ற விசுவாமித்திரர் கதை நம் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறது.

♦  ♦

இன்றும் மேல்விடயத்திற்கு உதாரணர்களாய்
பல தலைவர்களை எடுத்துக்காட்டலாம்.
சமூகப்பிரிவுகளை எடுத்துக்காட்டி புரட்சிகள் செய்து,
கட்சிகள் அமைத்து வென்ற பல தலைவர்கள்
தாம் அங்கீகரிக்கப்பட்டதும் தம் போராட்ட வலிமையை இழந்து நின்றது வெளிப்படை.
அது போலவே ஒருகாலத்தில் எவர்க்கெதிராய் போர்க்கொடி தூக்கினரோ
அவர்தமையே மதித்துப்போற்றிய செய்திகளும் பல உள.
அதிகதூரம் போவனேன்?
ஒருமுறை தந்தை பெரியார் திடீரென ராஜாஜியுடன் ஒரு சந்திப்பபை நிகழ்த்தினார்.
நீலகிரியில் அச்சந்திப்பு நிகழ்ந்ததாய்ச் சொல்வார்கள்.
இருவேறு துருவங்களின் சந்திப்பு ஏன் நிகழ்ந்ததென பலரும் அப்போது குழம்பினராம்.
பின்னாளில் மணியம்மையுடனான திருமணம் பற்றி ஆலோசிக்கவே
ராஜாஜியைச் சந்தித்ததாய் பெரியார் அறிவித்தாராம்.
இதேபோல திராவிடர் கழகத்தலைவர்கள் பலரும்
பிராமணரான துக்ளக் சோவை ராஜதந்திரியாய்ப் போற்றி
பலவிடயங்களில் அவர் ஆலோசனைகளைக் கேட்டு நடந்ததும் வரலாறு.
இன்று வாழும் தலைவர்களிலும் நான் சொன்ன பதிவுகளை நீங்கள் தெளிவுறக் காணலாம்.
நாகரிகம் கருதி அவர்தம் பெயர்களைத் தவிர்க்கிறேன்.

♦  ♦

நம் ஈழநாட்டில் வர்ணப் போராட்டம் நிகழ்த்திய,
எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எனப்பலரும்கூட,
உயர் சாதியினரின் அங்கீகரிப்பில் தம் போராட்ட முனைப்பைவிட்டு ஓய்ந்துபோனது,
நாடறிந்த செய்தி.
தனித்தனி தத்தமக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் மயங்கி,
தம் வர்ணத்தவரே அங்கீகரிக்கப்பட்டு விட்டதாய் அகமகிழ்ந்து,
தம் போராட்டத்தின் வலிமை தொலைத்த,
புதிய ஈழ விசுவாமித்திரர்களின் வரலாறு சுவாரசியமானது.

♦  ♦

ஒரு சலூனிலிருந்து போராட்டம் தொடங்கிய ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா,
பின்னாளில் தனக்குக் கிடைத்த அங்கீகரிப்பில் கரைந்து,
தன் போராட்ட வலிமையைக் குன்றவிட்டதும்,
தன் போராட்டக்களமான மல்லிகையை,
இன்றைய பிராமணர்களின் (பேராசிரியர்களின்) அறிவுக்களமாக்கி,
தன் போராட்டக் கருத்தை  அக்களத்தில் நலியச் செய்ததும்,

ஒருகாலத்தில் சோஷலிசம் பேசி,
முதலாளித்துவத்தையும், சாதியத்தையும் எதிர்த்து வந்த பேராசிரியர் மௌனகுரு போன்றோர்,
சில காலத்தின் முன் நடந்த தன் இல்லத் திருமணத்தை,
தான் முன்பு எதிர்த்து வந்த ‘பூஸ்சுவா’ வர்க்கத்தின் பாணியில்,
நட்சத்திர ஹோட்டலில் ‘பற்பல’ முதலாளித்துவ விடயங்களோடு செல்வர்க்காய் நடத்தியமையும்,
வர்க்கப் போராட்டம் பற்றி வலிமையாய் உரைத்து வந்த மறைந்த பெரும் பேராசிரியர் சிவத்தம்பி,
தம் நிலை உயர்ந்ததும் தம் பிள்ளைகட்கு உயர்சாதியில் துணை தேடியமையும்,
மூடத்தனமாய் தாம் முன்னுரைத்த சோதிடத்தை நம்பி,
சாதகக் கட்டுகளுடன் வரன் தேடித் திரிந்தமையும்,
நான் சொன்ன விடயத்திற்காம் தக்க சான்றுகள்.
இங்ஙனமாய் வர்க்கப்போராட்டத்தில் ஈடுபட்ட புதிய விசுவாமித்திரர்களும்,
தம்மை நம்பி வந்த திரிசங்குகளை அந்தரத்தில் கைவிட்டு,
வசிட்டர் வாயால் பிரமரிஷி பட்டம் பெற்று,
ஓய்ந்துபோன கதை உலகறிந்த கதை.

♦  ♦

மிகத்தீவிரமாய் வர்ணப், வர்க்கப் போராட்டம் நிகழ்த்திய,
பெரும்பாலானோர் நிலை இதுதான்.
போராட்டம், பின் அங்கீகரிப்பு, அதன் பின் சமூக அந்தஸ்து, முடிவில் சரணாகதி.
இங்ஙனமே இவர்தம் வரலாறு முடிந்துபோனது.
ஒரு சிலர் பெயர் சொல்லியிருக்கிறேன்.
மற்றையோரும் பெரும்பாலும் இந்நிலையினரே.
எந்நாட்டிலும் வர்ண, வர்க்க போராட்டங்களில்; ஈடுபட்டோர்க்கான
ஒரு புள்ளித்திட்டத்தைக் கீழே தருகிறேன்.
அதை முதலில் படியுங்கள்.

♦  ♦

1. தனக்கான அங்கீகரிப்பின் பின்னும் போராட்டத்தின் ஆரம்ப வேகம்
குன்றாது இருந்திருந்தால் - 10 புள்ளிகள்.

2. தன்னைவிடக் குறைந்த ஜாதியில்
தனது பிள்ளைகட்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தால் - 10 புள்ளிகள்.

3. தம்மைவிட வசதிகுறைந்த வீட்டில்
தனது பிள்ளைகட்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தால் - 10 புள்ளிகள்.

4. தன் போராட்ட அமைப்பின் தலைமையை
தன் குடும்ப சொத்தாக்காமல் இருந்திருந்தால் - 10 புள்ளிகள்.

5. தமது அமைப்பின் வளர்ச்சிக்காய் தமது போராட்ட கருத்துக்கு எதிரானவர்களோடு
சமரசம் செய்யாதிருந்திருந்தால் - 10 புள்ளிகள்.

6. தன்பின்னால் அணிதிரண்ட ஏழைத்தொண்டர்களை
தனது உயர்வுக்குப் பயன்படுத்தாது விட்டிருந்தால் - 10 புள்ளிகள்.

7. தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதியினரை முழுமனதோடு அங்கீகரித்திருந்தால் - 10 புள்ளிகள்.

8. தாம்தொடங்கிய அமைப்பை நிலைநிறுத்துதற்காய்
தமது சாதியை நிலைநிறுத்த முனையாதிருந்திருந்தால் - 10 புள்ளிகள்.

9. தம் அமைப்பை அடிப்படையாய்க்கொண்டு
தன் தனிச்சொத்தை பெருக்காது இருந்திருந்தால் - 10 புள்ளிகள்.

10. தன்னளவுக்கும், தன்குடும்பத்தாரளவுக்கும்
தன் தொண்டர்களையும் உயர்த்தியிருந்தால் - 10 புள்ளிகள்.

♦  ♦

இங்ஙனம் போராடிய எவரேனும்,
நான் தந்த புள்ளித்திட்டத்தில் தம் விபரம் நிரப்பி,
அறுபது புள்ளிகளுக்கு மேல் பெற்றால்,
அவர்தம் திருவடிகளை வணங்க நான் தயாராயிருக்கிறேன்.

♦  ♦

வர்ணாச்சிரம தர்மத்தின் அடிப்படை சொல்லியிருக்கிறேன்.
முடிந்தவரை அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்திருக்கிறேன்.
அடக்கிய, அடக்கப்பட்ட இருதிறத்தாரினதும் உண்மை முகங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
நம் மூதாதையரின் ஆழ்ந்த சமூகப்பார்வையை உரைத்திருக்கிறேன்.
இனிச்சொல்ல ஏதும் இல்லைபோல்த் தோன்றுகிறது.
இதற்குப்பிறகும் மேலைத்தேயத்தாரை முன்னுதாரணம்காட்டி
நம்மூதாதையரை இழித்துக் கருத்துரைப்போர்க்காய் ஒரு செய்தி.
புத்திக்கு முகமூடிபோட்டு நிற்கும் உங்களை 
இனிக் காலம்தான் கழுவித்தரவேண்டும்.
தரட்டும்.
 
தர்மம் - நிறைந்தது
 
 
 
 
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.