அதிர்வுகள் 24 | மனநோய்
அதிர்வுகள் 19 Feb 2016
உ
ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா?
இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது.
எனக்கு மனநோய் என்றதும்,
அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
ஆனால், அந்த விடயத்தை,
இக்கட்டுரையின் கடைசியிற்தான் சொல்லப்போகிறேன்.
அதற்கு முன்பாக சில விஷயங்கள்.
✽✽✽
உலகம் முழுவதும் இன்று இளையோரைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானதாக,
‘டிப்பிறசன்’ என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோய் பெருகி வருகிறது.
ஒழுக்கயீனம், அன்பின்மை, பேரதிர்வு, பெரும்மனச்சுமை போன்ற பல காரணங்களால்,
இந்நோய் உருவாகுவதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது.
மேற்சொன்ன காரணிகளுக்கு,
இன்றைய விஞ்ஞான உலகம் விருந்து வைக்க,
அவ்விஞ்ஞான ‘மாயமானைப்’ பின்தொடரும்,
இன்றைய வீரிய இராமர்கள் இந்நோய்க்கு ஆளாகி,
தம் பலமெலாம் இழந்து பரிதவிக்கின்றனர்.
நவீன மருத்துவ உலகம் தரும் இந்நோய்க்கான மருந்துகள்,
இந்நோயாளர்களைத் தமக்கு நிரந்தர அடிமைகளாக்கி,
காலம் முழுவதும் மருந்தின்றி வாழ முடியாத அவல நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது.
இந்நோய்பற்றி தொன்மைமிகு நம் தமிழுலகம் அறிந்திருந்ததா?
இதற்கான மாற்றென்ன?
இவ்வார அதிர்வில் இவைபற்றி சிந்திக்கத்தோன்றுகிறது.
✽✽✽
தமிழ், சைவ, தத்துவ நூல்களினூடு நான் பெற்ற செய்திகளையே,
இங்கு சொல்லப் போகிறேன்.
இவர் இதைப்பற்றி எப்படிப் பேசலாம்? என்று,
இத்துறை சார்ந்த அறிஞர்கள் கோபிக்காமல் இருப்பார்களாக!
✽✽✽
உடம்பின் வெளிப்பகுதியில் பொருந்தியிருக்கும்,
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்,
அறிவு தரும் உறுப்புக்களைப் போல,
நம் உடம்பின் உள்ளேயும்,
வடிவமில்லாத சில அறிவு தரும் உறுப்புக்கள் இருப்பதாய்,
நம் தத்துவ நூல்கள் உறுதிபட உரைக்கின்றன.
அவ்வுறுப்புக்களுக்கு மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என,
அவை பெயரிட்டுள்ளன.
அந்த விடயங்கள் பற்றி நான் இங்கு விரித்துரைத்தால்,
நானே உங்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கியவனாகி விடுவேன்.
அதனால் இக்கட்டுரைக்குத் தேவையான விடயங்களை மட்டும்,
இங்கு உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன்.
✽✽✽
உள்ளுறுப்புக்களாகிய மனம், புத்தி என்பவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவை.
மனம் உணர்வுகளின் களமாகவும்,
புத்தி அறிவின் களமாகவும் செயற்படுவதாய் நம் முன்னோர்கள் சொல்கின்றனர்.
அறிவும், உணர்வும் ஒன்றோடொன்று தொடர்புபட்டு இயங்குகையில்,
உணர்வின் தேவையற்ற விரிவுகளை அறிவு கட்டுப்படுத்துகிறது.
அறிவின் வறட்சியை உணர்வு பசுமைப்படுத்துகிறது.
இத்தொடர்பினாற்தான் மனிதன் சமநிலைப்பட்டு இயங்குகிறான்.
✽✽✽
நான் முன் சொன்ன காரணிகள் தரும் அழுத்தத்தால் புத்தி பலயீனப்பட,
மனதைக் கட்டுப்படுத்தும் சக்தியை புத்தி இழக்கிறது.
புத்திக்கும், மனதிற்கும் இடையிலான தொடர்பு அறுந்து போவதால்,
மனம் தன் இச்சைப்படி இயங்க ஆரம்பிக்கிறது.
புத்தியின் கட்டுப்பாட்டை இழந்த மன இயக்கத்தால்,
பயம், சோர்வு, கோபம், உலகியலோடு பொருந்தாமை,
கட்டுப்பாடற்ற இச்சை வெளிப்பாடு, வன்முறை உணர்வு போன்ற,
இயல்புகளுக்கு ஆளாகி மனிதன் சிதைந்து போகிறான்.
இதைத்தான் மனஅழுத்த நோய் என்று,
இன்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.
என்ன? பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகள் போல,
இம்முறை அதிர்வும் வறட்சியாய் இருக்கிறது என நினைக்கிறீர்களோ?
பல்லைக்கடித்துக் கொண்டு இன்னும் ஓரிரு பந்திகளைத் தாண்டுங்கள்.
பிறகு எளிமைப்படுத்துகிறேன்.
✽✽✽
இந்நோயின் அடையாளங்கள் என்ன?
அதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்நோயாளர்களுக்கு தர்க்கத் தொடர்பற்ற,
கால, இட, கற்பனைகள் விரியும்.
அதனால் புலிக்கும் பயப்படாத பெரும் வீரன்,
எறும்புக்கும் பயப்படுகின்ற கோழையாவான்.
தீர்க்கதரிசனமிக்க அறிஞன் தீராத மூடனாவான்.
அன்பு மிகுந்த ஒருவன் பகை மிகுந்தவனாவான்.
வரையறுக்கப்படாத உணர்ச்சிகள் பெருகப்பெருக,
தனிமை உணர்வு, வன்முறை உணர்வு,
தற்கொலை உணர்வு, அச்ச உணர்வு முதலியவை,
அவனை ஆட்கொள்ளத் தொடங்கும்.
இவற்றால் அவன் உலகியலிலிருந்து விடுபட்டுப் போவான்.
✽✽✽
இந்நோயாளர்களது மிகை எண்ணங்கள் செயல்களாய் மாறிவிடுவதே,
அவர்களுக்கு நேரும் பெரிய கொடுமை.
குழப்பமுற்ற அவர்களது வீண் எண்ணங்கள் செயலாகுமா? கேள்வி பிறக்கும்.
அங்குதான் நாம் ஒரு பெரிய உண்மையை அறியவேண்டியிருக்கிறது.
மனதுக்கு அபாரசக்தி உண்டு.
உறுதியாக மனம் ஒன்றை நினைத்தால் நிச்சயம் அது செயலாகும்.
“எண்ணியர் திண்ணியராய்” அமைந்தால்,
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்கிறார் வள்ளுவர்.
இதனை இன்றைய உளவியல் அறிஞர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
புத்தித் தொடர்பு அறுந்து போவதால்,
இந்நோயாளர்கள் பிழையான மன எண்ணங்களை உண்மை என நினைந்து,
தம் மனதில் ஏற்படும் பிறழ்வுணர்ச்சியில் உறுதி பூணுகின்றனர்.
அச்சமோ, பயமோ, விரக்தியோ தருகின்ற தமது மன உணர்ச்சியில்,
அவர்கள் கொள்ளும் ஆராய்வற்ற உறுதிப்பாடு,
மன ஆற்றலால் செயலாகி விடுகிறது.
அதனாற்தான் ஆரம்பத்தில் கற்பனை நிலையில்,
அவர்களிடம் பதியும் வன்முறை, பய, அச்ச எண்ணங்கள்,
பின் நிதர்சனச் செயல்களாகி,
அவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடுகின்றன.
✽✽✽
எல்லாம் சரிதான்.
இந்நோயாளிகளைக் குணப்படுத்துவது எப்படி என்கிறீர்களா?
சூழ்நிலைகளால் புத்தி பலயீனப்பட,
அதிலிருந்து மனம் விடுபடுகிறது என்று சொன்னேனல்லவா?
பழையபடி புத்தியின் கட்டுப்பாட்டில் மனம் வரவேண்டுமென்றால்,
நோயாளியின் பலயீனப்பட்ட புத்தியைப் பலப்படுத்தவேண்டும்.
அதற்கான வழிதான் என்ன?
மிகுந்த பலமிக்க, உறுதிப்பாடும் ஈர்ப்புத்தன்மையுமுடைய,
புத்தியைக் கொண்டவரான ஒருவர்,
தெளிவும் உறுதியும் மிக்க தனது வார்த்தைகளால்,
நோயாளியின் புத்தியைப் பலப்படுத்துவதே,
அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாம்.
✽✽✽
அத்தகைய ஒருவர் நோயாளியின் பலயீனப்பட்ட புத்தியில்,
தனது பலம் மிக்க புத்தியைச் செலுத்த,
அதனால் நோயாளியின் புத்தி பலம் பெறும்.
அவனது புத்தி பலம் பெற,
புத்தியிலிருந்து விடுபட்ட அவனது மனம்,
மீண்டும் புத்தியின் தொடர்பைப் பெறுவதால்,
நோயாளி இயல்பு நிலை எய்துவான்.
✽✽✽
இம்முறையைத்தான் இன்று ‘கவுன்சிலிங்’என்கிறார்கள்.
ஆனால், இந்த ‘கவுன்சிலிங்’ கொடுப்பவர்கள்,
இயல்பான புத்தி வலிமை மிக்கவர்களாய் இருக்கவேண்டும் என்பது,
மிக மிக அவசியம்.
இன்று மதம் சார்ந்தும், கல்வி சார்ந்தும்,
இத்தகையோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அது தவறு !
இயல்பான புத்தி வலிமை இல்லாதவர்கள்,
இத்தொழிலில் ஈடுபட்டால் அவர்களது புத்தி பலயீனப்பட்டு,
அவர்களே நோயாளிகள் ஆகும் வாய்ப்புள்ளது.
✽✽✽
இக் ‘கவுன்சிலிங்’ முறையால் மாற்ற முடியாத நோயாளிகளை,
இன்றைய நவீன மருத்துவ உலகம்.
மருந்துகளால் குணம் செய்ய முயல்கிறது.
இம் மருந்துகள் ஆபத்தானவை.
பாம்புகளின் விஷம் போன்றவற்றிலிருந்து,
இம்மருந்துகளை தயாரிப்பதாய்ச் சொல்கிறார்கள்.
இம்மருந்துகள், புத்தியைப் பலப்படுத்தப் பயன்படுவதில்லை.
புத்தியை வென்று தன்னிச்சையாய் இயங்கும் மனதை சோர்வுறச்செய்து,
பலயீனப்படுத்தவே அவை பயன்படுகின்றன.
அதை ஏன் செய்கிறார்கள் எனக் கேட்பீர்கள்?
உங்களுக்கு விளங்கும் வகையில் சொல்கிறேன்.
ஒரு பொலிஸ்காரனை விட,
குற்றவாளி பலவானாய் இருக்கிறான் என்று வையுங்கள்.
பொலிஸ்காரனைப் பலப்படுத்தி குற்றவாளியை அடக்குவதுதான் சரியான வழி.
அங்ஙனமன்றி, பொலிஸ்காரன் அப்படியே பலயீனனாய் இருக்க,
குற்றவாளியை அவனை விடப் பலயீனனாக்குவதன் மூலமும்,
பிரச்சினையைத் தீர்க்கலாம்.
ஆனால், அது சரியான வழியன்று.
✽✽✽
நோயாளிகள் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய நிலையில்,
நோயாளியின் புத்தியைப் பலப்படுத்த முடியாத,
நவீன மருத்துவ உலகத்தார்.
ஒரு குறுக்கு வழியைக் கையாளுகின்றனர்.
நோயாளியின் மனதை மருந்துகளால் பலயீனப்படுத்தி,
பலயீனப்பட்ட அவனது மனதை,
புத்திக் கட்டுப்பாட்டில் சில காலம் வைத்திருக்க,
மெல்ல மெல்ல அவனது மனம்,
புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இயல்பாய் வந்துவிடலாம் என்பது,
அவர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால், அது உறுதிப்படுத்தப்பட்ட முடிவன்று.
மருந்துக்குப் பழக்கப்பட்ட நோயாளி,
தொடர்ந்தும் அதன் தேவை நோக்கி வாழும் அபாயத்தை,
இம்முறை கொண்டுவந்து விடலாம்.
✽✽✽
அங்ஙனமாயின்,
இந்நோயின் தீர்வுக்கான வழிதான் என்ன? கேட்பீர்கள்.
இரண்டு வழிகளைச் சொல்லலாம்.
ஒன்று இந்நோய் வராமல் தடுப்பதற்கான வழி.
மற்றது வந்தால் நோயாளியை மீட்பதற்கான வழி.
அவை பற்றிச் சொல்கிறேன்.
✽✽✽
முதல் வழி, நோய் வராமல் தடுக்கும் வழி.
புத்தி அதிர்வுகளுக்காளாகிப் பலயீனப்படும் போது,
அதற்கும், மனதிற்குமான தொடர்பு தற்காலிகமாக விடுபடும் என்றும்,
அதன் போது புத்தியை பலப்படுத்த வேண்டும் என்றும் சொன்னேனல்லவா?
அதற்கு ஓர் வழியுண்டு.
புத்தி விரிவாய்ச் செயல்படத் தொடங்குவதற்கு முன்னரேயே,
எக்காரியத்தையும் சாதிக்கவல்ல மிகப் பெரிய சக்தி ஒன்று இருக்கிறதென்றும்,
அதனை நம்பி வழிபட்டால் அது நமக்குத் துணை செய்யும் என்றும்,
அப்புத்தியில் பதிவு செய்துவிட்டால்,
புத்தி பலம் இழக்கும் போது,
தன்னைவிட மேற்பட்ட அச்சக்தியைப் பற்றி,
அது தானாய்ப் பலம் பெற முயலும்.
இதனைத்தான் இறைநம்பிக்கையூடு நம் பெரியவர்கள் செயல்படுத்தினர்.
✽✽✽
ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ளவர்கள்,
இம்மனப் பாதிப்புகளுக்கு ஆளாவது மிகக்குறைவு.
அதனாற்றான் அன்றைய இறைநம்பிக்கை மிகுந்த சமுதாயத்தை,
இந்நோய் அதிகம் பாதிக்கவில்லை.
இன்றைய இளையோர்,
இறை நம்பிக்கையூட்டப்படாமலும்,
இறைமறுப்புக் கொள்கையூட்டப்பட்டும் வளர்க்கப்படுவதால்,
அவர்களில் பலர்,
தமக்கு மேற்பட்ட சக்தி ஏதும் இல்லை எனும் செருக்கோடு வளர்கின்றனர்.
சொற்பத் தொகையினரான இறை நம்பிக்கை உடையோரும்,
ஐயப்பாட்டுடனேயே அந்நம்பிக்கையில் நிலைக்கின்றனர்.
அத்தகையோர், தம் வாழ்வில் பேரிடர்களைச் சந்திக்கும் போது,
தமது புத்தித் தடுமாற்றம் தீர பற்றிப்பிடிக்கும் பலம் ஏதுமின்றி,
மனநோயில் வீழ்ந்து விடுகின்றனர்.
✽✽✽
அவசரமாய் நீங்கள் கேட்க நினைக்கும் விடயம் புரிகிறது.
அப்படியானால், இறைநம்பிக்கை என்பது வெறும் மனநோய் மருந்துதானா?
கடவுள் என்ற ஒருவர் இல்லையா?
இவைதானே உங்கள் கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் என்னால் பதில் விரிக்க முடியாது.
ஆனால் ஒன்று.
கடவுள் நம்பிக்கை ஒருபுறம் இருக்கட்டும்.
கடவுள் நம்பிக்கையின் தேவை எவ்வளவு அவசியம் என்பதை,
நீங்கள் உணர்ந்து கொண்டால் அதுபோதும்.
✽✽✽
சரி இந்நோய் வந்துவிட்டால் என்ன செய்வது?
அதற்கு நான் முன் சொல்லியிருக்கும் ‘கவுன்சிலிங்’தான் ஒரே வழி.
ஆனால் இன்றைய மருந்துவ உலகத்தினர்,
அந்த விடயத்திலும் தவறிழைக்கின்றனர்.
மனநோயாளர்கள் அனைவரும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் அல்லர்.
இயல்பான அவர்களது அறிவு வேறுபாட்டையும்,
நோயின் வலிமை வேறுபாட்டையும் பொறுத்து,
நோயாளிகள் வேறுபடுகின்றனர்.
எனவே, அனைத்து நோயாளிகளையும்,
அனைத்துக் ‘கவுன்சிலர்’களும் சுகப்படுத்தி விடலாம் என,
கருதமுடியாது,
நோயாளர்களின் தரம் அறிந்து,
‘கவுன்சிலர்’களது தரத்தையும் வரிசைப்படுத்த வேண்டியது அவசியம்.
‘கவுன்சிலர்’களுடைய தரத்தினை வரிசைப்படுத்தி,
ஒரு ‘கவுன்சில’ரால் மாற்ற இயலாத நோயாளியை,
அவரைவிட உயர்ந்த நிலையிலுள்ள ஒரு ‘கவுன்சில’ரால் சுகப்படுத்த முயல்வதே,
இந்நோயைப் பொறுத்தளவில் சரியான வழியாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
✽✽✽
‘கவுன்சிலிங்’ பற்றி இவ்வளவு பேசுகிறாயே,
அது பற்றி உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?
நான் படித்த இலக்கிய நூல்கள்தான் அதைச் சொல்லித்தந்தன.
எனக்குத் தெரிந்த அளவில் முதல் மன அழுத்த நோயாளி,
மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனனே!
முதல் ‘கவுன்சிலர்’ கிருஷ்ணபரமாத்மாவே!
முதல் ‘கவுன்சிலிங்’ நூல் பகவத்கீதையே!
✽✽✽
போர்க்களத்தில்,
தான் நேசித்த உறவினர்களையெல்லாம்,
கொல்லவேண்டி வரப்போகிறதே எனும் எண்ணம் தந்த மன அழுத்தத்தால்,
மிகப் பெரும் வீரனான அர்ச்சுனன் இந்நோய்க்கு ஆளாகிறான்.
வீரனான அவன்,
போர்க்களத்தில் மற்றவர்கள் நகைப்பார்களே எனும் எண்ணம் கூடஇன்றி,
வில்லைக்கூட தூக்க முடியாதவனாக தேர்த்தட்டில் உட்கார்ந்து விடுகிறான்.
மேல் மனஅழுத்தத்திற்கான அத்தனை அடையாளங்களையும்,
அர்ச்சுனனிடத்தில் நாம் காண்கிறோம்.
✽✽✽
அர்ச்சுனனைத் தனது புத்திப்பலத்தால்,
கீதோபதேசம் மூலம் பழையபடி வலிமைப்படுத்தி,
போர்செய்யச்செய்கிறான் கண்ணன்.
கண்ணனின் கீதோபதேசம் கேட்ட பிறகு,
அர்ச்சுனன் பழையபடி தன் இயல்பு நிலை எய்தி,
தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்தி போர்க்களத்தில் இயங்குகிறான்.
கண்ணனின் இச்செயலே எனக்குத் தெரிந்தவரை,
இந்நோய் பற்றிக் கிடைக்கின்ற உறுதிபட்ட முதல் ஆதாரம்.
வெள்ளைக்காரன் சொன்னவைதான் வேத மந்திரம் என நினைக்கும்,
இன்றைய கல்வியாளர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.
✽✽✽
இதென்ன இவ்வளவு பெரிய கொட்டாவி?
மேல் விஷயங்களை நீங்கள்,
அதிக ஆர்வமில்லாமல் படிக்குமாப் போல் தெரிகிறதே,
எனக்கு மனநோய் வந்த கதையை அறியத்தான்,
உங்களுக்கு அதிக ஆவல் போல் தெரிகிறது.
ஜெயராஜை மனநோய்க்காரனாய்ச் சொல்லி மகிழ விரும்பும்,
உங்கள் ஆசையையும் தீர்த்து விடுகிறேன்.
இனி என் மனநோய்க் கதை.
சுவாரஸ்யமாய்த் தொடர்ந்து படியுங்கள்.
✽✽✽
இந்நோய் பற்றி எனக்கேற்பட்ட,
ஒரு அனுபவத்தைச் சொல்லத் தொடங்குகிறேன்.
ஒருமுறை யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சு நடந்த,
ஒரு சூழலுக்குள் நான் அகப்பட்டுப் போனேன்.
திருநெல்வேலி சந்தைக்கருகில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
நானும் எனது டாக்டர் நண்பனும் அவ்வீதி வழியாக,
சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது,
அவ்விடத்தில் திடீரென விமானங்கள் குண்டு வீசத்தொடங்கின.
அருகிலிருந்த காளி கோயில் மண்டபத்திற்குள் நின்று கொண்டு,
ஆகாயத்தை எட்டிப்பார்த்தேன்.
தாழ்ந்து வந்த ‘பொம்மரில்’ இருந்து,
குண்டு கழட்டி விடப்படுவதுகூட கண்ணுக்குத் தெரிந்தது.
பதறிப்போய் அம்மண்டபத்துக்குள் படுத்துக்கிடந்தோம்.
பிறகு எழும்பி ஓடி அயல் வீடொன்றின் ‘பங்கருக்குள்’ பதுங்கினோம்.
இப்படியாக ஒருவாறு உயிர் தப்பி பின்னர் வெளியில் வந்து பார்த்தால்,
இரத்த வெள்ளத்தில் பிரேதங்கள் சிதறிக் கிடந்தன.
அக்காட்சியைக் கண்டு கதிகலங்கிப் போனேன்.
✽✽✽
இது நடந்து ஓரிரு வாரத்தின் பின்,
மனத்துள் மரணம் பற்றிய ஓர் அச்ச உணர்வு மெல்ல மெல்ல விரியத்தொடங்கியது.
வீதியில் ஒரு பிரேத ஊர்வலம் போனால்,
“அடுத்தது நான் தானோ?” எனும் அச்சம் மனதில் தோன்றிப் பயமுறுத்தியது.
உடம்பில் எந்தச் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும்,
இது அந்த வருத்தமாய் இருக்குமோ?,
இந்த வருத்தமாய் இருக்குமோ? என்றெல்லாம்,
மனம் எண்ணத் தலைப்பட்டது.
மாலை நேரங்களில் இனம் புரியாத ஒரு மன உளைச்சல்.
மற்றவர்களிடம் அதிகம் பேசக் கூட விரும்பாத ஒரு மனநிலை.
இரவில் என்னை அறியாத ஒரு மன அச்சம்.
இப்படியாய் சில நாட்கள் கழிந்தன.
✽✽✽
ஒருநாள் எனக்கு வயிற்றோட்டம் தொடங்கியது.
தானாய் நிற்கும் என எதிர்பார்த்தால்,
நாளுக்கு நாள் அது கூடிக்கொண்டே போயிற்று.
அயலில் இருந்த டாக்டரிடம் மருந்து எடுத்தும் பயனில்லை.
தொடர்ந்த நாட்களில்,
இரத்தமும் சீதமும் போய் வயிற்றோட்டம் கடுமையானது.
பிறகு ஒரு ‘ஸ்பெசலிஸ்ற்றிடம்’ காட்டி மருந்தெடுத்தேன்.
வருத்தம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
மூன்று, நான்கு தரம் பார்த்து அவர் பல மருந்துகள் தந்தும்,
அந்நோய் மாறியபாடில்லை.
உறைப்பு, எண்ணெய் இவற்றை எல்லாம் உணவில் நிறுத்தி,
வாரங்கள் பலவாகியும் எந்தப் பயனுமில்லை.
என் மனம், எனக்கு வயிற்றில் ‘கான்சர்’ வந்துவிட்டதாய்,
எண்ணிப் பயப்படத்தொடங்கிவிட்டது.
✽✽✽
அடுத்த தரம் சென்ற போது,
நோயை அடையாளம் காண முடியாத அந்த ‘ஸ்பெசலிஸ்ற்’இ
என்னை ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகும்படி சொல்லிவிட்டார்.
அவர் அப்படிச் சொன்னதும் குடலில் எனக்கு புற்றுநோய்தான் என,
மனம் உறுதிபட எண்ணத் தொடங்கிவிட்டது.
மனதினுள் எந்த நேரமும் அதே எண்ண ஓட்டம்.
அந்த எண்ணத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் துணிவு வரவில்லை.
ஒவ்வொரு தரமும் டாக்டரிடம் காட்டி சுகம் வராது போக,
மனத்தில் அவ் அச்சம் கூடிக்கொண்டே போனது.
✽✽✽
ஒருநாள் மன ஆறுதலுக்காக,
எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல் ஒன்றை வாசிக்கத்தொடங்கினேன்.
என்ன கொடுமை! அக் கதையிலும் வயிற்றில் ‘கான்சருள்ள’ ஒரு பாத்திரம் வந்தது.
எனது நோய்க்கான அறிகுறிகளை எல்லாம்,
அப்பாத்திரத்திற்கும் இருப்பதாக அக் கதையில் எழுதப்பட்டிருந்தது.
அதை வாசித்த பின் என் மன உணர்வு,
“உனக்கு வயிற்றில் கான்சர்தான்” என உறுதிபடப் பயமுறுத்தியது.
ஒரு மாதத்தின் மேலாக பெரிய ‘ஸ்பெசலிஸ்ற்’ ஒருவர்,
ஐந்துதரம் மருந்து தந்தும் சிறிதும் மாறாமல்,
இரத்தமும், சீதமுமாய்த் தொடர்ந்து பேதி போனால்,
எவன்தான் பயப்படமாட்டான்? நடுநடுங்கிப் போனேன்.
ழூழூழூழூழூ
பய எண்ணத்தை மாற்றவும் முடியவில்லை.
மற்றவர்களோடு என் எண்ணத்தைப் பகிரவும் முடியவில்லை.
எனக்குள்ளேயே குமைந்து குமைந்து கிடந்தேன்.
ஒரு நாள் காலைப்பொழுதில் அப்பய உணர்ச்சி உச்சந்தொட,
எப்படியும் இன்று என்மன சந்தேகத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என,
உறுதி கொண்டேன்.
ஒருவருக்கும் சொல்லாமல்,
சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் ‘ஆஸ்பத்திரி’க்குப் புறப்பட்டேன்.
✽✽✽
அப்போது யாழ் ‘ஆஸ்பத்திரி’ யில் டாக்டர் சிவகுமார் என்ற,
பெரிய ‘ஸ்பெசலிஸ்ற்’ ஒருவர் இருந்தார்.
அவர் பெரும் கெட்டிக்காரர்.
வைத்தியத்தை தொழிலாக அன்றித் தொண்டாக செய்பவர்.
‘ஆஸ்பத்திரி’யையே தனது வீடாக நினைத்து,
முழு நேரமும் ஏழைகளுக்கு உதவி வந்தார்.
அவர் மேல் எனக்கு அசையாத நம்பிக்கை.
அவரிடம் போய் இது ‘கான்சர்’தானா என,
உறுதிப்படுத்த முடிவு செய்தே நான் புறப்பட்டேன்.
அக்காலத்தில் அவரைச் சந்திப்பதே மிகுந்த கஷ்டம்.
எவரானாலும் முறையாக வந்தால்தான் பார்ப்பார்.
எந்த செல்வாக்கிற்கும் சலுகை செய்யமாட்டார்.
இவை தெரிந்திருந்தும் எனது பயத்தின் காரணமாக சட்டங்களை மீறி,
நேராக ‘ஆஸ்பத்திரி’யில் இருந்த அவரது வாட்டுக்கே சென்றுவிட்டேன்.
✽✽✽
எனது பயத்தை முகபாவம் கட்டியதோ என்னவோ?,
ஒழுங்கு மீறி யாரையும் பார்க்க விரும்பாத அவர்,
அன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை,
என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்.
என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
அது வரை குடித்த மருந்துப்பட்டியல்களை அவரிடம் காட்டினேன்.
அவர் ஒன்றும் பேசாமல் கட்டிலில் என்னைப் படுக்க வைத்து,
என் வயிற்றை அழுத்திச் சோதிக்கத் தொடங்கினார்.
“உனக்கு ‘கான்சர்’தான்!” என,
அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வரப்போகின்றன என,
என் மனம் அச்சுறுத்த, இருதயம் படபடக்கத்தொடங்கியது.
முழி பிதுங்கி நடுநடுங்கிக் கட்டிலில் கிடந்தேன்.
✽✽✽
நீண்ட சோதனைக்குப் பிறகு என்னை எழும்பச் சொன்ன அவர்.
“உது ஒன்றும் இல்ல எல்லா மருந்தையும் உடன நிப்பாட்டுங்கோ!
வழக்கமாய்ச் சாப்பிடுகிற மாதிரி சாப்பிடுங்கோ!
நல்லாய் நித்திரை கொள்ளுங்கோ!
உது வெறும் மனக்குழப்பம் தான்,
ஒன்றுக்கும் பயப்படவேண்டாம்” என்றதும்,
மரண தண்டனைக் கைதிக்கு,
விடுதலை கிடைத்தாற் போன்ற ஒரு உணர்வு.
அவர் மேல் நான் வைத்திருந்த அசையாத நம்பிக்கையால்,
அந்த நிமிடமே என் மனப்பயமெல்லாம் பறந்து போயிற்று.
உள்ளத்துள் நீண்ட இருள் நீங்கி வெளிச்சம் வந்தாற்போல் இருந்தது.
அவர் வார்த்தைகளால் என் புத்தி பலப்பட,
மனம் உடனே என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
✽✽✽
சொன்னால் நம்பமாட்டீர்கள் வீட்டிற்கு வந்து,
உடனேயே ‘ரொய்லற்று’க்குப் போனால்,
இரத்தம், சீதம் எல்லாம் நின்று,
வழமைபோல சாதாரணமாய்ப் போகிறது.
அதிசயப்பட்டுப் போனேன்.
உடனேயே எண்ணெய், உறைப்பு எல்லாம் சாப்பிட்டும்,
எந்தப் பிரச்சினையும் இல்லை.
உடலில் அதுவரை இருந்த அத்தனை கோளாறுகளும்,
என் மனப்பிறழ்வால் நிகழ்ந்தவை எனத் தெரிந்து வியந்து போனேன்.
மனம் நினைத்தால் உடம்பில் எந்த மாற்றமும் நிகழும் எனும் உண்மை,
அன்றுதான் எனக்குத் தெரிந்தது.
அந்த அனுபவத்தை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
✽✽✽
என்ன சற்று ஏமாற்றமாய் இருக்கிறதா?
இவருக்கு பைத்தியம் வந்து ஆஸ்பத்திரியில் இருந்திருப்பார் என,
ரொம்பத்தான் எதிர்பார்த்தீர்கள் போல.
என்மீதான உங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி.
பல இளைஞர்களையும் இன்று இந்நோய் தாக்கி வருவதே!
இவற்றை நான் எழுதியதன் காரணம்,
அத்தகைய இளைஞர்கள் தமது புத்தியை சற்றே பலப்படுத்தினால் போதும்.
இரும்பு வேலியாய் காட்சி தந்த இந்த நோய்,
நூல் வேலியாய் வெறும் ஊதலுக்கே அறுந்து போகும்.
என் அனுபவம் ஒருசிலருக்கேனும் உதவும் எனும் நம்பிக்கையோடு,
இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
✽✽✽✽✽✽✽