வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 7 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 7 |  கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 03 Mar 2017
 
 
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
ங்களை இக்கட்டுரை மூலம் தொடர்ந்தும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
கடந்த ஆறு அத்தியாயங்களில்,
வர்ணாச்சிரமதர்மம் என்றால் என்ன? என்று,
என்னால் முடிந்தவரை சொல்லிவிட்டேன்.
மனதில் ‘பக்கவாதம்’ ஏதும் இல்லாத நேர்மையாளர்கள்,
ஓரளவாவது அதுபற்றிய உண்மையைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். 
இந்த அத்தியாயத்திற்குள் புகுமுன்,
முடிந்தால் மீண்டும் ஒருமுறை,
முதல் ஆறு அத்தியாயங்களையும்,
நீங்கள் ஒருதரம் படித்துவிடுவது நல்லது என்று படுகின்றது.
நேரமின்மை உள்ளவர்கள்,
கட்டுரைகளின் இடையிடையே வெளிப்பட்ட என் அபிப்பிராயங்களைத் தவிர்த்து,
அவற்றைச் சுருக்கியேனும் படிக்கலாம்.
‘அவை அபிப்பிராயங்கள் அல்ல உனது குசும்புகள்’ என,
உங்களிற் சிலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.
எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்.
முன் சொன்னவற்றை நீங்கள் ஒருதரம் நினைவுபடுத்திக்கொண்டால் கூட,
அது எனக்குப் போதுமானது. 
சரி இனி இந்த அத்தியாயத்தினுள் நுழைவோம்.
 
 
♦  ♦
 
வர்ணாச்சிரமதர்மம் மிகச்சரியானது என்றும்,
ஆனாலும் அதில் சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றும்,
அப்பிழைகளுக்கு தர்மத்தை வகுத்த நம் மூதாதையர்கள் காரணர் அல்லர் என்றும்,
பிற்காலத்தில் அதனைப் பின்பற்றியவர்களே,
அத்தத்துவத்தில் பிழைகள் வரக் காரணமாயிருந்தனர் என்றும்,
இரண்டாம் அத்தியாயத்தில் நான் சொன்னது,
உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். 
மறந்திருந்தால் இவ்விடத்தில் அந்த விடயத்தை மீண்டும் ஒருதரம்,
நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உயர்ந்தவர்களால் உருவாக்கப்படும் தத்துவங்கள்,
என்றும் சமூகத்தின் நன்மை நோக்கியவையே.
ஆனால் பின்பற்றுபவர்களின் மானுடக்கீழ்மை,
அத்தத்துவங்களைத் தம் வசதிக்காக்கி இழிவுசெய்து விடுகின்றது.
அவர்கள் செய்த இழிவுகள் பின்னாளில் தத்துவங்களின்மேல் ஏற்றப்பட்டு,
தத்துவங்களும், அதன் ஸ்தாபகர்களும் இழிவு செய்யப்படுகின்றனர்.
இஃது அன்று இன்று என்றில்லாது என்றும் நடக்கும் கொடுமை.
இதை, பின்னால் இன்னும் தெளிவாய் விளக்கம் செய்வேன்.
இப்போதைக்கு இவ்வுண்மையை நீங்கள் மனதில் பதிக்கவேண்டும்.
 
♦  ♦
 
வர்ணப் பிரிவுகளால் சமூகம் பிரிக்கப்பட்டதால்தான்,
சமூகத்தில் உயர்வுதாழ்வுகள் தோன்றின என்பது சிலரது அபிப்பிராயம்.
சிலரது என்ன சிலரது? பலரதும் அபிப்பிராயம் அதுவாகத்தான் இருக்கிறது.
வர்ணப்பிரிவுகள் என்பவை நம் மேலோரால் சமூகத்துள் திணிக்கப்பட்டவையல்ல.
அப்பிரிவுகள் ஏலவே சமூகத்தில் இயல்பாய் இருந்தவைதான்.
அவற்றை இனங்கண்டு குறித்ததும், பெயரிட்டதும் மட்டுமே,
நம் மேலோர் செய்த வேலை.
வர்ணாச்சிரம தர்மம் என்ற ஒன்றை உயர்ந்தோர் வகுப்பதன் முன்னரே,
தொழில் ரீதியான வேறுபாடுகளும்,
தொழிலின் முக்கியத்துவம் கருதிய உயர்வு தாழ்வுகளும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே வர்ணாச்சிரம தர்மம் சமூகநலம் நோக்கி அறங்களை உரைக்கவென
வரையறுத்ததான இப்பிரிவுகளால்தான் சமூகத்துள் உயர்வுதாழ்வுகள் தோன்றின என்பது,
இயற்கையை உணராதவர்களின் வீணான குற்றச்சாட்டு என்றே கருதுகிறேன்.
 
♦  ♦
 
உங்களிற் சிலபேர் ‘இவர் இப்படித்தான்,
முன்னவர்கள் எதைச் செய்தாலும் அவை எல்லாம் சரியாய்த்தான் இருக்கும் என்று,
எப்போதும் பிடிவாதம் பிடிப்பார்’ என்று நினைப்பீர்கள்.
அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு. 
‘தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா
பின்பு தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா’ எனும்,
உமாபதி சிவாச்சாரியாரின் கருத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடு உண்டு.
பழமையெனப் பாவம்பேணும் பண்பினை,
பாஞ்சாலி சபதத்தில் பாரதி கண்டித்ததை,
இரசித்துப் படித்தவன் நான்.
 
முன்பு இருந்ததோர் காரணத்தாலே, மூடரே, பொய்யை மெய் எனலாமோ?
முன்பெனச் சொல்லும் காலம் அதற்கு மூடரே, ஒர் வரையறை உண்டா?
முன்பெனச் சொலின் நேற்றும் முன்பேயாம் மூன்றுகோடி வருடமும் முன்பே
முன்பெரும் எண்ணிலாது புவிமேல் மொய்த்த மக்களெலாம் முனிவோரோ?
 
நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர் நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?
பார் பிறந்தது தொட்(டு) இன்றுமட்டும்  பல பலப்பல பற்பல கோடி
கார் பிறக்கும் மழைத்துளிபோலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும்
நீர் பிறப்பதன் முன்பும் மடமை, நீசத்தன்மை இருந்தன அன்றோ?
 
என பாரதி முன்வைக்கும் தர்க்கங்கத்தில் எனக்கு நூறுவீத உடன்பாடுண்டு.
 
♦  ♦
 
அதேநேரத்தில் இதற்கு நேர் எதிராய்,
பழமையனைத்தும் தவறு என்ற கருத்தோடும்,
என்னால் உடன்பட முடிவதில்லை.
பிழைகளும் சரிகளும் எங்கும், எப்போதும் உள்ளவைதான்.
ஒருவிடயத்தை அறிவு பூர்வமாய் ஆராய்ந்து சரிபிழை காண்பது நம்பொறுப்பு.
அவ்வடிப்படையைக் கொண்டு ஆராய்ந்ததில்,
பெரும்பான்மையினராகிவிட்ட, 
சுயம் தொலைத்த மேற்குலகின் அழுக்குகளையும் அமிர்தமாய்க் கருதுகின்ற,
இன்றைய அரைகுறை அறிஞர்களைவிட,
அன்றைய மேலோரின் கருத்துக்களில்,
நியாயத்தின் விகிதாசாரம் அதிகமிருப்பதால்தான்,
அவர் கருத்தை ஆராய்ந்து அன்போடு அங்கீகரிக்கிறேன்.
இதைக்குறை என்று நீங்கள் நினைத்தால்,
நான் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது. 
 
♦  ♦
 
அப்படியாயின் இந்த சமூகப்பிரிவுகள் எதனால் தோன்றின?
கேள்வி பிறக்கும்-பதில் சொல்கிறேன்.
மாற்றம் என்ற ஒன்றே மாற்றமடையாதது என்று,
முற்போக்குவாதிகளால் ஒரு கருத்து எப்போதும் முன்வைக்கப்படுவதுண்டு.
சூரியன் கிழக்கே உதிக்கும், அமாவாசை இருளாக இருக்கும் போன்ற
இயற்கை நியதிகள் சில இக்கருத்துக்கு விதிவிலக்கானவை என்பது எனது அபிப்பிராயம்.
சில இயற்கை நியதிகள் எப்போதும் மாற்றம் அடையாதவை என்றே தோன்றுகிறன.
அத்தகைய சில நியதிகளே சமூகத்தில் உண்டான,
நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் மூலமாய் அமைந்துவிட்டன.
அங்ஙனம் அமைந்த இயற்கை நியதிகளில்,
மனிதர்க்கு வாய்த்த பகுத்தறிவும் ஒன்றாம்.
 
♦  ♦
 
இப்பகுத்தறிவு உயர்வுதாழ்வை உய்த்துணரும் அறிவை,
மற்றைய ஜீவராசிகளுக்கு இல்லாமல் மானுடர்க்கு மட்டும் தந்துவிட்டது. 
அதனால்தான் மேல், கீழ் என்னும் பிரிவுகளும்,
அவற்றால் விளையும் சண்டைகளும்,
மானுட இனத்தார்க்கு மட்டும் உரியதாகின.
இது இயற்கை. 
இவ் இயற்கையின் விளைவுகளுக்கு எவரிலும் நாம் பழிசொல்ல முடியாது.
இயற்கையால் அமையும் இவ்வேற்றுமைகளை ஒழிக்க,
இரண்டே இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று பகுத்தறிவை முற்றாய் இழந்து விலங்குநிலைய நாம் எய்தவேண்டும்.
அல்லது பகுத்தறிவின் சிகரம் தொட்டு அன்பின் உயர்வால் 
அனைவரையும் சமமெனக்கருதும் இறைநிலை எய்தல்வேண்டும். 
இவை இரண்டும் சாத்தியமற்றவை.
எனவே மனிதகுலம் உள்ள அளவும் பேதங்கள் இருக்கத்தான் போகின்றன.
இயற்கையால் அமைந்த இக்குற்றத்தை எவர்மீதும் ஏற்றுவதில் நியாயமில்லை.
ஒன்றே ஒன்றை உறுதியாய்ச் சொல்வேன்.
ஜாதிப்பாகுபாடுகளை ஒழிக்கவெனப் போராட்டங்கள் நடத்தத் தொடங்கிய,
தனிமனிதர்களோ அமைப்புக்களோ 
சமஉரிமை வேண்டி தமக்கு மேற்பட்ட ஜாதியினருடன் போராடிக்கொண்டிருக்கின்றனவே அன்றி,
தமக்குக் கீழ்ப்பட்ட ஜாதியினரின் போராட்டங்களை,
இன்றுவரை அங்கீகரித்ததாய் வரலாறில்லை.
இவ் உண்மை புரிந்தால் இக்கோளாறுகளின் அடிப்படை,
இயற்கைதான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
 
♦  ♦
 
 
அப்படியானால் அனைவரும்,
சமூகத்தின் உயர்நிலையாளர்களுக்குரிய தகுதிகளை உண்டாக்கிக்கொண்டு.
தாமும் உயர் வர்ணத்தாராய் தம்மை பதிவு செய்து கொள்ளலாமே.
அங்ஙனம் செய்தால், அனைவரும் உயர்ந்தவராகி,
பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கி விடலாம் அல்லவா? என்று கேட்பீரகள்.
அதுவும் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாய்த்தான் படுகிறது.
மனிதர்தம் ஆற்றல்களும், இன்னார்க்கு இது இது என்று,
பிறவியிலேயே தானாய் அமைந்துபோய்விடுகின்றன.
எத்துணைதான் முயன்றாலும் ஒருவர்க்குப் பிறவியில் வரும் இவ்வியல்பாற்றலை,
பயிற்சியால் மற்றவர்களால் முழுமையாய்ப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. 
 
♦  ♦
 
நம் புத்திக்கு அப்பாற்பட்டு தானாய் அமையும் இயல்பாற்றல்களுள்,
சமூகத்தேவைக்கேற்ப சிலரது ஆற்றல் முக்கியப்பட,
அம்முக்கியம் நோக்கி அவ்வாற்றல்மிக்கவர்,
தம்மை உயர்ந்தோராய்க் கருதுவதும்,
அவ்வாற்றல் இல்லாதாரைத் தாழ்ந்தோராய்க் கருதுவதும்,
இயற்கையாய் அமைந்துபோன விதிகள். 
இவ் இயற்கை நியதிகளே வர்ணப்பிரிவுகளுள் உயர்வுதாழ்வை உருவாக்கின.
இவ் உயர்வுதாழ்வுகள் இயற்கையேயானதால்,
அன்றும், இன்றும், என்றும் இவை இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
அதனால்த்தான் வேறு வேறு பெயர்களில் இவ்வர்ண தர்மம் என்றும் நிலைத்து நிற்கின்றது. 
 
♦  ♦
 
எனவே சமூகத்துள் பிரிவுகள் என்பது என்றும் இருக்கத்தான் போகிறது.
உயர்வுதாழ்வற்ற சமூகம் என்பது என்றும் வெறும் இலட்சியமே.
என்ன? உங்களிற்கொஞ்சப்பேர் என்னை முறைக்கிறீர்கள்.
ஓஹோ! நீங்கள் இலக்கியங்கள் படித்தவராக்கும். 
 
‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.’
 
என்று உம்முடைய கம்பனே சொல்லியிருக்கிறானே,
அப்படியானால் அவன் சொன்னதும் பொய்யா? 
உங்கள் முறைப்பினூடு தெரியும் கேள்வி புரிகிறது. 
என்னை மடக்கிவிட்டதாய் ரொம்பவும் பெருமிதப்படாதீர்கள்.
கம்பன் சொன்னதும் பொய்தான்!
அனைவரும் சமம்தான் என்கின்ற கம்பன் சொன்ன அந்தப்பொய் 
என்றும் மனுக்குலத்தின் இலட்சியமாய் இருக்கவேண்டும்.
அவ் இலட்சியம் என்றும் நிறைவேறப்போவதில்லையென்றாலும் 
அவ்விலட்சியத்தால் ஒட்டுமொத்த சமூகமும்,
உயர்வுநோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். 
இந் நன்மை நோக்கியே,
கம்பனும் அவ்விலட்சியத்தைத் தன் காவியத்தில் பதிவு செய்தான்.
 
♦  ♦
 
அதனால் மீண்டும் அழுத்திச் சொல்கிறேன்.
பிரிவுகளும், பேதங்களுமற்ற சமூகம்,
உலகில் எங்கும் எப்போதும் இருக்கப்போவதில்லை. 
வர்ணாச்சிரம தர்மத்தில் பிரிவுகள் பதிவானதென்றால்,
அது நம் மேலோர் இயற்கையை உணர்ந்து உண்மையை உள்வாங்கியதன் விளைவே.
அதற்காக அத்தர்மத்தை வகுத்தவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. . 
 
♦  ♦
 
வர்ணப்பிரிவின் உயர்நிலையிலிருந்த பிராமணரும், சத்திரியரும்,
தம் சுயநலத்திற்காய் மற்றவர்களைப் பயன்படுத்தியும், சுரண்டியும் வாழ
இத்தர்மத்தின் பெயரால் வழிசெய்தனர் என்பது,
வர்ணாச்சிரம தர்மம் சார்ந்து சொல்லப்படும் அடுத்தகுற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையில்லாமல் இல்லை.
சமூகத்தின் மற்றைய பிரிவினர்கள் தம் தேவைக்காய்த் தாமே உழைத்துவாழ,
அந்தணரும், அரசரும் ‘தானம்’ என்ற பெயராலும் ‘வரி’ என்ற பெயராலும்,
சமூகத்தின் உதவியை உரிமையாய்ப் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தது உண்மையே. 
வர்ணாச்சிரமதர்மத்தில் அவர்கள் அங்ஙனம் வாழ அனுமதி வழங்கப்பட்டதுதான்,
பலபேரின் பிரச்சினையாய் இருக்கிறது.
இவ் அனுமதி, எங்ஙனம் தர்மமாகும்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
முதலில் ஏன் அப்படிச் சலுகை வகுக்கப்பட்டது?
என்பதற்கான காரணத்தை மட்டும் சொல்கிறேன்.
 
♦  ♦
 
சூத்திரர், வைசிகருக்கு இல்லாத சில சலுகைகளை,
அரசர்க்கும், அந்தணர்க்கும் வர்ணாச்சிரமதர்மம் வழங்கியிருந்தது உண்மையே.
அங்ஙனம் சலுகைகள் வழங்கப்பட்டதற்குக் காரணமில்லாமலில்லை.
மற்றைய வர்ணத்தவர் அந்தணர்க்குரிய வாழ்வியல்த் தேவைகளை,
தானம் என்ற பெயரால் வழங்க விதிக்கப்பட்டதும்,
மற்றைய எல்லா வர்ணத்தவர்களிடமும் அவர்களின் வருமானத்தின் ஆறில் ஒரு பங்கை,
அரசர்கள் வரியாய்ப்பெற சலுகை விதிக்கப்பட்டதும் உண்மையே.
இவை வர்ணத்தால் உயர்ந்தவர்கள் என்பதற்காக,
அரசர்க்கும் அந்தணர்க்கும் வழங்கப்பட்ட சலுகைகள் அன்றாம்.
அவசியம் நோக்கி விதிக்கப்பட்ட சலுகைகள்.
அதைச் சற்று விரிவாய்ச் சொல்கிறேன்.
 
♦  ♦
 
சத்திரியர்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தின் பாதுகாப்புப்பொறுப்பை ஏற்றவர்கள்.
சமூகத்தின் உள்ளேயும், புறத்தேயும் இருந்துவரக்கூடிய பகைகளை ஒடுக்கி,
சமூகத்தைக் காத்து சமநிலை பேணி அனைவரையும் பொறுப்பு அவர்களது என்பதை,
முன்னமே விளக்கிச் சொல்லியிருக்கிறேன்.
அத்தகைய பொறுப்பை ஏற்ற அவர்கள்,
அப்பொறுப்பை செவ்வனே செய்ய,
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனும் அங்கங்களை 
உருவாக்கிப் பேணவேண்டிய அவசியம் இருந்தது.
இவற்றை அமைத்து நிர்வாகம் செய்ய பெரும் பொருளாதாரத்தேவை, அவர்களுக்கு அவசியமாயிற்று.
ஒட்டுமொத்தச் சமூகத்தின் பாதுகாப்பிற்காக,
இந்நிர்வாக அமைப்புத் தேவைப்பட்டதால்,
இந்நிர்வாக அமைப்புக்கான பொருளாதாரத் தேவையை,
சமூகத்திடமிருந்தே பெற்றுக்கொள்வது தவிர்க்கமுடியாததாயிற்று.
அவ்வடிப்படையிலேயே வரிபெறும் உரிமையை அரசர்க்கு வர்ணாச்சிரம தர்மம் வழங்கியது.
இன்றைய நிலையிலும் அரச அமைப்பில் அதுவே சாஸ்வதமாம்.
 
♦  ♦
 
சமூகத்தின் அறிவுப்பொறுப்பேற்று அனைத்துத் துறைகளையும் வளர்ப்பதற்கான,
அறிவாராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அந்தணர்களுக்கு,
கூர்மைபட கற்கவேண்டிய தேவையிருந்ததால்
சமூகத்தின் வாழ்வியல்ப் பிரச்சினைகளிலிருந்து, 
விடுபட்டிருக்கவேண்டியது அவசியமாயிற்று.
ஒட்டுமொத்தச் சமூகத்தின் தேவைக்காக தம் வாழ்வியலைத் துறந்த 
அந்தணகுலத்தார்க்கு மற்றைய வர்ணத்தார் நன்றிக்கடனாக, 
தானமாய் அனைத்தும் வழங்கவேண்டும் என விதிக்கப்பட்டது.
அங்கனம் விதிக்கப்பட்டது ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மை கருதியேயன்றி,
அவ் அந்தணர் குலத்தின் நன்மைகருதியது அன்றாம். 
 
♦  ♦
 
மேற் சொன்ன தானம், வரி என்னும் சலுகைகள்,
சமூகத்தை அறிவால் வளர்த்தெடுக்கும் அந்தணர்க்கும்,
நிர்வாகத்தால் வளர்த்தெடுக்கும் அரசர்க்கும் உரியனவேயன்றி,
வெறும் வயிற்றுப் பிளைப்புக்காய் தேவகாரியம் செய்யும் அந்தணர்க்கும்,
தமது வாழ்வின் உறுதிக்காய் ஊழல் செய்யும் அரசியலாளர்க்கும் உரியதன்றாம்.
எனவே, வர்ணாச்சிரமதர்மத்தில், 
அந்தணர்க்கும், அரசர்க்குமாக வழங்கப்பட்ட சலுகைகள்,
அவசியம்நோக்கியும், சமூகமுழுமையின் நன்மை நோக்கியும் வழங்கப்பட்டவையே அன்றி
அவ் அவ் வர்ணத்தாரின் உயர்வுநோக்கி வழங்கப்பட்டவை அல்ல என்பதை,
நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
 
♦  ♦
 
தமக்கான சமூக உயர் அந்தஸ்தை பயன்படுத்தி
சமூகத்துள் வர்ணாச்சிரம தர்மத்தை நடைமுறைப்படுத்தி வந்தவர்கள்
அந்தணர்களும் அரசர்களுமேயாம்.
அதனால் அவர்கள் தம் வசதிக்கேற்ப
மேற்படி தர்மத்துக்கான வியாக்கியானங்களை வகுத்துக்கொண்டனர் என்கின்றனர்  சிலர்.
அவர்கள் சொல்லும் குற்றம் பிற்காலத்தில் விளைந்தது உண்மையே!
ஆனால் தர்மவயப்பட்ட உயர்ந்தோரால் வர்ணாச்சிரம தர்மம் வகுக்கப்பட்டபோது,
அதனை வகுத்த உயர்ந்தோர் இக்கீழ்மைகளை மனங்கொண்டு தர்மத்தை வகுக்கவில்லை.
அவை பற்றி விரிவாய் அடுத்த அத்தியாயங்களில் சொல்லுகிறேன்.
 
வெள்ளிதோறும் தர்மம் - தொடரும்
 
 
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.