‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 2

 ‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 2
 



 
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ங்கள் கடிதத்தில்,
கம்பவாரிதி ஜெயராஜூம், நீதியரசர் விக்னேஸ்வரனும்,
தமிழ்மக்களின் சொத்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
நான் தமிழினத்தின் சொத்தாவேனோ? தெரியாது.
என்னை ‘சொத்தை’ எனச் சொல்லி மகிழ்வாரும்,
இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் நீங்கள் சொன்னதுபோல,
நீதியரசர் நிச்சயம் தமிழ்மக்களின் சொத்தாவார்.
அந்தச் சொத்து சிதைந்து விடக்கூடாதே என்ற கவலைதான்,
என்னை ஆத்திரப்படச் செய்கிறது.
அதனாற்றான் என் எழுத்துக்கள் கோபப்படுகின்றன.
 



நீதியரசர் முதலமைச்சரானதும்,
தனித்துப் போனார் என்று சொல்லியிருந்தேன்.
அவராகத் தனித்தாரோ,
அல்லது சூழ இருந்தவர்களால் தனிமைப்படுத்தப்பட்டாரோ,
அதுபற்றி நான் அறியேன்.
இதை நான் எனது தனித்தொடர்பாடல் பற்றி,
எழுதுவதாய் நினைக்கவேண்டாம்.
நீதியரசர் மேல் மிகுந்த அக்கறையுள்ள பலரும் கூட,
அவர் முதலமைச்சரானதும்,
அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை எனும்,
இதே குறையை என்னிடம் சொல்லி வருந்தினார்கள்.
இன்று பாமரமக்கள்தான் ஒரு கட்சியின் அத்திவாரம் என்று உரைக்கும் நீதியரசர்,
முதலமைச்சரானதும் மக்கள் தொடர்புள்ள,
தன்னுடைய நண்பர்களைக் கூட அணுக மறுத்தார்.
அதனாற்றான் மக்கள் கருத்து ஏதும்,
அவர் செவிக்குச் செல்லாமலே போய்விட்டது.



‘நீதியரசரோடு நல்ல தொடர்புள்ள நீங்கள்,
குறைகளை அவரிடம் நேரில் சொல்லலாமே,
ஏன் பகிரங்கமாக எழுதுகிறீர்கள்.
அவரை இழிவு செய்வதுதான் உங்கள் நோக்கமா?’என்று,
பலரும் என்னைக் கேட்கிறார்கள்.
என் தந்தைக்கு ஒப்பான அவரை,
இழிவு செய்து நான் பெறப்போகும் பயன் என்ன?
அத்தகையோர்க்கு அதுகூட விளங்கவில்லை.
என் கருத்துக்கள் எட்டாத் தூரத்திற்கு,
அவரைச் சுற்றி இரும்புக் கோட்டை கட்டப்பட்டதன் பின்தான்,
எப்படியும் என் கருத்துக்கள் அவரைச் சேரவேண்டும் எனும் விருப்பில்,
பகிரங்கமாக அவருக்கு எழுதத் தொடங்கினேன்.



முன்பு முதலமைச்சர் பதவியை அவர் ஏற்க மறுத்தபோது,
 ‘செயத்தக்க செய்யாமையானும் கெடும்’ என்று எழுதியது போலவே,
பதவியேற்றதும் அவர் செய்யத் தவறும் விடயங்களைச் சுட்டிக்காட்டி,
செயத்தக்க அல்ல செயக்கெடும்’ என்ற தலைப்பில்,
அவருக்கு ஓர்கடிதம் வரைந்தேன்.
(இவ்விடத்தில் அதைத் தனியே நான் பதிவு செய்யவில்லை.
விரும்புவோர் இங்கு சென்று பார்க்க)
அக்கடிதம் கண்டேனும் அவர் தொடர்பு கொள்ளுவார் எனும்,
என் எதிர்பார்ப்பு வீண் கனவாயிற்று.



தொடர்ந்த அவரது நடவடிக்கைகளில்,
பல தடுமாற்றங்களைக் கண்டு,
வீணாக அவர் இழிவுபடப் போகிறாரே எனப் பதறினேன்.
புலம்பெயர் தமிழர்களுடனான முரண்பாடு,
தமிழக ஆதரவாளர்களுடனான முரண்பாடு,
ஆளுநருடனான முரண்பாடு,
மாகாணச்செயலாளருடனான முரண்பாடு,
கூட்டமைப்புக்குள் இருந்த பிறகட்சிகளுடனான முரண்பாடு,
அமைச்சர் பதவி வழங்கியதில் வந்த முரண்பாடு,
ஜனாதிபதியின் முன்னான பதவிப்பிரமாணத்தில் எழுந்த முரண்பாடு,
தமிழகப் பத்திரிகையாளருடனான முரண்பாடு,
தன்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முரண்பாடு என,
முதலமைச்சரின் முரண்பாடுகள் சங்கிலித்தொடர்களாய் தொடர்ந்தன.
அது அவரது பெயரைப் பாதிக்குமே எனக் கவலையுற்றேன்.



நீதியரசருக்கு என் எழுத்துக்கள் பிடிக்கவில்லையோ?
அல்லது மற்றவர்கள் பிடிக்காமல் செய்தார்களோ? நான் அறியேன்.
அதனாலோ என்னவோ எங்கள் கம்பன்விழாக்களுக்கு,
நாம் அழைப்பு அனுப்பியும் அவர் வராமல் விட்டார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவிற்குக் கூட,
அங்கேயே இருந்தும் அவர் வராதது எங்களைச் சங்கடப்படுத்தியது.
அவரே அடிக்கல் நாட்டிய எங்கள் ஆலய கும்பாபிஷேகத்திற்கும்,
அழைப்பு அனுப்பியும் அவர் வரவில்லை.
அதன் பின் ஆலயத்தை வணங்கவேனும் அவர் ஒருதரம் கூட வரவில்லை.
இவையெல்லாம் எங்கள் மனக்குறையே தவிர,
அதனால் நாங்கள் அவர் மேல் கோபமுறவில்லை.
பதினாறாண்டு அன்புத் தொடர்பை,
ஓராண்டு அலட்சியம் எப்படி நீக்கும்?
அவரைக் காணவேண்டும் என்று காத்திருந்தேன்.



நீண்ட நாட்களின் பின் ஒரு திருமண வைபவத்தில்,
நான் இருந்த இருக்கைக்கு அருகாக,
அவராக வந்து அமர்ந்தார்.
மகிழ்ந்து பேசினார்.
என் உள்ளமும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டது.
அவரது இந்தியப் பயணம் திட்டமிட்ட முறையில்,
ஒழுங்கு செய்யப்படவில்லை என்பது முதலான,
என் மனக் குறைபாடுகளை அவரோடு முடிந்த அளவு பகிர்ந்து கொண்டேன்.
அவரும் என் கருத்துக்களுக்குச் செவி கொடுத்தார்.
பலரும் கூடிய திருமண வீடு, முன்வரிசை இருக்கை என்பவை,
அதிகம் பேச இடம் தரவில்லை.
ஆனாலும் நீண்ட நாட்களின் பின்னரான அவரது சந்திப்பும்,
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கிடைத்த வாய்ப்பும் எல்லையற்ற மகிழ்ச்சி தந்தன.



அதற்குப் பின் இன்றுவரை முதலமைச்சரை என்னால் சந்திக்க முடியவில்லை.
சந்திக்க வேண்டிய தனிப்பட்ட தேவையேதும் எனக்கு இருக்கவும் இல்லை.
ஆனால் பாராளுமன்றத் தேர்தல் காலத்தில்,
முதலமைச்சரின் குழப்பமான நடவடிக்கைகளை அறிந்து,
மனம் அதிர்ந்தேன்.
அவர் தன்னை அரசியலில் உருவாக்கிய கட்சியை விட்டு விட்டு,
வேறொரு கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறார் என்ற செய்தி வந்தபோது,
என்னால் அதை நம்பமுடியவில்லை.
எதையும் நேர்படப் பேசி செயற்படும் முதலமைச்சரைத்தான்,
எனக்குத் தெரிந்திருந்தது.
இப்போது மட்டும் ஏன் அவரிடம் இந்தக் குழப்பம் என்று ஆச்சரியப்பட்டேன்.
அச்செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன்.
ஆனால் ‘அவரவர் விருப்பப்படி வாக்களியுங்கள்’ என்றும்,
நான் ஊமையாகிவிட்டேன்’ என்றும் வெளிவந்த,
முதலமைச்சரின் அறிக்கைகள் என் மனதைப் பெரிதும் குழப்பின.



இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லவேண்டும்.
கூட்டமைப்புத் தலைவர்கள்,
ஒற்றுமையின்றியும், ஒருமைப்பாடின்றியும்,
தன்னிச்சையாய்ச் செயற்படுவதாய்த் தோன்ற,
தேர்தல் காலத்தில், நான் கூட,
கூட்டமைப்புக்கு ஒரு மாற்றணி தேவை என்று கருதினேன்.
அத்தகைய ஒரு அணி வந்தால் நல்லது என எதிர்பார்த்தேன்.
ஆனால் தமிழ்மக்கள் அக்கருத்தை நிராகரித்து,
கூட்டமைப்பை முழுமையாய் வெற்றி பெறச் செய்தனர்.



முதலமைச்சர் ஆதரித்ததாய்க் கருதப்படும் அணியும்,
முழுத்தோல்வி அடைந்தது.
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ எனக் கருதியும்,
இனப்பிரச்சினைத் தீர்வில் உலகம் தலையிட்டு,
அழுத்தம் கொடுக்கும் இவ்வேளையில்,
தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன்,
ஒரு அணி வெற்றி பெறுவதிலும் நன்மை இருக்கலாம் எனக் கருதியும்,
அந்த மக்கள் தீர்ப்பை முழுமையாய் நான் ஏற்றுக்கொண்டேன்.



தேர்தல் முடிவின் பின்னர்,
கூட்டமைப்புக்கும் முதலமைச்சருக்குமான பிரச்சினை,
இருபக்கத்தாராலும் கிணற்றில் போட்ட கல்லாய் மௌனித்துக் கிடந்தது.
அவர்களின் அவ் அமைதி,
நிச்சயம் புயலுக்கு முன்னான அமைதி என்று உணர்ந்து,
கூட்டமைப்புத் தலைமை இப்பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று,
பலதரம் கருத்து வெளியிட்டேன்.
ஆனால் அக்கருத்துக்கள் எவராலும் கேட்கப்படவில்லை.
‘எங்களுக்குள் பிரச்சினை ஏதும் இல்லை,
மற்றவர்கள்தான் அதைப் பெரிதாக்கப் பார்க்கிறார்கள்’ என்று,
தமிழரசுக்கட்சித்தலைவர் மாவையும்,
முதலமைச்சரும் அறிக்கைகள் விட்டுச் சமாளித்தார்கள்.
அவ் அறிக்கைகள் ஓரிரு தினங்களில் மாற்றம் பெற்றன.



இவ்விடத்தில் கூட்டமைப்புப் பற்றிய,
என் மனக்கருத்துக்கள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சி செய்ய நினைத்த ஆதிக்கத்திலும்,
தமது பெரும்பான்மை கருதி,
எவருக்கும் தாம் பதிலுரைக்கத் தேவையில்லை எனும் செருக்கோடு,
நடந்து கொண்ட அவர்களது செயற்பாட்டிலும்,
முழுமையாய் இல்லாவிட்டாலும் முடிந்த அளவேனும்,
மக்களுக்கு யதார்த்தம் உரைக்க விரும்பாத அவர்தம் அலட்சியத்திலும்,
எனக்குத் துளியளவேனும் உடன்பாடில்லை.
அவர்களுடைய அந்தப் போக்குத்தான்,
பிரச்சினைகளை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது.



கூட்டமைப்பு என்ற பெயரில்,
பலகட்சிகளை ஒன்றிணைத்துவிட்டு,
தமது பெரும்பான்மை கருதி,
மற்றவர்களை அலட்சியம் செய்த,
தமிழரசுக் கட்சியினரின் போக்கு மிகத்தவறானதே!
கூட்டமைப்பு உடையாமல் ஒன்றாயிருக்க,
என்னென்ன செய்யவேண்டும் என்று,
கட்சியை சீர்திருத்த கூட்டமைப்புக்குச் சில ஆலோசனைகள்
எனும் தலைப்பில் நான் உகரத்தில்,
ஒரு கட்டுரை கூட வரைந்தேன்.
ஆனால் அதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.



கூட்டமைப்பைக் கட்சியாய்ப் பதிவு செய்யும் கோரிக்கையிலும்,
தேர்தல்களில் மற்றைய கட்சிகளுக்கான இட ஒதுக்கீடுகளிலும்,
மாகாணசபை அமைச்சர் பதவித் தேர்வுகளிலும்,
பாராளுமன்றத் தேர்தலின் பின்னான தேசியப்பட்டியல் நியமிப்பிலும்,
வெளிநாடுகளுடனான கலந்தாலோசிப்புக்களிலும்,
கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளைத் தமிழரசுக்கட்சி,
அலட்சியம் செய்து வந்தது மறுக்க முடியாத உண்மை.
இணைந்திருந்த கட்சியின் தலைவர்களுடனேனும்,
தாம் எடுக்கும் முடிவுகளை நாகரீகம் கருதிக்கூட,
தமிழரசுக்கட்சியினர் பகிர்ந்து கொள்ளாது அலட்சியம் செய்தது,
கூட்டுக்கட்சியினரைக் கொதிப்படையச் செய்தது.



மாகாணசபைத் தேர்தலின் போது,
முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் எடுத்த,
‘புளொட்’ அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தனுக்கு,
ஓர் அமைச்சினை ஒதுக்கக்கூட அவர்கள் விரும்பவில்லை.
அதுபோலவே ஒவ்வோர் கட்சிக்கும் ஒரு அமைச்சினை ஒதுக்குவது,
அந்த அமைச்சுக்கான அமைச்சர் யாரென,
அவ்வவ் கட்சிகளே முடிவு செய்வது என்று,
முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி,
தமிழரசுக்கட்சி தன்னிஷ்டத்திற்கு நடந்து கொண்டது.
தனது தம்பியாருக்குப் பதவி வழங்கப்படவில்லை என்று அப்போது,
சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையாய்க் கோபித்தார்.
இப்படி இன்னும் பலவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
இவையெல்லாம் தமிழரசுக்கட்சியினர் செய்த தவறுகள் என்பதை,
யாரும் மறுக்கமாட்டார்கள்.



ஆனால்  இக்கோளாறுகள் நடந்த போதெல்லாம்,
முதலமைச்சர் தமிழரசுக்கட்சிக்குச் சார்பாகவே நடந்து கொண்டார்.
அப்போதைய ஜனாதிபதியின் முன் பதவியேற்பதா? என்று சர்ச்சை தோன்றியபோது,
முதலில் ‘அப்படிச் செய்யமாட்டேன்’ என்று மறுத்த முதலமைச்சர்,
பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் எதிர்க்கத்தக்கதாக,
எவருடனும் ஏதும் பேசாமல் தன் இஷ்டப்படி சென்று,
ஜனாதிபதியின் முன் பதவியேற்றுக் கொண்டார்.



இன்று தலைமைகளிடம் பகிரங்கத் தன்மை வேண்டும் என்று,
கோரி நிற்கும் முதலமைச்சர்,
அன்று முதலில் தான் மறுத்தது எதற்கென்றோ?
பின்னர் அங்கு சென்று பதவியேற்றது எதற்கென்றோ?
எவருக்கும் எந்தக் காரணமும் சொல்லவில்லை.
அந்த நேரத்தில்,
தமிழரசுக்கட்சியோ, கட்சியின் தலைவரான சம்பந்தனோ,
இதற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாற் போல,
இந்தக் குளறுபடிகளை வேடிக்கை பார்த்து நின்றனர்.
முதலமைச்சருக்குக் கயிறறுத்துச் செயற்படும் துணிவை,
இவர்களது இத்தகைய செயற்பாடுகள்தான் தந்திருக்கும் என்பது,
எனது உறுதியான கணிப்பு.



தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு,
தேர்தல் வெற்றியின் பின்னரான,
தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம் என்பவற்றிலெல்லாம்,
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து,
செயற்பட்டதாய்த் தெரியவில்லை.
முழுக்க முழுக்கத் தமிழரசுக்கட்சியே,
இவ்விடயங்களிலெல்லாம் அதிகாரம் செலுத்திற்று.
தமிழரசுக்கட்சியின் இவ் அலட்சியச் செயற்பாடுகளின் முதல்வராய்,
சுமந்திரனே இயங்கினார்.
மாற்றணித் தலைவர்கள் கேள்வி கேட்ட போது,
தன்னுடைய செயற்பாடுகளுக்குத் தலைவர் சம்பந்தன்,
அனுமதி தந்திருப்பதால்,
தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று,
அலட்சியமாகப் பதில் சொன்னார்.
கிட்டத்தட்ட, தலைவரையே இவர்தான் இயக்குகிறாரோ? என,
ஐயுறும் அளவிற்கு சுமந்திரனின் செயற்பாடுகள்,
மிகைப்பட்டிருந்தது உண்மையே.



இவ் அனைத்துத் தவறுகளுக்கும் காரணமானவர்,
கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களே.
எங்கோ இருக்கும் சில சக்திகள்,
நம்மை வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையில்,
அவர் ‘ஸ்ரியறிங்கைக்’ கைவிட்ட ‘டிரைவராகவே’,
கட்சியைப் பொறுத்தளவில் செயற்பட்டார்.
கூட்டமைப்புக் கட்சியினருக்கிடையே குழப்பங்கள் வந்த போதெல்லாம்,
‘சித்தன் செயல் சிவன் செயல்’ என்றாற்போல்,
எவர்க்கும் பதிலுரைக்காமல் பார்வையாளராகவே எப்போதும் இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தன்னைத் தேடி வந்தபோது,
‘தமிழ்மக்களின் உணர்வை அறிந்தே அப்பதவியை ஏற்பேன்’ என்று,
பெயருக்குத்தானும் அவர் சொல்லவில்லை.



தேர்தல் காலத்தில் முதலமைச்சருடனான முரண்பாடு தொடங்கிய பொழுது,
உடன் விசாரித்துத் தீர்க்கப்படவேண்டிய அந்த விஷயத்தை,
‘தேர்தல் முடிந்ததும் விசாரிப்பேன்’ என்று,
மிக அலட்சியமாக அறிக்கை விட்டார்.
தேர்தல் முடிந்து பெரு வெற்றி பெற்றதும் கூட,
அவ்விடயம் பற்றி அவர் பேசவில்லை.
ஒருபுறம் மாவை, மறுபுறம் சுமந்திரன் என,
கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களெல்லாம்,
பிரச்சினை பற்றிப் பேசமுனைய,
மூத்தவரான சம்பந்தரிடமிருந்து வார்த்தைகள் ஏதும் வரவேயில்லை.
தமிழினம் அவர் தீர்ப்புரைப்பார் என,
காத்துக் காத்துக் களைத்துப் போனது.



பொலிசாரால் தாக்கப்பட்ட,
பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்காக,
எதிர்க்கட்சித் தலைவராய் அறிக்கை விட்டு,
பிரதமரிடம் நல்ல பெயர் வாங்கிய சம்பந்தர்,
தன் கட்சிச் சண்டையில் தமிழ்த்தலைவராய்,
ஆராய்ந்து அறிக்கை ஏதும் விடாது செய்த அலட்சியமே,
இன்றைய அத்தனை பிரச்சினைகளுக்குமான அத்திவாரமாம்.
தன் கட்சியுள் மாற்றார் நுழைய விரும்புகிறார்கள் என்பது கூடத் தெரியாமலும்,
எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி,
அதுபற்றி புலனாய்வு அறிக்கைகள் ஏதும் பெறாமலும் நின்ற அவரது செயற்பாடுகள்,
அரசியல் சாணக்கியம் உள்ளதாய்க் காணப்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.



தலைமை என்பது இருக்கையில் மட்டுமில்லை.
செயற்பாட்டிலும் தங்கியிருக்கிறது என்பதை,
இவ்வளவு அனுபவத்திற்குப் பின்னும்,
இன்னும் நம் தலைவர்கள் அறியாமல் இருப்பது,
மிகவும் வேதனை தருகிறது.



இதோ என் கருத்துக்கு அருகில் கம்பவாரிதியும் வந்துவிட்டார்.
என்று நீங்கள் மகிழ்வது தெரிகிறது.
ஆனால் அந்த விடயத்தில் நான் உங்களோடு முரண்பட்டே நிற்கிறேன்.
கட்சிக்குள் ஆயிரம்தான் குறைகள் இருந்தாலும்,
அதனைத் தீர்ப்பதனை விடுத்து.
மாற்றணியோடு கைகோர்க்க நினைத்த முதலமைச்சரின் செயலில்,
எனக்குத் துளியளவேனும் உடன்பாடில்லை.
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி- எனின்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்ற பாரதியின் பாடல்,
முதலமைச்சருக்கு மட்டுமல்ல தங்களுக்கும் தெரிந்ததே.



தன் தமையனோடு முரண்பட்ட வீடணன் கூட,
முதலில் தன்னால் முடிந்தவரை இடித்துரைத்து,
தமையனைத் திருத்தவே முயன்றான்.
அவன் கருத்தை முற்றாய் மறுத்து அவனை வெளியே போ என்று,
இராவணன் சொன்ன பின்தான்,
தன் இனம் காக்க அவன் மாற்றணியைச் சேர்ந்தான்.
அவனையே காட்டிக்கொடுத்த வீடணன் என்று,
இன்று பலர் நையாண்டி செய்கின்றனர்.
தான் சார்ந்த அணியின் தவறுகளை,
எந்த விதத்திலும் திருத்த முயலாமல்,
நீங்கள் தவறிழைக்கிறீர்கள்,
உங்களோடு இணைந்து என்னால் இனி செயற்பட முடியாது என்று சொல்லி,
அவர்களால் வந்த பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு,
நேர்மையாய் வெளியேறத் தெரியாமல்,
மாற்றணியோடு ரகசியக் கூட்டு வைத்து,
பொய்மை உரைத்து, மயங்கி, மருண்டு,
சந்தர்ப்பம் பார்த்து எதிராளிகளை ஒன்றிணைத்து,
தன் பலம் காட்ட நினைக்கும் முதலமைச்சரின் செயல்களை,
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எங்கள் கழகத்திலிருந்த போது,
உண்மை உரைத்து உயர்ந்து நின்ற,
நீதியரசரா இவர்? என்று நான் விக்கித்துப் போகிறேன்.

நாளையும் தொடரும்...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.