வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 8 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 11 Mar 2017
அந்தண அரச வர்ணத்தாருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை,
அவர்கள் தம் சுயநலத்திற்காய் பயன்படுத்திக்கொண்டனர்,
என்ற உண்மை பற்றி சென்ற வாரம் சொல்லியிருந்தேன்.
அதுபற்றி மேலும் சில சொல்லவேண்டும்.
♦ ♦ ♦
அறிவு, நிர்வாகம் எனும் தேவைகளுக்காக,
சமூகத்தால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை அனுபவித்துச் சுகம் கண்டு பழகியதால்,
அந்தணர்களும் அரசர்களும் அச்சலுகைகளை தமது உரிமைகளாக்க முயன்றனர்.
தர்மங்களை வரையறை செய்யும் உரிமையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும்,
அவ்விருவர் கைகளிலேயே இருந்ததால்,
தமக்கு வாய்ப்பாக மூல அறநூல்களில் மாற்றங்களையும் அவர்கள் செய்து கொண்டனர்.
அம்மாற்றங்களின் போது தம் சேவைக்காய் சமூகம் தந்த சலுகைகளை,
தம் குலத்திற்கும் சந்ததியினருக்கும் உரிமையாக்கி,
பரம்பரை பரம்பரையாய் அச்சுகங்களை தம்மவர் அனுபவிக்க வழி செய்து கொண்டனர்.
பணிக்காய் தரப்பட்ட சலுகைகளைப் பரம்பரைக்காக்கி,
தம்வழிவந்தோர், பணிசெய்யாமலே அச்சலுகைகளை அனுபவிக்க ஆவன செய்து,
அவர்கள் இயற்றிய கயமைகள் பிற்காலத்தில் தர்மநூல்களிலும் ஏற்றப்பட்டன.
அதனால்த்தான் உயர்ந்தவர்களால் செய்யப்பட்ட அறநூல்களை மற்றையோர் வெறுக்கும்படியானது.
மனிதகுல நாகரிகத்தில் முதன்முதலாக சமூக அறம் வகுக்க என,
நம் மூதாதையர்களால் செய்யப்பட்ட வர்ணாச்சிரம தர்மம்,
மற்றவர்களின் வெறுப்புக்குள்ளான வரலாறு இது.
♦ ♦ ♦
இக்கட்டுரைத் தொடரை தொடர்ந்து படித்து,
கருத்துரைப்போரில் 90 சதவீதமானவர்கள்,
முன்சொன்ன வெறுப்பின் அடிப்படையிலேயே வர்ணாச்சிரம தர்மத்தின் மீதும்,
அத் தர்மத்தை நியாயப்படுத்தும் என்மீதும் கோபப்படுவது தெரிகிறது.
அத்தகையோர்க்காய் மீண்டும் மீண்டும் ஒன்றை உரைப்பேன்.
ஒரு சிலரால் கொச்சைப்படுத்தப்பட்டமைக்காக,
ஓர் உயர்ந்த கொள்கை எங்ஙனம் தாழ்ந்த கொள்கையாகும்?
சரி! ‘இக்கொள்கை பிராமணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நமக்குத் தேவையில்லை.
இக்கொள்கையை நிராகரிக்கவேண்டும்’ என்று பிடிவாதம் பிடிப்போர்,
தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் பிரிவு செய்யாமல்,
ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அறவகுப்பை எங்ஙனம் செய்யலாம் என்பது பற்றி,
தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.
அதைவிடுத்து தர்மத்தையும் என்னையும் திட்டிப் பிரயோசனம் இல்லை!
♦ ♦ ♦
உயர்ந்த தத்துவங்களை நிறுவ,
ஒரு கொள்கையைச் சமூகத்திற்குள் பிரயோகிக்கும்போது,
அப்பிரயோகத்திற்காய் பெரும்புரட்சி செய்யவேண்டியிருக்கும்.
பின்னாளில் அப்புரட்சி வெற்றியளித்து கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் போது,
அக்கொள்கையால் இலாபம் அடைவோர் தம் வசதிக்காய்,
அக்கொள்கையை வைத்தே மக்களை அடக்க முயல்வர்.
அப்போது மீண்டும் மறுபுரட்சி வெடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.
உலகவரலாற்றை உன்னிப்பாய்க் கவனித்தால் இவ்வுண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.
இன்று அந்தணர்மீதான வெறுப்பு வர்ணாச்சிரமதர்மத்தின்மேல் ஏற்றப்பட்டு,
அதற்கு எதிரான போர்க்குரல்கள் எழுவதும் இவ்வடிப்படையில்த்தான் என்பதை,
நாம் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.
இயற்கையாய் அமையும் ஆற்றலால் உயர்வு பெறுவோர்,
அவ்வுயர்வை தம்மைச் சார்ந்தார்க்கும், தம் சந்ததியினருக்கும்,
கொடுக்க நினைப்பதும் அதற்காக சமூகத்தை அடக்க நினைப்பதும்
தனிமனிதப் பலயீனங்களேயன்றி தத்துவப் பலயீனம் அன்றாம்.
அதற்கான சில நிரூபணங்கள் சொல்கிறேன்.
♦ ♦ ♦
மாக்ஸீயத் தத்துவத்தை நிறுவவென பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாய்க்கொண்டு அமைக்கப்பட்ட சோவியத்யூனியன் வல்லரசு,
அக் கொள்கையை தன்மக்களிடையே கொணர முயன்றது.
சில தசாப்தங்களாக அங்கு இடப்பட்டிருந்த இரும்புத்திரையால்,
சோவியத்யூனியன், தன்மக்கள் அனைவரையும் சமமாய்க் கருதி,
எல்லோர்க்கும் எல்லாம் வழங்குகிறது என்பதான ஒரு மாயை உருவாகியிருந்தது.
மறைந்த எழுத்தாளர் மணியன் அக்காலத்தில் எழுதிய,
ரஷ்யப் பயணக்கட்டுரையைப் படித்தவர்கள்,
‘வாழ்ந்தால் இப்படி ஒரு நாட்டில் அல்லவா வாழவேண்டும்’ என்று
கனவில் மிதந்தார்கள்.
புரட்சி செய்து பொதுவுடைமையைக் கொணர்ந்த லெனினின் கல்லறைத் தரிசனத்திற்காய்,
மைனஸ் டிகிரியில் கொட்டும் பனியில் காத்திருந்த மக்களைப்பற்றி,
அவர் எழுதியதைப் படித்தபோது,
திருப்பதி தெய்வ தரிசனம் எம்மாத்திரம்?என்று நானே திகைத்ததுண்டு.
ஆனால் முடிவு என்னாயிற்று?ரஷ்ய இரும்புத்திரையில் ஓட்டைகள் விழத்தொடங்க,
அந்நாட்டின் உண்மைத்தரிசனம் உலகத்திற்குத் தெரியத்தொடங்கியது.
சமத்துவம் என்று சொல்லிச் சொல்லி,
அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களினதும், மாநிலங்களினதும் மூச்சுத்திணறலின் உக்கிரத்தை,
அதுவரை அந்நாட்டு மக்களின் தெய்வமாய்க் காட்டப்பட்டு வந்த லெனினின் உருவச்சிலையை,
சரித்து வீழ்த்தி உதைத்து மக்கள் கொண்டாடியபோதுதான் உணரமுடிந்தது.
♦ ♦ ♦
தன் நாட்டு மக்களிடம் பொதுவுடைமையைக் கொணர முயன்ற காலத்திலும்,
சோவியத்யூனியனால் உலகநாடுகளிடம்
அப் பொதுவுடைமைத்தன்மையைப் பேண முடியவில்லை.
அது முதலாளித்துவ நாடான அமெரிக்காவோடு முரண்பட்டு,
வல்லரசுப்போட்டியில் தனது நிலையை உறுதி செய்வதற்காய்,
எத்தனையோ சிறிய நாடுகளை அடக்கியதும் விழுங்கியதும் வரலாறு.
பொதுவுடைமைக் கொள்கையை தனது நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில்,
தனது கொள்கையை நடைமுறைப்படுத்துதற்காய்,
எத்தனையோ நாடுகளின் சுய உரிமையை அது சிதைத்தது.
பொதுவுடைமைத்தத்துவம் பேசிய மாக்ஸியக் கொள்கையை,
தன் நாட்டெல்லைக்கு அப்பால்,
சோசவியத்யூனியனால் நடைமுறைப்படுத்த முடியாமற்போனது ஏன்?
மாக்ஸியத் தத்துவத்தை உள்வாங்கி முதலாளித்துவத்தை எதிர்த்த சோவியத்யூனியன்,
தான் வல்லரசானதும் உலகத்திற்கு தானே முதலாளியாய் இயங்க நினைத்ததே காரணம்.
இதனை யாரும் மறுக்கமுடியுமா?
♦ ♦ ♦
தன்கொள்கையும் தானும் நிலைக்கவேண்டும் என்பதற்காக,
பல அரசாங்கங்களையும் கோடிக்கணக்கான மக்களையும்,
அது நசுக்கவும் தயங்கவில்லை.
இதற்கு ஆயிரம் நிரூபணங்கள் சொல்லலாம்.
மாக்ஸியத் தத்துவத்தை உள்வாங்கிய சோவியத்யூனியனின் மேற்சொன்ன கீழ்மைகளை,
மாக்ஸியத் தத்துவத்தின் தோல்வியாய் நாம் கொள்ளமுடியுமா?
பொதுவுடைமைத் தத்துவவாதிகள் இத்துணை கொடுங்கோலர்களாய் ஆனது ஏன்?
அங்குதான் நான் சொன்ன உண்மை வெளிவருகிறது.
எத்துணை உயர்ந்த தத்துவத்தினை உள்வாங்கியிருந்தாலும்,
அத்தத்துவம் தந்த வெற்றியும் அவ்வெற்றி தந்த சுகமும் பிடித்துப்போக,
அவ்வெற்றியைத் தக்கவைத்து, தம்மைக் காத்துக்கொள்ள,
மற்ற எதையும் அழிக்க நினைக்கும் இயல்பு மானுடத்தின் பொது இயல்பு.
அவ்வியல்புதான் சோவியத் யூனியனையும் சிதைத்தது.
♦ ♦ ♦
இதேபோலத்தான் சீனாவிலும்
பொதுவுடைமைத் தத்துவத்தினை முன் வைத்து,
புரட்சி செய்து வென்ற ஆட்சியாளர்கள்,
பின்னாளில் அரசுக்கு எதிராக
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட புரட்சியை,
உலகம் அதிரும் வண்ணம் கொடூரமாக அடக்கினர்.
மக்கள் புரட்சியால் விளைந்த அதே சீன அரசு,
பின்னர் மக்கள் புரட்சியை அடக்கிய அதிசயம் கண்டு உலகே அதிர்ந்தது.
இவ்விடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும்.
சோவியத்யூனியனிலும் சீனாவிலும்,
மாக்ஸின் தத்துவத்தின் அடிப்படையில் எழுந்த,
பொதுவுடைமைக்கொள்கை தோல்வியுற்றபோது,
அக்கொள்கையை, பிழையாய் நடைமுறைப்படுத்திய,
ஆட்சியாளர்களை மக்கள் குறை சொன்னார்களேயன்றி,
மாக்ஸின் தத்துவத்தை எவரும் குறை சொல்லவில்லை.
ஆனால் நாம்தான் வர்ணாச்சிரமதர்மத்தை,
சுயநலமாய்ப் பயன்படுத்தியவர்கள்மேல் கொண்ட கோபத்தால்,
அத்தத்துவத்தையே குறைசொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நம் மூதாதையர்களை முட்டாள்கள் என்று நிறுவுவதில்,
நம்மவர் சிலருக்கு அப்படியோர் மகிழ்ச்சி.
மூதாதையர்கள் முட்டாள்களானால்,
நாமும் முட்டாள்களாய்க் கருதப்படுவோம் என்பது கூடத் தெரியாமல்,
அவர்கள் செய்யும் கூத்துகளுக்கு ஓர் அளவில்லை.
♦ ♦ ♦
ஒருகாலத்தில் மாக்ஸியக் கொள்கையாளராய்த் தம்மை இனங்காட்டி,
“பூஸ்சுவா” என்று பணக்காரர்களை கிண்டல் அடித்துத்திரிந்த,
பல முற்போக்கு அறிஞர்கள்இன்று அதுபற்றி வாயும் திறக்கிறார்களில்லை.
காரணம்,
பொதுவுடைமை பேசும் மாக்ஸியத் தத்துவப்படியிலேறி,
தாங்கள் முதலாளிகளாகி விட்டதுதான்.
பெரும் சொத்துத் சேர்த்து வைத்திருக்கும் அவ்அறிஞர்கள்
இன்று சமரசம் பேசி அச்சொத்துக்களைப் பகிர முன்வருவார்களா?
அதுதான் வேண்டாம்.
தம்மால் முடிந்த அளவு சமூகப் பணிகளுக்காயேனும் செலவு செய்வார்களா?
யாராவது ஒருவர் சம்மதித்துக் கைதூக்கினால் அது பெரிய ஆச்சரியமே!
♦ ♦ ♦
எங்கள் ஈழத்திருநாட்டிலும் இத்தகைய ஒரு கூத்து நடந்தது.
மாக்ஸிய இலக்கியவாதியாய்த் தன்னை இனங்காட்டி,
சாதிகளுக்கெதிராகப் போராடி முன்வந்த ‘மல்லிகை’ சஞ்சிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,
பலகாலமாய் சாதிகளையும் சாதித் “தடிப்பு”க்களையும் கண்டித்து மேடைகளில் முழங்கி வந்தார்.
ஆனால் அவரும் தனக்குப் பிறகான ‘மல்லிகை’ இராச்சியம்,
இலக்கியத்தொடர்பு எதுவுமற்ற தன் மைந்தனுக்கே என்று பிரகடனப்படுத்தினார்.
சாதிகளுக்கு எதிராகப் போராடிய அவர்,
பின்னாளில் சாதி உயர்வுக்காய் அமைக்கப்பட்ட,
தன் சாதிச்சங்கத்தில் ஓர் உறுப்பினராய் இணைந்து கொண்டார்.
மற்றைச்சாதியினர் தம் உயர்வை நிலைநாட்ட முனைந்ததை எதிர்த்தவர்,
பின்னாளில் தன் சாதியை உயர்த்தும் சங்கத்தில் தான் இணைந்திருந்தார்
இவையெல்லாம் மாக்ஸியத்தின் குறைபாடாகுமா?
தனிமனிதக் குறைபாடுகள். அவ்வளவே!
♦ ♦ ♦
மாக்ஸியவாதிகளைக் கேட்டால் தாம் செய்த கொடுமைகளை,
முதலாளித்துவத்திற்கெதிரான புரட்சி என்பார்கள்.
நம் அந்தணர்களையும் சத்திரியர்களையும் கேட்டால்,
தம்செயற்பாடுகளை தர்மத்தை நிலைநிறுத்தும் முயற்சி என்பார்கள்.
அவர்கள் கூற்றுக்களை முழுமையாகச் சரிஎன்றோ பிழைஎன்றோ,
எவரலாலும் சொல்லமுடியாது.
அவ்வாராய்ச்சி எமக்குத் தேவையுமில்லை.
நான் சொல்ல வந்தது,
வருணாச்சிரமதர்மத்தையும், மாக்ஸியத்தையும் இழிவுபடுத்தியது,
மனித இயல்பின் குற்றமே அன்றி தத்துவங்களின் குற்றமில்லை என்பதைத்தான்.
♦ ♦ ♦
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவரின் உரிமைபேசி மேலெழுந்த,
திராவிடக்கழகங்களின் நிலைமையும் இன்று இதுவேதான்.
தாழ்த்தப்பட்டவரின் உயர்வு, முதலாளித்துவ எதிர்ப்பு, பெண்விடுதலை,
என்று பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட புரட்சியின் முடிவு என்னாயிற்று?
அப்புரட்சியின் வாரிசுகளாய் இன்று இருக்கும் தலைவர்களால்,
இன்றைய நிலையில் முதலாளித்துவ எதிர்ப்பைப் பேசமுடியுமா?
கனவிலும் நினைக்கமுடியாது!
காரணம் அவர்களே இன்று பெரிய முதலாளிகள்.
முதலாளிகள் என்றால் அப்படி இப்படியான முதலாளிகள் இல்லை.
கோடிக்கணக்கில் இலாபம் குவிக்கும் முதலாளிகள்.
இத்தலைவர்களில் பெரும்பாலோர்,
ஆயிரக்கணக்கான அடிமட்டத் தொண்டர்கள் கட்சிக்காய்ப் பாடுபட,
தன் குடும்பவாரிசுகளைக்
கட்சிப்பதவிகளில் கொலுவிருத்தி மகிழ்கிறார்கள்.
இதுதான் பெரியார் சொன்ன பொதுவுடைமைச் சமுதாயமா?
♦ ♦ ♦
கலப்புத்திருமணம் செய்த காரணத்திற்காக,
மாதம் ஒருதரமாவது ஒருவர் கொலையாவது தமிழ்நாட்டில் இன்று வழக்கமாகியிருக்கிறது.
இந்த அநியாயத்திற்கு"கௌரவக் கொலை"என்று பெயர் வேறு!
இங்கு கவனிக்கத்தக்கது. இக்கொலைகளைச் செய்பவர்கள் பிராமணர்களல்லர்.
ஜாதி பாகுபாட்டிற்கெதிராய்ப் போராடியவர்களே
இக்கொலைகளின் காரணர்களாய் இருக்கிறார்கள்.
தம்மின் மேம்பட்டவர்களிடம் சமத்துவ உரிமை கோரும் இவர்கள்.
தம்மின் கீழ்பட்டவர்களுக்கு அவ் உரிமையை வழங்க மறுக்கிறார்கள்.
என்னே! இவ்வுலகின் விந்தை.
இதுதான் பெரியார் சொன்ன தாழ்த்தப்பட்டவர்களின் மீட்சியா?
♦ ♦ ♦
முன்பு,பெண் என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை,
சட்டசபையில் வைத்தே துகிலுரிந்தார்கள்.
சிலகாலத்திற்கு முன் ஜெயலலிதா தன்னைக் கன்னத்தில் அறைந்தார் என,
வேறொரு பெண் உறுப்பினர்
நாடாளுமன்றத்திலேயே முறைப்பாடு செய்தார்.
இதுதான் பெரியார் சொன்ன பெண்விடுதலையா?
♦ ♦ ♦
பெரியாரின் வாரிசுகளாய்த் தம்மைச் சொல்லிக்கொள்ளும்,
இத்தலைவர்களின் குற்றங்களையெல்லாம்,
பெரியாரின் கொள்கையின் குற்றங்கள் என்று எவரும் சொல்லமுடியுமா?
அவை தனிமனிதக் கீழ்மைகள்.
அவ்வளவுதான்!
இக்கீழ்மைகளையெல்லாம் தனிமனிதக் கீழ்மைகள் என்று சொல்கிறார்களே தவிர,
பெரியாரின் கொள்கைகளின் கீழ்மை என்று எவரும் சொல்வதில்லை.
அத்தகையோர்தான் வர்ணாச்சிரம தர்மத்தைப் பின்பற்றியவர்களின் கீழ்மையை,
வர்ணாச்சிரமதர்மத்தின் கீழ்மையாய் நினைத்து வாதிடுகின்றனர்.
இவர்தம் கீழ்மையை என் சொல்ல?
♦ ♦ ♦
உலகை அமைதிப்படுத்தும் கொள்கையுடன் அமைக்கப்பட்ட,
ஐ. நா. சபையின் இன்றையநிலை என்ன?
வல்லரசுகளை வழிமொழிவதும், அவ்வல்லரசுகளுக்குச் சார்பாய்,
மெல்லரசுகளை மிதிப்பதுமே இன்று அதன் வேலையாய்ப் போய்விட்டது.
குவைத்தை ஈராக் பிடித்தால் கண்டிக்கத்தெரிந்த ஐ. நா. விற்கு,
ஈராக்கை அமெரிக்கா பிடித்தால்அதைக் கண்டிக்கத் தெரியவில்லை.
பெயருக்குக் கண்டித்தாலும்,
அதைமீறிய அமெரிக்காவைத் தண்டிக்கத்தெரியவில்லை.
அதேநேரத்தில் தன்சொல் கேட்காத,
ஈரானையும், ஈராக்கையும் பட்டினிபோட அதற்குத் தெரிந்திருந்தது.
ஆரம்பத்திலேயே அதனடிப்படை அமைப்பில் குழப்பம்.
வலிய அரசுகளைத் தன்சபைக்குள்க் கொணர,
“வீற்றோ” என்னும் கட்டவிழ்த்த அதிகாரத்தை,
அவற்றின் கையில் கொடுத்து வரவேற்ற அநியாயத்திற்கு,
இன்று விலைகொடுக்கும் நிலையமாக ஐ.நா. மாறியிருக்கிறது.
இது ஐ. நா. என்ற சிந்தனையை உருவாக்கியவர்களின் குற்றமாகுமா?
♦ ♦ ♦
மேற்சொன்ன கேள்விக்கு ‘ஆம்’ என்று நீங்கள் பதில்சொன்னால்,
அந்தணர்களதும் அரசர்களதும் குற்றங்கள்,
வர்ணாச்சிரமதர்மத்தின் குற்றங்களென நான் ஒத்துக்கொள்கிறேன்.
என்ன முறைக்கிறீர்கள்.
உங்களைக் கேள்வி கேட்டதும் உண்மை சுடுகிறதாக்கும்.
ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மைமீறிய ஒரு சக்தியால்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆற்றல் பெற்றுப் பிறக்கிறோம்.
எல்லோருக்கும் பயன்படும் ஆற்றல் பெற்றவர்,
சமூகத்தில் மேலானவராகக் கருதப்படுகிறார்.
அவருக்கு அதனால் சமூகத்தில் உயர்வு வர,
அவ்வுயர்வை, தன் குடும்பச்சொத்தாக்கி,
ஆற்றல் இல்லாவிடினும் கூட
தன் அடுத்த தலைமுறைக்கு அதைக் கொடுக்கஅவர் விரும்புகிறார்.
ஆற்றல் இல்லாதவர் உயர்வு பெற
அவரை எதிர்த்து ஆற்றலுள்ளவர்பின்னாளில் புரட்சிசெய்கிறார்.
அப்புரட்சியில் வென்றவர் உயர்வு பெற,
பின் வென்றவர் தன்உயர்வைத்
தன்னைச் சார்த்தவருக்குக் கொடுக்க முயல்கிறார்.
மீண்டும் அதை ஒருவர் எதிர்க்க ..........,
இப்படியே உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது...
தர்மம் - தொடரும்
-வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன-
Comments
Copyright ©
2025 - உகரம் - All rights reserved.