"வேறு வேறுருவும், வேறு வேறியற்கையும்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

"வேறு வேறுருவும், வேறு வேறியற்கையும்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
 
அன்பான வாசகர்களுக்கு.......

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்.
'வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்' என்ற, 
திருவாசக அடிகளைக்கொண்ட தலைப்பையும்,
கீழேயிருந்த என்பெயரையும் பார்த்துவிட்டு,
நான் திருவாசகம் பற்றி,
எழுதப்போவதாய் நீங்கள் நினைத்திருந்தால், 
பாவம்! ஏமாறப்போகிறீர்கள்.
திருவாசகம் படிக்கும்போது வந்த,
புதியதோர் உலகியல் சிந்தனையை,
இவ் வாக்கியத்தினூடு ஒரு சிறுகதையாய் வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன்.
பக்தியுடன் திருவாசகம் படிப்பவர்கள் என்னை மன்னிப்பார்களாக! 

✠ ✠ ✠

 



அத்தகையோர்க்கு,
இந்த ஆக்கம் சற்றுக் கோபத்தைக் கூடத் தரலாம்.
சற்று என்ன சற்று? பெருங்கோபம்கூட வரலாம்.
சில இடங்களில் சொற்கள் நாகரீக வரம்பைக் கடந்திருக்கின்றன.
'உங்கள் நிலைக்கு இவை அவசியமா?'
என்மேல் மதிப்புக்கொண்டோரின் கேள்வி இப்போதே காதில் விழுகிறது.
மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்.
யதார்த்தத்தை நிஜமாய் வெளிப்படுத்த,
அச்சொற்கள் தேவைப்பட்டன. 
ஆக்கமுயற்சியில், 
எழுத்தாளனின் தகைமை,
பாத்திரப் பண்பை பாதிக்கக்கூடாதென்ற என்விருப்பத்தின் விளைவிது.
யதார்த்தம் நோக்கி,
கூச்சத்தோடுதான் அவற்றை எழுதி முடித்தேன்.

✠ ✠ ✠

கல்லூரிக்காலத்தில் சக நண்பர்களிடம் கேட்ட உரையாடல்,
கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல மாறியதை,
இரசனையோடு அவதானித்திருந்தேன்.
அவர்தம் செயற்பாடுகள்,
உருவிலும், இயல்பிலும், 
நூறு நூறாயிரம் மாற்றங்கள் கொண்டன.
இவ் ஆக்கத்தில்,
பந்திக்குப் பந்தி, 
வார்த்தைகளிலும், செயல்களிலும், தோற்றங்களிலும்,
அனுபவத்தால் வந்த அவர்தம் மாற்றங்களை,
மறைமுகமாய்க் குறிப்பிட்டிருக்கிறேன்.

✠ ✠ ✠ 

மாதா, மாதவனாகி, மாதவனாராவதும்,
நீ, நீர், நீங்கள் என உரையாடல்கள் மாறுவதும்,
கசங்காத சட்டை போட்ட வரதன்,
வரதனாராகும்போது அழுக்குக் கொலர்ச்சட்டை போடுவதும்,
சுருட்டைமுடி துஷி, வழுக்கைத் தலையராவதும்,
கராத்தே விசாகனுக்கு, வயிறு ஊதுவதும்,
இம்மாற்றங்களின் அடையாளங்கள்.
மற்றும் பல உங்கள் தேடலுக்கு.

✠ ✠ ✠

முதல் பகுதியில், 
காமம் கலந்த இளமைக் குதூகலத்தையும்,
இரண்டாம் பகுதியில், 
வாழ்வைச் சந்திக்கும் இளமை மருட்சியையும்,
மூன்றாம் பகுதியில், 
நோய்தொடும் நடுத்தர வயதுக் குழப்பங்களையும்,
நான்காம் பகுதியில், 
முதுமையின் அனுபவ வெளிப்பாட்டையும் காட்டி,
ஐந்தாம் பகுதியில், 
காலமாற்றத்தோடு கூடிய காமம் கலந்த புதிய இளமைக் குதூகலத்தை,
மீண்டும் உரைத்து,
முடித்திருப்பதை அவதானிப்பீர்கள்.

✠ ✠ ✠

பூமி மட்டுமல்ல, வாழ்க்கையும் ஒரு வட்டத்தில்த்தான் சுழல்கிறது.
காலம் மாற மாற, கருவிகள் மாறுமே தவிர கருத்துக்கள் மாறா.
புதிய புதிய தலைமுறைகள், வேறுவேறு வடிவத்தில்,
ஒரே இடத்தையே திரும்பத் திரும்பத் தொடுகின்றன.
வடிவங்களில் மட்டுந்தான் மாற்றம்.
வாழ்க்கையை ஒன்றி அவதானித்து வரும் இயல்பால்,
இம்மாற்றங்களில் எல்லையற்ற ரசனை காண்கிறேன்.
இங்கு நான் எழுதியிருக்கும்,
எழுபது, எண்பது, தொண்ணூற்றைந்து சம்பவங்கள்,
நான் நேரில் கண்ட நிஜங்கள்.
2020உம், 2030உம் என் கற்பனைகள்.
ஏதோ முயன்றிருக்கிறேன்.
என்மீது அதீத பக்தி வைத்திருக்கும் அன்பர்கள்,
இக்கதையைப் படிக்காமல் விடுவது நல்லது என்பது என் கருத்து.

✠ ✠ ✠

'இந்த முன்னுரையை விட்டிருந்தால்,
அற்புதமான சிறுகதையாய் இது அமைந்திருக்கும்.
இப்ப இது கதையா? கட்டுரையா? எனத் தெரியாமல் கிடக்குது.'
விமர்சகர்களிடம் படித்த என் மாணவனின் கருத்து இது.
விமர்சகர்களுக்கும் வேலை வேண்டாமா?
இது கதையா? கட்டுரையா? 
அவர்களே கண்டுபிடிக்கட்டும்.
விமர்சகர்கள் மண்டையை உடைக்கப் போவது தெரிகிறது.
விமர்சகப் பெருமக்காள்!
ஆக்க முயற்சிகளுக்கு,
உங்கள் விமர்சனங்களால் தான் மோட்சம் கிடைப்பதாய்,
நம்நாட்டில் பல ஆக்ககர்த்தாக்கள் நினைந்தும் சொல்லியும் வருகிறார்கள்.
ஆகவே இது கதையா? கட்டுரையா? என,
நீங்கள் சொல்லப்போகும் முடிவில்தான்,
என் ஆக்கத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.
சீக்கிரம் சொல்லுங்கள்.
ஐயா! இது கதையா? கட்டுரையா?

✠ ✠ ✠

"வேறு வேறுருவும் 
வேறு வேறியற்கையும்"
                                                    -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

1970 ஆம் ஆண்டு,

உவப்பின் எல்லையில் நின்றது அந்தக்கூட்டம்.
கல்லூரி மைதானத்தின் மதிற்சுவர்.
மதிலின்மேல் நால்வர்.
'ஸ்ரான்டில்' இடப்பட்ட 'ஹீரோ' சைக்கிளில் குந்தியபடி நால்வர்.
மதிலில் குந்தியிருந்த இருவரின் விரிந்த கால்களுக்குள்,
படுத்துக் கிடக்கும் 'போஸ்சில்' இருவர்.
அழுக்கான 'டெனிம் எலிபன்ற் பான்ட்',
அவர்கள் அனைவரினதும் 'யூனிபோம்' ஆகியிருந்தது.
'பட்ரிக்சேர்ட்' டுக்களின்,
திறந்திருந்த மேற்சட்டைப் பொத்தான்களுக்கிடையில்,
தெரிந்த மார்பில்,
அண்மையில் அரும்பிய உரோமங்கள் இளமை பேசின.
அதற்குள் கறுப்புநூலில் கட்டப்பட்ட ஏதோவொரு வெள்ளி 'டொலர்'.
மழுக்காமலும், நீட்டாமலும் இடையில் தொங்கும், சிகையலங்காரம்.
கையில் சுருண்டு கிடக்கும் 'கொப்பி',
அவர்களை மாணவர்கள் என அடையாளங்காட்ட முயல்கிறது.



'சைக்கிள் கரியரில்' உட்கார்ந்து,
'பெடலை' உதைத்தபடி இருக்கிறான் விசா என்கின்ற விசாகன்.
ஒட்டிய வயிறும், இறுகிய கைகளும்,
அவனின் 'கராத்தே' பயிற்சியை பறைசாற்றுகின்றன.
'புரூஸ்லீ' யின் பாதிப்பு அவனது எல்லாச் செயல்களிலும்.
மதிலில் குந்தியிருந்தவனைப் பார்த்து,
பேசத்தொடங்குகிறான் அவன்.
'மச்சான், வரா! அந்த டொக்ரற்ற சரக்கு என்னவாம்?'
வரா என்றழைக்கப்பட்ட வரதனின் முகத்தில் பிரகாசம்.
பக்கத்தில் இருந்தவன் கையில் வைத்திருந்த பாதி சிகரெட்டைப் பறித்து,
ஒரு இழு இழுக்கிறான்.
கண்ணை மூடி அவன் புகையை ஊதிய பாணியில்,
பிரபலமான சினிமா நடிகரின் சாயல்.
'அதுதான் மச்சான், ஒன்றும் விளங்கேல.
'கிளாஸ்' முடிஞ்சு வெளிக்கிடேக்க,
ஒவ்வொருநாளும் ஒரு எறி எறிஞ்சு போட்டுப் போறாள்.'
பெருமூச்சு விடுகிறான் அவன்.

  

அவன் விட்ட இடைவெளிக்குள் மீண்டும் புகுகிறான் விசா.
'பேந்தென்னடா மச்சான்! மடக்க வேண்டியதுதானே?'
வராவின் முகத்தில் வாட்டம்.
'பிரச்சனை அதுதான்டா விசா.
'ரியூட்டறி' முடிஞ்சு 'சைக்கிள' எடுக்கேக்க ஒரு எறி எறியிறாள்.
பிறகு 'ஃபிரண்ட்சோட' போகேக்க கவனிக்காத மாதிரிப் போறாள்.
முடிவெடுக்க முடியாமக் கிடக்குது மச்சான்.'
வரா, உறிஞ்சி இழுத்த இழுப்பில்,
சிகரெட் தன் கடைசி உயிரை விடுகிறது.

  

'மச்சான்! உந்தச் சரக்குகள் இப்பிடித்தாண்டா.
எங்கள 'வழிய' விடுறதில அவளவைக்கு ஒரு சந்தோஷம்.
கொஞ்சம் ஏமாந்தமோ, பேக்காட்டிப் போடுவாளவை.'
அருகில் இருந்த புவனகுமார் என்கின்ற புவனா தத்துவம் பேசினான்.
'மச்சான் புவா!
நீ இன்னும் அந்த 'டிஸ்பென்சறி'ச் சரக்கு 'வெட்டினத',
மறக்கேல்லப் போல.
டேய் வரா! இவன் வாலறுந்த நரி.
இவன்ட கதைய விடு.
நீ விடாமக் கலயடா, எல்லாஞ் சரிவரும்.
சாமான், சங்கு. தவறவிட்டுடாத',
வராவை உற்சாகப்படுத்தினான் விசா.

  

'டேய் மாதா! இவங்கட கதைய விட்டுட்டு நீ சொல்லு,
என்னவாம் வீட்டுக்கார அன்ரி?
இப்பவும் விடியக்காலேல கோப்பி வருதோ?',
தான் அக்கறையோடு பேணும்,
சுருட்டைத் தலைமுடியை விரல்களால் அளைந்தபடி,
துஷி என்கின்ற துஷ்யந்தன் உரையாடலைத் திசை மாற்றுகிறான்.
'போடா ........................ மோனே'
எழுத முடியாத வார்த்தை ஒன்றைச் சொல்லி,
சிரிக்கிறான் மாதா என்கின்ற மாதவன்.
கறுத்த உதடு அவனது சிகரெட் பயிற்சியை வெளிப்படுத்துகிறது.
'மச்சான் அவன் மன்னனடா,
அவனுக்கென்ன?
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் 'படிப்புத்தான்.'
படிப்பு என்பதை வேணுமென்றே அழுத்திச் சொல்கிறான் ரூபன்.

  

'டேய் மச்சான்!
எப்பவாம் அன்ரிட அங்கிள் சவுதில இருந்து வர்றார்?'
நையாண்டியா? நிஜமா? என்று தெரியாத தொனியில்,
துஷி கேட்க,
'அவர் வந்தா இவற்ற கதை சரி.
இவர் 'ரூமை' விட்டு ஓடவேண்டியது தான்,
ரூபன் கிண்டலடிக்கிறான்.
'மச்சான்! மச்சான்! 'ரூமை' விடுறதெண்டால்,
எனக்குச் சொல்லு நான் எடுக்கிறன்.
அன்ரிட்ட கோப்பி குடிக்க எனக்கும் ஆசையாத்தான் கிடக்கு'
கணா என்கின்ற கணபதி போலியாய்ப் பரபரப்புக் காட்டுகிறான்.
'ஓடு நாயே! உனக்கும் ஆசைதான்.
அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும்.
மூஞ்சைய இடைக்கிடை கண்ணாடில பார்.'
மீண்டும் எழுத முடியாத ஒரு சொல்லைப் போட்டு,
'நீ ஆயுட்காலம் முழுக்க முயற்சித்தாலும்,
அன்ரிட.... க்கு கிட்டயும் போகமுடியாது.'
மாதாவின் வார்த்தைகள் வரம்பைத் தாண்டுகின்றன.

  

'மச்சான்! மச்சான்!
நீ அளவுக்கதிகமாய் உணர்ச்சி வசப்படாத,
நான் இருக்கிற இடம் சரியில்ல.'
மாதாவின் காலுக்குள் கிடந்த துஷி கத்த,
குழுவிடம் இருந்து கும்மாளமாய் வெடிச்சிரிப்பு.
'மச்சான்! வி. ரி. கே. யிட 'கிளாஸ்' முடிஞ்சு,
சரக்குகள் வெளிக்கிடுது.
வாங்கோ! அவடத்தடிக்குப் போவம்'
குதூகலமான அக்கூட்டம் கலைகிறது.

  

1980 ஆம் ஆண்டு,
நல்லூர்க் கோயில் வீதி.
காலை மாம்பழத்திருவிழாக் கூட்டம்.
மாம்பழத்துக்காக வைக்கப்பட்ட போட்டியில் வெற்றிபெறுவதற்காய்,
முருகன் நேர்மையாய் வீதி சுத்தத் தொடங்குகிறார்.
குறுக்கு வழியில் தாய் தந்தையரைச் சுற்றி,
மாம்பழம் பெற்ற கணபதியாருக்கு,
பஞ்சாலாத்தி காட்டப்படுகிறது.
தேர்முட்டி நடுவில் ஒரு சந்திப்பு.
'என்ன மச்சான் வரதன்! எப்ப கொழும்பால வந்தனீ?
எப்பிடி வேல போகுது?'
வெள்ளை வேட்டி,
அயன்பண்ணிய அரைக்கை 'சேர்ட்.'
படிய வாரிய தலைமுடியுடன்,
சற்று தோற்றம் மாறிப் பளபளப்பாய் நின்ற வரதனைப்பார்த்து,
வேட்டியும், சால்வையுமாய் நின்ற துஷியந்தன் கேட்கிறான்.
'அங்க என்னடாப்பா, 'மெசின் லைஃப்' தான்.
காலம எழும்பிப் பின்னேரம் வரைக்கும் நாயடி அடிக்க வேணும்',
சலிக்கிறான் வரதன்.

  

'ஹலோ' மச்சான் வரதன்!'
குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க,
பிரதட்டை மண்ணைத் தட்டியபடி,
இருவரையும் நோக்கி வருகிறான் மாதவன்
'என்னடா மச்சான்! பிரதட்ட எல்லாம் செய்யுற போல,
இப்ப பெரிய பக்தி மானாக்கும்.
வீட்டுக்கார அன்ரியும் அடியளக்கிறவவோ?'
நக்கல் சிரிப்போடு கேட்கிறான் வரதன்.
'போடா மச்சான்!
பழங்கதையை இப்பவும் கதைச்சுக்கொண்டு.
உனக்கென்ன கொழும்பில வேலை கிடைச்சிட்டுது.
நாங்கள் படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும்.
அப்பருக்கு 'ஸ்ரோக்' வந்துட்டுது.
அவர் இப்ப வீட்டோட தான்.
இவள் தங்கச்சிட கலியாணமும் ஒண்டும் சரிவருகுதில்ல.
எனக்கு வேலையொண்டும் கிடைக்குதுமில்ல.
படிக்காம ஊர்சுத்திப்போட்டு,
சும்மா இருந்து தின்னிறனென்டு வீட்டில ஒரே அர்ச்சனை தான்.
வெறுத்துப் போச்சுடாப்பா.
அதான் இந்தவருசம் முருகனுக்கு நேர்ந்து  பிரதட்ட பண்ணுறன்.'
சலிக்கிறான் மாதவன்.

  

'அப்ப அன்ரிட பிரதட்ட இப்ப இல்லையே!'
துஷியந்தன் நக்கலாய்க் கேட்க,
'போடா விசரா,
நான் படுற பாட்டில அன்ரியும், மயிரும்.
உனக்கு விளையாட்டாக் கிடக்கு.'
துஷ்யந்தனை முறைத்து விட்டு,
'மச்சான் வரதன்!
அங்க கொழும்பில எனக்கொரு வேல எடுத்துத் தரமாட்டியே!'
கெஞ்சல் தொனியில் கேட்கிறான் மாதவன்
'நீ ஒண்டும் யோசிக்காத மாதா.
நான் கொழும்பு போய் எப்பிடியும் 'ட்றை' பண்ணுறன்.'
அவன் தோளில் ஆறுதலாய்க் கைபோட்டு, சொல்கிறான் வரதன்.

  

'அதுசரி கணநாதனும், ரூபனும் எங்கடாப்பா,
ஆக்களக் கோயில் பக்கமே காணேல?'
வரதன் மீண்டும் விசாரிக்க,
'அவங்கள் லண்டனுக்குப் போனது உனக்குத் தெரியாதே?
விசாகனும் லண்டன் போறதுக்கெண்டு,
கொழும்பிலதான் வந்து நிக்கிறான்.
நீ காணேலெயே?'
விசாரிக்கப்படாத விசாகன் பற்றிய செய்தியையும்,
சேர்த்துச் சொல்கிறான் மாதவன்.

  

'அப்பிடியே? நான் கொழும்பிலதான் நிண்டனான்,
நாய்கள் ஒரு வார்த்தை சொல்லேல எனக்கு,
உங்களுக்கெண்டாலும் கடிதம் போட்டவங்களே?'
மீண்டும் வரதனின் விசாரணை.
'ஓமடாப்பா. 'ஏஜென்சி'யோட போனபடியா,
ஒருத்தருக்கும் சொல்லேலையாம்.
அங்கயும் விசரடிக்குதெண்டு எழுதியிருக்கிறாங்கள்.
ரெண்டு பேரும் ஆளையாள் கண்டா,
எப்ப இஞ்ச வரலாம் எண்டுதான் கதைக்கிறவங்களாம்;'
விபரம் சொல்கிறான் துஷியந்தன்.

  

'அதுசரி புவனற்ற 'கோஸ்' எப்ப முடியுதாம்?
அவன் ஒருத்தனாவது எங்களுக்குள்ள 'யூனிவர்சிற்றி என்ர' பண்ணினது பெரிய காரியம்.
'டிஷ்பென்சரி' ச்சரக்கு வெட்டின ரோசத்தில,
கவனமாய்ப் படிச்சு 'மெடிக்கல் என்ர' பண்ணிட்டான்.
நீ இன்னும் அவனக் காணேலையே!'
மீண்டும் வரதனின் விசாரணை.
'அவங்களுக்குக் 'கோஸ்' முடிய
இன்னும் ஐஞ்சு வருசம் ஆகுமாம்,
காணுறபோதெல்லாம் சலிச்சுக் கொண்டு இருக்கிறான் அவன்.'
இது மாதவனின் பதில்.
'என்ன ஐஞ்சு வருசமோ?
அப்ப கிழண்ட பிறகுதான் அவருக்குக் கலியாணம்.'
வரதனின் 'கொமன்ட்' கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள்.

  

'டேய்! அவன்ட பாடு பறவாயில்ல,
கிழண்டாலும் டொக்ரருக்கெண்டா பொம்பள குடுப்பாங்கள்,
எங்கடபாடுதான் பிரச்சனை,' இது துஷியந்தன்.
'சரி மச்சான் நான் வெளிக்கிடப் போறன்.
தங்கச்சியவளவையும், மச்சாள்மாரும் என்னோட வந்தவையள்,
பார்த்துக்கொண்டு நிப்பாளவையள்.'
வரதன் புறப்படுகிறான்.
'பேந்தென்ன! மச்சாள்மாரையும்,
'காட்' பண்ணத் தொடங்கிட்டீராக்கும்.'
மீண்டும் துஷியந்தன்.
'போடா விசரா உனக்கெப்பவும் பகிடிதான்.
நான் நாளைக்கு வெளிக்கிடுறன்.
இனி 'டிசம்பரு'க்குத்தான்.'
வரதன் புறப்பட,
'ஏன் மச்சான்! தேருக்கு நிக்கேலெயே?'
அக்கறையோடு கேட்கிறான் மாதவன்.
' 'றெயினிங் பீரியற்' மச்சான்,
'லீவு' தராங்கள்.
அடுத்த வருசம் பாப்பம்.
'ஓகே' மச்சான் 'சீ யூ' '.
கூட்டம் கலைகிறது.

  

1995 ஆம் ஆண்டு,

லண்டன்.
ஊதல் காற்றால், பனிக்குளிர் மேலும் ஆவேசமடைகிறது.
வெறிச்சோடிய வீதிகளுக்கு மறுதலையாய்,
கூட்டம் நிறைந்த ஒரு 'பப்'
கையில் 'விஸ்கி'யோடு விசாகன், கணநாதன், ரூபன் மூவரும்,
ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.
தோள்களை உயர்த்தி 'கோர்ட்டை அட்ஜெஸ்ற்' செய்தபடி,
'என்ன மச்சான்! 'சிலோன்ல' இருந்து,
ஏதாவது 'நியூஸ்' வந்ததே?'
'விஸ்கி'யை உறிஞ்சிக்கொண்டு கணநாதன் கேட்கிறான்.
' 'நோ' மச்சான்! கனநாளா ஒரு 'லெற்றசையும்' காணேல.
நாங்களும் லண்டன் வந்து '(f)பிப்ரீன் இயர்ஸ்' ஆயிட்டுதெல்லே.
கன நாளா ஒருவரோடையும் 'கனெக்சன்' இல்ல,
துஷ்யந்தன் மட்டும், 'லாஸ்ற் இயர்' ஒரு 'லெற்றர்' போட்டிருந்தவன்.'
இது ரூபன்.
'என்ன 'நியூசாம்'?' - மீண்டும் கணநாதன்
'வரதன் தன்ர மச்சாளத்தான் கலியாணம் முடிச்சவனாம்.
இப்ப அவனுக்கு மூன்று பிள்ளையளாம்.' ரூபன் சொல்ல,
'ஓ அப்பிடியே?
அப்ப அவன் முந்தி 'லவ்' பண்ணின,
டொக்ரற்ற 'டோட்டருக்கு' என்ன நடந்ததாம்?
முந்தி அவள முடிக்காட்டி,
'சுவிசயிற்' பண்ணுவன் எண்டு சொல்லுவான்.
இப்ப மச்சாள எப்பிடி முடிச்சவனாம்?' கணநாதன் கேட்க,
மூவரும் சிரிக்கிறார்கள்.

  

'அந்த 'ஏஜ்ஜில' அப்பிடித்தான் மச்சான்.
நாங்களும் அப்பிடி நினைச்சனாங்கள் தானே!'
இது விசாகன்.
'யெஸ், யெஸ், தற்ஸ்றூ', என்று ஆமோதித்த கணநாதன்,
பருத்த வயிற்றைத் தடவியபடி இருந்த விசாகனை நோக்கி,
'உம்மட'வைஃப்பிட டான்ஸ் கிளாஸ்' எல்லாம் இப்ப எப்பிடிப் போகுது?'
அக்கறையோடு விசாரிக்கிறான்.
'முந்தி மாதிரி இல்ல மச்சான்,
'செக்கன்ட் டெலிவரி' அவவுக்கு 'சிசேரியனல்லே'
அதால 'கிளாஸ்ச'  இப்பக் குறைச்சுப் போட்டா.
அதோட நானும் 'டயப்பிற்றிக் பேசன்ராப்' போனதால,
என்னையும் கவனிக்க வேணுமெண்டு.
இப்ப வீட்டு வேலையளிலதான் கூட மினக்கடுறா.'
விசாகன் சொல்ல,
'ஓ நீரும் இப்ப 'டயப்பிற்றிக் பேசன்ரே?' '
கேள்வியிலேயே தன்நோயையும் வெளிப்படுத்துகிறான் கணநாதன்.

  

'உம்மட 'ஹெல்த்' எப்பிடி மச்சான்?'
இருவரும் ரூபனை விசாரிக்கிறார்கள்.
'நல்ல காலம் எனக்கு இன்னும் 'டயப்பிற்றிக்' வரேல.
ஆனால், 'பிறசர்' கொஞ்சம் இருக்கு.
அதோட, 'கேணியா ட்ரபிலாலும்' இடக்கிட கரச்சல்.
'டொக்டர்ஸ் ஒப்பிரேசன்' பண்ண வேணும் என்றாங்கள்.
மனிசி இப்ப லீவெடுக்க முடியாது,
பிறகு செய்யலாம் எண்டு சொல்லுது.'
பெருமூச்சோடு ரூபன் சொல்லி முடிக்க,
ரூபனின் குடும்பப் பூசலை ஓரளவு அறிந்திருந்த கணநாதன்,
கதையை மாற்றி,
'மச்சான்! நீங்கள் கேள்விப்பட்டனிங்களே?
அங்க 'சிலோனில' துஷயந்தனுக்கும்,
'(f)பெஸ்ற் அட்ராக்' வந்ததாம் எல்லே,
அரும்பொட்டுல தப்பினவனாம்.
வரதன்ர மகன் ஒருவனும் 'டைகசில' சேர்ந்து,
கடைசி 'அட்றாக்கில' செத்து போட்டானாம்.
அதால, வரதனும் சாடையா 'மென்டல்' மாதிரி திரியிறானாம்.
எல்லாரையும் ஒருக்காப் போய்ப்பாக்க விருப்பமாத்தான் கிடக்கு,
ஆனால் அந்த 'ஹொட்கிளைமற்' எனக்கு ஒத்துக்கொள்ளாது.
அதான் யோசிக்கிறன்.'
பெருமூச்சோடு சொல்லி முடிக்கிறான் கணநாதன்.

  

'ஓமோம் நானும் நினைச்சனான் தான்,
ஆனால், அங்க ஒரே 'மொஸ்கிற்றோசாம்',
பிள்ளையள் விருப்பப்படுகுதுகள் இல்ல.
அங்க காரும் ஓடமுடியாதெண்டு எழுதுகினம்,
அதான் யோசனையாக்கிடக்கு' - இது ரூபன்.
'சரி மச்சான், 'லேட்'டாகியிட்டுது. இனி வெளிக்கிடுவம்.
'வீ வில் மீற் நெக்ஸ் ரைம்.' '
கார்ச் சாவிகளைக் கையில் எடுத்து மூவரும் கிளம்ப,
கூட்டம் கலைகிறது.

  

2020 ஆம் ஆண்டு,

வெள்ளவத்தைக் கடற்கரை.
கடற்கரையோரச் சிமெந்து பெஞ்சில் நான்கு உருவங்கள்.
நரைத்த தலை.
சோடாப்புட்டிக் கண்ணாடி.
ஊத்தை படிந்த 'கொலறோடு' கூடின 'சேர்ட்'.
இரண்டுமூன்றுதரம் செருமி, காறித் துப்பியபடி,
வரதர் பேசத்தொடங்குகிறார்.
'டொக்ரர்!
கொஞ்சநாளாய் இந்தச் சளி பெரிய பிரச்சனையாக் கிடக்கு,
என்ன செய்யலாம்?'
கடலை வெறித்தபடி இருந்த டொக்ரர் புவனகுமார்,
'ஏஜ்' ஏற, ஏற, வருத்தங்கள் வரத்தான் செய்யும்.
நீங்கள் முந்தி 'செயின் சிமோக்கர்',
அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
பிறகு 'கிளினிக்குக்கு' வாங்கோ,
கொஞ்சம் 'டெஸ்ற்றுகள்' எடுத்துப் பாப்பம்.'
கால்களை, கொஞ்சம் கொஞ்சம் உயர்த்தி,
'எக்சசைஸ்' செய்தபடி பதில் சொல்கிறார் அவர்.

  

'டொக்ரர் நீங்கள் கேள்விப்பட்டனிங்களே,
லண்டனில, எங்கட ரூபன் ,
போனவருசம் திடீரென்று 'ஹார்ட் அட்றாக்கில' போயிட்டாராம்.
பாருங்கோ இருபது வருசத்துக்கு முன்னுக்கு
'ஹார்ட் அட்றாக்' வந்த நான் இப்பவும் இருக்கிறன்.
அந்த ஆள் போய்ச் சேர்ந்திட்டுது.
அவற்ற பெண்டில், இரண்டு பிள்ளைகளையும் இவரிட்ட விட்டுட்டு,
வேற ஆரோடையோ ஓடினதோட,
அந்த மனுசன் பாவம்! நோயாளியாப் போச்சு.
நல்ல காலம், நாங்கள் லண்டன் போகாமல் விட்டது.
அங்கத்தப் பெண்டுகள் ஓடுகாலிகள்.
எங்கடதுகள் என்ன சண்டை பிடிச்சாலும்,
காலைச் சுத்திக்கொண்டு கிடக்குங்கள்.'
துஷ்யந்தனார்,
தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி சொல்ல,
'ஓமோம் நீங்கள் சொல்லுறது உண்மைதான்.
இப்பவும் நான் விடியக்காத்தால எழும்பினவுடன,
தன்ர நாரிப்பிடிப்பையும் பாக்காம, இந்த வயசிலயும்,
சின்னப்பெட்டயப்போல மனிசி கோப்பி கொண்டு ஓடிவருகுது.
வாழ்க்கை அமையிறதெல்லாம் விதிதான் பாருங்கோ.'
ஆமோதிக்கிறார் மாதவனார்.

  

'ஓமோம், நீங்கள் சொல்லுறது சரிதான்.
நானும் என்ட பெடி இயக்கத்துக்குப் போய்ச் செத்ததோட,
இதைத்தான் நினைச்சனான்.
கொஞ்சநாள் விசரன் மாதிரித் திரிஞ்சன்.
பிறகு விதியைப் பற்றி ஒரு பிரசங்கியார் சொல்லத்தான்,
என்ட மனம் கொஞ்சம் தேறிச்சு.
முருகா! பிள்ளைகளைப் பெத்து நாங்கள் படுற பாடு போதும்,'
வரதராஜர் மெதுவாக விம்முகிறார்.

  

குழிவிழுந்த கண்களை இடுக்கியபடி,
'நீங்கள் சொல்லுறது சரிதான் வரதர்,
நீங்கள் பிள்ளைய இழந்து பாடுபடுறீங்கள்.
நான் வச்சுக்கொண்டு பாடுபடுறன்.
என்ட மூத்தவன், தங்கச்சிமார் குமரா இருக்க,
ஒரு பெட்டையோட திரிஞ்சான்.
என்ன சொல்லியும் கேட்கமாட்டே னெண்டுட்டான்.
பிறகு, அவள் பிள்ளத்தாச்சியாப்போனாள் எண்டு,
அந்தப் பெட்டையோட தாய் தகப்பன் சண்டைக்கு வந்திட்டாங்கள்.
குமருகள வைச்சுக்கொண்டு அவனக் கட்டிக்குடுத்தனான்.
இப்ப அதுகளக் கரையேத்த,
'றிற்டெயர்' பண்ணிப்போட்டும்,
வேலை செய்ய வேண்டிக் கிடக்கு.
எல்லாம் என்ட விதி.'
மாதவனார் கண்கலங்கிச் சலிக்கிறார்.

  

'சரி சரி, நீங்கள் 'வொறி' பண்ணாதேங்கோ மாதவனார்.
அந்த வயசு அப்படித்தானே!
பழசுகளை நீங்கள் மறந்திட்டீங்கள் போல.
படிக்கேக்க வீட்டுக்கார அன்ரியோட நீங்கள் பட்டபாடு......'
டொக்ரர் புவனகுமார்
ஒருபக்கம் பொக்கையான தன்வாயைத் தடவியபடி சிரிக்கிறார்.
'ஓமோம்! இவற்ற அந்த விளையாட்டுக்கள மறக்கமுடியுமே?'
வரதருடைய சிரிப்பு இருமலுக்கிடையே வெளிவருகிறது.

  

'சும்மா பழங்கதையள் கதையாதைங்கோ,
இப்பதான் அந்தப் பாவங்கள் விளங்குது.'
வெட்கமும், வேதனையும் கலந்த சிரிப்பு மாதவனார் முகத்தில்.
'சரி சரி குளிர்காத்து வீசத்தொடங்கிட்டுது வெளிக்கிடுவம்.
முடிஞ்சால் 'நெக்ஸ்ற் வீக்' சந்திப்பம்.'
கொக்..... கொக்..... கொக்..... வரதர் எழும்புகிறார்.
'யெஸ், யெஸ்' எனக்கும் இது ஒத்துக்கொள்ளாது தான்.'
'வோக்கிங் ஸ்ரிக்கை' எடுத்துக்கொண்டு,
டொக்ரர் புவனகுமாரும் நடக்கத்தொடங்குகிறார்.
'கொஞ்சம் பொறுங்கோ டொக்ரர்,
உங்கட கையப்பிடிச்சுக்கொண்டு அதுவரைக்கும் நானும் வர்றன்,
இந்தக் கை கால் நடுக்கம் வரவரக்கூடுது'
மாதவனாரும் டொக்ரரின் கைபிடித்து தள்ளாடிநடக்க,
'நீங்கள் நடவுங்கோ, நான் மெல்லமெல்ல வர்றன்,
இந்த நாரிப்பிடிப்புச் சனியன், டக்கெண்டு எழும்ப விடுகுதில்ல'
துஷ்யந்தனார் விடைதரக் கூட்டம் கலைகிறது.

  

2030 ஆம் ஆண்டு,

அதே கல்லூரி.
முன்னைய அதே மதிற்சுவர் மாபிள் வேய்ந்து அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.
மதிற்சுவரில் நால்வர்,
ஸ்ராண்டில் விடப்பட்ட புதிதாய் வந்த 'மொஷிக்கி',
மோட்டார்சைக்கிளில்,
முன்னும் பின்னுமாய் நால்வர்.
' 'ஹலோ 'மச்' '!
இண்டைக்கும் 'கொம்பியூட்டர் கிளாசு'க்குப் போகேலயே?'
கசங்காத முழுக்கைச் சட்டையுடன் இருந்த அம்றித்திடம்,
'ரீசேர்ட்' அணிந்திருந்த முக்கேஷ் கேட்கிறான்.
அவனது 'ரீசேர்ட்'டின் நெஞ்சுப் பகுதியில்,
'கிஸ் மி' என்ற கோரிக்கை மின்னும் எழுத்துக்கள்
'விசர் மச்சான்,
இந்தக் 'கொம்பியூட்டரோட' இருந்து இருந்து அலுத்துப் போச்சுது.
நெடுக இந்த 'மவுச'த் தடவித்தடவி விசரடிக்குது.'
இது அம்றித்தின் பதில்.

  

'ஓமோம் உமக்குத் தடவ எத்தின இருக்குது,
உது அலுப்படிக்குந்தான்.'
'மோட்டசைக்கிள் சீற்றி' லிருந்த கிறிஷின் நக்கலிது.
'வீட்ட '(Pa)பா' கேட்டால் என்ன சொல்லுவ?'
மதிலிலிருந்து சிகரெட்டை உறிஞ்சியபடி கேட்கிறான் குமரேஸ்.
அவன் கையில் ஒரு பெரிய இரும்பு வளையம்.
ஒற்றைக் காதிலும், கண்புருவத்திலும் வெள்ளித்தோடுகள்.
'அவர் கேளார்.
பாவம் 'கிறான்ட் (Pa)பா' செத்த கவலேல அவர் இருக்கிறார்.'
அம்றித் சொல்ல,
'என்னது?
டொக்ரர் புவனகுமாரும்; மண்டையப் போட்டுட்டுதே?'
ப்றீத்தன் புதினம் கேட்கிறான்.
'போட்டிட்டுதேயோ?'
அது எப்ப மண்டையைப்போடும் என்டு தவம் இருந்தனான்.
'கிழட்ஸ்' தந்த அலுப்புக் கொஞ்ச நஞ்சமே?
'இன்ரநெட்டில',
ராத்திரில கொஞ்சம் '(f)பிகர்ஸ்' பாக்கலாமெண்டால்,
நொண்டி நொண்டி வந்து எட்டிப்பாக்கும்.
இப்பதான் கொஞ்சம் நிம்மதியா எல்லாம் பாக்கிறன்.'
அம்றித் சொல்ல,
'மச்சான் அந்த 'வெப் அட்ரசை',
எனக்கும் ஒருக்காச் சொல்லு'
முக்கேஷ் ஆவலாய்க் கேட்கிறான்.

  

'இவங்களப் பாற்றா மச்சான்,
இன்னும் சின்னப்பொடியங்கள் மாதிரி,
'நெட்டில' பாக்கிறாங்கள்.
ஓமெண்டால் சொல்லுங்கோ மச்சான்,
வர்ற 'சண்டே' நேராப் பாக்கக் கூட்டிக்கொண்டு போறன்.'
கையால் ஏதோ ஜாடை காட்டி கிறிஷ் சொல்ல,
ஓ எனப் பெரும் சிரிப்பு.

  

'அதுசரி, நேற்று 'ச்சட்' பண்ணேக்க,
சரக்கு நிக்குது பிறகு கதைக்கிறன் என்டனி,
யார்டாப்பா அந்த சரக்கு?'
மீண்டும் அம்றித்தைக் கேட்கிறான் குமரேஸ்.
'அது என்ர 'கிறான்ட் (Pa)பாவின்ர (f)பிரண்டிட' பேத்தியாம்.
லண்டினில இருக்கிறவையள்,
'(h)ஹொலிடேக்கு' வந்திருக்கினம்.
'கிறான்ட் (Pa)பா' செத்தது கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தவையள்.
பேத்தியும் வந்தவள்,'
செய்தி சொல்லித் தொடர்கிறான் அம்றித்.

  

'மணிச் சரக்கடா மச்சான்!
பெரியாக்கள் 'ஹோலுக்கிள' இருக்க,
கொம்பியூட்டரில அவளோட ஒரே விளையாட்டுத்தான்.
நேரம் போனது தெரியேல.'
அம்றித் சொல்லி முடிக்க,
'துலைஞ்சுது போ.
அப்ப நேற்றுமுழுக்க 'மவுஸ்' ஓடி ஆடிக் களைச்சிருக்கும்.'
வழக்கமாகவே வரம்புமீறிப் பேசும் கிறிஷ்,
இரட்டையர்த்தத்தில் 'கொமன்ட்' அடிக்க,
ஓ எனக் கும்மாளச் சிரிப்பு வானைத் தொடுகிறது.

  

'மச்சான்! சரக்கு வீட்டுல தான் நிக்குது.
'ஷொப்பிங்' கூட்டிக்கொண்டுபோக வர்றன் எண்டு சொன்னனான்.
நான் போகவேணும்.
நாளைக்குச் சந்திப்பம்,
'சீ யூ (b)பாய்.'
அவன் உதைத்த உதையில் 'மொஷிக்கி' சீறிப்பாய,
கூட்டம் கலைகிறது.

  ✠   
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.