‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 1
அரசியல்களம் 29 Dec 2015
உ
சகோதரர் புருஷோத்தமனுக்கு,
இப்பெயரில் எழுதியவர் யார் என்று,
நான் ஊகித்தது சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு,
இக்கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன்.
உங்கள் உண்மைப் பெயரிலேயே இக்கடிதம் எழுதப்பட்டிருந்தால்,
நான் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
உண்மையை உரைப்பதற்கு எதற்கு முகமூடி?
ஆனால் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று அறியாமல்,
அதுபற்றி அதிகம் நான் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.
எனவே நேரே விடயத்திற்கு வருகிறேன்.
➤➤➤
தங்கள் கடிதம் மிக நாகரீகமாக எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பண்பாட்டை முதலில் பாராட்ட விரும்புகிறேன்.
பொதுவாக எனது விமர்சனங்களுக்குப் பதில் உரைக்க வருபவர்கள்,
நான் எழுதியவை பற்றி எழுத முனையாமல்,
என்னைத் துரோகியாகவும், திருடனாகவும், வஞ்சகனாகவும் வர்ணித்து,
அல்லது தேவையில்லாமல் கம்பனைக்கண்டித்தும்
தூஷிக்கவே முனைகிறார்கள்.
அண்மையில் ஒரு இணையத்தளம்,
என்னைக் காமுகனாகவும் வர்ணித்திருந்தது.
அவற்றையெல்லாம் கண்டு,
நம் இனம் இவ்வளவுதானா?என்று சலித்திருந்த எனக்கு,
உங்கள் நாகரீகமான மடல் மகிழ்வு தந்தது.
அந்த நாகரீகத்திற்கு என் நன்றிகள்.
➤➤➤
உங்கள் மடலின் தொடக்கத்தில்,
என்னை நிறையவே பாராட்டியிருந்தீர்கள்.
எனக்கு யாழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தரவேண்டும் என்கின்ற,
உங்களின் விதந்துரைப்பு ஆச்சரியம் தந்தது.
ஆனால் ஒன்று.
இத்தகு ஆசைகளை நான் கடந்து பலகாலமாகிவிட்டது என்பதை,
தயைகூர்ந்து தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்கலைக்கழகம் எனக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று,
நான் என்றும் எதிர்பார்த்தவன் அல்லன்.
அத்தகைய எதிர்பார்ப்பு எனக்கு துளியளவேனும் இருந்திருந்தால்,
நான் அவர்களுடன் பலதரம் பகிரங்கமாக மோதியிருக்க மாட்டேன்.
அதுமட்டுமல்ல, தப்பித்தவறி அதிசயமாய்,
பல்கலைக்கழகம் அத்தகு முடிவொன்றுக்கு வந்தாலும்,
நிச்சயம் அதை நான் நிராகரிப்பேன் என்பது உறுதி.
காரணம் வரிசை பேணப்படாது,
தகுதி பாராமல், தம் தனித்தொடர்பு பற்றி, பட்டங்களுக்காய் தவமிருப்போருக்கு
பல்கலைக்கழகத்தாரால் வரங்களாய் அளிக்கப்படும் விருதுகள்,
என்னைப் பொறுத்தளவில்,
இழிவுக்குரியனவே அன்றி பெருமைக்குரியன அன்றாம்.
உண்மைக்காய்ப் பல விடயங்களில் பலபேருடன் மோதியும்,
இன்றும் மக்கள் தரும் அன்பும், மரியாதையும்,அங்கீகரிப்புமே,
எனக்குக் கிடைத்த பெரும் விருதென்று கருதுபவன் நான்.
இதனைத் தயைகூர்ந்து அலட்சியமாய்க் கொள்ளற்க.
என்னை நேசிக்கும் உங்களுக்கு,
என் நிலை உரைப்பது அவசியம் என்று கருதியதால்தான்,
இதனை எழுதினேன்-அவ்வளவே!
➤➤➤
என்மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் போலவே,
தங்கள் மீதும் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
இனப்பற்றும், மொழிப்பற்றும், நடுநிலைமையும்,
உங்களிடம் எப்போதும் இருக்கும் என்று நம்புகிறவன் நான்.
உங்களது எழுத்திலும், பேச்சிலும், சத்தியத்தின் சாயல் கண்டு மகிழ்பவன் நான்.
அதனாற்றான் தாங்கள் எழுதிய மடலின் ஒவ்வொரு வரியையும்,
நிதானித்து, படித்து, உணர்ந்து உடன் இப்பதிலை எழுதத்தொடங்குகிறேன்.
தாங்கள் எழுதிய விடயத்திற்குள் நுழையும் முன்பு ஒரு வேண்டுகோள்.
இக்கருத்துப் பரிமாற்றம் எங்களது தனி உறவை,
எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதே அவ்வேண்டுகோள் ஆகும்.
முரண்பட்டவர்கள் நாகரீகத்தோடு ஒருவர்க்கொருவர் கருத்துப் பரிமாறி,
பகையின்றி தம் முரண்பாட்டைத் தீர்க்க முயலலாம் எனும் விடயத்தில்,
நம் அரசியல் தலைவர்களுக்கு,
நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பது எனது பேரவா.
➤➤➤
அன்பு நண்ப!
நான் ஒன்றும் கூட்டமைப்பின் ஆதரவாளன் அல்லன்.
கடந்த தேர்தல் காலத்தில்,
உகரத்தில் நான் எழுதிய கட்டுரைகளையும்,
‘தூண்டில்’ பதில்களையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
அவற்றில் அவர்களை நான் எவ்வளவு கடுமையாகச் சாடியிருந்தேன் என்பதையும்,
நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் எந்தக்கட்சிக்கோ,
அல்லது எந்தக்கட்சியையும் சார்ந்த தனித்தலைவர்களுக்கோ,
எதிரியோ, ஆதரவாளனோ அல்லன்.
ஒட்டுமொத்த இனத்தின் நன்மை நோக்கிய முயற்சியில்,
இயங்குபவர்களைப் பாராட்டவும்,
மறுதலையாய் இயங்குபவர்களைக் கண்டிக்கவுமே,
இதுவரை என் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
➤➤➤
புலிகள் இருந்த காலத்தில்,
அவர்கள் எதைச் சொன்னாலும்,
கற்றவர்கள் அதற்கு ‘சலாம்’ போட்டுக்கொண்டிருந்தபோது,
புலிகளின் மேடையிலேயே அவர்களின் சில தவறுகளை,
துணிந்து சுட்டிக்காட்டியவன் நான்.
திலீபனின் நினைவுநாளில்,
காவடி, தூக்குக்காவடி, பஜனை,
வர்த்தகர்களின் கட்டாயவரவுப்பதிவு என்பனவாய்,
தவறுகள் நிகழ்ந்தபோது,
ஆயிரக்கணக்கான மக்கள் முன் நிகழ்ந்த,
திலீபனின் நினைவு நிறைவுநாள் கூட்டத்தில்,
புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எல்லாம் மேடையைச் சூழ்ந்து நிற்க,
மேற்செயல்கள் தவறென்று சுட்டிக்காட்டி,
அதனை உடன் நிறுத்தவேண்டும் என்று,
பகிரங்கமாய் அறைகூவல் விடுத்தேன்.
மண்ணுக்காக உயிர்துறந்த ஒரு தியாகிக்கு அஞ்சலி செலுத்த
மக்களை கட்டாயப்படுத்தி அழைத்துவருவது வெட்கக்கேடு என்று
துணிந்து சொன்னேன்.
புலிகளின் மேடையில் வைத்தே நான் புலிகளைக்கண்டித்ததைக்கண்டு,
பலரும் திகைத்தார்கள்.
அன்றுதான் சத்தியத்தின் பெருமையை நான் உணர்ந்தேன்.
நிகழ்ச்சி முடிந்து மேடையைவிட்டு நான் கீழிறங்கியபோது,
காவற்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட ஆயுதத்ததுடன் நின்ற,
அனைத்து புலி உறுப்பினர்களும் எழுந்துநின்று ஒதுங்கி தலைவணங்கி
என்னை மரியாதை செய்தார்கள்.
அப்போதும், இப்போதுபோலவே வால்பிடிப்போர் பலரும்
என்னை ‘றோவின்’ கையாள் என்றும்,
புலிகளின் புலனாய்வுத்துறை என்னைக் கடத்தப்போகிறது என்றும்,
பரவலாய்ப் பேசினார்கள்.
புலிகள் மத்தியிலும் சில சலசலப்பு உண்டானது உண்மையே.
ஆனால் என்கருத்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்து,
அடுத்த ஆண்டு நடந்த திலீபனின் நினைவுதின விழாவில்,
நான் சொன்ன விடயங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டபோது,
உண்மையில் உளம் குளிர்ந்தேன்.
➤➤➤
அதுமட்டுமல்ல.
நாங்கள் கம்பன் விழாக்களை நடாத்திக் கொண்டிருந்த பொழுது,
புலிகளின் வானொலியில் கம்பனையும், இராமனையும் இழிவுபடுத்தி,
இராவணன் பற்றிய ஒரு நாடகம் ஒலிபரப்பப்பட்டது.
பின்னாளில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட,
எங்கள் நண்பர் பொன் கணேசமூர்த்தி அவர்களே,
புலிகளுக்காக அந்த நாடகத்தை எழுதி தயாரித்து வெளியிட்டு வந்தார்.
முழுக்க முழுக்க கம்பனையும், இராமனையும் கொச்சைப்படுத்தும் விதத்தில்,
அந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.
அப்போது யாழிலிருந்த அனைவருக்கும்,
இந்த நாடகம் கம்பன் கழகத்திற்கு எதிராகச் செய்யப்படும் முயற்சி என்பது தெரிந்திருந்தது.
அந்த நாடகம் முடிந்தபோது,
அம் முயற்சியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டுவதற்காகப் புலிகள் அமைப்பு,
இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் ஒருவிழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த விழாவிற்கு ஆச்சரியமாகப் புலிகள் என்னையும் பேச அழைத்திருந்தனர்.
அழைப்பிதழில் எனதுபெயரைக் கண்ட அனைவருக்கும் ஆச்சரியம்.
விழா நடந்த போது,
ஈரோஸ் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, பொட்டம்மான் போன்ற,
புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
எல்லோரும் என்னை விளித்து,
எதிர்க்கருத்துக்களை மரியாதை குறையாமல் பேசினார்கள்.
மண்டபம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பலரும் இவர் என்ன செய்யப்போகிறார்? எப்படிச் சமாளிக்கப்போகிறார்? என்று,
ஆர்வத்தோடு என் பேச்சிற்காகக் காத்திருந்தார்கள்.
➤➤➤
மேடையேறிய நான்.
‘காய்ச்சல் வந்தவனுக்கு வாட்டிய பாண் (ரொட்டி) நல்ல உணவுதான்.
அது காய்ச்சல் நேரத்திற்கே உகந்தது.
அதனை அவன் எப்போதும் சாப்பிடமுடியாது.
காய்ச்சல் மாறியதும் சுவையும் பலமுமிக்க ‘புரியாணியை’ அவன் நிச்சயம் நாடுவான்.
அதுபோல தமிழனத்திற்கு நோய் வந்திருக்கிற இன்றைய நிலையில் வேண்டுமானால்,
நீங்கள் கம்பனை ஒதுக்கி வைக்கலாம்.
ஆனால் நாளை நம் இனம் உரிமை பெற்று தலைநிமிர்ந்ததும்,
ஒவ்வொரு தமிழனும், கம்பனைத் தானாக நாடுவான்.
அதை உங்களால் தடுக்க முடியாது.
அப்படிக் காலம் கனிந்ததும் கம்பனைத் தேடப்போகிற இனத்திற்காகவே,
நாம் கம்பனைக் காத்து வருகிறோம்.
அதைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்றும்,
தமிழகத்தில் திராவிடர் கழகத்தினர்,
ஆரியர்களுக்கு எதிரான தம் போராட்டத்தை வெளிப்படுத்தும்,
ஒரு குறியீடாகவே கம்பனை எதிர்த்தார்கள்.
நம் தமிழ் மண்ணில்,
ஆரிய, திராவிட போராட்டம் என்பதே இல்லை.
எனவே திராவிடர் கழகங்களின் கொள்கையை,
இங்கு நீங்கள் வீணாய் நடைமுறைப்படுத்த நினைப்பது தவறு’ என்று சொன்னதோடல்லாமல்,
மேடையின் முன்பு இருந்த புலிகளின் ஆதரவாளரான,
யாழ் வீரமணி ஐயரைச் சுட்டிக்காட்டி,
‘இதோ இவர் ஆரியர் தான் இவரை உங்களால் வெறுக்கமுடியுமா?’ என்று கேட்டேன்.
புலிகள் சங்கடப்பட்டுப் போனார்கள்.
சபை கைதட்டி ஆரவாரித்தது.
நான் இதுவரை பேசிய பேச்சுக்களில் மறக்கமுடியாமல்,
என் மனதில் பதிவானவற்றில் இவ்விரண்டு பேச்சுக்களும் அடங்கும்.
காரணம்.
இவை சாமர்த்தியமான பேச்சுக்கள் என்பதால் அல்ல.
சத்தியமான பேச்சுக்கள் என்பதால்.
➤➤➤
இளமைதொட்டே நான் இப்படித்தான் வளர்ந்திருக்கிறேன்.
இந்துக்கல்லூரியில் நான் ஏ.எல் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது,
நடந்த ஒரு சம்பவத்தையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அப்போது யாழ் மேயராக தமிழ் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த,
திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாகி விட்டிருந்த காலமது.
விஸ்வநாதன் என் தந்தையின் தங்கையின் கணவர்.
என் சொந்த மாமா.
இப்போது நாடுகடந்த தமிழ் ஈழத்தின் பிரதமராய் இருக்கும்,
உருத்திரகுமாரின் தந்தை.
அப்போது பிரதமராய் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா,
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
அந்தப்பயணத்தில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
அவரது நெருங்கிய நண்பரான,
அல்பிறட் துரையப்பா அவர்களின் சமாதிக்கு,
அஞ்சலி செலுத்த விரும்பினார்.
அவரது சமாதி மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட
முற்றவெளியில் அமைந்திருந்தது,
ஆனால் பிரதமரின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து
யாழ் மேயர் அஞ்சலிசெய்ய அனுமதியளிக்கவில்லை.
எனக்கென்னவோ அச்செயல் மிக அநாகரீகமாய்ப்பட்டது.
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்,
ஒரு தனிமனிதனுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல்,
தடுத்த அச்செயலைக் கண்டித்து மேயருக்கு,
இது தவறு ! தமிழர் நாகரீகத்திற்கு ஒவ்வாத விடயம் ! என்று சொல்லி,
ஓர் கடிதம் எழுதினேன்.
➤➤➤
இந்த எனது இயல்பு பற்றியே அண்மைக்காலமாக,
முதலமைச்சர் பற்றிய சில விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன்.
திரு. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக்க,
பாடுபட்டவர்களில் நானும் ஒருவன் என்பது,
உங்களுக்கே தெரிந்திருக்கும்.
இன்றைய இக்கட்டான சூழலில்,
பிறநாட்டாருக்கு எமது பிரச்சினையை விளங்க வைக்க,
அவரது சட்டஅறிவு, துணிவு, ஆங்கிலப்புலமை என்பவை,
துணைபுரியும் என்ற நம்பிக்கையிலேயே,
பலரோடு சேர்ந்து நானும் இம்முயற்சியில் ஈடுபட்டேன்.
ஆனால் என் எண்ணம் நிறைவேறவில்லை.
➤➤➤
இன்று பலரும் முதலமைச்சரோடு எனக்கு ஏதோ பகை இருப்பதாகவும்,
அதனாலேயே அவரை நான் எதிர்த்து வருவதாகவும்,
தம் இஷ்டத்திற்குக் கதைகட்டி வருகின்றனர்.
முதலமைச்சரில் நானும், என்னில் முதலமைச்சரும்,
அளவற்ற நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தோம்.
எங்களது ஒரு கம்பன் மலருக்காக எழுதிய கட்டுரையில்,
நீதியரசர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“கொழும்புக் கம்பன்கழகத்துடன் என்னை இணைத்தது இறைத்திருவருளே என்பது என் நம்பிக்கை. பொதுவாக எந்த ஒரு சங்கத்துடனோ, கழகத்துடனோ, நிறுவனத்துடனோ அதன் நிர்வாக அமைப்பில் பங்குகொள்வதில்லை என்பது எப்பவோ நான் எடுத்தமுடிவு. பல சங்க, நிர்வாகங்களில் பங்குபற்றிய பின்னர் எடுத்த முடிவு அது. அந்தக் கொள்கையை அமுல்படுத்துவதில் நான் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். காரணம் நிர்வாகிகளின் சுயநலத்திற்குப் பொதுநலம் என்ற முலாம் பூசியே நிறுவனங்கள் பல நிர்வகிக்கப்பட்டு வந்தன. என்னால் முடிந்தவற்றை ஒரு சங்கத்திற்கோ, நிறுவனத்திற்கோ செய்ய அதில் குழு அங்கத்தவராகவோ நிர்வாகியாகவோ நான் செயல்படவேண்டிய அத்தியாவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் ஒதுங்கி நின்று சேவை செய்யவே ஆசைப்பட்டேன்.
அப்படி ஒரு கொள்கையுடன் இருந்தும் அந்தக் காலகட்டத்தில் எனக்கு முன்பின் தெரியாத ஜெயராஜ் அவர்கள் தங்கள் கொழும்புக் கம்பன்கழகத்தின் பெருந்தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று கேட்டபோது ஏனோ சற்றுத் தடுமாறினேன். எனக்குத் தெரிந்த அளவில் அதற்கான காரணம் அவர் குரலில் தொனித்த ஒரு நம்பிக்கை. நினைத்ததைச் சாதிக்கக் கூடிய இறைபலம் அவரிடம் இருந்ததை என் உள்மனம் எப்படியோ அடையாளம் கண்டுவிட்டது. இலட்சியக் கனவுகளை நனவாக்கும் வைராக்கியம் ஜெயராஜுக்கு இருந்ததைக் கண்டு கொண்டேன். அகந்தை, ஆணவம், மமதை, சுயநலம் ஆகியவற்றின் உறைவிடமாக கொழும்புக் கம்பன்கழகம் அமையாது என்ற நம்பிக்கை மனதில் வேரூன்றி விட்டது. கொள்கையைக் கைவிட்டேன். ஆனால் நிர்வாகப் பணிகளில் என்னை உள்வாங்காது விட்டால் பெருந்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறினேன். சரி என்றார் ஜெயராஜ். அதேபோல் இன்றுவரை நிர்வாகப் பணிகளில் என்னை அமிழ்த்தாமலே ஒரு செல்லக் குழந்தையாகவே என்னைச் சீருடனும், சிறப்புடனும் நடத்தி வந்துள்ளார்கள். ”
➤➤➤
நீதியரசரின் இக்கட்டுரைக் கருத்துக்கள்,
எனக்கும், அவருக்கும் இடையில் இருந்த உறவின் நெருக்கத்தையும்,
நாம் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருந்த நம்பிக்கையையும்,
உங்களுக்கு விளக்கம் செய்யும் என்பதற்காகவே,
அதனை இங்கு தந்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல.
எனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதம் ஒன்றில்,
அவர் பின்வருமாறு எழுதினார்.
“ஜெயராஜின் அன்பின் ஆற்றலே, அவரவர்களை அடிபணிய வைக்கிறது.
அதில் ஒன்றும் விந்தை இல்லை.”
➤➤➤
இவ்வாறு கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்கு மேலாக,
எங்கள் உறவும், அன்பும் தொடர்ந்தது உண்மை.
பின்னர் 2011 கம்பன் விழாவில்,
அவரது கோரிக்கை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் போனதில்,
சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு அவர் கழகப்பதவியிலிருந்து விலகினார்.
அப்போதும் அவருக்கும், எங்களுக்கும் இடையிலான அன்பில்,
எக்குறைவும் ஏற்படவில்லை.
பதவி விலகியபோது அவர் எழுதிய கடிதத்தின் சில வரிகளைக் கீழே தருகிறேன்.
“எந்த ஒரு நிறுவனத்திலோ சங்கத்திலோ பதவி வகிக்க விரும்பாத என்னைத் தெய்வம் கொழும்புக் கம்பன்கழகத்தோடு உங்கள் மூலம் இணைத்தது. இவ்வாறு இணைத்து இவ்வருடத்துடன் பதினாறு ஆண்டுகள் சென்றுவிட்டன என்று நம்புகின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு மன உளைச்சலோ, சிக்கலோ, பிணக்குகளோ இல்லாமல் எங்கள் உறவு நீடித்ததையிட்டு மிக்க மகிழ்வுடையவனாக இருக்கின்றேன். நீங்கள் அடங்கிய கம்பன் குடும்ப அன்பர்கள் யாவரும் எனக்குத் தமது அன்பையும் மதிப்பையும் இதுவரை காலமும் மனமகிழ்வுடன் அள்ளிச் சொரிந்ததையிட்டுப் பூரித்துப் போயிருக்கின்றேன். கம்பன்கழகம் நீடூழி காலம் வளர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனினும் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் தொடர்ந்து கொழும்புக்கம்பன்கழகத்துப் பெருந்தலைவர் பதவியை வகிக்க முடியாதிருப்பதையிட்டு மனம் வருந்துகிறேன். நான் கொழும்புக் கம்பன்கழகத்துப் பெருந்தலைவர் பதவியில் இருந்து விலகுவதை இத்தால் உங்களுக்கு அறிவிக்கின்றேன்.”
➤➤➤
இதுவே அவர் எங்களுக்கு எழுதிய வரிகள்.
அவர் பதவி விலகிய அடுத்த ஆண்டு விழாவில்,
அவருக்கு, ‘கம்பன்புகழ் விருது’ வழங்க விரும்பி வேண்டினோம்.
‘அது ஒருவருக்கொருவர் நம்மை நாமே பாராட்டுவதாய் அமைந்துவிடும்’என்று கூறி,
அவர் அதை ஏற்க மறுத்தார்.
பின்னர் அவரையே அழைத்து அவ்வாண்டு விழாவை தொடக்கி வைக்கச் செய்தோம்.
நாம் அமைத்த ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலயத்தின்,
அத்திவாரக் கல்லையும் அவரைக் கொண்டே நாட்டினோம்.
➤➤➤
பின்னர் முதலமைச்சர் பதவியை அவர் ஏற்கவேண்டுமென்று,
சர்ச்சைகள் ஆரம்பித்தபோது,
அதனை மறுக்காதீர்கள் என்று,
தொலைபேசியில் அவருடன் வாதிட்டேன்.
வீரகேசரிப் பத்திரிகையில் தம் பெயரிட்டுக் கருத்துத் தெரிவிக்க,
பலரும் தயங்கிய நிலையில்,
நீதியரசரே அப்பதவிக்குப் பொருத்தமானவர் என,
பகிரங்கமாய் அறிக்கை விடுத்தேன்.
அது தவிர, தினக்குரல் பத்திரிகையில்,
நீதியரசரை விளித்து,
அவர் பதவியேற்க முன்வரவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி,
‘செயற்தக்க செய்யாமையாலும் கெடும்’ என்ற தலைப்பில்,
புனைபெயரில் விரிவாய் ஒரு கடிதம் வரைந்தேன்.
அதுமட்டுமல்லாமல் கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில்,
நீதியரசரைப் பதவியேற்கக் கட்டாயப்படுத்தும் நோக்கில்,
தற்போதைய அமைச்சர் மனோ கணேசன் அவர்களால்,
ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில்,
துணிந்து பல விஷயங்களைக் கூறினேன்.
இப்படியாய் அவர் முதலமைச்சராக வேண்டுமென,
நான் நடத்திய போராட்டங்கள் பலப்பல.
இன்று அவரைப் பயன்படுத்த நினைவோர் எவரும்,
அன்று அவரை ஆதரிக்க முன்வரவில்லை.
➤➤➤
பின்னர் அவர் தேர்தலில் நிற்க முன்வந்ததும்,
தொடர்ந்து அவருக்குக் கிடைத்த பெருவெற்றியும்,
யாவரும் அறிந்தவையே.
அவர் வெற்றி பெற்றகையோடு,
நான் அவருக்கு எழுதிய கடிதமொன்றையும்,
இவ்விடத்தில் தரவிரும்புகிறேன்.
➤➤➤
23.09.2013
பெருமை மிக்க ஐயா அவர்கட்கு,
வணக்கம்.
நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
முதலில் பெற்ற பெரு வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.
தங்கள் வெற்றிக்காய் எம்மைப் பலரும் வாழ்த்துகின்றனர்.
அமைதியாய் இருக்க நினைத்த உங்கள் தலைமேல்,
இனத்தலைமை என்ற பாரமிகுந்த மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
இனி, தங்களின் ஒவ்வொரு செயற்பாடும் இனத்தின் செயற்பாடாய்க் கணிக்கப்படும்.
மிகப் பாரிய பொறுப்பு!
தாங்கும் சக்தியை இறைவன் அருள்வான்.
அதற்காய் அன்றாடம் இறைவனைப் பிரார்த்திப்போம்.
தேர்தல் பிரச்சாரத்தில் புலிகளை வழிமொழிவதாய் ஓர் பிரமை தோன்றிற்று.
முன்னவர் பாதைகள், குறைகளால்தான் மூடப்பட்டன.
எனவே, இனிவரும் அரசியலில் தங்கள் வழி தனிவழியாகவே இருக்கட்டும்.
பொதுப்பட விடப்படும் சவால்கள் இனங்களுக்கிடையிலான பகையை வளர்க்கும்.
அது நல்லதல்ல.
பேரின அரசியலாளர்களுடன் மோதி வெற்றி கொள்ளும் அதேவேளை,
பேரின மக்களுடன் நட்பையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
இது என் விருப்பு.
அவர்தம் மனங்களையும் வென்றெடுக்க சில வழிகள் உள.
ஒன்றைச் சொல்கிறேன்.
யதீந்திரா என்பவர் தினக்குரல் கட்டுரையில் குறிப்பிட்டபடி,
வெற்றி பெற்ற அனைவரும்
நல்லை ஆதீனம், யாழ் பிஷப், ஓர் இஸ்லாமிய மதத்தலைவர் ஆகியோரிடம் ஆசி பெறுவதோடு,
முக்கியமாக பௌத்த பீடாதிபதிகளிடம் சென்று ஆசி பெறுங்கள்.
அவர்கட்கு உங்கள் கொள்கையை விளக்கம் செய்யுங்கள்.
அதுபோலவே சிங்கள அறிஞர் குழாத்தையும்,
ஊடகவியலாளர்களையும் ஒன்று கூட்டி அவர்களுக்கும் மேற்கருத்தை உரையுங்கள்.
இன ஒற்றுமைக்கான முயற்சியில் இது நல்ல பயன் தரும் என எண்ணுகிறேன்.
மனத்தில் உதித்தது - எழுதியிருக்கிறேன்.
தங்களாலேனும் நம் இனம் உய்வடையட்டும்.
தயைகூர்ந்து கட்சித் தலைவராய் அன்றி இனத்தலைவராய் செயற்பட முயலுங்கள்.
நன்றி.
வணக்கம்.
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை"
அன்பன்
இ. ஜெயராஜ்
(கம்பன் கழகம்)
➤➤➤
முதலமைச்சருடனான என் எதிர்பார்ப்புக்கள்,
இக்கடிதத்தில் பதிவாகியுள்ளன.
முதலமைச்சர் நல்லவர், துணிவானவர், தர்மத்திற்குக் கட்டுப்படுபவர்,
தெய்வத்திற்குப் பயந்து நடப்பவர் என்பதிலெல்லாம்,
எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது.
நல்லவர்கள் சூழ வாழ்ந்த போது,
அவர் அப்படித்தான் இருந்தார்.
பின்னர் அரசியல் அவரைத் தடுமாற வைத்துவிட்டது.
பதவியேற்றதும் அவரை,
அவருடைய முன்னைய நண்பர்களால் அணுக முடியவில்லை.
கருத்துரைக்க முடியவில்லை.
திட்டமிட்டு சிலரால் அவர் பிரிக்கப்பட்டார்.
அதிலிருந்துதான் அவரது வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.
➤➤➤